Showing posts with label பான்கார்ட். Show all posts
Showing posts with label பான்கார்ட். Show all posts

Thursday, May 5, 2011

அகங்காரம் - இரண்டு அனுபவங்கள்

நம் நாட்டில் நடக்கும் சில விசயங்களைக் கேள்விப்படும்போது, அனுபவிக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வுகள் உண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடா? அல்லது அது ஒரு இயல்பான உணர்வு நிலையா என்று என்னால் கணிக்கமுடியவில்லை.

எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் அந்த சந்தேகத்தை மேலும் குழப்பிவிட்டது..

சம்பவம் 1

கல்கத்தாவுக்கு வந்த புதிதில் எனது பான் அட்டையில் எனது விலாசம் மாற்ற ஆன் லைனில் விண்ணப்பித்து இருந்தேன். என் விலாசத்துக்கு சான்றாக எனது G SANKAR என்ற பெயருடன் அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி அனுப்பி இருந்தேன்.

அதற்கு பதிலாக எனக்கு வந்தது மிக அதிர்ச்சியாக இருந்தது. 

”தங்கள் பெயர் எங்கள் அலுவலக பதிவேடுகளில் உள்ளதுபோல இல்லை. எனவே தாங்கள் வேறு சான்று சமர்ப்பிக்கவும்.”

விஷயம் என்னவென்றால் அவர்களுடய பதிவேடுகளில் எனது பெயர் SANKAR GURUSAMY  என்று இருக்கிறது.

ஏனெனில் இவர்கள் எப்போதுமே இனிஷியலை விரிவாக எழுதும்படிதான் விண்ணப்பங்களில் கேட்கிறார்கள். 

வினோதம் என்னவென்றால் எனது பான் அட்டையில் எனது பெயர் G SANKAR என்றுதான் பதிவாகி இருக்கிறது.

நான் அவர்களுக்கு போன் செய்து இதைப்பற்றி விளக்கமாக கூறினேன். அவர்கள் மிக அமைதியாக தங்கள் அட்டை தவறாக பிரிண்ட் போட்டு தரப்பட்டது என்று கூறி வெறுப்பேற்றினார்கள். மேலும் தாங்கள் புதிய விலாச சான்று சமர்ப்பித்தால்தான் விலாசம் மாற்ற முடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

பிறகு நான் அவர்களுக்கு இதுபற்றி விளக்கி ஒரு சில ஈமெயில் அனுப்பினேன்.  அவர்கள் மசியவில்லை.

பிறகு சில நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில்  வேறு சான்றிதழ் பெற்று எனது விலாசத்தை மாற்றினேன்.

சம்பவம் 2

நேற்று பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்க சென்றிருந்தேன். அங்கும் இதேபோல எனது அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ் கொடுத்தேன்.

இந்த முறை உஷாராக எனது முழு பெயருடன் கொடுத்தேன். இவர்கள் இணையத்தில் அலுவலக சான்றிதழ் ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது. ஆனால் இவர்கள் அலுவலக சான்றிதழ் செல்லாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்கள்.  

மேலும் விலாச சான்றில் முழு பெயரும் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

3 மணிநேரம் டாக்சி பயணம், ரூ 450 டாக்சி சார்ஜ்,  2 மணிநேர காத்திருப்பு. 3 மணிநேர அப்ளிகேசன் தயாரிப்பு -எல்லாம் வீண்.

குழப்பம்

எனது எல்லா விதமான செயல்பாடுகளும் என் G SANKAR என்ற பெயரில் தான் இருக்கிறது -  எனது பள்ளி, கல்லூரி சர்டிஃபிகேட், மேரேஜ் சர்டிஃபிகேட், பாங்க் அக்கவுண்ட், ரேசன் கார்ட், பான் கார்ட், வோட்டர் ஐடி, கேஸ் கனெக்சன் (இதில் இனிஷியல்கூட இல்லை).

எதிலுமே எனது முழுபெயரான SANKAR GURUSAMY  என்பது இல்லை.

இப்போது எனக்கு எப்படி என் பாஸ்போர்ட் புதுப்பிப்பது என்று புரியவில்லை.  இதற்காக புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா என்றும் ஒரே குழப்பமாக உள்ளது.

உளைச்சல் :

மிக சாதாரண சம்பவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு சம்பவங்களிலும் என் மனம் மிகவும் உளைச்சல் அடைந்துவிட்டது. நேற்று முழுவதும் மிகவும் அப்செட். ஒரே படபடப்பாக இருந்தது. சற்று பயமாகவும் இருந்தது - ”எப்படி பாஸ்போர்ட் புதுப்பிக்கப்போகிறோம்” என்று. ஆனாலும் சற்று பொறுமையாக சிந்தித்து இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தெளிவு இப்போது இருக்கிறது. பார்க்கலாம்.


அகங்காரம்  :

இது எந்த வகை அகங்காரம் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் நல்லதற்கில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. உணர்வுகளின் வெளிப்பாடு மனதையும் உடலையும் பாதிக்கிறது. ஆனால் நான் இது எதோ ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடு என்பதை பூரணமாக உணர்கிறேன். அந்த விழிப்புணர்வும் இருந்தது / இருக்கிறது.  ஆனாலும் என்னால் அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

நம் தவறு என்பது இல்லாமல் நாம் பாதிக்கப்படும்பொழுது ஏற்படும் இந்த உணர்வு எப்படி அகங்காரமாகும் என்ற ஒரு குதர்க்கமான கேள்வி இங்கு எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  கடவுள்தான் இதில் தீர்ப்பு சொல்லணும்.


கடவுளே மஹாலிங்கம், இதில் ஒரு தெளிவையும் தீர்வையும் நீங்கதான் தரணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!