Friday, March 16, 2012

இலங்கை போர்க் குற்றங்கள்.. யார் பொறுப்பு??

நேற்று சானல்4 ஒளிபரப்பிய அந்த இலங்கை போர்க் குற்ற வீடியோவைப் பார்த்த பிறகு நெஞ்சு அடைத்ததுபோல இருந்தது. முதல் பாகம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இதை சற்று விட்டு விட்டுத்தான் பார்க்க முடிந்தது. கண்கள் பனித்தது. இதற்கு யார் பொறுப்பு என அந்த விடியோவில் காட்டினார்கள். எனக்கு அவர்கள் காட்டியவர்களுடன் இன்னும் அதிக பொறுப்புடையவர்களாக சிலர் தெரிந்தார்கள். அவர்கள் பற்றி..

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதுபற்றி தெரிந்தும் முழுமையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடாமல், நடிகைகளின் அங்கங்களையும், சினிமா/அரசியல் கிசுகிசுகளையும் பக்கத்துக்கு பக்கம் பதிப்பிற்று விற்றுக் கொண்டிருந்த நம் தமிழகத்துப் பத்திரிக்கைகள் / இதர ஊடகங்கள்.

இன்னும்கூட இதில் கள்ளமௌனம் சாதிக்கும் நம் ஊடகங்கள்தான் முதல் குற்றவாளி.

 
இதே நேரத்தில், அரசியல் பதவி பேரம் பேசிக்கொண்டும், வாரிசுச்சண்டையில் சமாதானம் பேசிக் கொண்டும், சொகுசு பங்களாக்களில் நிரந்தர ஓய்வு எடுத்துக்கொண்டும் இருந்த நம் தமிழக முன்னணி அரசியல் தலைவர்கள் இரண்டாவது குற்றவாளி.

இவர்களுக்கும் இதுபற்றி நன்றாக தகவல்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களை திசை திருப்பி இலங்கை அரசாங்கம் சொன்ன பொய்களை நம்மை நம்பவைத்த நயவஞ்சகர்கள். இன்று இதற்காக இவர்கள் சிந்தும் நீலிக் கண்ணீர் அவர்கள் குடும்பததை எரியாய் எரிக்கப் போகும் நெருப்புத் துண்டங்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.

 
இந்த இறுதிப் போரில் இலங்கைக்கு தார்மீக உதவிகளும், தளவாட உதவிகளும் செய்து போரை முடித்துவைக்க உதவியதாக சொல்லப்படும் நம் இந்திய மத்திய அரசாங்கம் இதில் மூன்றாவது குற்றவாளி.

நம் தமிழகத்தை முதலிலேயே நீர் மேலாண்மையில் வஞ்சித்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, ராஜீவ் கொலைக்குப் பிறகு முற்றிலும் கைகழுவி விட்டது. இன்னும் நம் வங்கக்  கடலில் தினமும் தாக்கப்படும் /  கொல்லப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லாத இந்த மத்திய அரசு, இப்போது ஒவ்வொரு தமிழனும் இனி இந்தியன் என சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வைத்துவிட்டது.

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதைத் தடுக்கத் தவறிய ஐநா சபையும் அதன் உறுப்பு நாடுகளும் நான்காவது குற்றவாளிகள்.

லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த ஒரு சமூகமே அழிக்கப்பட்டதை இவர்கள் தத்தமது சாட்டிலைட்டுகள் வழியாக அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இன்று படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கக்கேடு. உண்மையில் நம் கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்வதுபோல ஐநா சபை என்பது  அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஏவலை செய்து முடிக்கும் நாய்தான் போலிருக்கிறது.

 
இந்த போர்க்குற்றங்கள் நடந்ததை அறிந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் / செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும், நான் உட்பட, ஐந்தாவது குற்றவாளிகள்.

இன்னும் நம்மால் சாந்தமான மனநிலையில் வாழ முடிகிறது. ஒன்று நாம் முற்றிலும் காயடிக்கப்பட்டிருக்கிறோம், அல்லது முழு ஞானியாகி விட்டோம். இதில் முன்னதுதான் சரியானது என நினைக்கிறேன்.


ஒரு குற்றத்தை செய்பவனுடன் உடந்தையாக இருந்தவர்களும் பெரிய குற்றவாளிதான். இந்த வகையில் மேற்கண்ட அனைவருமே குற்றவாளிகளே.


கடவுளே மஹாலிங்கம், இந்த படுகொலையில் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நற்கதியைக் கொடுங்க. இன்னும் பிழைத்து இருப்பவர்களுக்கு எதையும் தாங்கும் மனோபலத்தையும் ஆத்ம பலத்தையும் கொடுங்க. என்னைப் போன்ற தமிழனுக்கு கொஞ்சமாவது வீரத்தைக் கொடுங்க..

சதுரகிரி சுந்தரனே சரணம்...

12 comments:

eelatamilan said...

click and read

.
>>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<<

.
.

Sankar Gurusamy said...

திரு ஈழத்தமிழன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. இலங்கை அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் தங்கள் பதிவு வருத்தமளிக்கிறது. தவறு யார் செய்தாலும் தவறுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த குற்றத்திலும் இதற்கு பொறுப்பாளிகள் நான் மேலே குறிப்பிட்டவர்கள்தான். உண்மையை உரக்கப் பேசாத ஊடகங்களும், அதில் குளிர்காய நினைக்கும் அரசியல்வாதிகளும், உண்மையிலேயே வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமூகமும், இதை அப்போதே கண்டிக்காத பொதுமக்களுமே இதில் நிஜக் குற்றவாளிகள்..

இராஜராஜேஸ்வரி said...

கடவுளே மஹாலிங்கம், இந்த படுகொலையில் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நற்கதியைக் கொடுங்க

பாலா said...

நாம் ஒவ்வொருவருமே குற்றவாளியாக தலை குனிந்து நிற்கிறோம்... வெட்கத்துடன்

Sankar Gurusamy said...

திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திரு பாலா, தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

Anonymous said...

நாம் ஒவ்வொருவருமே குற்றவாளியாக தலை குனிந்து நிற்கிறோம்... வெட்கத்துடன்

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், ஆம்...

தங்கள் முழு விவரங்களுடன் கருத்துரை இடலாமே..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

shanmugavel said...

குற்ற உணர்வை உண்டாக்குகிறது.சாட்டையடி வார்த்தைகள்.

Yaathoramani.blogspot.com said...

அரசியல் பண்ணிக்கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல
அதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த நாம் கூடகுற்றவாளிதான்
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
பகிர்வுக்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், திரு ரமணி ஐயா, தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

Unknown said...

சேனல் நான்கைக் கண்டும் சிந்திய கண்ணீர் தங்கள் பதிவைக்க்
கண்டும் சிந்தியது
இது தவிர வேறு என்ன செய்யமுடியும் நானும் சொரணை
அற்றத் தமிழ் நாட்டுக் குடிகன்தானே!

புலவர் சா இராமாநுசம்

Sankar Gurusamy said...

புலவர் சா இராமாநுசம் ஐயா, தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துரைகளைப் பகிருங்கள்.