Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts

Friday, January 6, 2012

கடவுள் இருக்கிறாரா?

சில வருட‌ங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருடன் காரசாரமான விவாதம். கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றி. கடவுள் இருக்கிறார் என நானும், கடவுள் என்பவர் இல்லவே இல்லை, எல்லாம் ஏமாற்று வேலை என என் நண்பரும்.

வாதங்களும் பிரதி வாதங்களும் மாற்றி மாற்றி சுழற்றி அடிக்க, இருவருமே அவரவர் நிலையில் இருந்து இறங்கவே இல்லை. சலித்து விட்டது. கடைசி வரை என்னால் எனது நண்பரை கடவுள் இருக்கிறார் என நம்ப வைக்க முடியவில்லை. அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து எனது இன்னொரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். அவர் அப்போது இந்த கடவுள் விவாதம் குறித்து எனக்கு கூறிய சில விசயங்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதானதாக இருந்தது. அவற்றில் சில :

1) மனிதன் கடவுளை தன் புலன்களால் உணர நினைக்கிறான். ஆனால் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.

2) நாம் வேண்டியதை உடனேயே நிறைவேற்றி தரும் கடவுளையே எல்லோரும் தேடுகின்றார்கள். ஆனால் கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டு நிற்கிறார். எல்லோருக்கும் எல்லா வேண்டுதல்களும் எப்போதுமே நிறைவேறுவதில்லை.

3) கடவுளை வணங்கினால் அவர்களுக்கு பிரச்சினைகள் வராது அல்லது குறைவாக வரும் என்பது மூட நம்பிக்கை. அதிகம் கடவுளை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய கர்ம கணக்கு விரைவில் தீர அதிக கஷ்டங்கள் வரும் வாய்ப்புதான் அதிகம்.

4) எவ்வளவு தவறு செய்தாலும் கடவுளிடம் சென்று ஒரு முறை மன்னிப்பு கேட்டால் அல்லது காணிக்கை செலுத்தினால் எல்லாம் சரியாகி விடும். மீண்டும் அடுத்த தவறு செய்ய தயாராகலாம். இதுவும் ஒரு மடத்தனமான நம்பிக்கை.

5) கர்மா என்று ஒன்று இருக்கிறது, இது பாவம், இது புண்ணியம் என நம்புகின்றவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது ஏற்படுத்த முடியும். கர்மாவை நம்பாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது.

6) கடவுள் என்பதை நம்புவது அவரவர் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் அளவையும் அவற்றை தீர்க்க அவரவருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களின் நிலையையும் பொருத்தது.

சிலருக்கு கஷ்டங்கள் வரும்போதே அவற்றுக்கான தீர்வும் உடன் வரும். இவர்களுக்கு பல நேரம் ஓரளவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களை அதிகம் அனுபவித்த பிறகு அவர்கள் நம்பிக்கையின் விளிம்பில் இருக்கும் போது தீர்வு வரும். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களின் விடிவு என்பது அவர்கள் காணும்போது வராமலே போகலாம். இவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவோ அல்லது ஞானிகளாகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கஷ்டங்களே ஏற்படாத ஒரு வசதியான நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு அவரவர் குடும்ப, நட்பு சூழலைப் பொறுத்து கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது இல்லாமல் போகும்.

7) கடவுளை அவரவரே சாதகம் செய்து, கஷ்டப்பட்டு உணரவேண்டும். ஒருவர் வார்த்தைகளில் போதித்து மட்டும் இன்னொருவர் நிச்சயம் உணர முடியாது. எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அது அவரவரே உணர்ந்து கொள்ளட்டும். இன்றைக்கு இல்லை என்று சொல்பவர் நாளைக்கே இருக்கிறது என்றும் சொல்லலாம். இன்றைக்கு இருக்கிறது என்று சொல்பவர் நாளைக்கே இல்லை என்றும் சொல்லலாம். அது கடவுள் தன்னை யாரிடம் எப்போது வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ அதைப் பொறுத்தது.


கடவுளே மஹாலிங்கம்.. நீங்க உங்களை எல்லோரிடத்தும் வெளிப்படுத்திக் கிடணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...