Tuesday, November 29, 2011

வாழ்க்கையும் கனவுகளும்...

கனவுகள்.. மூன்று வகை - முதல்வகை இது ஒவ்வொருவருக்கும் இருக்கும் லட்சிய கனவு.. இரண்டாவது வகை நாம் தூங்கும்போது காண்பது.. மூன்றாம் வகை, நம் கற்பனையில் கண்ணை விழித்துக்கொண்டே ஆசைப்படுவது.

லட்சிய கனவு :

அய்யா திரு அப்துல்கலாம் அவர்கள் நம் தேசத்து இளைஞர்களை காணச் சொன்னதுதான் இந்த லட்சிய கனவு. நம் வாழ்வின் லட்சியங்கள் தெளிவாக இருந்தால்தான் வாழ்வின் போக்கும் அது நோக்கி தெளிவாக நகரும்.

நாம் எதுவாக ஆகவேண்டும் என ஆழமாக சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பதால் இந்த லட்சியகனவு ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்த கனவுகள் ஒவ்வொருவரையும் அதை அடைய தூண்டி செயல்பட வைக்கும். செயல்பட ஆரம்பிப்பதுதான் லட்சியங்களை அடைய முதல்படி.

துக்கத்தில் காணும் கனவு :

இது நம் மூளை நம் உடல் ஓய்வு எடுக்கும் போது தூக்கத்தில் நமக்கு காண்பிக்கும் ஒரு காட்சி. பல நேரங்களில் நம் உடலில் ஏற்படும் அசதிகளை வெளியேற்ற நம் மூளையில் ஏற்படும் சில ரசாயன நிகழ்வுகளின் விளைவே இந்த கனவு.

சிலருக்கு கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை. எல்லோரும் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் தூக்கத்தினுள் சொல்ல முற்படும்போதோ அல்லது தூக்கத்திலிருந்து வெளியேறும் நேரத்திலோ வரும் கனவுகள்தான் பெரும்பாலும் நம் ஞாபகத்தில் இருக்கும் என கூறுகிறார்கள். 

சிலருக்கு கனவுகளில் எதிர்காலத்தில் நடக்கப் போவது பற்றிய விசயங்கள் வருவதுண்டு. சிலருக்கு கனவுகள் வழிகாட்டியாக செயல்படுவதும் உண்டு. நம் மூளையின் சில அற்புதங்களில் இதுவும் ஒன்று. 

கனவுகளுக்கு பலன்கள் சொல்கிறார்கள். எவ்வளவு தூரம் அவற்றை நம்ப முடியும் என்பது சர்ச்சைக்குரியதுதான். சும்மா ஒரு சுவாராசியத்துக்காக அது பற்றியும் நேரம் கிடைக்கும்போது படித்து பார்த்துக்கொள்ளலாம்.

சிலர் கனவுகளைப் பற்றி பயம் கொண்டிருப்பார்கள். அந்த பயமே அவர்களை பல நேரங்களில் பிரச்சினைகளில் மாட்டி விடும். எனவே கனவுகளை நினைத்து பயப்படாமல் அதையும் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.

பகல் கனவு :

அதாவது விழித்திருக்கும்போதே நம் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு யோசித்துக் கொண்டே இருப்பது. இதனால் நம் உடலிலும் மனதிலும் பலவித மாற்றங்கள் ஏற்படும். இவை பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் நம் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி நம்மை கற்பனை உலகில் முடக்கி விடும்.

உண்மையில் மிகவும் ஆபத்தானது இந்த பகல் கனவு. இதனால் பெரிய பலன் ஏதும் இல்லை. மற்றபடி இது கால விரயமே. இந்த மாதிரி கற்பனையில் மனதை அலைபாய விடாமல் நிதர்சனத்தை நேரில் சந்தித்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வது அனைவருக்கும் சிறப்பு.


கடவுளே மஹாலிங்கம், எல்லோரும் பகல் கனவு காண்பதை விடுத்து, சிறந்த லட்சியங்களை உருவாக்கி அது நோக்கி பயணம் செய்ய தூக்கத்தில் கூட வழி ஏற்பட அருள் செய்யுங்க..

சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Monday, November 21, 2011

விண்ணைத்தாண்டி ஓடும் விலைவாசி...

ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயரும் போதும் மற்ற சில பொருட்களின் விலையும் அதிகரித்து வந்திருக்கிறது. 

பெட்ரோல் விலையை நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு தற்காலிகமாக குறைத்தாலும் இவ்வாறுஉயர்ந்த மற்ற எந்த விலைவாசியும் குறையவில்லை. பெட்ரோல் விலை மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் உயர்த்தப்படும் போது மற்ற பொருள்களும் மீண்டும் விலை ஏற்றப்படும். 

இப்போது தமிழகத்தில் பால், பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டு மின் கட்டணமும் உயர்த்தப்பட இருக்கிறது. 

இதில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால் இந்த கட்டணங்கள் மற்ற மாநிலங்களில் இன்னும் அதிகம். முக்கியமாக மின் கட்டணம். 

நான் ஓசூரில் இருக்கும் போது (2009) மின்கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 300-00 மட்டுமே கட்டி இருக்கிறேன். ஆனால் இங்கு கல்கத்தாவில் (2011) 3 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 1600-00 கட்ட வேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் நான் ஓசூரில் உபயோகித்த ஹீட்டரை இப்போது இங்கு உபயோகப் படுத்துவதில்லை. இந்த மின் கட்டணம் விரைவில் இங்கு உயர்த்தப்பட உள்ளது.

மேலும் பேருந்து கட்டணங்கள், தமிழகத்தில் ரூ 2-00 குறைந்த பட்ச கட்டணம், ஆனால் இங்கு கல்கத்தாவில் ரூ 4-00 குறைந்த பட்ச கட்டணம். ஆனால் இங்கு இருக்கும் பெரும்பாலான பேருந்துகளில் பயணம் செய்தால் முதுகு வலி நிச்சயம். அவ்வளவு மோசமாக இருக்கும். உண்மையில், இதோடு ஒப்பிடும்போது தமிழகத்துக்கு வரும்போது நான் ஒரு சுகமான பேருந்துப் பயணத்தையே கண்டிருக்கிறேன். இந்த பேருந்துக் கட்டணம் இங்கு பல ஆண்டுகளாக நடைமுறையில் உளளது.  எப்போது வேண்டுமானாலும் உயர்த்தபடலாம்.

பால் விலை இங்கு அரை லிட்டர் ரூ 11-50 (அரசு விலை). ஆனால் தனியார் பால் (அமுல்) அரை லிட்டர் ரூ15-00.

தானிய வகைகளும் காய்கறிகளின் விலையும் மிகவும் அதிகம். எனது மாத பட்ஜெட்டில் எனது வாடகைக்கு இணையாக இவற்றுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

நடுத்தர வர்க்கமான நாமே இவ்வளவு செலவு செய்ய யோசிக்கும்போது தினம் ரூ32 ம் அதற்கும் கீழும் சம்பாதிக்கும் ஏழைகளை நினைக்க இன்னும் வருத்தமாக இருக்கிறது.  இவர்களின் எண்ணிக்கை நம் ஜனத்தொகையில் சுமார் 40% என்று அரசாங்கமே சொல்கிறது.

அரசாங்கம் விலைவாசிகளை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் தெரிகிறது. கொள்ளை சம்பவங்களும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இப்போது அதிகரித்து வருகிறது. மக்கள் வருமானத்திற்கு மீறிய செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே அரசு உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண முயல வேண்டும்.

ஆனால் இதை செய்யாமல் இவர்கள் ஏதோ நம்பர் கேம் ஆடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

இது பற்றிய எனது முந்தைய ஒரு பதிவு :

விலைவாசி உயர்வும், அதற்கு தீர்வும் (?)


நாட்டு ஜனங்களை அந்த மஹாலிங்கம்தான் ரட்சிக்கணும்.

சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Thursday, November 17, 2011

என் கனவில் கடவுள்....

அது 1993ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 1ம் தேதி. 

மிகுந்த மன வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் நான்  வாழ்வின் நம்பிக்கையை முழுமையாக் இழந்திருந்த நேரம். 

பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக துரத்த வாழ்வில் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நேரம்.

எண்ணங்கள் தட தட என தவறாக ஓட ஆரம்பிக்க என்ன செய்வது என்ற நிலை தடுமாறி ஒரு மயக்கத்தில் தூங்காமல் விழித்திருந்த நேரம்.

வாழ்வின் நமக்கு தெரிந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு பெரும் பாரமான உணர்வு மனதில் அழுந்த கண்களில் நீர் பூக்க திக்கு தெரியாமல் திணறிய நேரம்.

சாய்ந்து அழ தோள் கூட இல்லாமல் தனிமையில் மருகி நின்றிருந்த நேரம்.

இரவின் இருட்டு பேயாய் அழுத்த, கண்ணீரில் தலையணை நனைந்து தூக்கம் தொலைந்த நேரம்.

அசதியிலும் ஆற்றாமையிலும் லேசாக கண்ணயர, கனவு விரிகிறது :


ஒரு ரயிலடி. யாரையோ ரயில் ஏற்றிவிட வந்திருக்கிறேன். திடீரென்று எல்லோரும் எங்கோ ஓடுகிறார்கள். தோள்களில் பைகளுடன் நானும் அவர்களுடன் ஓடுகிறேன். 

ஒரு சிறு மண்டபம் போன்ற ஒரு கட்டிடத்துக்குள் ஈ நுழைய முடியாத அளவு கூட்டம். உள்ளே ஒன்றும் தெரியவில்லை. நான் வெளியில். ஓ!! ஏதோ கோயில் போல இருக்கிறது. அதுதான் கூட்டமாக இருக்கிறதே என ஒரு அசட்டையுடன் திரும்ப எத்தனிக்கையில், 

கோவில் மணி ஒலி கணீரென்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. திரும்பிப்பார்க்கிறேன். முன்னால் நின்றிருந்த அனைவரும் ஒருசேர விழுந்து வணங்குகிறார்கள். பின்னால் நிற்கும் எனக்கு அந்த ஆண்டவனின் தரிசனம்.

கண்கள் பனிக்க, கைகள் துவள, பைகள் விடுபட, கண்ணீரோடு வணங்குகிறேன். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிய அவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்.


திடீரென்று கனவில் இருந்து விழித்து எழுகிறேன். வியர்த்திருக்கிறது. கண்ணீரால் கன்னம் நனைந்திருக்கிறது. விடிகாலை 4 மணி. 

அதன் பிறகு தூக்கம் வரவில்லை. இந்த கனவின் நினைவோடு புரண்டு புரண்டு படுக்கிறேன். ஒரே சிந்தனை. இதற்கு என்ன அர்த்தம். அல்லது அனர்த்தமா? கடவுளைப்பற்றி நேற்று ஒரு விநாடி கூட நினைக்க வில்லையே. பிறகு எப்படி இப்படி ஒரு கனவு வரும். ஆழ்ந்த யோசனை..

சில மாதங்களுக்கு முன் கடவுளிடம் விட்ட சவால் ஞாபகம் வந்தது. 

”நீ வந்து என்னைப்பார்க்காமல் உன்னை வந்து நான் ஏன் பார்க்கவேண்டும்??”

ஓ இதனால்தான் கடவுள் என்னை பார்க்க வந்தாரா?? யாருமே எனக்கு இல்லை என்ற எண்ணத்தைப் போக்க வந்தாரோ?? ஒன்றும் புரியவில்லை.

ஆனால் மனதில் ஒரு புதிய நம்பிக்கை கீற்று ஒளிவீச ஆரம்பித்திருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மாற்றம் ஆழ் மனதில். ஏதோ நல்லது நடக்கும் என்ற ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 

“கடவுள் நிச்சயம் நமக்கு துணை இருப்பார்”

அந்த நம்பிக்கையோடு முதல் முறையாக கடவுளைக் காண்பதற்காக கோயிலை நோக்கி பயணப்பட்டேன்...


- இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். மீண்டும் இன்று கார்த்திகை 1ம் தேதி.

எனக்கு அடைக்கலம் கொடுத்த மஹாலிங்கத்துக்கு வணக்கம். உலகமக்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து காப்பாற வேண்டுகிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்..

Tuesday, November 15, 2011

லஞ்சத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா?

இன்றைய சூழலில் லஞ்சம் என்பது பரவலாக காணப்படுகிறது. பிறப்பு  / இறப்பு சான்றிதழ் வாங்க, ரேஷன் அட்டை வாங்க / மாற்ற, சாதி சான்றிதழ் வாங்க, சில அரசு அனுமதிகள் வாங்க, மற்றும் பல சந்தர்ப்பங்களில் லஞ்சம் என்பது நீக்கமற நிறைந்துவிட்டது.  சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் இடைத்தரகர்கள் மூலமும் இது வாங்கப்படுகிறது. 

லஞ்சமே கொடுக்காமல் ஒரு மனிதன் நம் தேசத்தில் வாழ முடிந்தால் உண்மையில் அவர் ஒரு மிகப்பெரிய லட்சியவாதிதான். ஆனால் இதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை நினைத்து என்னைப் போன்ற பலருக்கு பயமாக இருக்கிறது.

லஞ்சம் எப்போதெல்லாம் கொடுக்கப்படுகிறது ?

1) தங்களுக்கு நேர்மையாக ஆகவேண்டிய காரியம் தாமதமில்லாமல் குறித்த நேரத்தில் ஆவதற்கு

2) அதே காரியம் குறித்த நேரத்துக்கு முன்பாகவே சற்று விரைவாக ஆவதற்கு

3) சட்ட விரோதமாக சில காரியங்கள் செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு.

4) சில அதிகாரிகளின் பேராசையால அலைக்களிக்கப்படாமல் இருப்பதற்கு அல்லது அலைக்களிக்கப்பட்டு லஞ்சம் தர தூண்டுவது 

இவற்றில் 2 வது காரணத்துக்கு லஞ்சம் கொடுப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் / தனி மனிதர்கள் விரும்புகின்றனர்.  இவ்வாறு காரியம் ஆகிவிடாதா என்ற நப்பாசையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர்.

நான் பார்த்தவரை, 4 வது காரணம்தான் லஞ்சம் வாங்கும் உத்தியாக பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. காரியம் ஆவதற்காக பலரை ”இன்றுபோய் நாளை வா” பாணியில் அலைக்களிப்பது சர்வ சாதாரணமாக நமது அரசு அலுவலங்களில் நடைபெறுகிறது. மேலும் பொறுப்பாக பதில் சொல்லும் அதிகாரிகளும் மிகக் குறைவே.

இந்த நிலையில் போராட மனமும் நேரமும் இல்லாத பலர் லஞ்சம் கொடுத்துதான் இன்றும் காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் (கொண்டிருக்கிறோம்). 

இவ்வாறு லஞ்சம் கொடுப்பதும் குற்றமே எனினும் கொடுக்காமல் கஷ்டப்படுவதைவிட கொடுத்து சற்று நிம்மதியாக இருக்கலாமே என்ற எண்ணம்தான் காரணம்.

இந்த சூழ்நிலையில் நேற்றைய செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி - இந்த லஞ்சத்தை சட்டப்பூர்வமாக ஆக்கிவிடவேண்டும் என்ற வேண்டுகொள் நம் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வந்திருக்கிறது. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்கபோல இருக்கு. அதன் சுட்டி கீழே :

'Payment of Rs 5-10k speed money can be legitimised'பொதுஜனமாகிய நாம் கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத நம் அரசு இவர்கள் சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள். 

ஆனால் இந்த விசயத்தில்  லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கினால் இதற்கு மேலும் யார் லஞ்சம் தருவார்கள் என்றுதான்  பெரும்பாலான அதிகாரிகள் அலைவார்கள். எனவே நம் அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரிக்கத்தான் செய்ய வேண்டும்.

ஆனால் நம் நாடு ஜனநாயக நாடு . என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும். என்ன நடந்தாலும் நாம்தான் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சங்குதான். போன பதிவு அந்த சங்கொலியின் ஒரு எதிரொலிதான். எல்லாம் விதி..


கடவுளே மஹாலிங்கம், இந்த லஞ்சம் இல்லாமல் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஏதாவது செஞ்சு அதை ஒழிச்சுக் கட்ட உங்களாலதான் முடியும். தயவு செய்து மனசு வையுங்க.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, November 10, 2011

கூடங்குளமும் -அரசாங்கத்தின் செய்தியும்....(கற்பனை)

இன்றைய நாட்டு நடப்புகளைப் பார்க்கும்போது, முக்கியமாக கூடங்குளம் அணு உலை சம்பந்தமான செய்திகளைப்படிக்கும் போது எனக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி எழுதிய ”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி” என்ற பதிவு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என தெரிகிறது.. அதை மீண்டும் மீள் பதிவு செய்கிறேன்.

”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி” (கற்பனை)


என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.

எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.

உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும்.  திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.

சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.

சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!

Wednesday, November 9, 2011

நல்லவன், கெட்டவன்... ஒருவரே !!!!!! ????

சில நாட்களுக்கு முன் என் மகன் சுட்டி டிவியில் ஜாக்கிசான் கார்டூன் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஒரு (புலி) மந்திரக்கல்லின் உதவியால் ஜாக்கி இரண்டு நபராக ஆவதாக காண்பித்தார்கள். ஒருவன் ரொம்ப நல்லவன். இன்னொருவன் ரொம்ப கெட்டவன். அதில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இவ்வாறு இரண்டு நபர்கள் இருப்பதாக ஒரு விளக்கமும் கொடுத்தார் அங்கிள்.

இது குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொழுது , ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் சில இக்கட்டான சூழல்களில் இந்த மாதிரி நமக்கு உள்ளே இருக்கும் இந்த இரண்டு நபர்களை (நல்லவன், கெட்டவன்) ஸ்பஷ்டமாக சந்திக்க முடியும். நாம் எடுக்கும் சில முடிவுகளால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசும் போது இது நமக்கு புலப்படும். 

அல்லது நம் சிந்தனை தவறாகப் போகிறதே என்று எப்போதாவது நமக்கு புலப்படும்போது இந்த கெட்டவன் தான் அங்கே வேலை செய்திருக்கிறான்.

இந்த கெட்டவன் நமக்குள்ளேயே இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் அவனுடைய சிந்தனைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நாம் எத்தனிக்கும்போதுதான் நாம் யாரென்ற உண்மையான பிம்பம் வெளிப்படும்.

விஷத்தை பாட்டிலிலேயே வைத்திருக்கும்வரை அது சாதுதான். ஆனால் எடுத்து சாப்பிட்டுவிட்டால் ??? யோசித்துப் பாருங்கள்.

இந்த இருவரில் நம் வாழ்நாளில் அதிகம் யாரை நாம் வெளி செலுத்துகிறோமோ அவராகவே நாம் அறியப்படுகிறோம்.  இந்த ”யாரை வெளிப் படுத்துவது?” என்ற உரிமை இயற்கையால் / கடவுளால் நமக்கு வழங்கப்பட்டு இருக்கிறது (Free-Will). அதை நாம் சரியாக உபயோகப்படுத்துவது ”நமது கை”யில்தான் இருக்கிறது.

இந்த ”நமது கை” என்பது நம் அகங்காரத்தையும் நம் வாழ்வியல் சூழலையும் சார்ந்து இருக்கிறது.  இந்த இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஏனெனில் நம் வாழ்வியல் சூழல்கள் நம் அகங்காரத்தை தீமானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நம்  அகங்காரத்தை தீர்மானிப்பதில் இன்னொரு முக்கிய பங்கு நம் ஜீன்களில் இருக்கிறது. இதைத்தான் முன் ஜென்ம வினை / கர்மா எனவும் சொல்கிறார்கள்.

அதாவது, கருப்பு வெள்ளை பிலிம் உபயோகப் படுத்தி எடுத்த புகைப்படம் கருப்பு வெள்ளையில்தான் வரும். கலர்பிலிம் உபயோகப்படுத்தினால் கலர்படம் எடுக்கலாம். அதுபோல X-Ray பிலிம் உபயோகப்படுத்தி படம் எடுத்தால் அதில் நம் எலும்புகள்தான் தெரியும். பிலிம் என்ற ஒரே மீடியத்தில் இத்தனை ரகங்கள் இருக்கும்போது மனிதர்களில் எத்தனை ரகமோ??


”உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்”

எனக்கு மிகவும் பிடித்த இந்த குறள் ஒரு மனிதனின் ஆத்ம சுத்தியின் ஆழத்தைப் பற்றிப் பேசுகிறது. இதன்படி வாழ்வதே ஒரு லட்சிய வாழ்க்கை. 

யோசித்துப் பாருங்கள். நமக்குள் இருக்கும் அந்த கெட்டவனை நாம் அழித்துவிட்டால்??? அப்போதுதான் இந்த நிலை சித்திக்கும்.

ஒவ்வொரு மனிதனும் நமக்குள் இருக்கும் கெட்டவனை அழிக்கமுடியுமா தெரியவில்லை . ஆனால் இப்படி ஒருவன் நமக்குள் இருக்கிறான் அவனை நாம் ஜாக்கிரதையாக கையாளவேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நாம் செயல்படத் தொடங்கினால் வாழ்வு இனிக்கும்.கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் அந்த கெட்டவனை நீங்கதான் அழிக்கணும்..

சதுரகிரி சுந்தரனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..