Friday, February 25, 2011

பஞ்ச பூதங்களைத் தாண்டி....

சில நாட்களுக்கு முன் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்ட பொழுது பஞ்ச பூதங்களைப் பற்றியும் அதற்கு அப்பால் என்ன என்பது பற்றியும் எனக்குள் எழுந்த சில தீவிரமான சிந்தனைகளின் பதிவு :


பஞ்ச பூதங்கள் : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.. அவ்வளவு ஏன்? நம் உடல் கூட பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டதுதான்... நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் பஞ்ச பூதங்களின் வெளிப்பாடே  :

மெய் - உணர்ச்சி - பூமி
வாய் - சுவை அறிதல் - நீர்
கண் - பார்வை தீட்சண்யம் - நெருப்பு
மூக்கு - நுகர்தல் - காற்று
செவி - கேட்டல் - ஆகாயம்

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தில் பஞ்ச பூதங்களை வென்றால் / கட்டுப்படுத்த முடிந்தால் அஷ்டமா சித்திகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சி என்பது புலனடக்கத்தில்தான் ஆரம்பமாகிறது. புலன்கள் அடங்க ஆரம்பித்தால்தான் ஆன்மீக சாதகம் சித்திக்கும் என்றும் கூறுகிறார் பதஞ்சலி முனி. இதற்கு பல படிகள் அமைத்து சாதகத்திற்கு வழிகள் காட்டுகிறார்.

பஞ்சபூதங்களின் தன்மை ஐம்புலன்களில் இருப்பதால் புலனடக்கம் கைகூடினாலே அஷ்டமாசித்திகள் கைகூடுமோ????

அப்படி என்றால், ஒருவனுக்கு அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்றபிறகு தான் ஆன்மீகப் பயணம் தொடங்குகிறதா???


அண்டமும் பிண்டமும் - பஞ்சபூதங்களுக்கு அப்பால் :

இந்த பரந்த அண்ட வெளியில் இருப்பவைகளே நமது உடம்பிலும் இருப்பதாக முன்னோர்கள் கூறுகிறார்கள். இந்த அண்டமும் நம் பிண்டமும் (உடலும்) இந்த ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.

இதில் நம் பிண்டத்தைப் பற்றி சிந்திக்கும் போது இந்த பஞ்ச பூதங்களுக்கு மேலும் சில / பல பூதங்கள் இருப்பது போலவே தோன்றுகிறது.

உதாரணமாக நான் சிந்தித்த வரை "நமது மனம்" என்பது இந்த பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. ஏனெனில் இதில் ஏற்படும் எண்ணங்களே நம் வாழ்வையும் சூழலையும் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இதில் பஞ்சபூதங்களின் பங்களிப்பு என்ன என்பது புரியவில்லை. ஏனெனில் மனம் என்பதற்கு தனியாக ஒரு உறுப்பு இல்லை (மூளையின் பங்கு இதில் இருந்தாலும் மூளை மட்டுமே மனம் அல்ல).

அடுத்து நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய "காலம்". இதுவும் இந்த பஞ்ச பூதங்களில் வர வில்லை. இது எதற்கும் கட்டுப்படாததாகவே இருக்கிறது. மனதால் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள்.  சித்தர்களும் ஞானிகளும் காலத்தை வென்று நிற்பதைப் பார்க்கும்போது உண்மையாகவே படுகிறது.

அடுத்து "ஆத்மா" அல்லது "கடவுள்" அல்லது "ஞானம்". இது எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது. எல்லாவற்றிலும் இருக்கிறது. எல்லாவற்றின் இயக்க சக்தியாக விளங்குகிறது.  "விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர்." என்ற கூற்றுக்கு ஏற்ப அடைந்தவுடன் திரும்பி வர முடியாத ஒரு இலக்காகவே தோன்றுகிறது.

இவ்வளவுதானா அல்லது இன்னும் வேற ஏதாவது இருக்கான்னு தெரியல....இது, (இந்த சிந்தனை) ஆன்மீகப்பயணத்தில் ஏற்படும் ஒருவித குழப்பத்தின் வெளிப்பாடோ என்ற சந்தேகம் இருந்ததாலேயே இது பற்றி எழுத ரொம்பவும் யோசித்தேன்... ஆனாலும் எங்காவது எழுதி வைத்தால் பிற்காலத்தில் உபயோகப்படலாம் என்பதால் பதிவாக எழுதி வைத்திருக்கிறேன்.


மஹாலிங்கம்... இது சரியா தப்பான்னு தெரியல... நீங்கதான் இதைத் தெளிவுபடுத்தி, அனுபவத்தில் இவைகளை பூரணமாக உணர்வதற்கு ஆசீர்வாதம் செய்யணும்..

ஓம் நமசிவாய... சதுரகிரியாரே போற்றி.....

Tuesday, February 22, 2011

கட்சிகளின் கவனத்திற்கு.....

இந்த தேர்தல் ஆண்டில், நமது அடுத்த 5 ஆண்டு விதியை நிர்ணயிப்பதில், இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளின் பங்கு அதிகம் இருக்கிறது. இந்தத் தேர்தல் களத்தில் அவர்களிடம், வாக்காளர்களாகிய நாம் எதிர்பார்ப்பது பற்றிய எனது சிந்தனைகள்.


வேட்பாளர்கள் தேர்வு :

முதலில் சமூக விரோதிகளுக்கும்,  ஊழல் செய்தவர்களுக்கும்  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படவேண்டும்.

தொகுதிகள் பற்றி அதிகம் தெரிந்த, தொகுதி மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ள, கறை படியாத கரங்களுடன் கூடிய வேட்பாளர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதியிலும் இருக்கும் குறைபாடுகள், மக்களின் தேவைகள், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஒரு பட்டியல் தயாரித்து, கட்சியிடம் வழங்கி, அது மக்கள் மன்றத்தில் முன் வைக்கப்பட்டு, ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலை சந்திக்க வேண்டும்.

இப்படிப்பட்ட வேட்பாளர்கள், படித்தவர்களாகவோ, வசதி குறைவானவர்களாகவோ இருந்தாலும் கட்சிகள், மக்கள் நலன் கருதி இவர்களுக்கு வாய்ப்பு அளித்து ஜெயிக்கவைக்கவேண்டும்.

தொகுதி மக்களும், தொகுதியும் செழிப்பாக இருந்தால் அடுத்த தேர்தலில் குறைந்த செலவு செய்தாலே ஜெயிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.


மந்திரிகள் தேர்வு :

ஒவ்வொரு துறையைப் பற்றி முழுதும் தெரிந்த, ஒரு சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட நபர்கள் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு இடையூறு இல்லாத சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே மாநிலம் சிறந்த வளர்ச்சிபெறும்.

மந்திரி ஆக விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் அந்தந்தத் துறைகளில் செய்ய விரும்பும் பணிகள் பற்றிய பட்டியல் தயார் செய்து கட்சிகளிடம் அளித்து அதன் அடிப்படையில் மந்திரிகள் தேர்வு செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு மந்திரிக்கும் துணையாக ஆர்வமும் துடிப்பும் உள்ள ஒரு இளைஞர் படை ஏற்படுத்தப் பட்டு துறையின் பணிகள் ஆய்வு செய்யப்படவேண்டும்.  ஒவ்வொரு பகுதியின் பள்ளி கல்லூரிகளின் மாணவர்களின் பங்களிப்பும் ஆர்வமுள்ள தனியாரின் பங்களிப்பும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.


அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் முன்னேற்றத்துக்கு முழு மனதுடன் பாடுபட உறுதி கொண்டு செயல் படவேண்டும்.பிரார்த்தனை நல்லாவே இருக்கு... மஹாலிங்கம் இத கொஞ்சம் அவசரமாக் கவனிங்க...  நாங்கள்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம்...  ஒரு விடியலை எங்களுக்குக் காட்டுங்க...

சதுரகிரியாரே போற்றி.... ஓம் நம சிவாய....

Friday, February 18, 2011

நல்லவர்களின் வல்லமை????

இப்போதெல்லாம்,  நல்லவர்களைக் காண்பதே அரிதாக ஆகிவிட்டது. முக்கியமாக பொதுவாழ்வில். ஆனால் இன்றைய சூழலில், காரியம் சாதிக்கும் வல்லவர்களே அதிகம் பொதுவாழ்க்கைக்கு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சுயநல வாதிகளாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவுமே இருக்கிறார்கள். இவர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நல்லவை நடக்கும். சிலர் பொதுவாழ்வுக்கு வரும்பொழுது நல்லவர்களாகவும், நாளடைவில் சுயநலவாதிகளாகவும் சமூகவிரோதிகளாகவும்(அல்லது அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களாகவும்) மாறிவிடுகிறார்கள்...

ஏன் இந்த நிலை?? என்ன செய்தால் இதை மாற்றமுடியும்?? எனது சிந்தனைகள்...

ஏன் இப்படி??

முதலில், நல்லவர்களாக வளர்க்கப்பட்டவர்கள், பெரும்பாலும் பய உணர்வுடனே வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக, பெற்றோரின் சுயநலமே அவர்களின் குழந்தைகளிடம் பிரதிபலிக்கிறது.  இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை. நமது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்களின் அணுகுமுறை நாம், நமது என்ற குறுகிய வட்டத்துக்குள் அவர்களை அழுத்தி, அவர்களின் பரந்த மனப்பான்மையை வளர்க்காமல் விடுவதே இதன் மூலகாரணம்.

குழந்தைகளை வெளி உலகிற்கு சிறப்பாக அறிமுகம் செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதை வீட்டிற்கு வரும் விருந்தினரில் தொடங்கி வெளியில் சந்திக்கும் ஆட்கள் வரை பழக்கப் படுத்தப்படவேண்டும். இதில் ஆசிரியர்களின் பங்கும் மிகப் பெரிது. ஆனால் இப்போது இது பெரும்பாலும் தவறான முறையிலேயே செய்யப்படுகிறது. குழந்தைகள் வெளியாட்களிடம் அதிகம் பழகினால் கெட்டுப்போய்விடுவார்கள் என்ற சிந்தனையே அதிகம் வளர்க்கப்படுகிறது.

இதனால்தான் சிறிய பிரச்சினைக்குக் கூட அவர்களால் சுயமாக சமாளிக்கத்தெரியாமல் பிறரைச் சார்ந்தே இருக்கிறார்கள். கூச்ச சுபாவத்துடனே வளர்கிறார்கள். இதனால் இவர்களுக்குத் தேவையான காரியங்கள் மிகத் தாமதமாகவே நடைபெறுகின்றன. சில நேரங்களில் நடைபெறாமலே போவதற்கான வாய்ப்பும் உண்டு. இவர்கள், தானே, தாங்களாக செய்துகொள்ளும் வேலைகளில் வல்லவர்களாகவும், வெற்றி அடைபவர்களாகவும் , பிறரை வேலைவாங்கும் விஷயத்தில் தோல்வியடைபவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் சிலர் நாளடைவில் தேர்ச்சி பெற்று மிகவும் சிறப்பான நிலையை அடைகிறார்கள். இந்த நிகழ்வில், தங்களின் தனித்தன்மையையும்,  நல்ல சிந்தனைகளையும் 
பெரும்பாலானோர் இழந்து விடுகிறார்கள். வெகு சிலரே இதில் தப்பித்து உயர்நிலையை அடைகிறார்கள்.

நல்லவர்கள், இதிலிருந்தெல்லாம்  தப்பித்து உயர் பதவிகளுக்கு வரும்போதுதான் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். அல்லது சந்தர்ப்பவாதிகளுடன் கூட்டு சேர நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அந்த நேரங்களில் அவர்களுக்கு இந்த சமூக சூழல் சாதகமாக அமையாத பட்சத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றிய முந்தய பதிவு ஏன் இப்படி இருக்கிறார்கள்???

நல்லவர்கள் உயர் பதவிகளில் இருக்கும் போது இப்போதெல்லாம் அதிக தவறுகள் நடக்கின்றன. அவர்களுக்கு ஒரு மரியாதையோ, அல்லது இயல்பாக ஒரு உயர் அதிகாரிக்குத் தரவேண்டிய குறைந்தபட்ச தகவல்களையோ அவர்களுக்கு கீழே வேலைபார்ப்பவர்கள் தருவதில்லை. இதனால் அவர்களுக்கு அவர்களின் துறைகளின் மீது இருக்கும் கட்டுப்பாடு குறைந்து விடுகிறது. விளைவு, ஒழுங்கீனம், ஊழல், ஏமாற்றுதல்.....


என்ன செய்யவேண்டும்?

இருக்கும் நல்லவர்கள் வல்லவர்களாக மாறுவது கடினமே... ஏனெனில் இது அவர்களின் ரத்தத்தில் ஊறவில்லை. ஆனால் முடியாத காரியமில்லை. ஆன்மீகப் பயிற்சிகளும், சமூகப் பயிற்சிகளும், முன் முனைப்பும், அதிகம் கொண்டு இவர்கள் மாற முயற்சி செய்யவேண்டும்.

மேலும், இந்த மாற்றம் குழந்தையிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். குழந்தைகளுக்கு மாணவப்பருவத்திலிருந்தே நேர்மையும் தைரியமும் சுயசார்பு நிலையும் கற்பிக்கப்படவேண்டும். இதற்கு முதலில் பெற்றோரும்,  ஆசிரியர்களும்,  கல்வியாளர்களும் நேர்மையைக் கடைப்பிடிக்கப் பழகவேண்டும். கல்விக்கூடங்கள் மாணவர்களின் நேர்மையை வளர்க்கப் பாடுபட வேண்டும். வாழ்க்கைக் கல்வியும், ஆன்மீகக் கல்வியும் அனைவருக்கும் சிறப்பாக போதிக்கப்படவேண்டும்.
நாம் நல்லவர்களாக இருந்தால்தான் நமது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க முடியும். எனவே அவர்களுக்கு உதாரணமாக இருப்பதற்காகவாவது அனைவரும் நல்ல வழிக்குத் திரும்ப வேண்டும். இதில் சாதாரண பாமரனிலிருந்து, பெரிய தலைவர்வரை அனைவரும் பங்கு பெறவேண்டும். அப்போதுதான் ஒரு சிறப்பான எதிர்கால சமுதாயம் உருவாகும்.


இதெல்லாம் செய்தால் / நடந்தால் மிக நன்றாக இருக்கும்... என்ன செய்வது... எல்லோரும் எப்படி அடுத்தவர்களைவிட அதிகம் பணம் சம்பாதிப்பது என்ற சிந்தனையிலேயே அதிக கவனமாக இருப்பதால், இந்த சிந்தனை விட்டுப்போகிறது.


ஊதுற சங்க ஊதியாச்சு... இனிமேல் அவங்க பாடு, அந்த மஹாலிங்கம் பாடு.. சதுரகிரியாரே சரணம்..

ஓம் நம சிவாய....

Wednesday, February 2, 2011

கருப்புப் பணம்...

இப்போது எல்லாம் அடிக்கடி செய்தி ஊடகங்களில் கருப்புப் பணம் பற்றியும் அவற்றை வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டுவருவது பற்றியும் பெச்சு அடிபடுகிறது.  இதுபற்றிய எனது சிந்தனைகள்..

எது கருப்புப்பணம் :

வருமான வரிக் கணக்கில் வராத , காட்டப்படாத அனைத்துமே கருப்புப்பணமே.

நாம் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிகட்டுகிறோம். அவ்வாறு கட்டிவிட்டு, வருமான வரித்துறைக்கு, எனது வருமானம் இவ்வளவு, அதற்கு இவ்வளவு வரி கட்டத் தேவை என்று கணக்குப் பார்த்து , இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன் என்று அறிக்கை தாக்கல் செய்கிறோம்.

இவ்வாறு காட்டப்படும் வருவாய்க்கு அதிகமாக சேர்க்கப்படும் அனைத்து சொத்துக்களும், வருமானங்களும் கருப்புப்பணத்தில் அடங்கும்.


எப்படி சேர்கிறது?

இருவழிகளில் கருப்புப்பணம் வருகிறது :

1) நியாயமான வழியில் வரும் வருமானத்துக்கு, சரியான கணக்குக் காட்டாமல், வரி கட்டாமல் (எந்த வரியாக இருந்தாலும்)  இருத்தல். இதில் தொழிலதிபர்களும், சுய தொழில் செய்பவர்களும், சினிமாத்துறையை சார்ந்தவர்களும் வருகிறார்கள். -முதல் வழி

2) முறைகேடான வழியில் பணம் சேர்த்தல். இதற்குக் கணக்குக் காட்ட முடியாது. எனவே முழுதும் கருப்புப் பணமே. இது பெரும்பாலும், லஞ்சம், ஊழல், கடத்தல், ஹவாலா, கொள்ளை, மாபியா போன்ற சட்ட விரோதமாக சேர்க்கப் பட்டதாக இருக்கும். - இரண்டாம் வழி


இதைவைத்து என்ன செய்கிறார்கள்?

ஆடம்பர செலவு அதிகம் செய்கிறார்கள்.

நிலம், வீடு, பங்கு வர்த்தகம் என்று அதிகமாக முதலீடு செய்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கு பணத்தைக் கொண்டு சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார்கள்.

பெருமளவில் வெளிநாடுகளின் வங்கி, சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள். இவர்களைக் கவர்வதற்காகவே பல வெளிநாட்டு வங்கிகள், அரசாங்கங்கள் கொள்கைகளை வகுத்து கல்லாக்கட்டுகின்றன.

சட்டவிரோத தொழில்களில் அதிக லாபம் வேண்டி முதலீடு செய்கிறார்கள். இதில் தீவிர வாதிகளுக்கு பொருளுதவி செய்வதும் அடக்கம்.


இதனால் என்ன பாதிப்பு?

நியாயமான வழியில் சேராத பணத்தால் விலைவாசி உயருகிறது. வீட்டு விலை, நிலத்தின் மதிப்பு, கட்டுமானப் பொருட்களுக்கான விலை போன்ற அத்தியாவசியமான தேவைகளின் மதிப்பு பலமடங்கு உயர்ந்ததற்கு இது ஒரு மிகமுக்கிய காரணி. இப்போது நியாயமாக சம்பாதித்து வீடு வாங்குவது என்பது கனவாகவே ஆகிவிட்டது.

இப்படிப்பட்ட தவறானவர்களின் பணப்புழக்கத்தைப் பார்த்து, பிறரும் அது போல வாழ ஆசைப்பட்டு, வருமானத்தை மீறி செலவு செய்தோ, தேவை இல்லாத விஷயங்களை வாங்கி (கார், ஆடம்பர வீடு) அகலக் கால் வைத்தோ தங்களின் கையை சுட்டுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு புழங்கும் அதிகமான கருப்புப் பணத்தினால் தனிமனித ஒழுக்கம் குறைந்து வருகிறது. பணத்துக்காக எதுவும் செய்யலாம் என்ற மனநிலை பெருக இது ஒரு காரணமாக இருக்கிறது.

அரசாங்கத்துக்கு நியாயமாக வரவேண்டிய வரி வருவாய் வராமல் போவது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப் படுவது.

நமது தேசத்தின் மரியாதை சர்வதேச அரங்கில் பாதிக்கப்படுவது.

பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகம் ஏற்படுவது அதிக கருப்புப் பணம் அதில் விளையாடுவதுதான். இதனால் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது.

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வாங்க பொருளுதவி செய்ய இந்த கருப்புப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டில் அமைதி கெடுகிறது.

ஏன் கருப்புப் பணம் சேர்கிறது?

அநியாயமான வரி விகிதங்கள். குழப்பமான வரி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் / நடைமுறைகள். வரிவசூல் செய்வதற்குத் தகுந்தாற்போல்  வசதிகள் செய்யாமல் இருத்தல். நியாயமாக வரி கட்டுபவர்களும் வேறு வழிஇல்லாமல் தான் கட்டுகிறார்கள். ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அனைவருமே வரி ஏய்ப்பு செய்யத் தயங்கமாட்டார்கள்.

லஞ்சம், ஊழல், சட்ட விரோத செயல்களால் பணம் அதிகமாக சேருவது. அரசாங்கத்தால் இதை தடுக்கவோ இவ்வாறு செய்பவர்களைத் தண்டிக்கவோ முடியாமல் இருக்கும் பரிதாபன நிலை.

தண்டனைகள் வழங்குவதில் இருக்கும் தாமதம். கடுமையான தண்டனைகள் வழங்கப்படாதது. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை கிரிமினல்கள்தான் அதிகம் பயன் படுத்துகிறார்கள்.

சட்டத்தை அமல் படுத்துவதுவதிலும் அரசு எந்திரத்திலும் முறைகேடுகள் அதிகரித்து பரவலாக ஆனது.

இதைத் தடுக்க / குறைக்க என்ன செய்யவேண்டும்?

வரி விகிதங்கள் சீர் செய்யப்பட வேண்டும். வரி சம்பந்தப்பட்ட விதி முறைகள் /  நடைமுறைகள் எளிமைப்படுத்தப் பட வேண்டும். நியாயமான வழியில் சேர்த்த கருப்புப் பணத்துக்கு அபராதமும் அல்லது அதற்கான வரியும் மட்டும் விதித்து மன்னித்துவிடலாம். இதனால் மேலும் வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.

வாங்கும் வரிக்கு ஏற்ப பொதுமக்களுக்கு வசதிகள் செய்து தரப்படவேண்டும். நல்ல உள் கட்டமைப்பு,  சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படவேண்டும். லஞ்ச, ஊழலற்ற அரசு நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஏமாற்றாமல் வரிகட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது இந்த விசயத்தில் 100க்கு 100 உண்மை.

தவறான, சட்ட விரோத வழிகளில் சேர்த்த கருப்புப்பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்படவேண்டும். அதை செய்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இவர்கள் சமூகத்துக்கும் அரசாங்கத்தும் துரோகம் இழைத்தவர்கள் ஆவார்கள்.

சட்ட திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு, கடுமையாக அமல் படுத்தப்பட வேண்டும். விரைவில் தண்டனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

இப்போது இருக்கக்கூடிய கருப்புப் பணத்தில் ஒரு பகுதி நம் நாட்டிலேயே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளின் பெரும்பகுதி பத்திரப்பதிவு அலுவலக பதிவேட்டிலும், பங்கு வர்த்தக பதிவேடுகளிலும், வங்கிகளின் லாக்கர்களிலும், அக்கவுண்ட்களிலும், ஃபிக்சட் டிப்பாசிட் களிலுமே இருக்கிறது.  இவைகளை முறைப்படுத்துவதினாலோ அல்லது பறிமுதல் செய்வதினாலோ நமக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதைவிடுத்து, வெளி நாட்டிலிருந்து கருப்புப்பணத்தைக் கொண்டு வருவது என்பது கனவுதான்.


என்ன செய்வது? இதை செய்யவேண்டிய இடத்தில் இருப்பவர்கள், இதை செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதைப் பார்க்கும் போது இவர்களும் இதில் பங்குதாரராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.


கடவுளே!!! இந்த நாட்டயும் மக்களையும் காப்பாத்து!!!

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!!!

Tuesday, February 1, 2011

தேர்தல் களத்தில் ஊடகங்களின் பங்கு....

இது தேர்தல் ஆண்டு.  தேர்தலுக்காக எந்தத் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிதம் என்ற ஆய்வு ஊடகங்களில் நடைபெறுகிறது. ஆனால் மக்களுக்குப் பயனளிக்கக்கூடியதா இது? இந்த நேரத்தில் பொறுப்பான ஊடகங்களின் பணி என்னவாக இருக்கவேண்டும்?

ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய தேவைகளின், குறைகளின்  பட்டியல் உடனடியாகத் தயாரிக்கப்படவேண்டும்.

எத்தனை அரசுப்பள்ளிகளில் கட்டிட, ஆசிரியர் பற்றாக் குறைகள் உள்ளன? அவை எவை? எத்தனை கிராமங்களில் பள்ளிகள் இல்லை?  தனியார் கல்விக் கூடங்களின் கட்டண விகிதங்கள் சரியானவைதானா? எத்தனை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவேண்டும்?

எவ்வளவு சாலைகள அமைக்கப்படவேண்டும்? அவற்றிற்கான விவரங்கள். அனைத்து கிராமங்களுக்கும் சரியான சாலை வசதி செய்யப்பட்டுள்ளதா?

எவ்வளவு பாலங்கள் தேவை? அவற்றிற்கான விளக்கங்கள்.

தொகுதியின் பொருளாதார ஆதாரம் என்ன? பெரும்பான்மையோரின் வாழ்வாதரமாக இருக்கக் கூடிய தொழில் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்சாலைகள் என்ன? அவற்றிற்குத் என்ன தேவை? அல்லது அவற்றால் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?

விவசாய, குடிநீர்  நீராதாரங்களின் இப்போதய நிலை என்ன? அவற்றை செம்மைப் படுத்த செய்ய வேண்டியது என்ன?

குடிநீர் , கழிவு நீரகற்று வசதி இல்லாத அல்லது சரியாக இல்லாத இடங்கள் எத்தனை? அவற்றை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

இன்னும் எத்தனை கிராமங்களில் மருத்துவ வசதி இல்லை? இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளின் உடனடித் தேவை என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மேலும் பல இருக்கக் கூடிய குறைகள் பட்டியலிடப்படட்டும்.இந்தப் பட்டியல் ஒவ்வொரு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மற்றும் ஜெயிக்கக் கூடிய வாய்ப்பு உள்ள அனைத்து வேட்பாளருக்கும் வழங்கப்படவேண்டும்.

இவற்றிற்கான நிதி ஆதாரங்கள் திரட்டுதல் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.

அவர்கள் இந்தக் குறைகளைக் களைய என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்ற திட்ட வரைவு கேட்கப்பட வேண்டும்.

இதற்கு கட்சியின் பங்கும் ஆட்சியின் அவசியமும் விவாதிக்கப்படவேண்டும்.

இந்தப் பட்டியலின் மீது விவாதங்களும் பட்டிமன்றங்களும் தொகுதிக்குள் நடத்தப்படவேண்டும். 

சென்ற தேர்தலின் போது இதுபோல எடுக்கப்பட்ட பட்டியலுடன் இப்போதய பட்டியல் ஒப்பீடு செய்யப்பட்டு சென்ற முறை இருந்த மக்கள் பிரதிநிதியின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு நாளும் சில தொகுதி வேட்பாளர்களுடன் இந்த பட்டியலுடன் நேர்முக விவாதங்கள் நடத்தி அவர்களை நல்லவைகளை செய்யத் தூண்டவேண்டும்.


கனவு காண நல்லாத்தான் இருக்கு. என்ன செய்ய? இப்போதய ஊடகங்களுக்கு, சினிமாவையும், அரசியல்வாதிகளின் சாதனைகளைப் பேசவுமே நேரம் சரியாக இருக்கிறது... இவைகளையும் செய்வார்களா???

ஆண்டவா... மஹாலிங்கம், இவங்களுக்கு நல்ல புத்தியக் குடுத்து மக்களுக்காக செயல்பட வையுங்க...

சதுரகிரியாரே போற்றி... அரோகரா....