Wednesday, March 16, 2011

வாக்காளர்களே விழிப்படையுங்கள்!!!

இப்போது தேர்தலில் பிரச்சாரம் செய்ய அனைத்து தலைவர்களும் தயாராகி வருகிறார்கள். விரைவில் நம் தலைவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு தங்களின் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவார்கள். இந்த பிரச்சாரங்கள் செய்யும்போது நம் ஆழ்மனதில் என்ன நடக்கிறது என்பது பற்றிய எனது சிந்தனைகள்..

இதுபற்றி சரியாகப் புரிந்து கொள்ள முதலில் நாம் விளம்பரப்படுத்துதல் பற்றி நன்றாக அறிய வேண்டும்.

இப்போது எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்துகிறார்கள். அவ்வாறு விளம்பரப்படுத்துவதற்கு முன் நம் மனதில் அது பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கும். இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு நம் மனதில் ஒரு நேர் அல்லது எதிர்மறை மாற்றம் ஏற்படும். அதே பொருளைப்பற்றி மீண்டும் மீண்டும் விளம்பரம் வரும்பொழுது அந்தப் பொருளை நம் தேவைக்கேற்ப வாங்க தூண்டும். இதுவே விளம்பரங்களின் யுக்தி.

அதுவும் அந்த விளம்பரத்தில் ஏதாவது ஒரு பிரபலம் இருந்துவிட்டால் இன்னும் ஆழமாக அது மனதில் ஊடுருவும். இப்படி பலர் மனதில் அந்த விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அது பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தை உண்டுபண்ணுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மனம் இருப்பதுபோல ஒரு பொது மனமும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறது. ஒரு பொருளைப்பற்றி பெரும்பாலோர் மனதில் எழும் சிந்தனைகள் இந்த பொதுமனதில் பதிந்திருக்கும். அந்தப்பொருள் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அந்த பொருளைப்பற்றி கேள்விப்படும் / சிந்திக்கும் போது அந்த பொதுமனதில் இருக்கும் ஒரு நேர் அல்லது எதிர்மறை அபிப்பிராயம் அவர் மனதில் தானாக பிரதிபலிக்கும். அதற்குமேலும் வலுசேர்க்கும் விதமாக மேற்படி விளம்பரங்களை அவர் கேட்க/பார்க்க நேரிடும்போது அந்த அபிப்பிராயம் மேலும் வலுப்பெறுகிறது. இதை ஆங்கில‌த்தில் "Brand Building" என்று கூறுகிறார்க‌ள்.

இவ்வாறு ஒருவர் ஒரு பொருளை சந்தைப்படுத்துவ‌தற்கு அதன் விளம்பரப்படுத்துதல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. குறைந்தபட்ச தரம் அந்த பொருளுக்கு இருக்கும் வரை விளம்பரங்கள் அந்தப் பொருளை நிச்சயம் விற்றுக் கொடுக்கும்.


இந்த விளம்பரத் தத்துவத்தில்தான் நம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நம் ஆழ்மனதில் செயல்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒரு பிராண்ட் போல. அதற்கென்று ஒரு பெயர் (நல்லதோ கெட்டதோ, சூழ்நிலைக்குத்தகுந்தவாறு) இருக்கிறது. பொது மனதில் இந்த நற்பெயரை மேலும் வளர்த்து அதை வாக்குகளாக மாற்றவே இந்த பிரச்சாரப்போராட்டம். 

இந்த களேபரத்தில், இனிமேல் மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட, இப்போது கெட்டது செய்பவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதே பிரதானமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே நம் அரசியல் கட்சிகள், நல்லது செய்வதை மறந்துவிட்டு, மக்கள் மனதில் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி, மாற்றி மாற்றி குதிரை ஏறிக்கொண்டு இருக்கின்றன. உஷார்....

எனவே, வாக்காளர்களே விழிப்படையுங்கள்.. போலி விளம்பரம் போன்ற பிரச்சாரங்களை நம்பாமல், உங்கள் தொகுதியின் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும் வேட்பாளர் யார் என ஆராய்ந்து அவருக்கு வாக்களிக்க முன்வாருங்கள். அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அல்லது சுயேச்சையாக இருந்தாலும்.  

நமக்குத் தேவையான உண்மையான மாற்றம் நமக்கு நல்லது செய்பவர்களாலேயே ஏற்படும். எனவே அப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்க நாம் முயற்சி செய்வோம்.

கடவுளே, இப்படிப்பட்ட நல்லது செய்பவர்களை வாக்காளர்களுக்கு அடையாளம் காட்ட நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!!

4 comments:

சண்முககுமார் said...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!!

super boss

Sankar Gurusamy said...

திரு சண்முக குமார், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சண்முககுமார் said...

படைப்புகளை மின்னஞ்சலில் பெருவதற்க்கான wiget இணைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

Sankar Gurusamy said...

திரு சண்முக குமார், தாங்கள் என் வலைத் தளத்தை பின்பற்றினாலே உங்கள் டேஷ்போர்டில் புது பதிவுகள் வருமே..

எனக்கு அந்த விட்ஜெட் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை... தெரிந்ததும் நிச்சயம் செய்கிறேன். தங்களின் ஆலோசனைக்கு நன்றி...