Monday, October 31, 2011

உலக மக்கள்தொகை - 700 கோடி

இன்று 31-10-2011 உலகின் மக்கள்தொகை 700 கோடி ஆக ஆனது. செய்தி சுட்டி கீழே :

World's seven billionth baby born in UP?


இதில் இந்தியா மற்றும் சீனா வில் மட்டுமே உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அதுவும் இந்த இரண்டு நாடுகளில் மக்கள்தொகை அடர்த்தியில் நமது இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 140 மக்கள் வாழ்கிறார்கள், அதுவே இந்தியாவில் 368 பேர் வாழ்கிறார்கள். 

அதிக மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் இருக்கும் நம் இந்தியாவின் சவால்கள் மிக அதிகம்.


1) அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் - உணவு, உடை, இருப்பிடம்..

2) அனைவருக்கும் சிறந்த கல்வி, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல்

3) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்

4) சிறந்த நேர்மையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல்

இவற்றை நாம் ஓரளவுக்கு செய்து வந்தாலும், இன்னும் விரைவான வேகத்தில் இவற்றை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

இதற்கு தடையாக இருக்கும் காரணிகளை அகற்றி விரைவில் நாம் நம் தேவைகளில் தன்னிறைவு அடைய இந்த முக்கியமான தருணத்தில் வேண்டிக்கொள்வோம்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, October 17, 2011

மின்சாரம் - சில கவலைகள்...

இன்று 17 அக்டோபர் 2011 முதல் 3 நாட்களுக்கு கோல் இந்தியாவில் ஊழியர்களால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நிலக்கரி இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் நம் தேசத்தில் இது ஒரு பெரிய அடியாகவே இருக்கும்...

ஏற்கனவே மின்சார தட்டுப்பாட்டால் திண்டாடும் நாம் இன்னும் சில மணிநேர மின் வெட்டிற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் அரசாங்கம் நினைப்பதுபோல் ஆயிரம் கோடிக்கணக்கில் முதலீடு செய்தால்தான் மின்சாரம் நமக்கு கிடைக்குமா? என இன்று கூகிளில் தேடிக் கொண்டிருந்தபோது சில ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன..

பீகார் மாநிலத்தில் ஒரு தனியார் கம்பெனி நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரித்து கிராமங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறதாம். ஒரு நாளைக்கு ரூ 2 செலவில் வழங்குவதாக தெரிகிறது. அந்த கம்பெனியின் வலைத்தள இணைப்புக்கு இங்கே அழுத்தவும்.  அதில் மேலும் பல விவரங்கள் கிடைக்கிறது.

இதுபோல ஒரு சில நிறுவனங்கள் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் வைத்திருக்கிறார்கள். 

மேலும் நான் எனது பள்ளி நாட்களில் கேள்விப்பட்ட கோபார் கேஸ் எனப்படும் சாண எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்க தொழில் நுட்பம் ஏற்கனவே இங்கு இருக்கிறது. அதை ஏன் தீவிரமாக முன்னெடுத்து செல்லக்கூடாது??

சிறிய சூரிய சக்தி மின் நிலையங்களை ஒவ்வொரு பெரிய கட்டிடங்களிலும் அமைக்க முடியும் என சில நிறுவனங்கள் சொல்கின்றன.. அரசாங்கமும் அதற்கு மானியம் வழங்குகிறது.

இது போல நிறுவனங்களை அணுகி அவற்றின் மூலம் நம் மின் உற்பத்திகளை பெருக்கினால் நம் மின் பற்றாக்குறைகள் தீராதா??

மேலும் நம் நாட்டில் இருக்கும் பெரிய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் புதிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து இதை மேலும் எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தம் வளாகங்களில் இப்படிப்பட்ட புதிய தொழில் நுட்பத்துடன் சிறு மின் தயாரிப்பு நிலையங்களை அமைத்தால் அவைகளுக்கான மின் பயன்பாடு மிச்சம் தானே..

உண்மையில் மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஊர் கூடி தேர் இழுத்தால் நிச்சயம் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கு அரசாங்கமும் மனசு வைத்து ஆவன செய்தால் விரைவில் தீர்வு வரும் என நம்புகிறேன்.. செய்வார்களா???

அந்த மஹாலிங்கம்தான் அருள் செய்யணும்...

சதுரகிரி நாயகனே போற்றி... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Friday, October 14, 2011

நாடு முழுதும் மின்சார பற்றாக்குறை...

கடந்த சில நாட்களாக இங்கு கல்கத்தாவில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை மின்சாரம் இருப்பதில்லை.. ஆனால் தொடர்ந்து நிறுத்தாமல் 2 மணி நேரம் வரை 3 அல்லது 4 முறை ஒவ்வொரு நாளும் நிறுத்துகிறார்கள். வீட்டில் யூபிஎஸ் இருப்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது...

இந்த நிலை நாடுமுழுதும் பரவலாகவே இருப்பதாக தெரிகிறது. இது பற்றி கடந்த சில நாட்களாக செய்திகளிலும் அடிபட்ட வண்ணம் இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் பல அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் அதற்கு கீழ்க்கண்ட காரணங்களை பட்டியலிட்டும் இருக்கிறார்கள் :

1) நிலக்கரி வரத்து மிகவும் குறைந்துவிட்டது. சில அனல் மின் நிலையங்களில் 2-3 நாட்களுக்குதான் இருப்பு இருக்கிறதாம். எப்போதும் 2-3 வாரங்களுக்கான நிலக்கரி இருப்பில் இருக்க வேண்டும்.

2) தெலுங்கானா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால் உண்டான உற்பத்தி குறைபாடு.

3) நிலக்கரி எடுக்கும் இடங்களில் பரவலாக பெய்த மழை. இது நிலக்கரி எடுப்பதையும் அதை கொண்டுசெல்வதையும் அதிகமாக பாதித்துள்ளதாக தெரிகிறது.

4) புதிய நிலக்கரி சுரங்களுக்கு அனுமதி கொடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தினாலும் அதன் சம்பந்தமான புதிய சட்டங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கவில்லை. இதனால் நிலக்கரி உற்பத்தி அளவு 2009 இருந்த அளவிலேயே இன்னும் இருக்கிறது.

5) யூனியன் பிரச்சினைகளால் உற்பத்தி அதிகரிக்க முடியாமல் போனதாம்.

6) பல மாநில மின்சார வாரியங்கள் நிலக்கரி வாங்கியதற்கு பலகோடி பாக்கி வைத்துள்ளார்களாம். இங்கு மேற்கு  வங்கத்தில் இது கிட்டத்தட்ட ரூ300 கோடி அளவில் பாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு தீர்வாக மின் கட்டணத்தை அதிகரிப்பதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ 4-25 க்கு தருகிறார்கள். இதை ரூ 6 ஆக ஏற்ற பரிசீலனையில் இருப்பதாக கேள்வி.


இப்போதைக்கு நிலைமையை சரிக்கட்ட கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன :

1) முதலில் தேவையான அளவு நிலக்கரியை உடனடியாக அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஊழல்களுக்கு வழிவகுக்கும் என எனக்குப் படுகிறது. முடிந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இந்த இறக்குமதி நடந்தால் சந்தோசப்படுவேன்.

2) இன்றைய செய்தியில் நம் நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுரங்கங்களை எடுத்துக்கொள்ள இருக்கும் புதிய வழிமுறைகள்பற்றி அரசாங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

3) நம் நாட்டிலேயே இருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை உடனடியாக அனல் மின்நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல ஆவன செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் உடனடியாக நம்மவர்கள் செய்ய வேண்டியது. இதை செய்தால்தான் மின் உற்பத்தி தங்குதடை இன்றி நடைபெற வழி செய்ய முடியும்.

4) கோல் இந்தியா லிமிடெட் என்ற நமது இந்திய நிலக்கரி கழகம் ஒவ்வொரு ஆண்டும் தனது உற்பத்தியில் 10% அளவிற்கு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி அதையும் நமது அனல் மின் நிலையங்களுக்கே கொடுக்க (விற்க) உத்தரவிடப்பட்டுள்ளது. விலையில் இருக்கும் வித்தியாசத்தினால் இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ4000 கோடி அளவுக்கு இந்த ஆண்டு இதனால் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.


எனக்கு என்னவோ இது அரசாங்கம் அனல் புனல் நிலையங்களை முடக்கி அணு மின் நிலையங்களை முன்னிறுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. 

மேலும் மின் கட்டணங்களை வகைதொகை இல்லாமல் உயர்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற பயமும் இருக்கிறது.

ஏற்கனவே விண்ணில் பறக்கும் விலைவாசியால் நசுங்கிப்போய் இருக்கும் சாமானியனுக்கு நம் அரசாங்கம் மேலும் சில விலையேற்றங்களையும் சில அணு மின் நிலையங்களையும் இந்த மின் பற்றாக்குறையை சாக்கு வைத்து பரிசாக அளிக்கப் போவது மட்டும் உறுதி.

அந்த மஹாலிங்கம்தான் நம்மளைக் காப்பாத்தணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, October 12, 2011

இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ள கருப்பு பணம்....$40 பில்லியன்

இன்றைக்கு கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது....

Scam 2.0: $40 bn of black money may have come back to India


அதாவது நம் நாட்டின் கருப்புபணம் நம் நாட்டிற்கு வந்ததாக ஒரு கணக்கு சொல்லி இருக்கிறார்கள்... அதன்படி, சென்ற ஒரு ஆண்டில் மட்டும் நம் நாட்டிற்குள் வந்த கருப்பு பணத்தின் மதிப்பு மட்டும் சுமார் $40 பில்லியன். 

இது தோராயமாக நம் நாட்டின் சென்ற ஆண்டின் 2010-11 ஏற்றுமதி கணக்குகளை மட்டும் படித்து சொல்லி இருக்கும் தொகைதான் இது. அதாவது பொருள் மற்றும் சர்வீசஸ் ஏற்றுமதிக்கும் நம் நாட்டுக்குள் வந்த பணத்தின் மதிப்புக்கும் இருக்கும் வித்தியாசம் தான் இது.

அதாவது மேல் நாடுகளில் இப்போது ஓரளவுக்கு கெடுபிடிகள் அதிகமாக ஆகிக்கொண்டு வருவதாலும், அந்த அளவுக்கு நம் நாட்டில் கெடுபிடிகள் அதிகம் இல்லாமல் இருப்பதும் மற்றும் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை வைத்து இங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதாலும் கருப்பு பணத்தை இந்தியாவில் வைத்திருப்பதுதான் பாதுகாப்பு என கருதுகிறார்கள் போல இருக்கிறது.

இது நம் அரசாங்கத்தின் கண்களுக்கு இன்னும் தட்டுப்பட வில்லை போல இருக்கிறது.சாமானியர்கள் லேசாக செலவு செய்தாலே ஆயிரம் கேள்விகள் கேட்கும் அரசாங்கம், கோடிக்கணக்கான பணத்தை இப்படி எடுத்து வந்ததை கேள்வி கேட்காமல் கமுக்கமாக இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

எப்போதுமே நம் நாட்டில் பலியாடு என்பது சாமானிய நடுத்தர மக்கள்தான். வசதி படைத்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் எதுவும் செய்யலாம் என்ற நிலை மாறும் வரை நம் நாடு உருப்பட வாய்ப்பு  நிச்சயம் இல்லை.

இதை யெல்லாம் அந்த மஹாலிங்கம் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறார். ஆனால் இன்னும் ஒண்ணும் செய்யல. எங்கெங்கோ சுழட்டி அடிக்கும் அவர் சாட்டை இதிலும் சுழலும் நாள் வெகு தூரம் இல்லை.


சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா... ஹர ஹர மஹாதேவா சரணம்...