Tuesday, April 5, 2011

ஞான குருவின் உபதேச மகிமை...

ஒரு மனிதன் ஞானம் அடைவதற்கு ஒரு குருவின் துணை மிகவும் அவசியம். இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது, என் மனதில் எழுந்த சிந்தைகள், சில பழைய நிகழ்வுகளின் நினைவுகளின் பதிவு.

தனியாக மனிதன் ஞானம் அடைய முடியாது. குரு இல்லாமல் ஞானம் இல்லை. குரு உபதேசம் மிகமுக்கியம். ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவர்களாலேயே உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும். உடனடியாக இல்லாவிட்டாலும், சற்று தாமதமாகவாது. குரு உபதேசித்த வழி நடந்தாலே ஞானம் சித்திக்கும்.

குரு உபதேசம் பொதுவானது அல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. அது எப்படிப்பட்டது என்பதை குருவே முடிவு செய்வார். ஒருவருக்கான உபதேசம் மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை. அதனால் இதில் உயர்ந்த உபதேசம், தாழ்ந்த உபதேசம் என்ற பேதமில்லை. அவரவருக்கு அவரவருக்கான குரு உபதேசமே உயர்ந்தது, சிறந்தது. அதுவே அவரவருக்கான வழி. இதை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதை கடமையாகக் கொண்டால் கண்டிப்பாக ஞானம் சித்திக்கும்.

இதைப்பற்றி சிந்திக்கும் பொழுது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பரின் நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்ட அவரின் அனுபவம் ஞாபகத்தில்  வருகிறது.

அவ‌ருட‌னான‌ என‌து ச‌ந்திப்பு ஒருமுறைதான் ந‌ட‌ந்தாலும், அந்த அனுபவம் என் ம‌ன‌தில் மிக‌ ஆழ‌மாக‌ப் ப‌திந்துவிட்ட‌து. அவ‌ருக்கான‌ குரு உப‌தேச‌மாக‌க் கிடைத்த‌து, "ப‌சி ஆற்றுத‌ல்". அன்ன‌தான‌ம் செய்ய‌வேண்டும்.

அவ‌ரோ மிக‌வும் வ‌றுமையில் இருப்ப‌வ‌ர். குறைந்த‌ ச‌ம்பாத்தியத்தில் நிறைவான குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர். இருந்தாலும் குரு உப‌தேச‌த்தை சிர‌மேற்கொண்டு அவ‌ர் ப‌சி ஆற்றுத‌ல் ஆர‌ம்பித்தார். த‌ன் சொந்த‌ செல‌வில்தான். சில நண்பர்க்ள் உதவியும் சேர அது கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. சிறிய அளவிலானதானாலும் தின‌ந்தோறும் செய்து வ‌ந்தார்.

ஒரு நாள், மிக‌க் க‌டின‌மான‌ சூழ‌லில், வீட்டுக்கு ச‌மைக்க‌வே ஒன்றும் இல்லாத‌ நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து. அன்று அவ‌ர் ம‌ன‌தில்  எப்ப‌டி செய்வ‌து? என்ன செய்வது? என்று ப‌ல‌ ச‌ஞ்ச‌ல‌ங்க‌ள். க‌டைசியில் அவ‌ர் முடிவு செய்த‌து "அடுப்பை மூட்டி, த‌ண்ணீரை வைப்போம். கொதிக்க‌ வேண்டிய‌து, வெறும் த‌ண்ணீரா அல்ல‌து அரிசியா என்ப‌தை க‌ட‌வுள் முடிவு செய்ய‌ட்டும்"

அதிகாலை, வெறும் அடுப்பை மூட்டிக் கொண்டிருந்த‌ போது அவ‌ர‌து ந‌ண்ப‌ர் அனுப்பிய‌தாக‌ சில‌ மூட்டை அரிசியும் காய்க‌றி ம‌ளிகை சாமானுட‌ன் ஒரு மாட்டு வ‌ண்டியில் ஒருவ‌ர் வ‌ந்து கொடுத்தாராம். மிக‌ ம‌கிழ்ச்சியுட‌ன் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ச‌மைய‌ல் செய்து அன்ன‌ தான‌ம் செய்தாராம்.

அப்போது அவ‌ர் உண‌ர்ந்த‌து : "இதை ந‌ட‌த்துவ‌து நான் அல்ல. குரு உப‌தேச‌ம் தான் இதை ந‌ட‌த்துகிற‌து". அப்போது முதல் தடையின்றி அன்னதானம் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

குருவின் உப‌தேச‌த்தின் ப‌டி "நாம்" ந‌ட‌ப்ப‌தாக‌ நாம் எண்ணினாலும் அதை உண்மையில் ந‌ட‌த்துவ‌து அந்த‌ ஞான‌ குருவின் ஆசீர்வாதமே.. எனவே உபதேசம் ப‌ற்றிய‌ சாத்திய‌ அசாத்திய‌ங்க‌ளைப்ப‌ற்றி அதிக‌ ஆராய்ச்சி செய்ய‌த் தேவை இல்லை. குருவின் ஞான உபதேசத்தை அப்படியே கடைப்பிடித்தால் ஞானம் நிச்சயம்.


க‌ட‌வுளே ம‌ஹாலிங்க‌ம், உங்க‌ள் அருளாலே அனைவ‌ருக்கும்  ஞான‌ ஆர்வ‌ம் ஏற்ப‌ட்டு, ந‌ல்ல ஞான‌ குரு அமைந்து, ஞான உபதேசம் கிடைத்து, ஞானம் அடையணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி..

7 comments:

கிளியனூர் இஸ்மத் said...

நல்ல பதிவு
ஞானம் பயில்வது ஞானி ஆவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு!

Sankar Gurusamy said...

திரு கிளியனூர் இஸ்மத், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி,

ம‌னிதன் முறைபடி வாழ‌ எப்போது கற்றுக்கொள்கிறானோ அப்போது தான் அவ‌ன் ப‌க்குவ‌ நிலையை அடைகிறான். ப‌க்குவ‌ நிலையின் உச்ச‌க்க‌ட்ட‌மே ஞானியாவ‌த‌ற்க்கு முத‌ல் ப‌டியாகும். இது என‌து க‌ருத்து


பட்டினத்தாரின் பாடலில்
நாட்டமென் றேயிரு ச‌ற்குரு பாத‌த்தை ந‌ம்பு பொம்ம‌ல்
ஆட்டமென் றேயிரு பொல்லா வுட‌லை அட‌ர்ந்த‌ ச‌ந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்ற‌த்தை வாழ்வைக் குட‌ங்க‌விழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உன‌க்கு உப‌தேச‌மிதே...


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

shanmugavel said...

//ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவர்களாலேயே உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும்.//

சத்திய வார்த்தை!

Sankar Gurusamy said...

பாலா, ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Unknown said...

குருவை பற்றி பல தகவல்கள் வந்தாலும் என் மனம் எப்போதும் அந்த அதினாதனையே குருவாக நினைக்கிறது வணங்குகிறது இது முற்றிலும் உண்மை இன்று வரை என்னை வழி நடத்துபவனும் அவனே நடத்திகொண்டிருப்வனும் அவனே.
எல்லாம் சிவமயம்.

Sankar Gurusamy said...

சிவன் அருள், இவர்தான் குரு என்று நாம் முடிவு செய்வதில்லை. அதை முடிவு செய்வதும் அவன் தான்.


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..