Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Thursday, April 14, 2011

தேர்தல் முடிந்தது... ஒரு உத்தேச செலவுக் கணக்கும் பிடி பட்ட தொகையும்

ஒரு வழியாக ஒரு கெடுபிடியான தேர்தல் ஓரளவுக்கு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதில் உண்மையான வெற்றி மக்களுக்குதான். சுமார் 77% வாக்குப்பதிவு என்பது ஒரு சாதனைதான்.

தேர்தல் முடிவுகளுக்காக மே 13 வரை காத்திருக்க வேண்டும். இது ஒரு சோதனையான கட்டம். மக்களின் வாக்குகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும். இவ்வளவு திறமையாக தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையம் இந்தப்பணியையும் சிறப்பாக செய்யும் என்று நம்புகிறேன்.

நம் ஜனநாயகத்தின் முக்கிய நிகழ்வான இந்தத் தேர்தலை செம்மையாக நடத்த நம் தேர்தல் ஆணையம் பட்ட பாடுகளைப் பார்க்கும்போது நம் மக்களுக்கு / அரசியல்வாதிகளுக்கு உண்மையான ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததுபோலவே தெரிகிறது.

எங்கும் பணம். எதிலும் பணம்.. இதுவே இந்தத் தேர்தலில் ஒலித்த தாரக மந்திரம். தேர்தல் ஆணையம் சட்ட விரோதமான 34 கோடி ரூபாய் பிடித்ததாக செய்தி வந்தது.

இது மிகவும் கம்மி. இதை 234 தொகுதிக்கு பிரித்துப் பார்த்தால் இதன் அளவு தெரிய வரும். ஒரு தொகுதிக்கு வெறும் 19 லட்ச ரூபாய் வருகிறது. மேலும் ஒரு வேட்பாளருக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் வருகிறது.


ஆனால் தேர்தலில் தோராயமாக எவ்வளவு செலவாகி இருக்கும் என்று நாம் கணக்குப்போட்டால் கண்ணைக்கட்டுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 130 போலிங் பூத் வைத்துக் கொண்டால் கூட, 3 கட்சி வேட்பாளர்களும் மொத்தம் 234 தொகுதியிலும் தம் பூத் ஏஜெண்ட் களுக்கு சுமார் ரூ10000 கொடுத்தால் கூட இது மட்டுமே 90 கோடி ரூபாய்  வருகிறது.(வாக்காளர்களுக்கே ரூ 2000 தரும் போது இது மிக குறைந்த எஸ்டிமேட்தான்) 

இது தவிர தொண்டர்களுக்கு தினம் வாங்கித்தரும் சரக்கு, பிரியாணி, பேட்டா வகையில், 15 நாட்களுக்கு சுமார் 500 வேட்பாளர்கள் சுமார் 1000 தொண்டர்களுக்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ 1000 வீதம் செலவு செய்திருந்தால் இது ஒரு 740 கோடி ரூபாய் வருகிறது.

இது தவிர வாகன ஏற்பாட்டில் சுமார் 500 வேட்பாளர்கள் 20 வண்டிகள் ஒரு நாளைக்கு ரூ 2000 வாடகைக்கு 15 நாட்களுக்கு சுற்ற ஆன செலவு மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்கள்.


மொத்தமாக மிகக் குறைந்ததாக சுமார் 800 கோடி ரூபாய் செலவு செய்திருந்த இந்த தேர்தலில் 34 கோடி ரூபாய் ஒன்றுமே இல்லை. இதுவும் வாக்காளர்களுக்கு தந்த பணம் கணக்கில் இல்லை. வேண்டாம். அதையும் கணக்கிட்டால் தலை சுற்றுகிறது.


இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?  எந்த தைரியத்தில் செலவழிக்கிறார்கள்? இதைத் திருப்பி எடுக்க என்னவெல்லாம் செய்வார்கள்? நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது..

சதுரகிரியார்தான் நம் மக்களை இவங்ககிட்ட இருந்து காப்பாத்தணும்.

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Wednesday, March 16, 2011

வாக்காளர்களே விழிப்படையுங்கள்!!!

இப்போது தேர்தலில் பிரச்சாரம் செய்ய அனைத்து தலைவர்களும் தயாராகி வருகிறார்கள். விரைவில் நம் தலைவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு தங்களின் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவார்கள். இந்த பிரச்சாரங்கள் செய்யும்போது நம் ஆழ்மனதில் என்ன நடக்கிறது என்பது பற்றிய எனது சிந்தனைகள்..

இதுபற்றி சரியாகப் புரிந்து கொள்ள முதலில் நாம் விளம்பரப்படுத்துதல் பற்றி நன்றாக அறிய வேண்டும்.

இப்போது எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்துகிறார்கள். அவ்வாறு விளம்பரப்படுத்துவதற்கு முன் நம் மனதில் அது பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கும். இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு நம் மனதில் ஒரு நேர் அல்லது எதிர்மறை மாற்றம் ஏற்படும். அதே பொருளைப்பற்றி மீண்டும் மீண்டும் விளம்பரம் வரும்பொழுது அந்தப் பொருளை நம் தேவைக்கேற்ப வாங்க தூண்டும். இதுவே விளம்பரங்களின் யுக்தி.

அதுவும் அந்த விளம்பரத்தில் ஏதாவது ஒரு பிரபலம் இருந்துவிட்டால் இன்னும் ஆழமாக அது மனதில் ஊடுருவும். இப்படி பலர் மனதில் அந்த விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அது பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தை உண்டுபண்ணுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மனம் இருப்பதுபோல ஒரு பொது மனமும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறது. ஒரு பொருளைப்பற்றி பெரும்பாலோர் மனதில் எழும் சிந்தனைகள் இந்த பொதுமனதில் பதிந்திருக்கும். அந்தப்பொருள் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அந்த பொருளைப்பற்றி கேள்விப்படும் / சிந்திக்கும் போது அந்த பொதுமனதில் இருக்கும் ஒரு நேர் அல்லது எதிர்மறை அபிப்பிராயம் அவர் மனதில் தானாக பிரதிபலிக்கும். அதற்குமேலும் வலுசேர்க்கும் விதமாக மேற்படி விளம்பரங்களை அவர் கேட்க/பார்க்க நேரிடும்போது அந்த அபிப்பிராயம் மேலும் வலுப்பெறுகிறது. இதை ஆங்கில‌த்தில் "Brand Building" என்று கூறுகிறார்க‌ள்.

இவ்வாறு ஒருவர் ஒரு பொருளை சந்தைப்படுத்துவ‌தற்கு அதன் விளம்பரப்படுத்துதல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. குறைந்தபட்ச தரம் அந்த பொருளுக்கு இருக்கும் வரை விளம்பரங்கள் அந்தப் பொருளை நிச்சயம் விற்றுக் கொடுக்கும்.


இந்த விளம்பரத் தத்துவத்தில்தான் நம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நம் ஆழ்மனதில் செயல்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒரு பிராண்ட் போல. அதற்கென்று ஒரு பெயர் (நல்லதோ கெட்டதோ, சூழ்நிலைக்குத்தகுந்தவாறு) இருக்கிறது. பொது மனதில் இந்த நற்பெயரை மேலும் வளர்த்து அதை வாக்குகளாக மாற்றவே இந்த பிரச்சாரப்போராட்டம். 

இந்த களேபரத்தில், இனிமேல் மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட, இப்போது கெட்டது செய்பவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதே பிரதானமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே நம் அரசியல் கட்சிகள், நல்லது செய்வதை மறந்துவிட்டு, மக்கள் மனதில் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி, மாற்றி மாற்றி குதிரை ஏறிக்கொண்டு இருக்கின்றன. உஷார்....

எனவே, வாக்காளர்களே விழிப்படையுங்கள்.. போலி விளம்பரம் போன்ற பிரச்சாரங்களை நம்பாமல், உங்கள் தொகுதியின் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும் வேட்பாளர் யார் என ஆராய்ந்து அவருக்கு வாக்களிக்க முன்வாருங்கள். அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அல்லது சுயேச்சையாக இருந்தாலும்.  

நமக்குத் தேவையான உண்மையான மாற்றம் நமக்கு நல்லது செய்பவர்களாலேயே ஏற்படும். எனவே அப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்க நாம் முயற்சி செய்வோம்.

கடவுளே, இப்படிப்பட்ட நல்லது செய்பவர்களை வாக்காளர்களுக்கு அடையாளம் காட்ட நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!!

Tuesday, March 15, 2011

தேர்தலும் பணமும் நம் ஜனநாயக்கடமையும்

இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளில் வாகன சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் கண்டுபிடிக்கப்படுவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ரூ 20 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது.

அதுவும் பிடிபட்டது மட்டுமே இவ்வளவு என்றால், பிடிபடாதது, பிடித்தும் கண்டுகொள்ளாமல் (??) விடப்பட்டது எவ்வளவு இருக்கும் என கணக்குப் பண்ண முடியவில்லை.

இந்த தேர்தல் நேரத்தில் வாகன சோதனை செய்வதால் மட்டும் இவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் சில மாதங்களுக்கு முன்பிருந்தெ இந்த சோதனை நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது. உண்மையில் நம் நாட்டில் பணத்துக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது.

இவ்வளவுக்கும் ஒரு வேட்பாளர் ரூ 15 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறதாம்(???). ஆனால நிஜத்தில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது கண்கூடு. இந்தப் பணம் இவர்களுக்கு வாகன செலவுக்கு மட்டுமே பத்தாது. மேலும் பேச்சாளர்கள் செலவு, தொண்டர்களுக்கு பேட்டா, பிரியாணி, பேனர், தலைவர்கள் பிரச்சார செலவு, வாக்காளர்களுக்கு இலவசம்(???), பணம், சில முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு கவனிப்பு என்று ஒரு வேட்பாளரின் குறைந்தபட்ச தேர்தல் செலவு ரூ 5 கோடி இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால் இதெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் நம் அரசு,தேர்தல் கமிஷன் இல்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் தாக்கல் செய்யும் கணக்கைமட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு மற்றவற்றை கண்டுகொள்வதில்லை போலும்.

இந்த தேர்தல் திருவிழாவில் பலனடைவோர் பலர். முதலில் அந்தந்த‌க் கட்சியின் தொண்டர்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் கும்பிடுபோடுவார்கள்.(மற்ற நேரத்தில் மதிக்க வேண்டியதில்லையே).

பேனர் எழுதுபவர்கள், வாகன ஓட்டிகள், கார், ஆட்டோ வாடகைக்கு விடுபவர்கள், கொடி,தோரணம் செய்பவர்கள், கட்டும் தொழிலாளிகள், மேடை அமைப்பளர்கள், மைக்செட் வாடகைக்கு விடுபவர்கள், சில பேச்சாளர்கள், மேடைப் பாடகர்கள், கலைஞர்கள், மாஜிக் நிபுணர்கள், ஆட்டக்காரர்கள், மிமிக்ரி ஆர்டிஸ்ட், இவர்களுக்கு தேர்தல் வரை யோகம்தான். ஒரே விஷயத்தில் இவர்கள் கறாராக இருந்தால் போதுமானது.. பணம்.

இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?? நன்கொடை என்றபெயரில் வரும் பணம் பெரும்பாலும் கருப்புப் பணமே... இதை மீண்டும் சம்பாதிக்க இவர்கள் ஏதாவது வழி செய்வார்கள் என்ற நப்பாசையில் தரப்படுவது. அல்லது தேர்தலில் நிற்க வாய்ப்பு எதிர்பார்த்து தரப்படுவது.

நியாயமாக கணக்குப்பார்த்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு 5 பெரிய வேட்பாளர்கள் போட்டியிட்டால் மொத்த தேர்தலுக்கும் செலவளிக்கப்படும் தொகை ரூ 176 கோடி மட்டுமே இருக்கவேண்டும். ஆனால் கிட்டத்தட்ட ரூ5000 கோடி இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் செலவு ஆவதாக ஒரு கணக்கு கூறுகிறது. இது வேட்பாளர் செலவு மட்டுமே.. அரசாங்க செலவு தனி.

இவ்வளவு செலவு செய்து நடைபெறும் தேர்தலில் நாம் நமது ஜனநாயகக் கடமையை சரியாக ஆற்றி ஒரு சிறப்பான அரசாங்கம் உருவாவதற்கு உறுதுணையாக இருப்போம்.

ஓம் நம சிவாய!! சதுரகிரியாரே போற்றி!!!! நீங்கதான் கருணை செய்து ஒரு நல்ல அரசாங்கம் அமைய ஏற்பாடு செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!

Tuesday, February 1, 2011

தேர்தல் களத்தில் ஊடகங்களின் பங்கு....

இது தேர்தல் ஆண்டு.  தேர்தலுக்காக எந்தத் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிதம் என்ற ஆய்வு ஊடகங்களில் நடைபெறுகிறது. ஆனால் மக்களுக்குப் பயனளிக்கக்கூடியதா இது? இந்த நேரத்தில் பொறுப்பான ஊடகங்களின் பணி என்னவாக இருக்கவேண்டும்?

ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய தேவைகளின், குறைகளின்  பட்டியல் உடனடியாகத் தயாரிக்கப்படவேண்டும்.

எத்தனை அரசுப்பள்ளிகளில் கட்டிட, ஆசிரியர் பற்றாக் குறைகள் உள்ளன? அவை எவை? எத்தனை கிராமங்களில் பள்ளிகள் இல்லை?  தனியார் கல்விக் கூடங்களின் கட்டண விகிதங்கள் சரியானவைதானா? எத்தனை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவேண்டும்?

எவ்வளவு சாலைகள அமைக்கப்படவேண்டும்? அவற்றிற்கான விவரங்கள். அனைத்து கிராமங்களுக்கும் சரியான சாலை வசதி செய்யப்பட்டுள்ளதா?

எவ்வளவு பாலங்கள் தேவை? அவற்றிற்கான விளக்கங்கள்.

தொகுதியின் பொருளாதார ஆதாரம் என்ன? பெரும்பான்மையோரின் வாழ்வாதரமாக இருக்கக் கூடிய தொழில் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்சாலைகள் என்ன? அவற்றிற்குத் என்ன தேவை? அல்லது அவற்றால் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?

விவசாய, குடிநீர்  நீராதாரங்களின் இப்போதய நிலை என்ன? அவற்றை செம்மைப் படுத்த செய்ய வேண்டியது என்ன?

குடிநீர் , கழிவு நீரகற்று வசதி இல்லாத அல்லது சரியாக இல்லாத இடங்கள் எத்தனை? அவற்றை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

இன்னும் எத்தனை கிராமங்களில் மருத்துவ வசதி இல்லை? இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளின் உடனடித் தேவை என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மேலும் பல இருக்கக் கூடிய குறைகள் பட்டியலிடப்படட்டும்.



இந்தப் பட்டியல் ஒவ்வொரு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மற்றும் ஜெயிக்கக் கூடிய வாய்ப்பு உள்ள அனைத்து வேட்பாளருக்கும் வழங்கப்படவேண்டும்.

இவற்றிற்கான நிதி ஆதாரங்கள் திரட்டுதல் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.

அவர்கள் இந்தக் குறைகளைக் களைய என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்ற திட்ட வரைவு கேட்கப்பட வேண்டும்.

இதற்கு கட்சியின் பங்கும் ஆட்சியின் அவசியமும் விவாதிக்கப்படவேண்டும்.

இந்தப் பட்டியலின் மீது விவாதங்களும் பட்டிமன்றங்களும் தொகுதிக்குள் நடத்தப்படவேண்டும். 

சென்ற தேர்தலின் போது இதுபோல எடுக்கப்பட்ட பட்டியலுடன் இப்போதய பட்டியல் ஒப்பீடு செய்யப்பட்டு சென்ற முறை இருந்த மக்கள் பிரதிநிதியின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு நாளும் சில தொகுதி வேட்பாளர்களுடன் இந்த பட்டியலுடன் நேர்முக விவாதங்கள் நடத்தி அவர்களை நல்லவைகளை செய்யத் தூண்டவேண்டும்.


கனவு காண நல்லாத்தான் இருக்கு. என்ன செய்ய? இப்போதய ஊடகங்களுக்கு, சினிமாவையும், அரசியல்வாதிகளின் சாதனைகளைப் பேசவுமே நேரம் சரியாக இருக்கிறது... இவைகளையும் செய்வார்களா???

ஆண்டவா... மஹாலிங்கம், இவங்களுக்கு நல்ல புத்தியக் குடுத்து மக்களுக்காக செயல்பட வையுங்க...

சதுரகிரியாரே போற்றி... அரோகரா....