Friday, July 29, 2011

ஊழலை ஒழிக்க விரும்பாத அரசு.....

நேற்று அரசு தயாரித்த லோக்பால் மசோதாவை நமது அமைச்சர்கள் குழு அங்கீகரித்ததாக செய்தி வந்தது. திரு அரவிந்த் கேஜ்ரிவால் சொன்னதுபோல இது ஒரு லோக்பால் இல்லை.. ஜோக்பால். இதன் தொடர்ச்சியாக திரு அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்..

உண்மையில் நம் அரசிற்கு ஊழலை ஒழிக்கும் நோக்கத்தைவிட ஊழலை ஒளிக்கும் நோக்கம்தான் அதிகம் இருக்கிறது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இதில் கட்சி பாகுபாடு இல்லாமல் ஆளும் கட்சியாக வரும் எல்லா கட்சிகளும் ஊழலில் திளைப்பது வருத்தம் தரக்கூடியதாகவே இருக்கிறது.

இது ஒரு மிக மோசமான சூழலை ஏற்படுத்தும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கை போய்விடும். சர்வாதிகாரமும் நக்சலிசமும் மீண்டும் தலை தூக்க இது ஒரு மூல காரணமாக ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் வெறும் வட்டி விகிதங்களை அதிகப்படுத்தி நடுத்தர மக்களை வதைக்கிறது. விலை வாசிகள் குறைய அரசு மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் நடப்பதாகவே தெரியவில்லை.

நம் நாட்டில் உண்மையில் சில பணக்காரர்களைத்தவிர அனைவருமே ஏழைகள்தான். இன்றைய விலைவாசியில் இதுதான் நிதர்சனம்.

ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இது புரிய வாய்ப்பில்லை.

இந்த நிலையில் திரு அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தை நம் அரசியல் வாதிக் குஞ்சுகள எப்படி கையாள்வார்கள் என்பது தெரிந்ததே. அதற்கு தயாராகவே அவர்களும் இருப்பதாக தெரிகிறது.

இதில் எனது ஆலோசனை எல்லாம், திரு அன்னா ஹசாரே, திரு அரவிந்த் கேஜ்ரிவால், திருமதி கிரண்பேடி இவர்கள் இப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை விட்டு பேசாமல் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு நல்லவர்களை பாராளுமன்றத்துக்கு /சட்டமன்றங்களுக்கு / ஊராட்சி,நகராட்சி மன்றங்களுக்கு அனுப்ப முயற்சி செய்யலாம். இதில் நிறைய இளைஞர்களும், திரு அப்துல்கலாம் போன்ற நேர்மையாளர்களும் பங்கு கொள்வார்கள் என்பது நிச்சயம். செய்வார்களா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்..

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் இதுக்கு ஒரு நல்ல வழி காட்டணும்..

சதுரகிரி வாழ் சுந்தரனே போற்றி... ஹர ஹர சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Tuesday, July 19, 2011

முத்தான மூன்று..

திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களின் அழைப்பிற்கிணங்க முத்தான மூண்று என்ற தலைப்பில் இந்த சங்கிலிப் பதிவு :

குரு :
மூன்று என்றவுடன் நியூமராலஜியில் குருவைக் குறிக்கும். முதலில் என் குருவை வணங்கி இந்த சங்கிலிக் கண்ணிப் பதிவு நல்ல படியாக வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...

கடவுள் கடாட்சம் :
அந்த உலகளந்த பெருமாள் மூன்று அடிகளால் இந்த உலகத்தை அளந்து மாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி ஆட்கொண்டதாக புராணம் கூறுகிறது.. அந்த மாயவன் இறைவன் நம் அனைவரின் மும்மலங்களான கர்மங்களை அடக்கி ஆட்கொள்வானாக...

குடும்பத் துணை :
இந்துக்களான நம் திருமண வாழ்க்கை தாலியில் மூன்று முடிச்சுடன் தொடங்குகிறது.. அனைவருக்கும் சிறப்பான திருமண வாழ்வு அமைந்து சுபிட்சமாக வாழ ஆண்டவன் அருளட்டும்...

சந்தர்ப்பங்கள் :
நீரில் நீச்சல் தெரியாதவர்கள் விழுந்துவிட்டால் மூன்று முறை அவர்களை நீர் மேலே தூக்கி விடுமாம்.. அதுபோல் நம் வாழ்விலும் இக்கட்டான நிலைகளில் ஆண்டவனும் நம்மை பலமுறை தூக்கி விடுகிறான்.

மகிழ்ச்சி :
அந்த காலத்தில் சினிமாவில் ஹீரோ வில்லனிடம் எப்பவும் மூன்று அடி வாங்கி விட்டுத்தான் திருப்பி அடிக்க ஆரம்பிப்பார். அது என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை. இப்ப நினைச்சாலும் புரியவில்லை...ஆனா நம்மளால அத விசில் அடிச்சு சந்தோசமா எஞ்ஜாய் பண்ண முடிஞ்சது...


கடவுளே மஹாலிங்கம்,  உலக மக்கள் அனைவருக்கு அருமையான குரு அமைந்து, கடவுள் கடாட்சம் கிடைத்து, சிறந்த குடும்பத் துணை அமைந்து, வாழ்வில் முன்னேற சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைத்து, மகிழ்ச்சியான, நிறைவான ஒரு வாழ்க்கை ஏற்பட அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....ஹரஹர மஹாதேவா போற்றி...

இந்த சங்கிலித் தொடரைத்தொடர திரு ஷண்முகவேல் அவர்களை அழைக்கிறேன்... http://counselforany.blogspot.com/

Thursday, July 14, 2011

தியானமும், மதங்களும்...

இன்றைக்கு இருக்கும் தியான முறைகள் பெரும்பாலும் மதம் சார்ந்தே இருக்கின்றன.. அல்லது இந்துமதம், பௌத்த மதம், ஜைன மதம் இப்படிப்பட்ட மதங்களில் இருந்துதான் வந்துள்ளன.. என்னதான் பல தியான முறைகள் மதத்துக்கு அப்பாற்பட்டது என்று பிரச்சாரம் செய்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனாலும் உண்மையில் தியானம் தோன்றிய மதங்கள் எதுவாயினும் தியானம் என்பது மனிதனுக்குள் ஒரு நன்மையான மாற்றம் விளைவிக்கும் ஒரு மருந்துதான்.

மருந்து தயாரிப்பவர் அல்லது தருபவர் யாராக இருந்தாலும் வியாதி குணமானால் சரிதானே?? உளியை செய்தது யாராக இருந்தாலும் அது சிற்பம் வடிக்க உதவினால் சரிதானே??? அதுபோலவே தியானமும், மூல மதம் எதுவாக இருந்தாலும் அது நம்மை சரியான வழியில் செலுத்த உதவி செய்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்றே நான் எண்ணுகிறேன்.


ஆனால், தம் மதத்தின் மீது அதீத பற்று உடைவர்கள் இதை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் ஒரு நெருடலுடன் தியானம் செய்வதற்கு பதிலாக தம் மதத்தின் கடமைகளை சரியாக செய்தாலே ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

விமானம் யார் கண்டுபிடித்தாலும் விரைவாக பயணம் செய்ய அதை நாம் உபயோகப் படுத்துவதுபோல, தியானமும், நாம் ஆன்மீகத்தில் விரைவாக ஞானம் நோக்கி பயணம் செய்ய உதவுகிறது. இதை புரிந்து கொண்டு தியானம் செய்த சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.

அவர்களின் தியான அனுபவம் மிக அதிசயமானது. அவர்கள் கூற்றுப்படி, அவர்கள் செய்துவந்த தியானம் அவர்களுக்கு வேறு மதத்தின் பாற்பட்டதானாலும், தத்தமது மதக் கடமைகளில் அதிக கவனம் செலுத்தும் படியாக அவர்கள் வாழ்க்கைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. தியானமும் செய்து, தம் மதக் கடமைகளையும் அவர்கள் செவ்வனே செய்து வந்திருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு காலப்போக்கில் இது நம் மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விசயம் தானா என்ற நெருடல் ஏற்பட தியானம் செய்வதை நிறுத்திவிட்டார்..

எனவே தியானங்களின் மதத்தைப்பற்றி அதிக சிந்தனை செய்வதை விட்டுவிட்டு அவற்றின் அளப்பரிய பலன்களை எண்ணிப் பார்த்து பயிற்சி செய்தால் நம் வாழ்வு சிறக்கும். ஞானம் விரைவில் சித்திக்கும்.

கடவுளே மஹாலிங்கம், தியானத்தின் இந்த உண்மையான தன்மை எல்லாருக்கும் புரிஞ்சு அவங்க செம்மையாக தியானம் செய்து விரைவில் ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி நாதனே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...

மும்பை குண்டு வெடிப்பு...13-ஜூலை 2011

நேற்று 13-ஜூலை 2011 மாலை சுமார் 7 மணி அளவில், மும்பையில்,  3 இடங்களில் குண்டுகள் வெடித்து சுமார் 21 பேர் இறந்திருக்கிறார்கள். இது மிகவும் கண்டனத்துக்கு உரிய விசயமாகும். கோழைத்தனமாக அப்பாவி மக்களை தாக்கும் எவரும் மிக கடுமையாக கண்டிக்கத்தக்கவரே..

இது சில தீவிரவாத இயக்கங்களின் செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்னைப் பொருத்தவரையில் இதில் முழு பங்கு நம் அரசில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்குத்தான்... எப்படி???

மேற்கு நாடுகளில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தால் பல ஆண்டுகளுக்கு அது நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுத்து தடுக்கிறார்கள்.

ஆனால் இங்கு நம் நாட்டில், இந்த கண்டிப்புகள் இப்படிப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்கள் மட்டும் பேரளவில் இருக்கும். பிறகு வழக்கம்போல் அடுத்த குண்டு வெடிப்புக்கு தயாராக வேண்டியதுதான்.

நாட்டின் ஒவ்வொரு செக் போஸ்டிலும் நாம் கண்டிப்புடன் இருந்தால் தீவிரவாதிகள் ஊடுறுவ முடியுமா? வெடிப் பொருள்களை கடத்த முடியுமா?

குஜராத்தில் சில நாட்களுக்கு முன் சொமாலியாவைச் சேர்ந்த சில மாலுமிகள் ஊருக்குள் உலவிக்கொண்டிருந்ததைக் கண்ட கடற்கரையோர கிராம மக்கள் போலீசில் சொல்லி நடவடிக்கை எடுக்க சொன்னார்கள். போலீஸ் விசாரணையில் அவர்கள் கடலில் திசை மாறி கரை சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். இவர்கள் பற்றி கடலோர காவல்படைக்கோ நேவிக்கோ தெரிந்திருக்கவில்லை. அந்த லட்சணத்தில் நம் கடல் எல்லைப் பாதுகாப்பு இருக்கிறது..

நாட்டு மக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டிய தலைவர்களில் பலர் ஊழலில் திளைத்து, லஞ்ச பணத்தை பதுக்குவதில் தீவிர கவனமாக இருப்பதால் தொண்டர்களான சில/ பல கீழ்/மேல்மட்ட அதிகாரிகளும் சுதந்திரமாக தவறு செய்ய விழைகிறார்கள்..

இதன் விளைவு நேரடியாக நம் நாட்டு மக்களை இப்படிப்பட்ட தீவிரவாதம் மூலம் பாதிக்கிறது.

இதில் இன்னொரு முக்கியமான் விசயமும் விசாரிக்கப்பட வேண்டும்.. அது என்னவென்றால், நம் அரசியல் தொழில் செய்யும் சில கேடுகெட்ட கோமான்கள் கைவரிசை இதில் இருக்கிறதா என்பதே அது...

இப்போது மீடியா, மக்கள் எல்லோரும் ஒவ்வொரு வாரமும் புதிய ஊழல், லஞ்ச புகார், அமைச்சர் பதவி விலகல், கருப்புபண விவகாரம் , விலைவாசி உயர்வு, இப்படி அரசுக்கு தொல்லை தரும் விசயங்களில் கவனம் அதிகம் இருக்கிறது.

இதை விட்டு விலகி இப்படிப்பட்ட ஒரு தீவிரவாத சம்பவம் நடைபெற்றால் அனைவரது கவனமும் அதில் திரும்பிவிடும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டதா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். செய்வார்களா???

கடவுளே மஹாலிங்கம்.. நீங்கதான் இதுக்கு ஒரு வழி செய்யணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.... ஹரஹர மஹாதேவா போற்றி...

Tuesday, July 12, 2011

தியானம் - பல நிலைகள்????

நான் தியானம் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் எனது பல நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்வி - “நீ தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறாய்??” என்பது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவர்களும் வெவ்வேறு விதமான தியான முறைகளை முறையாக பயின்று, தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள்.

முதலில் எனக்கு இது புரியவில்லை. பிறகு அவர்களின் தியான முறைகளுக்கு உட்பட்ட சில விளக்கங்கள் கேட்ட பிறகு ஓரளவுக்கு புரிந்தது..

அதாவது நாம் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்வதை தியானம் செய்வதோடு ஒப்பிட்டால், வழியில் , செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், உழுந்தூர் பேட்டை, திருச்சி, இப்படி வரும் ஊர்கள் போல நம் தியான இலக்கு நோக்கி எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதன் அளவீடுதான் இந்த நிலைகள் என்று ஒருவழியாக புரிந்து கொண்டேன்.

இது சம்பந்தமாக எனக்கு தியானம் கற்றுத்தந்த ஆசிரியர் ஒன்றும் கூறி இருக்கவில்லை. அவரிடம் இது பற்றி விளக்கம் கூறுமாறு கேட்டபோது சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

1) நமது தியான நிலையின் அளவீடுகள் உண்மையில் மதிப்பிடுவது சாதாரணமாக முடியாத காரியம்.

2) அதை உண்மையில் கண்டறிவது நம் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் வைத்தே கணிக்க முடியும்.

3) தியானத்தின் உயர்நிலை தாழ் நிலை என எதுவும் வரையறுக்கப் படவில்லை.

4) பெரும்பாலும் இது அவரவர்கள் கற்றுத்தரும் போது மாணவர்களுக்கு ஒரு மேலதிக ஆர்வம் உருவாக்க உபயோகப் படுத்துகிறார்கள்.


இதுபற்றி நான் மேலும் அறிய புகுந்தபோது கிடைத்த தகவல்கள்:

சில தியான முறைகளில், ஒரு குறிப்பிட்ட நாட்கள் தியானம் செய்தபின் அவர்கள் அடுத்த நிலைக்கு வந்துவிட்டதாக கணக்கிடுகிறார்கள்.

இன்னும் சில தியான முறைகளில், அவர்களின் மேலேயே இன்னொருவர் தியானம் செய்தும் உண்மையாக கண்டுபிடிக்கிறார்கள்.

சில முறைகளில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொருவிதமான தியானங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அது நாம் செய்யும் தியானத்தின் பால் சார்ந்ததே ஒழிய அது ஒன்றும் ஒரு பொதுப்படுத்தப்பட்ட விசயம் இல்லை.


மேலும் நாம் தியானத்தின் உண்மையான இலக்கான ஞானத்தை அடைய எடுக்கும் கால அளவு எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே போதுமானது.  சிலருக்கு பலபிறவிகளும் தேவைப்படுகிறது. அது நம் மனநிலையையும் நம் கர்மசொத்துக் கணக்கையையும் பொருத்தது.

தொடர்ந்து தினமும் தியானம் செய்தால் நிச்சயம் ஞானம் அடையலாம். எப்போது என்ற கேள்வியை விட்டுவிட்டு, அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து தியானம் செய்துவந்தால் ஞானம் நிச்சயம் சித்திக்கும்.

எனக்கு தெரிந்து தியானத்தில் இரண்டே நிலைகள்தான்.. ஒன்று தொடர்ந்து தியானம் செய்யும் நிலை. இன்னொன்று தியானத்தை விட்ட நிலை.

இதில் தியானம் செய்யும் நிலையில் நாம் எப்போதும் இருந்தால் ஞானம் சித்திக்கும்..

கடவுளே மஹாலிங்கம் எல்லாரும் தொடர்ந்து தினமும் தியானம் செய்து ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.. ஹரஹர மஹாதேவா போற்றி...

Monday, July 11, 2011

எது தியானம்???

தியானம் என்றால் என்ன? இது ஒரு கடினமான கேள்வி.. இதற்கு ஒரே பதில் தரவும் முடியாது...

சிலர் அமைதியாக அமர்ந்திருப்பதே தியானம் என்கிறார்கள்.

சிலர் மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் என்கிறார்கள்.

சிலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும் வழிபடுவதையும் தியானம் என்கிறார்கள்

சிலர் மந்திரம் உச்சாடம் செய்வது தியானம் என்கிறார்கள்.

சிலர் முனைப்போடு காரியம் செய்வதையும் தியானம் என்றே சொல்கிறார்கள்.

இப்படி பல சிலர் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள்..


ஒரே குழப்பம்.. யார் சொல்வதை எடுத்துக் கொள்வது. எதை விடுவது. எது சிறந்தது. எது ஒவ்வாதது.

முதலில், இதில் நாமாக, சுயமாக செய்யும் எதுவுமே ஒவ்வாவதுதான்... அது தியானமாகாது. முக்கியமாக ஒரு ஆசிரியர் மூலம் கற்காத தியானம் தியானமே அல்ல.

அது எந்த வகையானதாக இருந்தாலும் ஒரு தேர்ந்த தியான ஆசிரியரைப் பணிந்து தியானம் கற்றுக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும்.  அதுவே உண்மையான தியானம்... அது நம் வாழ்வில் தேவையானதை எல்லாம் நமக்கு அளிக்கும்..

கடவுளே மஹாலிங்கம்... நம் மக்கள் அனைவரும் ஒரு நல்ல தியான ஆசிரியரிடம் தியானம் கற்று சிறப்பாக பயிற்சி செய்திட நீங்கதான் அருள் செய்யணும்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, July 7, 2011

ஞானமும், தியானமும்...

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும், நம் வாழ்வில் நாம் அடைய வேண்டிய இலக்கு ஞானம். இதற்கு எவ்வளவோ வழிகள் இருந்தாலும், விரைவில், பாதுகாப்பாக அடைய சரியான வழி தியானமே..

தியானம் செய்வதால் என்ன பயன்? நமக்கு சக்திகள் கிடைக்குமா? பறக்க முடியுமா? மறைய முடியுமா? எதிரியை அழிக்க முடியுமா? நிறைய பணம் கிடைக்குமா?? அது என்னதான் செய்யும்?

நானும் தியானம் கற்று சில நாட்களாக செய்து வருகிறேன்.. என் அனுபவத்தில் அறிந்தவை :

முதலில் நமக்கு நம்மை உண்மையாக அறிமுகம் செய்து வைக்கும்.. நமது கொள்ளளவு (Capacity) என்ன என்று நமக்கு உணர்த்தும். நாம் நினைப்பது போல் ஒரு சூப்பர்மேன் அல்ல அல்லது ஒரு உதவாக்கரை அல்ல..  நமது உண்மையான மதிப்பீடு நமக்கு மிக முக்கியம். இதிலிருந்துதான் நாம் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான சூட்சுமம் அடங்கி இருக்கிறது. அதை நமக்கு அழகாக நாசூக்காக உணர்த்துகிறது.

அடுத்து நம் வாழ்வின் உண்மையான வாழ்வியல் தேவைகள் என்ன  என நமக்கு உணர்த்தி நம்மை அதை நோக்கி தள்ளுகிறது. மேலும் சில தேவையில்லாத விசயங்களில் நாம் மதி மயங்கி மூழ்கிக் கிடக்கும் போது அதிலிருந்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கிறது..

இது நம் பழக்க வழக்கங்களில் ஒரு நேர் மறையான மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

நம் வாழ்வின் இலக்கான ஞானம் அடைய நமக்கு பொருத்தமான ஒரு Custom made வழியில் நம் வாழ்வை வழி நடத்துகிறது. ஞானம் அடைய நாம் செய்யவேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வைக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இதை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.



இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான தியான முறைகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. யார் யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள். பல பிரபலமான அமைப்புகளும் இருக்கின்றன.

யாரிடம் கற்பது? எதை கற்பது? எது சரியான தியானம்? எது போலி தியானம்? ஆயிரம் கேள்விகள்..

இவற்றிற்கு உண்மையான, நேர்மையான பதில், நம் மனதுக்கு பிடித்த ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளலாம். நமக்கு யார் மீது அபிமானம் இருக்கிறதோ அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம். நமது சுற்றத்தார் / நட்பு வட்டத்தில் நம்பிக்கைக்கு உரிவர்கள் பரிந்துரைக்கும் தியானம் கற்றுக் கொள்ளலாம்.
என் தியான ஆசிரியர் கூறிய ஒரு மிக முக்கியமான விசயம் - ”தியானம் எல்லாமே ஒரே விதமான பலன் தரும். அதை சொல்லிக் கொடுப்பவர்கள்தான் அதை பாகுபடுத்தி அதில் ஒரு உயர்வு தாழ்வு ஏற்படுத்திவிட்டார்கள். எனவே ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். மாறி மாறி மனதை அதுவோ இதுவோ என்று அலைய விடாதீர்கள்.”

இதில் அதி முக்கியமான விசயம் தொடர்ந்த தியான பயிற்சி. இதுவே நம் வாழ்வின் இலக்கான ஞானத்துக்கு நம்மை பாதுகாப்பாக இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. உங்க அருளால எல்லாரும் தியானம் செய்து வாழ்வின் லட்சியமான ஞானத்தை அடைய அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.... ஹரஹர மஹாதேவா போற்றி...

Tuesday, July 5, 2011

ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா??

சில நாட்களுக்கு முன் நம் மத்திய அரசு சமூக ஆர்வலர்களுடன் லோக்பால் விசயமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப் பின், இனிமேல் எந்த விதமான சட்ட விவாதத்திலும் எந்த சமூக ஆர்வலர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என அறிவித்தது.
 
அதன் பின்  நடந்த லோக்பால் பற்றிய அனைத்துகட்சி கூட்டத்தில் சமூக ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசின் நடவடிக்கையை பெரும்பாலான கட்சிகள் கண்டித்ததாகவும், அதுவும் முதலில் சமூக ஆர்வலர்களுடன் பேச்சு நடத்திவிட்டு இப்போது அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

மக்கள் நலனில் உண்மையான் அக்கரையுடன் செயல்படும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட எந்த ஜனநாயக அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

மாறாக, தேர்தலில் நின்று ஜெயித்து விட்டால் மட்டுமே மக்கள் நம்பிக்கை இருக்கிறது, இவர்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கரை கொண்டவர்கள் என்ற மாய தோற்றத்தை நம் அரசியல் வியாதிகள் ஏற்படுத்தி வருகிறார்கள். 

இது எவ்வளவு பெரிய மோசடி என்ற விசயம் நமக்கு அலைக்கற்றை ஊழலிலும், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், கருப்புப் பண விசயத்தில் இவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலும் அம்மணமாக தெரிகிறது.
 

மேலும் இன்றைய செய்தியில் அரசு கருப்பு பணத்தை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாகவும் அதில் நேற்று உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி..


இதற்கு முன் அலைக்கற்றை ஊழல் விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் விசாரணையே நடைபெற ஆரம்பித்தது. நடவடிக்கையும் ஒவ்வொரு முறை குட்டிய பிறகே நொண்டி நொண்டி எடுக்கப்படுகிறது.  இந்த சூழலில் மக்களுக்கு உச்ச நீதிமன்றம் இந்த கருப்புப் பண விசயத்தில் தலையிட்ட பின் ஒரு நம்பிக்கை கீற்று ஏற்பட்டிருக்கிறது.

இப்போது எனது சந்தேகம் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற பொறுப்பு உள்ள அரசியல்கட்சிகளின் ஆட்சியாளர்கள், மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், தம் சொந்த நலனுக்காக காரியங்கள் செய்து கொள்ளும்பொழுது, இவர்கள்மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும் / இருக்கும் என நினைக்கிறார்கள், என்பது புரியவில்லை. 

மக்களின் நம்பிக்கையைப் பெறாத அல்லது இழந்த ஆட்சியாளர்கள் செய்யும் ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது... 

இப்படி இருக்கும் நேரத்தில் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயல் படும் நம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், சமூக ஆர்வலர்களும் நம் தேசத்தை ஆள வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருட்டை விரட்டுவதற்கு எளிய வழி ஒரு விளக்கை ஏற்றுவதே....

இப்படிப்பட்ட மோசடி அரசியல்வாதிகள் ஒழிய, திரு அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் அரசியலில் குதித்து ஒரு கட்சி ஆரம்பித்து, மக்களுக்கு நல் வழி காட்ட முன்வர வேண்டும். 

திரு அப்துல் கலாம், கிரண் பேடி போன்றோர் மக்களுக்கு சரியான தலைவர்களை அடையாளம் காட்ட அரசியல் களம் காணவேண்டும். 

மேலும் நேர்மையானவர்கள் அரசியல் களம் கண்டு தேசம் செழிக்க உதவ வேண்டும்.

இதெல்லாம் நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!! சதுரகிரி நாதனே சரணம்!!!

Monday, July 4, 2011

பிரார்த்தனைகள் - 2

நாம் அடையும் எல்லா விஷயங்களும் கடவுளிடம் இருந்து நமக்கு வருபவை என்றாலும், சில விஷயங்கள் கடவுளால் மட்டுமே தர முடியும் என்ற நிலையில் இருப்பவை... அவை பற்றி...


1) நல்ல உடல், மன ஆரோக்கியம்

2) சுயநலமில்லா பந்து மித்திரர்கள், சுற்றத்தார்கள்

3) சத் சங்கம், சத் சிந்தனை

4) நல்ல மனைவி, மக்கள்

5) தேச, உலக நலன்

6) மன நிம்மதி, ஆனந்தம், மன அமைதி

7) ஞானம்


இவை அனைத்தும் இறைவன் மட்டுமே தர முடியும். மேலும் நமது, ”இந்த உலகில் எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்ற பிரார்த்தனைகளின் முடிவு மேற்கண்ட ஏதாவது ஒன்றில் வந்து தான் நிற்கும்.

எனவே பொதுவாக இவற்றை பிரார்த்தனை செய்தாலே இறைவன் நமக்கு இந்த உலகில் இவற்றை அடைய தேவையானவற்றை உடனடியாக அளிப்பான் என்பதில் சந்தேகமில்லை.

குறைந்த பட்சம், மன நிம்மதியும் ஞானமும் நமக்கு வாய்த்தால் வேறு எதுவும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை.

இதில் ஞானம் கை கூடினால் நிம்மதி தானாக கிடைக்கும்.  எனவே ஞானம் வேண்டி பிரார்த்திப்போம். ஒரு நிம்மதியான சமுதாயம் படைப்போம்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லாருக்கும் மன நிம்மதியும் ஞானமும் கைகூட அருள் செய்யுங்கள்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....