போன வாரம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு குடும்பத்துடன் ரயிலில் வந்து கொண்டிருந்தேன். எங்களுக்கு அருகில் ஒரு பெங்காலி குடும்பம் இருந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர் - வயது 7 , 5.
அந்த குழந்தைகள் என் மகனுடன்(வயது 4) விளையாட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. ஏதேதோ பேசினார்கள். எப்படியெல்லாமோ விளையாடினார்கள். கல கல என்று ஒரு சிரிப்பு மயமாக இருந்த்து.
இதில் முக்கியமான விசயம் என் மகனுக்கு பெங்காலி ஒரு வரி கூட தெரியாது.. எனக்கும் தான். அவர்களுக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியாது. என் மகன் படிப்பதும் ஒரு சாதாரண பள்ளி வகுப்பில்தான். எனவே பெரிய ஆங்கில, இந்தி பரிச்சயமும் இல்லை. சில ஆங்கில வார்த்தைகள், சில இந்தி வார்த்தைகள் என என் மகன் சமாளித்துக் கொண்டிருந்தான்.
கடைசியில் என்னிடம் வந்து அவர்கள் என்ன கூறினார்கள் என்று கேட்டான். நானும் எனக்கு தெரியாது என்று கூறி, அவனிடம், ஒன்றும் புரியாமல் என்ன விளையாண்டாய் என்று கேட்டேன்.
அதற்கு அவன் ஒரே ஒரு புன் சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் அவர்களுடன் விளையாட சென்று விட்டான். மீண்டும் அவர்களுக்குள் கல கல சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
மொழி புரியாவிட்டாலும், குழந்தைகளுக்குள் ஏதோ ஒரு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் உலகம் மிக சுதந்திரமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அதில் இடம் இருக்கிறது. எது புரிகிறதோ இல்லையோ மனதின் மகிழ்ச்சியை சரியாக புரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொண்டும் விளையாடுகிறார்கள்.
அன்பும் மகிழ்ச்சியும் ததும்பும் பொழுது மொழி அமைதியாகி விடுகிறதை கண் கூடாக காண முடிந்தது.
மொழி தெரிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த விளையாட்டு இருக்கும்போலவும் தோன்றியது.
இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதைவிட அவர்கள் விளையாட்டை ரசிப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து அதை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தேன்.
இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த கடவுளுக்கு நன்றி..
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.