Wednesday, August 22, 2012

வீடு வாங்கப் போனேன்

சென்னைக்கு வந்ததும் ஒரு வீடு (அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான்) வாங்கலாம் என முடிவு செய்து கடந்த 5 மாதங்களாக தேடி வருகிறேன். அடேங்கப்பா.. எத்தனை விதமான பிரச்சினைகள்.. எத்தனை விதமான அனுபவங்கள்..

முதலில், இனி சென்னையில் சாமானியன் வீடோ அடுக்கு மாடி குடியிருப்போ வாங்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு 800 சதுர அடி வீடு வாங்க கூட ஒரு நடுத்தர வர்க்கத்தவரால் முடியாமல் போயிற்று. குறைந்த பட்சம் ரூ 20 லட்சம். இது ஊருக்கு மிக தொலைவில் ஏதோ ஒரு குடியிருப்பில் தினமும் ஒரு 3 அல்லது 4 மணி நேரம் அலுவலகத்துக்கு பயணம் செய்ய தயாராக இருந்தால். மேலும் சொந்த வாகனம் இல்லாவிட்டால் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாது.

நான் பல இடங்களில் வீடு தேடியபோது கவனித்த மிக முக்கிய விசயம். யாருமே குடியிருப்பதற்கு வீடு கட்டுவதுபோல தெரியவில்லை. பெரும்பாலும் எல்லோருமே ஒரு முதலீடாக வீடு வாங்குபவர்களுக்காகவே கட்டுகிறார்கள். என்னைப்போல‌ குடியிருக்க‌ வீடு வாங்குப‌வ‌ர்க‌ள் த‌னியாக‌தான் அதில் குடியிருக்க‌ வேண்டி இருக்கும். (ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வாட‌கைக்கு வ‌ரும்வ‌ரை)

இந்த‌ வார‌ம் ஒரு ப‌த்திரிக்கையில் ஒருவ‌ர் எழுதி இருந்தார்.சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புக‌ளின் மாடிகளின் எண்ணிக்கையை அதிக‌ப்ப‌டுத்தினால் விலை குறையும் என்று. இது முற்றிலும் த‌வ‌றான‌ கணிப்பு. நான் தேடிய‌வ‌ரை மாடிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிக்கும்போது வீடுக‌ளின் விலையும் அதிக‌ரித்தே இருக்கிற‌து. 4 அல்ல‌து 5 மாடிக‌ளுக்கு மேல் ஒவ்வொரு மாடிக்கும் குறைந்த‌து ரூ 50 முத‌ல் ரூ 500 வ‌ரை விலை உய‌ர்த்தியே விற்கிறார்க‌ள்.

இன்னொரு முக்கிய‌மான‌ பிர‌ச்சினை அர‌சு அனும‌தித்த‌ அள‌வைவிட‌ அதிக‌ அள‌வில் வீடுக‌ள் க‌ட்டுவது, அர‌சிட‌ம் அனும‌தி வாங்கிய‌தை விட‌ அதிக‌ ச‌துர‌ அடிக‌ளில் வீடுக‌ளைக் க‌ட்டுவ‌து, அனும‌தியே வாங்காம‌ல் அனும‌தி வாங்கிய‌துபோல‌ க‌ட்டுவ‌து, இன்னும் இந்த‌ அர‌சு அனும‌தி விச‌ய‌த்தில் எவ்வ‌ள‌வு த‌கிடு த‌த்த‌ம் இருக்கோ தெரிய‌வில்லை.

நான் பார்த்த‌வ‌ரை இதுவ‌ரை யாருமே அர‌சு அனும‌தி அளித்த‌ வ‌ரைப‌ட‌ம் ப‌டி வீடு க‌ட்ட‌வில்லை. ஓர‌ள‌வுக்கு அந்த‌ வ‌ரைப‌ட‌த்தை ஒட்டி வீடு க‌ட்ட‌ப்ப‌டுமானால் அந்த‌ பில்ட‌ர் கேட்கும் ப‌ண‌த்துக்கு நாம் இர‌ண்டு வீடு வாங்கி விட‌முடியும். அவ்வ‌ள‌வுக்கு கொள்ளை விலை வைத்து விற்கிறார்க‌ள்.

என‌க்குத் தெரிந்த‌ வ‌க்கீல் ந‌ண‌ப‌ரிட‌ம் இது ப‌ற்றி விசாரித்த‌போது அவ‌ர் சொன்ன‌ த‌க‌வ‌ல்க‌ள் இன்னும் பகீரென்று இருந்த‌து. 1999க்குப் பிற‌கு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ விதி முறை மீறிய‌ க‌ட்டிட‌ங்க‌ளை இடிக்க‌ சுப்ரீம் கோர்ட் உத்த‌ர‌வு இருப்ப‌தாக‌ கேட்ட‌து வ‌யிற்றில் புளியைக் க‌ரைக்கிறது. ந‌ம‌து அர‌சுக‌ள்தான் அந்த‌ உத்த‌ர‌வை ந‌டைமுறைப்ப‌டுத்தாம‌ல் த‌ள்ளிவைத்துவிட்டு மேலும் மேலும் இப்ப‌டி விதிமுறை மீறிய‌ குடியிருப்புக‌ளை அனும‌திப்ப‌து வ‌ருத்த‌மாக‌வே இருக்கிற‌து.

தி ந‌க‌ரில் இருக்கும் வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ள் விதிப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை என‌ குதிக்கும் ந‌ம‌க்கு, நாம் குடியிருக்கும் வீடுக‌ளே விதிப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை என்ப‌து எப்போது உறைக்கும் என‌ தெரிய‌வில்லை. இதில் எல்லோரும் கூட்டுக்க‌ள‌வாணிக‌ள் போல‌த்தான் தெரிகிற‌து.

சுருக்க‌மாக‌ சொன்னால் பேசாம‌ல் வாட‌கை வீட்டிலேயே இருந்துவிட‌லாம் போல‌ தோன்றுகிற‌து. யாராவ‌து பூனைக்கு ம‌ணி க‌ட்டுவ‌துபோல், ஏதாவ‌து ஒரு அர‌சாங்க‌ம் விதிக‌ளைத் த‌ள‌ர்த்தியோ அல்ல‌து புதிய‌ விதிக‌ளை க‌டுமையாக‌ பின்ப‌ற்ற‌ ஆவ‌ன‌ செய்தாலோ அல்ல‌து அத்தி பூத்தாற்போல் யாராவ‌து நியாய‌மான‌ உண‌ர்வுடைய ஒரு பில்ட‌ர் அமைந்தாலோ தான் வீடு வாங்க‌ முடியும்போல‌ தெரிகிற‌து.

இல்லாவிட்டால் எல்லாருக்கும் விதிச்ச‌து ந‌ம‌க்கும் அப்பிடின்னு முடிவு ப‌ண்ணி ஏதாவ‌து ஒரு பில்ட‌ர்கிட்ட‌ வீடு வாங்கிவிட‌லாமான்னும் ஒரு யோச‌னை இருக்கு..

 
கால‌மும் ந‌ம்ம‌ ம‌ஹாலிங்க‌மும் தான் இதுக்கு பதில் சொல்ல‌ணும். ஓம் ச‌துர‌கிரி சுந்த‌ர‌ மஹாலிங்க‌மே ச‌ர‌ண‌ம்.

Friday, March 16, 2012

இலங்கை போர்க் குற்றங்கள்.. யார் பொறுப்பு??

நேற்று சானல்4 ஒளிபரப்பிய அந்த இலங்கை போர்க் குற்ற வீடியோவைப் பார்த்த பிறகு நெஞ்சு அடைத்ததுபோல இருந்தது. முதல் பாகம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இதை சற்று விட்டு விட்டுத்தான் பார்க்க முடிந்தது. கண்கள் பனித்தது. இதற்கு யார் பொறுப்பு என அந்த விடியோவில் காட்டினார்கள். எனக்கு அவர்கள் காட்டியவர்களுடன் இன்னும் அதிக பொறுப்புடையவர்களாக சிலர் தெரிந்தார்கள். அவர்கள் பற்றி..

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதுபற்றி தெரிந்தும் முழுமையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடாமல், நடிகைகளின் அங்கங்களையும், சினிமா/அரசியல் கிசுகிசுகளையும் பக்கத்துக்கு பக்கம் பதிப்பிற்று விற்றுக் கொண்டிருந்த நம் தமிழகத்துப் பத்திரிக்கைகள் / இதர ஊடகங்கள்.

இன்னும்கூட இதில் கள்ளமௌனம் சாதிக்கும் நம் ஊடகங்கள்தான் முதல் குற்றவாளி.

 
இதே நேரத்தில், அரசியல் பதவி பேரம் பேசிக்கொண்டும், வாரிசுச்சண்டையில் சமாதானம் பேசிக் கொண்டும், சொகுசு பங்களாக்களில் நிரந்தர ஓய்வு எடுத்துக்கொண்டும் இருந்த நம் தமிழக முன்னணி அரசியல் தலைவர்கள் இரண்டாவது குற்றவாளி.

இவர்களுக்கும் இதுபற்றி நன்றாக தகவல்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களை திசை திருப்பி இலங்கை அரசாங்கம் சொன்ன பொய்களை நம்மை நம்பவைத்த நயவஞ்சகர்கள். இன்று இதற்காக இவர்கள் சிந்தும் நீலிக் கண்ணீர் அவர்கள் குடும்பததை எரியாய் எரிக்கப் போகும் நெருப்புத் துண்டங்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.

 
இந்த இறுதிப் போரில் இலங்கைக்கு தார்மீக உதவிகளும், தளவாட உதவிகளும் செய்து போரை முடித்துவைக்க உதவியதாக சொல்லப்படும் நம் இந்திய மத்திய அரசாங்கம் இதில் மூன்றாவது குற்றவாளி.

நம் தமிழகத்தை முதலிலேயே நீர் மேலாண்மையில் வஞ்சித்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, ராஜீவ் கொலைக்குப் பிறகு முற்றிலும் கைகழுவி விட்டது. இன்னும் நம் வங்கக்  கடலில் தினமும் தாக்கப்படும் /  கொல்லப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லாத இந்த மத்திய அரசு, இப்போது ஒவ்வொரு தமிழனும் இனி இந்தியன் என சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வைத்துவிட்டது.

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதைத் தடுக்கத் தவறிய ஐநா சபையும் அதன் உறுப்பு நாடுகளும் நான்காவது குற்றவாளிகள்.

லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த ஒரு சமூகமே அழிக்கப்பட்டதை இவர்கள் தத்தமது சாட்டிலைட்டுகள் வழியாக அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இன்று படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கக்கேடு. உண்மையில் நம் கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்வதுபோல ஐநா சபை என்பது  அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஏவலை செய்து முடிக்கும் நாய்தான் போலிருக்கிறது.

 
இந்த போர்க்குற்றங்கள் நடந்ததை அறிந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் / செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும், நான் உட்பட, ஐந்தாவது குற்றவாளிகள்.

இன்னும் நம்மால் சாந்தமான மனநிலையில் வாழ முடிகிறது. ஒன்று நாம் முற்றிலும் காயடிக்கப்பட்டிருக்கிறோம், அல்லது முழு ஞானியாகி விட்டோம். இதில் முன்னதுதான் சரியானது என நினைக்கிறேன்.


ஒரு குற்றத்தை செய்பவனுடன் உடந்தையாக இருந்தவர்களும் பெரிய குற்றவாளிதான். இந்த வகையில் மேற்கண்ட அனைவருமே குற்றவாளிகளே.


கடவுளே மஹாலிங்கம், இந்த படுகொலையில் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நற்கதியைக் கொடுங்க. இன்னும் பிழைத்து இருப்பவர்களுக்கு எதையும் தாங்கும் மனோபலத்தையும் ஆத்ம பலத்தையும் கொடுங்க. என்னைப் போன்ற தமிழனுக்கு கொஞ்சமாவது வீரத்தைக் கொடுங்க..

சதுரகிரி சுந்தரனே சரணம்...

Friday, March 2, 2012

பயமாக இருக்கிறது....

நேற்று என் மகன் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு சொன்னான். என்னடான்னு கேட்டா அவன் வகுப்பில் கூட படிக்கும் ஒரு பையன் சக மாணவியை லவ் பண்ணுவதாக சொன்னான்.

சற்று பகீரென்று இருந்தது. சமாளித்துக் கொண்டு இது எப்பிடி உனக்கு தெரியும்னு கேட்டேன். அந்த பையனே அவனிடன் சொன்னதாக சொன்னான். பிறகு அவனிடம் அந்த பையன் ஒரு பேட்பாய் (Bad Boy) , அவனோட சேராதேன்னு சொல்லி சமாளிச்சு டாபிக்க மாத்தினேன்.

இதில் முக்கியமான விசயம் என் பையன் வயது 5, படிப்பது ஒன்னாவது வகுப்பில்.

இந்த வயதில் இந்த குழந்தைகளுக்கு லவ் பண்ணுவது பற்றி தெரிவதும் அதை நடைமுறைப்படுத்த இறங்குவதும் ஒரு பெற்றோராக பயமாக இருக்கிறது.

பிரச்சினை பள்ளிகளில் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளிலும், நாம் பார்க்கும் டிவி சீரியல்களிலும், பார்க்கும் சினிமாக்களிலும்தான் முக்கியமான பிரச்சினை இருக்கிறது.

பெரியவர்கள் பார்க்கும் அதே சீரியலையும், சினிமாவையும்தான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அதை அவர்கள் பக்குவத்துக்கு ஏற்ப புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்தவுடன் எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

என்ன செய்றதுன்னு தெரியல. நம்மாலயும் வீட்டுல டீவி பார்க்காம இருக்க முடியாது. இனிமேல் அந்த பசங்க பார்க்கர படங்களாகவே புரோகிராம்களாகவே நாமளும் பார்க்க பழகிக்கணும்னு நினைக்கிறேன்.

எல்லாம் அவன் செயல்.. இயற்கை ஏதோ சமூக மாற்றத்தை செய்யுது. இந்த மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்னு சத்தியமா புரியல. அதை புரிஞ்சுக்கிற சக்தி நமக்கு இல்லையோன்னு தோணுது. நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.

கடவுளே மஹாலிங்கம், எல்லாரும் எப்போதும் நிம்மதியா இருக்கணும்..

சதுரகிரி நாயகனே போற்றி. சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, March 1, 2012

கடலளவு அன்பு...

நம் ஆழ்மனதில் கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற பல எதிர்மறை உணர்வுகள் ஆழமாக படிந்து கிடக்கிறது.

இவற்றை தூண்ட வெளியிலிருந்து வரும் ஒரு எதிர்மறை சொல்லோ அல்லது நமக்குப் பிடிக்காத சிறிய செயலோ போதுமானதாக இருக்கிறது. உடனடியாக இந்த உணர்வுகள் மின் அலைகளாக நம் உடல் முழுதும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாம் இந்த சந்தர்ப்பத்தில் செய்யும் எதிர்வினைகளைத்தான். இநத உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது இந்த எதிர்வினைகள்தான்.

இதுதான் நம் உறவுகளைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் வாழ்வில் பலவித மனிதர்களை பலவித சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம். அவர்களுடனான நமது தகவல் பரிமாற்றங்களின் போது ஏற்படும் சில தவறான புரிதல்களால் நாம் செய்யும் எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் நமக்கு பலவித இழப்புகளை ஏற்படுத்தி விடும். இது நமது உறவுகளில் மட்டுமல்ல; அலுவலக நிமித்தங்களிலும், தொழில் நிமித்தங்களிலும் மிகவும் முக்கியமானதுகூட‌.

நமக்கு சமமானநிலையில் இருக்கும் எதிரியிடமோ அல்லது நண்பருடனோ அல்லது சக ஊழியருடனோ இப்படிப்பட்ட எதிர்வினைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் இது தவறாவனவர்கள் / நமக்கு சமமில்லாதவர்கள் முன்னிலையில், ஒரு தவறான சூழலில் வெளிப்படும்போது பிரளயமே எற்படுமளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது.

ஒருவர் எவ்வளவுதான் நம் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டினாலும் ஒரு நேர்மறையான‌ எதிர்வினை செய்வது ஒரு சாமானிய செயல் அல்ல. ஆனால் இதை கற்றுக் கொள்ளவேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதை எப்படிக் கற்றுக் கொள்வது? நல்ல கேள்விதான்.

இதை கற்றுக் கொள்ளும் முன் நமக்கு ஒரு முன் தகுதி தேவைப்படுகிறது. அது நம் மனதை அன்பால் நிறைப்பது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு நம் மனதில் நிறைத்துக் கொள்ளவேண்டும். கடலளவு, அந்த ஆகாயம் அளவுக்கு.

ஒரு குடம் நீரில் ஒரு துளி விசம் விழுந்தால் அந்த ஒரு குடம் நீரும் விசமாகிப்போகும்.

ஆனால் அதே ஒரு துளி விசம் கடலில் விழுந்தால்??? கடல் கடலாகவே இருக்கும். விசம் அதில் கரைந்துபோகும்.

இதுதான் சூட்சுமம். நம் மனம் அன்பால் நிறைந்திருக்கும்போது எதிரில் வரும் எதிர்மறை சொல்லாலோ செயலாலோ நம் மனம் எதிர்மறை உணர்வுகளை வெளியிடுவது குறைந்துபோகும். இன்னும் அன்பால் நம் மனம் நிறையும்போது மறைந்தே போகும்.

அன்பால் மனதை நிறைப்போம்... உலகை வெல்வோம்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...

Tuesday, February 14, 2012

நம் சுய ஆத்ம தரிசனம்...

நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய‌ தரிசனம்.

உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக‌ செயல்பாடுகளை செய்யவேண்டிய‌வர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக‌, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக, சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.

இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில‌ குறிப்புகள் கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள் :

* நமக்கு பிடிக்காதவர்கள் முன் நம் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிடிக்காதவர்கள் நம் முன் அவர்கள் தேவைக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ முடிந்து உதவாமல் இருக்கும் பொழுது

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ நினைத்தும் முடியாமல் போகும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவாதவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவியவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது நம் உதவ முடியாமல் போகும்போது

இப்படி இன்னும் பல அசாதாரண சூழல்களில் நம் மனதில் ஏற்படும் சிந்தனையின் செரிவுகள், நம்மை பண்படுத்தவோ அல்லது பாழ்படுத்தவோ செய்யும். அது நம் உண்மையான சுயத்தின் தரிசனமாகவும் பல நேரங்களில் அமைவதுண்டு.

நம் சுயத்தின் பிரச்சினை எங்கு இருக்கிறது என நாம் காணும் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் இவை. அவற்றை நாம் சற்று நிதானமாக அணுகி சிறப்பாக அந்த சூழலைக் கையாண்டால் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாதது.

ஆனால் பெரும்பாலும் நமக்கு இருக்கும் அப்போதைய மனநிலை சுய ஆத்ம ஆராய்ச்சியைவிட சுய ஆதாய ஆராய்ச்சியிலேதான் கவனம் செலுத்தும். இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.

கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எங்க எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஆத்ம சுய சோதனைகளை செம்மையாக கடக்க அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்! சரணம்!!

Monday, February 13, 2012

வாழ்க்கைத் தேடுதல்...

நம் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

பிறந்ததும் தாயைத் தேடுகிறோம்
வளரும்போது அறிவைத் தேடுகிறோம்
இளைஞனானதும் காதலைத் தேடுகிறோம்
நடு வயதில் பணத்தைத் தேடுகிறோம்
முதுமையில் பாசத்தை / அரவணைப்பைத் தேடுகிறோம்

தேடுதல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது. நமது எந்தத் தேடுதலும் முடிவடைவதில்லை என்பதே நிஜம். இதை நான் தேடி முடித்து விட்டேன் என யாராலும் முழு மனதுடன் சொல்ல முடிவதில்லை.

தாயைத் தேடுவதன் தொடர்ச்சியே காதலியை/மனைவியைத் தேடுதல்...
பணம் தேடுதல் நிறுத்தப்படுவதே இல்லை..
அறிவுத் தேடல் என்பது முடிவில்லாதது...
பாசத்தை எவ்வளவு தேடினாலும் உண்மையான பாசம் அதுதானா என்ற பரிதவிப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறதே...

இவ்வாறு மனிதன் பல விசயங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் எதிலும் முழுமை அடைய முடியாதவனாகவே இருக்கிறான்.

ஞானிகளும் யோகிகளும் சொல்லும் தேடுதல் வேறு விதமானதாக இருக்கிறது. அவர்கள் நம்மையே தேடச் சொல்கிறார்கள். இந்த தேடலின் முடிவு நம் எல்லாத் தேடல்களின் முடிவு எனவும் கூறுகிறார்கள். நம்மை அறிந்தால் நாம் அனைத்ததையும் அறிந்தவர்களாகிறோம் என்கிறார்கள்.

இதற்கு பக்தி, யோகா, தியானம், கர்மயோகம், மானுடசேவை  என பல வழிகளை சொல்கிறார்கள். "நம்மை அறிதல்" என்பது இந்த வழிகளின் மூலம் சாத்தியமே என்றும் உரைக்கிறார்கள்.

எந்த ஒரு மனிதனும் முழுமை பெற்றால்தான் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். அவ்வாறு முழுமை பெற இந்த ஆத்ம சாதகங்கங்கள் மிகவும் அவசியம்.

இதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இருந்தால் இந்த தேடுதல் பயணம் சுலபமாக இருக்கும். அவ்வளவே..

கடவுளே மஹாலிங்கம்.. உங்க கடாட்சத்தினால் எல்லோருக்கும் இந்த "தன்னை அறிதல்" என்கின்ற விசயம் விரைவில் கைகூட அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தரனே போற்றி!! போற்றி!!

Wednesday, February 8, 2012

எது அன்பு??!!

அன்பு செலுத்துதல் என்பது எல்லோரும் செய்யும் ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் எனக்கு சில நாட்களாக இதில் பெருத்த மனக் குழப்பம். பல கேள்விகள் என்னுள் எழுந்து ஆட்டிப்படைக்கின்றன. அதில் சில...

*  எது அன்பு?
*  எந்த‌ விஷயத்தை நாம் அன்பு என சொல்கிறோம்?
*  கருணையும் அன்பும் ஒன்றா?
* அன்பும்/ கருணையும் உடையவரையே பெரும்பாலும் எளிதாக ஏமாற்றுகிறார்களே? அது ஏன்?
* அன்பு இருப்பவர்கள் மீது அதிகம் கோபம் கொள்வது இயல்பானதாக இருக்கிறதே அது ஏன்?
* அன்பு பலமுள்ளது என்றால் ஏன் அன்புள்ளவர்களை பலவீனமானவர்களைப் போல் நடத்துகிறார்கள்?
* கடமைக்கு பிரியமாக இருப்பது என்பது இருக்கிறதா? அதுவும் அன்பு ஆகுமா?

இந்த குழப்பக் கேள்விகளுக்கு எல்லாம் நேரடியாக விடைகள் கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்கு அடிப்படையான சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே குழப்பம் தீரும் என்று எண்ணுகிறேன்.

எது அன்பு?

நம் மனதில் சக மனிதன் மேல், உயிரின் மேல் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சியான ஈடுபாடுதான் அன்பு என நான் அனுமானிக்கிறேன். மேற்கண்ட குழப்பக் கேள்விகளுக்கான பதில் இந்த அனுமானத்தில்தான் அடங்கி இருக்கிறது.

நம் வாழ்வியலை நிர்ணயிக்கும் மற்றும் பல சந்தேகங்களுக்கான விடைகாண உதவும் கிளைக்கேள்வி இதிலிருந்துதான் பிறக்கிறது.

இந்த பிறர் மீது வெளிப்படும் மகிழ்ச்சியான ஈடுபாடு இயல்பாக இருக்கிறதா அல்லது அது ஒரு போலியான நடிப்பாக இருக்கிறதா அல்லது ஒரு கயமைத்தனத்துடன் வெளிப்படுகிறதா அல்லது கடனே என்று வெளிப்படுகிறதா அல்லது ஏதாவது ஆதாயத்துக்காக நடிக்கும்போது வெளிப்படுகிறதா?

இந்த கிளைக் கேள்விக்கான நம் ஆத்மார்த்தமான உண்மையான பதில் என்ன என்பதில்தான் நமக்கு இந்த அன்பினால் கிடைக்கும் பிரதி பலிப்புகளின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

எதை நாம் எண்ணுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என உளவியல் சொல்கிறது. அதுபோல் நாம் என்ன நினைத்து எப்படி அன்பு செலுத்துகிறோமோ அதுபோன்ற பிரதிபலிப்புதான் நமக்கும் கிடைக்கும். அன்பு செலுத்துவதால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் தான் மூல காரணம்.

பிறர் மேல் காட்டப்படும் அன்பு மட்டும் அன்பு அல்ல.. நம்மை நாமேயும் அன்பு செய்து கொள்ள வேண்டும். அதாவது சற்று சுய நலமாகவும் சிந்திக்க பழகவேண்டும்.

சுயநலமும் பொதுநலனும் நம் சிந்தனையில் கலந்தே இருக்க வேண்டும். இதில் ஒரு சமநிலை அல்லது சரிவிகித நிலை ஏற்படும்போதுதான் அன்பினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். அந்த சரிவிகிதம் என்பது ஒவ்வொருவரின் சுற்றத்தையும் சூழலையும் வாழ்வியலையும் வளர்ப்பையும் பொறுத்தே அமையும்.

இயல்பாக செலுத்தப்படும் சரிவிகித அன்புதான் பாதுகாப்பான சுபிட்சமான வாழ்வின் சூட்சுமம்.

உண்மையில் பிரதிபலன் பாராமல் செய்யப்படும் அன்புக்கு எப்போதும் பாதிப்பு குறைவுதான்.ஆனால் இது இந்த காலத்தில் சாத்தியமா என்றால் என் பதில் முயன்றால் முடியாயது ஒன்றும் இல்லை என்பதே..

இனி.. இயல்பாக அன்பு செலுத்த முடியாதவர்கள் அதை செய்வது எப்படி?

முதலில் அன்பு செலுத்துவதை ஒரு கடமை போல நினைத்து செய்து பழக‌ ஆரம்பிக்க வேண்டும். இதனால் சில பல பாதிப்புகள் இருந்தாலும் இதுதான் முதல்படி. இது படிப்படியாக நம் இயல்பான பழக்கமாக மாறும்.

அந்த இயல்பான அன்பு காலப்போக்கில் ஒரு மிகப் பெரிய பிராண / ஆத்ம சக்தியாக உருவெடுக்கிறது. இந்த சக்தி எந்த ஒரு எதிர்மறை விளைவையும் முறியடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கடவுளே மஹாலிங்கம், உங்க அருளால இந்த அன்பு என்னும் அற்புதம் இயல்பா வெளிப்பட எனக்கும் எல்லோருக்கும் அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...