Friday, September 30, 2011

ஆன்மீகம் - யாருக்கு ???

ஆன்மீகம் - பக்தி, கோவில், குளம், யோகா,  தியானம்,  இதெல்லாம் வயசானவங்களுக்குதான் என்று ஒரு தவறான கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் உண்மையில் யோசித்தால் ஒரு மனிதன் முழுமையாக வாழும் இளமை, நடுத்தர வயது காலத்தில் அவன் பண்பட்டு முழுமையாக இருத்தல் அவசியம். அப்படி மனிதனை முழுமையாக்குவது ஆன்மீகமே. எனவே இது எல்லா வயதினருக்கும் தேவை.
 
ஆன்மீகம் என்பது பாலினம், உயிரினம் கடந்த ஒரு புனிதத் தொடர்பு. இதை கடைபிடிக்க எதுவுமே தடையில்லை. யாரும் எப்போதும் எந்த சூழலிலும் கடைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது.
”ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்” என்று கூறுவார்கள். அதுபோல ஆன்மீகம் இல்லா மனிதனும் அரை மனிதன்தான்.(நாத்திகமும் ஒரு ஆன்மீகமே.. முழுமையாக கடைபிடிக்கும் பட்சத்தில்).

மனித மனங்களை பக்குவப்படுத்தி அவனை முழுமையாக  வாழ தயார் படுத்தும் ஒரு விஞ்ஞானம் தான் ஆன்மீகம் என்கின்ற மெய்ஞானம். ஒரு மனிதனின் அடிப்படை பண்புகளை செம்மைப்படுத்துகின்ற ஒரு துடைப்பம் தான் நம் ஆன்மீகம்.

நம்மை பாதிக்கும் புறக்காரணிகளை இனம் காணவும் அவற்றை சமாளிக்கும் வலிமை தரவும் வல்லது ஆன்மீகம். உறவுகளை வளர்ப்பதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் அவசியம் ஆன்மீகம்.

ஆன்மீக நட்புகள் என்றுமே நிலையானவை. அது ஆத்மாவில் நிலை கொள்ளும். நம் வாழ்நாள் முழுதும் நமக்கு வெளிச்சம் தரும்.

ஆன்மீகம் - தீமை என்னும் இருட்டை அகற்றும் விளக்கு... பகைமை என்னும் குப்பையை எரிக்கும் நெருப்பு..

இப்படிப்பட்ட ஆன்மீகத்தை அனைவரும் கைகொள்வோம் சுபிட்சமாக வாழ்வோம்..


கடவுளே மஹாலிங்கம்... ஆன்மீகம் தளைத்து மக்கள் செம்மையாகி நாடு சுபிட்சமாக அருள் செய்யுங்க...

சதுரகிரி நாதனே போற்றி... சுந்தர மஹாலிங்கத்த்க்கு அரோஹரா.. ஹரஹர மஹாதேவா சரணம்.. சரணம்...


Thursday, September 29, 2011

எளியோருக்கும் நீதி...

இன்று 29 செப்டம்பர் 2011 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். இன்றுதான் வாச்சாத்தி கொடுமை குறித்த வழக்கில் 19 வருடங்கள் கழித்து நமது மாவட்ட நீதி மன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அதன் சுட்டி கீழே..

1992 Vachati mass rape case: 215 forest personnel held guilty, nine for rape


ஒரு வழியாக 1992ல் செய்த அநீதிக்கு 2011லாவது தீர்ப்பு வந்ததே.

இருந்தாலும் இதில் சில விசயங்கள் நெருடவே செய்கிறது.. மிக முக்கியமாக ஏழை எளிய மக்கள் குறித்து அரசு அதிகாரிகள் கொண்டிருக்கும் அலட்சியமும் அவர்களை எதுவும் செய்யலாம் யாரும் அதை கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவமும்.

இது காலம் காலமாக ஏழை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றாலும் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சட்டப்படி இதில் இவ்வளவு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.

இவ்வளவு ஆண்டுகள் சளைக்கால் போராடிய அமைப்புகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள். 

இதிலிருந்து அரசாங்கம் சில பாடங்கள் படித்து எளிய மக்களை மதிக்க பழகுமா?? அல்லது மீண்டும் இதுபோல சில நிகழ்வுகள் நீதி மன்றங்களால் குட்டப்பட வேண்டுமா??? அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்...

காலம் தாழ்த்தியாவது கிடைத்த இந்த நீதிக்காக கடவுளுக்கு நன்றி... இனியாவது அரசாங்கத்துக்கு நல்ல புத்தி குடுக்கணும்னு வேண்டிக்கிறேன்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா... ஓம் நம சிவாய...

புலனடக்கம் - எது???

உண்மையான புலனடக்கம் என்பது என்ன?? புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா?? 


உண்மையான புலனடக்கம் என்பது என்ன???

புலனடக்கம் என்பது ஐம்புலன்களாலான சுகங்களை அளவுடனோ அல்லது தேவைக்கேற்றவாறோ  நேர்மையான, தர்மமான வழியில் பயன்படுத்துவதே ஆகும்.

காந்தியடிகள் சொன்ன மூன்று குரங்கு தத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இது புலனடக்கத்துக்கு மிக முக்கிய வழிகாட்டி. கெட்டதைப் பார்க்காதே.. கெட்டதை கேட்காதே... கெட்டதை பேசாதே...இது ஒரு அடிப்படை வாழ்க்கைத் தத்துவம்.

ஆன்மீகத்தில் இதன் வெளிப்பாடு இன்னும் விரிவானது. நம் பார்வை என்பது அக்கினி தத்துவத்தின் வெளிப்பாடு. கேட்டல் என்பது ஆகாச தத்துவத்தின் வெளிப்பாடு. பேச்சு நீர்த்தத்துவத்தின் வெளிப்பாடு. எனவே நாம் பார்க்கும் / கேட்கும் / பேசும் ஒவ்வொரு விசயமும் நமது கர்ம வினைகளுக்கு ஒப்ப நம்முள் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தும். 

மேலும் ”நுகர்ச்சி”-நாசி (வாயு தத்துவம்) நமது மற்ற புலன்களை தன்னிச்சையாக தூண்ட வல்லதாக இருப்பதால் அதுவும் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நம் உடல் ரீதியான செயல்பாடுகளும், பாலியல் வெளிப்பாடுகளும் (பூமி தத்துவம்) ஆன்மீக புலனடக்கத்தின் அதி முக்கிய பங்கு வகிக்கின்றன.

தனி மனித ஒழுக்கத்துக்கான ஒரு முக்கிய வழிகாட்டியாகவும் இந்த புலனடக்கம் இருக்கிறது. தனிமனித ஒழுக்கம் என்பது இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனும்  இதை கடைபிடித்தால் நிச்சயம் சமூகம் முன்னேறும்..


புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா??

நிச்சயமாக.. புலன்களை அடக்காமல் அவைகளின் இஷ்டத்துக்கு வாழும்பொழுது நமக்கு ஒரு தற்காலிகமான சந்தோசமே கிடைக்கிறது.. மேலும் அது நம் ஆணவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தத் தூண்டுகிறது.  நிரந்தர சந்தோசமே நிம்மதிக்கு அடிப்படை.  

தற்காலிகமாக நமக்கு சந்தோசம் தரும் விசயங்களில் பலவும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் உடம்புக்கும் பாதிப்பு ஏற்படுத்த வல்லதாகவே இருக்கிறது.. எனவே புலனடக்கம் என்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் நிச்சயம் கிடைக்கும்.


கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எல்லோருக்கும் புலனடக்கம் கைவரப் பெற்று நிம்மதியான வாழ்வு அமைய அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தரனே சரணம.... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, September 28, 2011

புலனடக்கம்...

பல ஆன்மீக சாதனைகளுக்கு புலனடக்கம் முக்கியமானதாக பேசப்படுகிறது... அது ஏன்?

நமது கர்மாக்கள் நம் புலன்கள் மூலமே வெளிப்படுகின்றன அல்லது நிறைவேற்றப்படுகின்றன. கர்மாக்களை வெளியேற்ற / புதிதாக சேர்க்க இந்த ஐம்புலன்களும் ஒரு வாசலாக செயல்படுகின்றன..

ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சொல்லி இருக்கிறார்... இந்த ஆசைகள் நம் மனதில் இருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு புறக் காரணிகள் தேவை இருக்கிறது.. அந்த தூண்டுதல் இந்த ஐம்புலன்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.

இவ்வாறு தூண்டப்படும் ஆசைகள் நியாயமான முறையில் / அளவாக இருக்கும் போது / வெளிப்படும்போது கர்மாக்கள் குறையவும், அநியாயமான முறையில் / அபரிமிதமாக இருக்கும்போது / வெளிப்படும்போது புதிய கர்மாக்கள் சேரவும் செய்கின்றன...

இந்த புலன்களில் மிக சக்திவாய்ந்த புலன்கள் கண்களும், நாசியும். இவை பிற ஆசைகளைத் தூண்டுவதில் முதலிடம் வகிக்கின்றன. எனவே இவற்றை மிக கவனமாக உபயோகப்படுத்தவேண்டும். இதில் சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போதும் திறந்திருக்கும் புலன்கள் இரண்டு மூக்கு, செவி. எனவே நுகர்ச்சியும், கேட்டலும் முற்றிலும் நாம் இருக்கும் சூழல் சம்பந்தப்பட்டது.

எனவே நல்ல சூழல் அமைவது புலனடக்கத்துக்கு மிக அவசியம்.

புலனடக்கம் கைகூடினால் ஆன்மீக முன்னேற்றம் எளிதில் சித்திக்கும். அது நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோருக்கும் புலனடக்கம் கைகூடி ஆன்மீக முன்னேற்றம் சிறப்பா ஏற்பட்டு ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, September 21, 2011

எது வறுமைக்கோடு ???

நம் அரசாங்கம் யாரை ஏழை என்று கருதி திட்டங்கள் தீட்டுகிறது என இன்று பேப்பரில் வந்திருக்கிறது... அதன் சுட்டி கீழே...

Spend Rs 32 a day? Govt says you can't be poor



நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பெருநகரத்தில் ரூ32 க்கு மேல்  செலவு செய்பவர் என்றால் அல்லது ஒரு சிறுநகரத்தில் அல்லது கிராமத்தில் ரூ26க்கு மேல் செலவு செய்பவர் என்றால் நீங்கள் வருமைக்கோட்டுக்கு மேல் வந்து விட்டீர்கள்... எப்பூடி...

இதில் சாப்பாட்டுக்கு , காய்கறிக்கு , எண்ணைக்கு , பாலுக்கு , கல்விக்கு என ஒரு குடும்பம் (4நபர்) எவ்வளவு செலவு செய்வது எனவும் கணக்கு வேறு சொல்கிறார்கள். படிக்கும்போதே தலை சுற்றுகிறது.
 
இந்த இலக்கைக்கூட எட்ட முடியாமல் இருக்கும் அரசு உண்மையில் வெட்கப்பட வேண்டும். பேசாமல் பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அரசு சலுகைகள் என அறிவித்துவிட்டு போய்விடலாம். (அவர்கள் கூட சண்டைக்கு வந்து விடுவார்கள்.)

அரசாங்கமே ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நபருக்கு ரூ120 சம்பளம் கொடுக்கிறது (கணக்கு காட்டவாவது). அப்படி பார்த்தால் வருடத்துக்கு 100 நாட்களுக்கு ரூ 12000-00. ஒரு குடும்பத்தில் 2 நபர்கள் இதில் வேலைக்கு சென்றால் வருடத்துக்கு ரூ 24000-00..

அதாவது நம் அரசாங்கம் இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திலேயே இந்த வறுமையை ஒழித்துவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள்...

மக்களைப்பற்றியோ அவர்கள் வாழும் சூழல் பற்றியோ இருக்கும் விலைவாசி பற்றியோ கொஞ்சமும் தெரியாத, அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத சில பல அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கோடு கேலிக்கூத்தானது..

இதைக்கூட நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாக சாதிக்கவில்லை என நினைக்கும் போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நேர்மையாக சிந்தித்தால், இன்றைய விலைவாசியில் ஒரு பெருநகரத்தில் சுமார் ரூ 2,40,000 க்கு குறைவாக செலவு செய்பவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வருபவர்கள்தான். இவர்கள் அனைவரையும் முன்னேற்றதான் நம் அரசாங்கம் பாடுபட வேண்டும். 

இதைவிடுத்து இல்லாத ஒரு வறுமைக்கோட்டை உருவாக்கி அனைவரையும் பொய் சொல்ல வைத்து அவர்களை முன்னேற்ற ஊழல் திட்டங்கள் தீட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்.. அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு எல்லை விரிவு படுத்தப்பட்டு, பரவலாக்கப்பட்டு பெரும்பான்மை சமூகம் பயனடைய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.. அவை உடனடியாக செம்மையாக ஊழலின்றி செயல்படுத்தப்பட வேண்டும்... செய்வார்களா நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்????

கடவுளே மஹாலிங்கம்... இந்த அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி குடுத்து நம் மக்கள் முன்னேற சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் படுத்தப்பட நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்... ஓம் நம சிவாய...

Thursday, September 15, 2011

சாமானியனின் உடையும் முதுகெலும்பு..மீண்டும் பெட்ரோல்விலை உயர்வு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலை ரூ 3.14 உயர்த்தப்படுகிறது.. செய்தி சுட்டி கீழே :

Petrol prices to be up by Rs 3.14 per litre from midnight

 

இதனால் மீண்டும் விலைவாசி ஏறும்... ஏற்கனவே முதுகெலும்பு ஒடிந்த நிலையில் இருக்கும் நடுத்தர வர்க்க மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

அரசாங்கம் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால்   நகைப்பாகவே இருக்கிறது.. ஒன்று வட்டி வீதத்தை உயர்த்துகிறார்கள். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை உயர்த்துகிறார்கள்..

வரி வீதங்களை குறைத்து, அல்லது பரவலாக்கி, எளிமையாக்கி, பதுக்கல்களையும் கள்ள சந்தைகளையும் ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோல தெரியவில்லை.. இது ஒழிக்காமல் எந்த விலைவாசியும் குறையப்போவது இல்லை.

இதனாலான பாதிப்பு இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை.. ஏனெனில் பெரும்பாலோனோர் கோடீஸ்வர்கள் மீதமுள்ளோர்களில் விரல் விட்டு எண்ணுபவர்கள், இன்னும் சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தவிர அனைவரும் லட்சாதிபதிகள்..

எல்லாம் நம் தலைவிதி... இனிமேல் சாப்பாட்டுல சில கவளங்களை குறைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று பிரச்சாரம் கூட செய்வார்கள் போல தெரிகிறது...

கடவுளே மஹாலிங்கம், இந்த விலைவாசி உயர்விலிருந்து மக்களை காப்பாத்து...

சதுரகிரியாரே சரணம்... சிவ சம்போஹர ஹர மஹாதேவா...






 

Tuesday, September 13, 2011

சட்டத்தின் ஆட்சியும், தர்மத்தின் தேவையும்...

இன்று உலகில் நாகரீக நாடுகளில் நம் இந்தியா உட்பட சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த சட்டத்தின் ஆட்சி நம் தேசத்தில் 1947/50 களில் ஆரம்பித்தபோது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் இருக்கும் வேறுபாடுகள் பற்றி :

1) அன்று ஆட்சியாளர்கள் தவறு செய்ய பயந்தார்கள்... இன்று பயப்படாமல் தவறு செய்கிறார்கள்.

2) உண்மையில் சட்டத்தை பாதுகாக்க அரசாங்கம் செயல்பட்டது அன்று.. சட்டத்தை பாதுகாப்பதுபோல நடிப்பது இன்று..

3) குற்றவாளிகள் உள்ளேயும் ஆட்சியாளர்கள் வெளியேயும் இருந்தனர் அன்று.. சில பல ஆட்சியாளர்களே குற்றவாளிகளாக உள்ளேயும் வெளியேயும் இருப்பது இன்று..

4) ஓரளவுக்கு மனசாட்சிக்கு பயந்தது அன்று... இன்று பணத்துக்கும் பதவிக்குமே முதல் மரியாதை...


நம் சமூகமும் அரசியலும் இப்படிப்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதால் நம் இன்றைய சட்டத்தின் ஆட்சி பற்றி சில வரிகள்...

1) பிடிபடாதவாறு தவறு செய்பவர்கள் உத்தமர்கள். பிடிபடுபவர்கள் முட்டாள்கள்.

2) காசு வாங்கிக்கொண்டு காரியம் செய்து கொடுப்பவர்கள் நேர்மையானவர்கள். காசு வாங்கியும் காரியம் ஆகாவிட்டால் அவர்கள் ஊழல்வாதிகள்.

3) தவறு செய்பவர்களைப்பற்றி அரசுக்கு தெரிந்தாலும் வேறு யாராவது புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.. அதுவும் அரசுக்கு தேவையான நேரத்தில் அல்லது சவுகரியமான நேரத்தில்...

4) சாட்சியும் ஆதார ஆவணங்களுமே ஒருவனை குற்றவாளி ஆக்க  முடியும்.

5) பதவிகளில் இருப்பவர்கள் தவறுகள் செய்துவிட்டு சாட்சிகளையும் ஆதார ஆவணங்களையும் அழித்துவிட்டால் அவர்கள் செய்த தவறும் மறைந்து விடும். இன்றைய சூழலில் அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..

6) போதுமான ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை ஆகும் குற்றவாளிகளும் உத்தமர்கள்தான். சந்தர்ப்ப சூழலில் மாட்டிக்கொள்ளும் உத்தமர்களும் குற்றவாளிகள்தான்...


இந்த சூழலில் நமக்கு சட்டத்தின் ஆட்சியைவிட தர்மத்தின் ஆட்சியே தேவை.  அது என்ன தர்மத்தின் ஆட்சி?

ரத்தின சுருக்கமாக, ஒவ்வொரு மனிதனும் தம் கடமைகளை யாருடைய மேற்பார்வையும் இல்லாமல், சரியாக, நேர்மையாக  செய்து, சக மனிதனை மதிக்க கற்றுக்கொண்டால் நம் தேசம் சுபிட்சமாகும். அதுதான் தர்மத்தின் ஆட்சி..

கடவுளே மஹாலிங்கம் இது நடப்பது உங்க கைலதான் இருக்கு...உடனடியா தர்மத்தின் ஆட்சி நம் தேசத்தில் ஏற்பட அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே போற்றி... ஓம் நம சிவாய...

Wednesday, September 7, 2011

தில்லியில் குண்டு வெடிப்பு.. தீவிரவாத கோழைகளின் கோர முகம்..

இன்று 07 செப்டம்பர் 2011 காலையில் சுமார் 10-15க்கு தில்லியில் அதுவும் உயர் நீதி மன்றத்துக்கு அருகில் பயங்கர குண்டு வெடித்ததாக செய்தி வந்துள்ளது. தீவிரவாதிகளின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டு நம்மை பயமுறுத்த வந்துள்ளது... இந்த கோழைத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் அதே வேளையில், தீவிரவாதிகளை கனிவுடன் அணுகும் அரசின் அணுகுமுறைகளையும் கண்டிக்கவேண்டி இருக்கிறது.

தீவிரவாதிகளுக்கு கடும் தண்டனைகளை, காலதாமதமில்லாமல் வழங்க வழி இல்லாத நம் நீதி பரிபாலனை முறையும் விசாரணை முறைகளும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. 

ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும் போதும் நம் மந்திரிகள் சொல்லும்  சால்ஜாப்பும், ஆறுதல் வார்த்தைகளும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. கையாலாகாதவர்களுக்கு ஆட்சி செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை.

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் ஒரு நல்ல வழி காட்டணும்... தீவிரவாதம் இல்லா ஒரு உலகம் உருவாக அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்... ஓம் நம சிவாய...

Tuesday, September 6, 2011

குழந்தைகளைக் கொல்லும் அரசு மருத்துவமனைகள்....

இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் இறந்தது ஒரு சிறு செய்தியாக வந்தது. இன்று வேறு செய்திகளின் சுழலில் அடித்து செல்லப்பட்டு விட்டது...

Andhra infant deaths: hospital ill equipped, says govt

இது பற்றி கருத்து கூறிய ஒரு ஆந்திர அமைச்சர் இது கடவுளின் செயல் என கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் சுமார் 18 (இறுதி எண்ணிகை 26) குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்தது பெரிய செய்தியாகி பிறகு அடங்கி விட்டது.

 இதே மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு குழந்தை எறும்புகள் கடித்து அரசு மருத்துவமனையில் இறந்த செய்தி நெஞ்சை நடுங்கச்செய்தது.

'Ant bite' death: Body of newborn exhumed

இந்த குழந்தையை இன்குபேட்டரில் வைக்கும்போது அங்கு இருந்த எறும்புகளைப் பார்த்த குழந்தையின் உறவினர் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியபோது அது சாதாரணமானதுதான் என பதிலுரைத்ததாகவும் செய்தியில் உள்ளது.

இதுதான் நம் தேசத்தின் அரசு மருத்துவமனைகளின் லட்சணம். இது ஏதோ பிற மாநிலங்களில்தான் இப்படி என எண்ண வேண்டாம். நம் தாய்த் தமிழகத்திலும் இதே நிலைதான்.. அதுவும் குழந்தைகளின் பராமரிப்பில் இருக்கும் அலட்சியம் அதிர வைக்கிறது.

நம் அரசாங்கங்கள் நம் மக்களுக்கு டீவி, கிரைண்டர், லேப்டாப், மிக்சி இலவசமாக வழங்குவதற்கு பதிலாக இப்படிப்பட்ட  அரசு மருத்துவமனைகளை சிறப்பாக பராமரித்து நல்ல சேவை வழங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். இப்போது  அங்கும் குழந்தை பிறந்தால், ஆபரேசன் செய்தால், மருத்துவமனை  ஊழியர்களையும் தனியாக “கவனிக்க” வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இதை அந்த தனியார் மருத்துவமனைகளும் ஊக்குவிக்கின்றன. இங்கு அனைத்து ஊழியர்களுக்கும் மோசமான சம்பளம்தான் தருகிறார்கள்.

வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகிறார்கள். ஸ்டான்லி போன்ற அரசு மருத்துவமனைகள் ஓரளவுக்கு சிறப்பான மருத்துவ வசதி அளித்தாலும், கீழ் மட்டத்தில் இருக்கும் லஞ்ச ஊழல் கிஞ்சித்தும் இரக்கமில்லாமலும், பாரபட்சமில்லாமலும் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. 

அரசு மருத்துவமனைகள் குறித்து நான் ஜனவரி 12,2011ல் எழுதிய பதிவின் சுட்டி கீழே :

அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

நம் அரசாங்கம் மக்களுக்கு தரமான மதுவகைகளை வழங்க செலவு செய்யும் நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது தரமான மருத்துவ வசதிகள் வழங்க செலவு செய்தால் நன்றாக இருக்கும்.. செய்வார்களா???

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் இந்த அரசாங்கங்களோட கண்ண திறந்து இதுக்கு ஒரு நல்ல வழி செய்யணும்.

சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, September 5, 2011

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

இன்று ஆசிரியர் தினம்...எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சான்றோர் வாக்குக் கிணங்க, வாழும் இறைவனாம் நம் ஆசிரியப் பெருமக்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

இந்த இனிய தருணத்தில் என் நெஞ்சில் இடம் பிடித்த என் ஆசிரியர்கள் சிலரைப்பற்றி... 

எனக்கு பாடம் படிப்பித்த எல்லா ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் ஆனாலும் அவர்களில் மிக முக்கியமான சிலரைப்பற்றி நான் பகிர்ந்துகொள்கிறேன்...

1) என் தமிழாசிரியர் - திரு அந்தோணிமுத்து, புனித ஸ்தனிஸ்லாஸ் உயர்நிலைப்பள்ளி சாத்தூர்..

என் மனதில் தமிழார்வம் கொஞ்சம் ஏற்பட தூண்டுகோலாக இருந்தவர்..எங்கள் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்த போது (1982-1987) எனக்கு தமிழ் படிப்பித்த ஆசான். இன்னும் நான் தமிழில் ஓரளவுக்கு எழுதுவதற்கு உசிலம்பட்டியை பூர்வீகமாகக்கொண்ட இவர் ஒரு மூல காரணம்...

2) என் +2 கணித ஆசிரியர் திரு வெங்கட் ராமன் 

இவர் எனது +2 டியூசன் ஆசிரியர்...  சாத்தூரில் இவர் நடத்திய +2 கணித டியூசன் மிக பிரபலம் அப்போது... நான் கணிதத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து பொறியியல் சேர காரணமாக இருந்த பேராசான்... 

3) என் +2 தமிழாசிரியர் திரு மா பாலகிருஷ்ணன் , SHN எட்வர்ட் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.. 

எனக்கு +2வில் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசான்.. இவரை நான் சில சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தியும் இருக்கிறேன்... அதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எனக்கு நல்ல புத்தி புகட்டியவர். நான் பல முறை இவரிடம் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தேன். முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் இவரிடம் என் மனமாற மன்னிப்பு கேட்கிறேன்... மன்னியுங்கள் சார்...

4) என் கல்லூரி புராஜக்ட் கைட் பேராசிரியர் முருகானந்தம் , தியாகராசர் பொறியியற் கல்லூரி , மதுரை..

இவரைப் போன்ற இனிய மனிதரைக் காண்பது மிகவும் அரிது.. இன்னும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவர் என் கல்லூரி புராஜக்ட் நல்ல முறையில் வர மிகவும் பாடுபட்டவர்... 

5) என் கல்லூரி பேராசிரியர் முரளீதரன்

கல்லூரியில் மாணவர்களுடன் மிகவும் தோழமையுடன் பழகும் ஒரு அபூர்வ மனிதர்.. என் நினைவில் இன்னும் வாழும் இவரும் என்னால் மறக்க முடியாத ஒருவரே...


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்...

கடவுளே மஹாலிங்கம்... நம் ஆசிரியப் பெருமக்கள் நல்ல மன நிம்மதியோடு மேலும் சிறப்பாக பணி செய்து ஒரு சிறப்பான சமூக அமைய நீங்கதான் அருள் செய்யணும்..


சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்...