Thursday, June 30, 2011

பிரார்த்தனைகள் - 1

நான் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது கடவுளிடம் விழுந்து விழுந்து பிரார்த்தனை செய்வேன்.  கேட்காத சமாசாரமே இல்லைங்கர அளவுக்கு இருக்கும் என் பிரார்த்தனைகள். எனக்கு தேவையான சில விசயங்கள் பலிச்சது.

என்னைப் பார்த்து என் நண்பனும் என்னைப் போலவே பிரார்த்தனை செய்தான். ஆனால் சில நாட்களில் ஒன்னும் வேலைக்காகவில்லை என்று விட்டு விட்டான்.

தினமும் கடவுளிடம் எவ்வளவோ பிரார்த்தனைகள் செய்கிறோம். அது எல்லோருக்கும் ஒரே மாதிரி பலிப்பதில்லை. இதன் காரணம் என்ன என சிந்தித்த போது எழுந்த சிந்தனைகள்.

1) முதலில், நம் மனதுக்கு நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு இருக்கிறது. முதலில் நாம் நம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று ஆழ்மனதில் நம்பவேண்டும்.

சிலர் நம்பிக்கை இல்லாததுபோல பேசினாலும் ஆழ் மனதில் பெரும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். இது ஆழ்மனதுக்கு நம்பிக்கை யூட்ட செய்யப்படும் யுக்தியாகயும் கைகொள்வார்கள்.

வேண்டுதல்கள் வைப்பதும் நம் மனதின் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள செய்யும் ஒரு யுக்தியே.

2) பிரார்த்தனைகளில் இரு விதம் இருக்கிறது. ஒன்று தேவைக்கான பிரார்த்தனைகள். மற்றொன்றும் நம் ஆசைக்கான பிரார்த்தனைகள். 

பெரும்பாலும் நம் வாழ்வின் தேவைக்கான பிரார்த்தனைகள் நாம் கேட்ட அளவுக்கு இல்லாவிட்டாலும் நமக்கு தேவையான அளவுக்கு நிறைவேறிவிடும். ஆசை / பேராசைக்கான பிரார்த்தனைகள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்படும். அல்லது நிறைவேறாமலே போகி விடும். இது கடவுளிடம் தவறு இல்லை. நம் பிரார்த்தனையில்தான் தவறு இருக்கிறது.

3) ஒருமுறை ஒரு நாத்திக நண்பர் என்னிடம் வந்து, ”இப்பிடி விழுந்து விழுந்து பிரார்த்தனை பண்றியே அது கடவுளுக்கு புரியுமா? அவர்தான் கடவுளாச்சே அவருக்கு உனக்கு தேவையானது என்னன்னு தெரியாதா? அவர்கிட்ட நீ கேட்டுத்தான் அதை உனக்கு அவர் குடுக்கணுமா? கேக்காட்டி தர மாட்டாரா?” இப்பிடி சராமாரியா கேள்விகளை அடுக்கி என்னை சிந்திக்க வைத்தார்.

சிந்தனை முடிவில் அவருக்கு அளித்த பதில் :

”நமது பிரார்த்தனைகள் கடவுளிடம் சொல்லப்படும் போது எந்த மொழியில் சொன்னாலும் அவருக்கு புரியும். ஏன்னா கடவுள் நமக்கு உள்ளயும் இருக்கிறார். நமக்கு புரிந்த பிரார்த்தனை அவருக்கும் நிச்சயம் புரியும்.

கடவுளுக்கு நம் தேவைகள் என்னன்னு தெரிஞ்சாலும் அதை அவர் குடுக்கரவரை பொறுமை இல்லாத நாம் நமக்கான தேவைகளை அவரிடம் கேட்கிறோம்.

நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நமக்கு தரவேண்டிதை தரவேண்டிய நேரத்தில் நிச்சயம் கடவுள் தருவார்.”


நமக்கு தேவை -  கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை.. அது இருந்தால் எப்படிப்பட்ட பிரார்த்தனையும் நிச்சயம் நிறைவேறும்...


கடவுளே...மஹாலிங்கம்.. அப்பிடிப்பட்ட ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் எல்லாருக்கும் கிடைக்க நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி... சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்...

Monday, June 27, 2011

மிரட்டும் விலைவாசி உயர்வு...

போனவாரம் நம் அரசு, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை கணிசமாக உயர்த்தியது.  இதன் விளைவாக அனைத்து பொருள்களின் விலையும் 20 முதல் 30 சதம் வரை குறைந்த பட்சமாக உயரும். வீட்டு வாடகை,  ஆட்டோ கட்டணம், பஸ் கட்டணம், ரயில் கட்டணம் அனைத்தும் உயர்த்தப்படும். இவ்வாறு ஏறும் விலைவாசிகளுக்குத் தகுந்தாற்போல் நம் வருமானம் உயர்வதில்லை. இதனால் இவற்றின் பொருளாதார தாக்கம் நம் நடுத்தர குடும்பங்களில் மிக பயங்கரமாக எதிரொலிக்க ஆரம்பிக்கிறது.

நான் சென்னையில் திருமணமான புதிதில் (2005)  வீடு பார்த்து குடி போன பொழுது வாடகை ரூ 3500-00. அதே வீட்டில் இப்போது (2011) இருக்கும் எனது தாயாரும் சகோதரரும் ரூ15000-00 தருகின்றனர். இதற்கு ரூ 25000-00 கொடுத்து குடிவர பலர் தயாராக இருக்கின்றனர்.  இது கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட விபரீத வளர்ச்சி.  (ஏதோ, ஹவுஸ் ஓனர் நல்ல விதமானவர் என்பதால் இன்னும் எங்களை காலி பண்ண சொல்லி தொந்தரவு செய்வதில்லை.)

முன்பு என் வருமானத்தில் 5ல் ஒரு பங்கு வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்று என் சகோதரர் தன்  வருமானத்தில் முக்கால் பகுதியை வாடகைக்கே கொடுக்கும் நிலை இருக்கிறது.

இது வெறும் வாடகை மட்டுமே.. மற்ற செலவுகளும் வருமானத்திற்கு சம்பந்தம் இல்லாமல் கிடு கிடு என உயர்ந்து நிற்கின்றன. நடுத்தர மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

என்ன செய்வது??? ஒன்றும் புரியவில்லை... சிக்கனமாக இருக்கும் நிலை மாற்றி நாம் கஞ்சத்தனமாக இருந்தால் கூட நிலைமையை சமாளிக்க முடியாது போல இருக்கிறது.

அரசாங்கம் தான் ஏதாவது செய்யணும். என்ன பண்றது அவங்களுக்கு ஊழலை ஒளிக்கவும், அதைப் பற்றி பேசரவங்களை அடக்கவும், மேலும் யாரும் அதப்பத்தி பேசாம இருக்க விலைவாசியை உயர்த்தி அவர்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பதிலும் பிசியாக இருக்கிறார்கள்.

கேவலம். இது ஜனநாயக ஆட்சி என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது. இங்கு மோசடி அரசியல் தொழில் செய்யும் அனைவரும் வெட்கி வேதனைப்பட வேண்டிய சூழல் வரணும். அப்பதான் இதுக்கு ஏதாவது ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

இதுல மனுசன நம்பி பிரயோசனமே இல்லைங்கற பாடத்தை இந்த அரசியல் வாதிகள் சொல்லிக் கொடுத்திட்டாங்க. கடவுள்தான் காப்பாத்தணும்.

கடவுளே மஹாலிங்கம், எங்களையும் நாட்டு மக்களையும் நீங்கதான் காப்பாத்தணும்.

சதுரகிரியாரே சரணம். சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!

Tuesday, June 21, 2011

ஆண்டவன் திருவிளையாடல் - 3 - மாரியம்மன்

ஆண்டவன் திருவிளையாடல் - 2 - முருகன்

 

மேற்கண்ட பதிவுகளின் தொடர்ச்சி....

அன்றுமுதல் தினமும் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். சில பக்திமான்களான நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வாரம், காலையும் மாலையும் தொடர்ந்து கடவுள் தரிசனம். மனமுருக வேண்டுதல் என்று போனது.

அப்போது எனது நண்பர்களில் ஒருவர் பக்கத்து ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் மிக விசேடமானது என்று கூறி எடுத்து கொடுத்தார். உடனே அந்த கோவிலுக்கும் செல்ல ஆரம்பித்தேன். 

மறு வாரமே எனக்கு சென்னையில் இருந்து ஒரு தனியார் கம்பெனியில் நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது. சென்று விட்டு வந்தேன்.. முழு நம்பிக்கை இல்லை. ஏனெனில் நேர்முகத்தேர்வு சரியாக செய்ய வில்லை. 

இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தை போட்டு என் தினசரி கடமைகளை செய்து கொண்டிருந்தேன். அப்போது கோவிலுக்கு வந்த ஒரு மூதாட்டி என்னை பார்த்து  ஆறுதல் கூறி இந்த வேலை கண்டிப்பாக கிடைக்கும் என ஆசீர்வாதம் செய்தார். அந்த மாரியம்மனே நேரில் ஆசீர்வத்ததுபோல உணர்ந்தேன்.

இந்த காலக்கட்டத்தில் சென்னையில் வேலையில் இருந்த எனது கல்லூரி நண்பர்கள் சிலர் மிகவும் உதவி செய்தனர்.  உண்ண உணவு, இருக்க இடம் கொடுத்து ஆறுதல் சொல்லி தேற்றவும் செய்தனர்.

கடைசியில் அதே நிறுவனத்தில் இருந்து வேலையில் சேர சொல்லி அழைப்பு வந்ததும் அந்த மாரியம்மன் கோவிலில் சென்று மனமுருக நன்றி தெரிவித்தேன். சம்பளம் சொற்பமானாலும் ஒரு நிரந்தர வருமானம் குடும்பத்துக்கு வரப்போவது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

(கடைசியில் இதே நிறுவனத்தில் 12 வருடங்கள் தொடர்ந்து வேலை செய்து எனது பல குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற முடிந்தது.)

இதற்கு அருள் செய்த அந்த மாரியம்மனுக்கு எனது நன்றியையும் காணிக்கையும் செலுத்தி தொடர்ந்து வணங்கி வந்தேன்.

வேலையில் சேர்ந்துவிட்டேனே தவிர என்னால் அதில் சோபிக்க முடியவில்லை. என்னை விட வயதிலும் தகுதியிலும் இளைவர்களுக்கு முன்னுரிமை அளித்தல். திறமைகளை மட்டம் தட்டுதல் என பல சோதனைகளை சந்தித்து வந்தேன்.

இந்த களேபரத்தில் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த ஆஸ்துமா தொந்தரவு மிக தீவிரமாகி படாத பாடு பட வைத்து விட்டது. அப்படி ஒருமுறை உடல்நிலை மிக மோசமடைந்த பொழுது அந்த மாரியம்மன் அருளால் தப்பினேன். அது பற்றி..
\
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்..
தொடரும்.....

Monday, June 20, 2011

நான் யார்??? - ஆணவம் - ஞானம் ....

இன்று காலையில் இருந்து இது பற்றி ஒரே சிந்தனையாக இருந்தது.

 “நான் யார்?”.

இது நமது அன்புக்குரிய ரமண மஹரிஷி கேட்ட ஒரு ஆன்மீக கேள்வி. இதற்கு பதில் தெரிவதும் ஒரு விதத்தில் ஞானம்தான்.

இதற்கு ஆத்ம ரீதியாக நாம் உணர்வதற்கு பல பதில்கள் இருந்தாலும், இதன் வெளிப்படையான, உடனடி பதில் இன்று நமக்கு இருக்கும் ஆணவம்தான் ”நான்” என்பது.  நமது ஆணவமே நமது இன்றைய கர்ம சொத்து.

நம் வாழ்வில் தேடும் பல விசயங்கள் நமது ஆணவத்தை சுற்றியே இருக்கின்றன. நமது ஆணவமே நமது அடையாளம். நமது ஆணவமே நமது ஆத்ம முகவரி.  நம்மை பணம் புகழ் அங்கீகாரம் தேட வைப்பது நம்மிடம் உள்ள இந்த ”நான்” என்ற ஆணவம்தான்.

ஒவ்வொருவர் வாழ்வுக்கும் / படைப்புக்கும்  ஒரு காரணம் / லட்சியம்  இருக்கிறது. அது இந்த ஆணவத்தின் மூலமே செயலாக்கப்படுகிறது. நமது வாழ்வின் காரணத்தை அறிந்து அதை செய்து நம் கடமையை முடிக்க நம் முழு வாழ் நாளும் தேவைப்படுகிறது. சில நேரங்களில் பல பிறவிகளும் தேவைப்படுகிறது.

இதில் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம் வாழ்வின் லட்சியத்தை / காரணத்தை நோக்கி நம்மை தள்ளுகின்றன. அதை செய்வதற்கு நம்மை தயார் படுத்துகின்றன. அதை செய்து முடித்தவுடன் நம்மை ஞானத்தை நோக்கி தள்ளிவிடுகிறது.

ஆணவத்தை நாம் விடுவதன் மூலம் நம்மை நாமே இழக்கிறோம். நாம் இந்த உலகில் முக்கியமானதாக கருதும் மானம் ரோஷம் வெட்கம் மரியாதை இதை எல்லாம் விட்டால்தான் ஆணவத்தை விட முடியும். (இதனால்தான் சில சித்தர்களும் ஞானிகளும், பைத்தியக்காரர்கள் போல் இருக்கிறார்களோ / வருகிறார்களோ??)

ஆணவத்தை முழுமையாக விட்டால்தான் நமக்குள் இருக்கும் உண்மையான நம்மை தரிசனம் செய்ய முடியும். அதுவே பூரண ஞானம்.

கடவுளே மஹாலிங்கம்.. வாழ்வின் லட்சியம் நிறைவேறி, பூரண ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...


சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, June 15, 2011

ஆண்டவன் திருவிளையாடல் - 2 - முருகன்

ஒவ்வொருவர் வாழ்க்கைலயும் கடவுள் அவர் திருவிளையாடல நடத்திக்கிட்டுத்தான் இருக்கார். அவர் என் வாழ்க்கைல நடத்திய திருவிளையாடல இங்க பகிர்ந்துக்கிரேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தய பதிவு இணைப்பு :



ஒரு செமி நாத்திகனா ஆண்டவனுக்கே சவால் விட்ட திமிருக்கு அந்த ஆண்டவன் சரியான பதில் சொன்னார்..

நான் கல்லூரி முடிக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை... படிப்பு முடிந்து ஹாஸ்டல் அறையை காலி செய்து வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில், வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபரான எனது தகப்பனார் காலமானார்..

கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டம் என்பது எப்படி இருக்கும் என்ற பாடம் கற்க ஆரம்பித்தேன்... வேலையும் இல்லை... இரண்டு மாதங்கள் தீவிரமாக வேலை தேடியும் எந்த பலனும் இல்லை. எங்கள் குடும்பத்துக்கு தெரிந்த பல உறவினர்கள், குடும்ப நண்பர்கள் யாரும் உதவவும் இல்லை. இதில் சில நாள் சென்னை, மும்பை என்று வேலை தேடி அலைந்து விட்டும்  வந்தேன்.. எதுவும் பலனளிக்க வில்லை.

சில நாட்கள் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாத நிலை வந்து விட்டது...

எனது பல நண்பர்கள் சாப்பாட்டு கஷ்டம் பற்றி பேசும் போது புரியாத பல விஷயங்கள் அப்போது புரிந்தது. அவர்கள் அவ்வளவு கஷ்டத்திலும் போராடி வாழ்ந்த வாழ்வு பிரமிப்பூட்டியது. ஆரம்பத்திலிருந்து கஷ்டத்தில் வாழ்வதற்கும், வாழ்ந்து கெடுவதற்கும் இருக்கும் வித்தியாசம்தான் இதுவோ என உணர்ந்தேன்.  அதிலும் அப்போது எனக்கு சுயபச்சாதாபம் அதிகம்.

இனியும் தாங்கும் சக்தி இல்லை என்ற மனநிலை வந்தவுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் துணிந்து விட்டேன்.

அவ்வாறு துணிந்த அன்று இரவு, ஒரு கனவு... கனவில் ஒரு கோவில்... அதில் கடவுள்...  உருவம் தெரியவில்லை... ஆனால் அது கோவில் என்பதும், அது கடவுள் என்பதும் புரிகிறது.

திடீரென்று விழிப்பு வந்துவிட்டது. இத்தனைக்கும் அன்றுவரை கடவுளைப் பற்றியோ கோவிலைப்பற்றியோ கொஞ்சமும் நான் சிந்திக்கவில்லை. சற்று யோசிக்க தொடங்கினேன்... பழைய நினைவுகள் வந்து அலை மோதியது...

கடவுளிடம் விட்ட சவால் நினைவுக்கு வந்தது... அவர் நேரில் வரவில்லை.. கனவில் வந்து விட்டார்.. இருந்தாலும் ஒருமுறை அவரை சென்று கோவிலில் தரிசித்துவிட்டு பிறகு தற்கொலை எண்ணத்தை செயல்படுத்தலாம் என்று எண்ணி மறு நாள் எங்கள் ஊரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றேன்.

அன்று கார்த்திகை மாதம் 2ம் நாள். முருகன் கோவிலில் உற்சவர் ஊர்வலம் ஆரம்பிக்க இருந்தது.. திடீரென்று ஏதோ ஒரு உள்-உணர்வு.. நான் பர பர வென்று சென்று அந்த உற்சவரை சுமப்பவர்களுடன் இணைந்து அவரை தூக்கி சுமந்து கொண்டு கோவிலை வலம் வர ஆரம்பித்துவிட்டேன். என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. ஒன்றும் புரியவில்லை... சில நிமிடங்களில் தோள் வலி எடுக்க ஆரம்பிக்கும் போது, யாரோ ஒருவர் வந்து அங்கு வந்து என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டு என்னை விடுவித்தார். உற்சவம் தொடர்ந்தது.. நான் கோவிலிலே அமர்ந்துவிட்டேன். முருகன் முன் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் ஏதோ சொல்வது போல இருந்தது...

மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ ஒரு நம்பிக்கை கீற்று வர ஆரம்பித்தது. தற்கொலை எண்ணம் மங்கியது. மனதுக்குள் ஒரு சங்கல்பமாக இனி தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன்படி செயல்பட ஆரம்பித்தேன்.

சதுரகிரி சுந்த மஹாலிங்கத்துக்கு அரோஹரா...



தொடரும்....

Tuesday, June 14, 2011

ஊழலற்ற நிர்வாகமே உடனடி தேவை....

இப்போது கருப்பு பணத்தை கட்டுப்படுத்த நமது வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாக நம் அரசு நேற்று அறிவித்துள்ளது.

இது பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது நம் நாட்டில் இருக்கும் சட்டங்களை எப்படியெல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள்... அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எப்படியெல்லாம் அதை நீர்த்துபோக செய்கிறார்கள்.. என்பதை பற்றியும், உண்மையில் நம் நாட்டில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பதைப் பற்றியுமான பதிவு...


எந்த ஒரு நாட்டிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டும். அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். அதை பாரபட்சமின்றி அமல் படுத்த வேண்டும். சாமானியனுக்கு ஒரு விதமாகவும், பணக்காரர்கள், அரசியல் தரகர்கள், அரசியல்வாதிகளுக்கு வேறு விதமாகவும் இருக்க கூடாது.

நம் நாட்டில் இப்போது இருக்கக்கூடிய தலையாய பிரச்சினை, சட்டத்தை அமல் படுத்த வேண்டிய நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு இருக்கும் நிர்பந்தங்களும், அனைவரையும் சமமாக பாவிக்காமல் இருக்கும் ஒரு கறை படிந்த நிர்வாக அமைப்புமே ஆகும்.

இவர்கள் இருக்கும் சட்டங்களை சரியாக அமல் செய்துவிட்டார்களா??? இதை சரி செய்வதற்கு யாரும் முயற்சி செய்வதுபோலவே தெரியவில்லை. புதிய சட்டங்கள் இயற்றவும், இருக்கும் சட்டங்களை திருத்தவும் கிளம்பி விட்டார்கள்.

புதிய, திருத்திய சட்டங்களையும் இவர்கள் சரியாக அமல் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்??? இதை யார் கண்காணிப்பது???

சில ஊழல் அதிகாரிகள் ஒரு நல்ல சட்டத்தை  அமல் படுத்த கூடாது என்று நினைத்தால், சில அப்பாவிகளை அதில் சிக்க வைத்து, படாத பாடு படுத்தி, ஒரு குழப்பமான சூழலை விளைவித்து அந்த சட்டத்தை அமல் படுத்துவதையே நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளிவிடுகிறார்கள். இதில் பலியாடான அந்த அப்பாவிகளுக்கு கடைசியில் நீதி கிடைப்பதற்கு வருடக்கணக்காகிறது.  இந்த மாதிரியான சூழலை மாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது???

இந்த நிலை புதிய ஜன் லோக்பால் சட்டத்துக்கும், மாற்றப்பட்ட வருமான வரி சட்டத்துக்கும் வரும் என்றே தோன்றுகிறது.


இதை மாற்ற என்ன செய்யலாம் ???

1) நம் அரசாங்கம் மக்களுக்கானது என்ற நம்பிக்கையை மீண்டும் மக்களிடம் விதைக்க வேண்டும்.

2)  அரசு நிர்வாகம் அனைவருக்கும் சமமாக லஞ்ச ஊழல் இல்லாமல் மாற்றப்பட்டாலே இந்த நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கும்...

3) அரசு நிர்வாகத்தை கணிணி மயமாக்குதல் இந்த லஞ்ச ஊழலை குறைக்க முதல் படி ஆகும்.

4)  நீதி பரிபாலனம் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நடைபெற வேண்டும். இதற்கு அவ்வப்போது பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நீதித்துறை நிர்வாகத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நீதிபதி காலி இடங்களை உடனடியாக நேர்மையானவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

5) பாரபட்சம் காட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தாலே, பலர் திருந்த ஆரம்பிப்பர்.

6) சட்ட விரோதமாக சேர்க்கும் சொத்துகளை பறிமுதல் செய்து அவ்வாறு செய்தவர்களுக்கு குடும்பத்துடன் பாஸ்போர்ட்டை முடக்கவேண்டும்.


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் நம் நாட்டுல ஒரு லஞ்ச ஊழலற்ற அரசு நிர்வாகம் அமைய அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....

Wednesday, June 8, 2011

மொழியும், குழந்தைகளும் ....

போன வாரம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு குடும்பத்துடன் ரயிலில் வந்து கொண்டிருந்தேன். எங்களுக்கு அருகில் ஒரு பெங்காலி குடும்பம் இருந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர் - வயது 7 , 5.

அந்த குழந்தைகள் என் மகனுடன்(வயது 4) விளையாட ஆரம்பித்தார்கள்.  சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. ஏதேதோ பேசினார்கள். எப்படியெல்லாமோ விளையாடினார்கள். கல கல என்று ஒரு சிரிப்பு மயமாக இருந்த்து.

இதில் முக்கியமான விசயம் என் மகனுக்கு பெங்காலி ஒரு வரி கூட தெரியாது.. எனக்கும் தான். அவர்களுக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியாது. என் மகன் படிப்பதும் ஒரு சாதாரண பள்ளி வகுப்பில்தான். எனவே பெரிய ஆங்கில, இந்தி பரிச்சயமும் இல்லை. சில ஆங்கில வார்த்தைகள், சில இந்தி வார்த்தைகள் என என் மகன் சமாளித்துக் கொண்டிருந்தான்.

கடைசியில் என்னிடம் வந்து அவர்கள் என்ன கூறினார்கள் என்று கேட்டான். நானும் எனக்கு தெரியாது என்று கூறி, அவனிடம், ஒன்றும் புரியாமல் என்ன விளையாண்டாய் என்று கேட்டேன்.

அதற்கு அவன் ஒரே ஒரு புன் சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் அவர்களுடன் விளையாட சென்று விட்டான். மீண்டும் அவர்களுக்குள் கல கல சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.


மொழி புரியாவிட்டாலும், குழந்தைகளுக்குள் ஏதோ ஒரு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் உலகம் மிக சுதந்திரமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அதில் இடம் இருக்கிறது. எது புரிகிறதோ இல்லையோ மனதின் மகிழ்ச்சியை சரியாக புரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொண்டும் விளையாடுகிறார்கள்.

அன்பும் மகிழ்ச்சியும் ததும்பும் பொழுது மொழி அமைதியாகி விடுகிறதை கண் கூடாக காண முடிந்தது.

மொழி தெரிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த விளையாட்டு இருக்கும்போலவும் தோன்றியது.

இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதைவிட அவர்கள் விளையாட்டை ரசிப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து அதை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தேன்.


இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த கடவுளுக்கு நன்றி..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.

Tuesday, June 7, 2011

எங்கே எதிர் கட்சிகள் ????

இப்போதெல்லாம் தொடர்ந்து யாராவது ஊழல், கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம், உண்ணாவிரதம், சத்யாகிரகம் என்று அமர்க்களப்படுத்துகின்றனர். 

ஒரு அரசியல் இயக்கமாக சமூக ஆர்வலர்களான இவர்கள் மாற முடியாது என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.  இருந்தாலும் ஒரு ஒப்புக்கு இவர்களை அனுசரித்து நடப்பதுபோல இப்போதைக்கு பாசாங்கு செய்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் நாங்கள் அரசியல் செய்யவில்லை என்று நூல் பிடித்தாற்போல் சொல்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் செய்யாமல் இதை எல்லாம் சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதே ஒரு நேர்மையான பதிலாக இருக்கும்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் இதில் இறங்கி மாட்டிக் கொண்டார். பாபா அரசியல் பேசப்போவது முன் கூட்டியே தெரியாதது போல நம் அரசு நடந்து கொள்வது விந்தையிலும் விந்தை.  பெரிய ஆச்சரியம் இதில் என்னவென்றால் நம் அமைச்சர்கள் “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்யவேண்டும். அரசியல் பேசக்கூடாது” என்று எச்சரிக்கிறார்கள். 
இதில் ஒரு சவுகரியம்.. ஒரு அரசியல்வாதி ஊழல், கருப்புப் பணம் பற்றி கேள்விகேட்கும் போது “நீ மட்டும் என்ன யோக்கியமா??” என்று திருப்பி கேட்டால் அந்த போராட்டம் அத்தோடு ஒழிந்தது... அன்னா, பாபா, கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இவர்களிடம் இந்த கேள்வியை சத்தம்போட்டு கேட்க முடியாது. (இருந்தாலும் முணுமுணுத்தபடி கேட்கிறார்கள்) இந்த சவுகரியத்துக்காகவே அமைச்சர்கள் அரசியல் வாதிகளை மட்டுமே அரசியல் பேச அழைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

அப்படியானால் அரசியல்வாதிகள் மட்டும்தான் இதை தட்டிக் கேட்க முடியுமா? அவர்களுக்கு மட்டுமே இந்த தகுதி இருப்பதாக அமைச்சர் பெருமக்கள் கருதுகிறார்களா?? வோட்டுப் போட்ட ஒரு சாமானியனுக்கு நம் தேசம் இப்படி இருக்கவேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்று கருத்துக் கூறக் கூட இந்த சுதந்திர நாட்டில் உரிமை இல்லையா??

அரசியலில் இருக்கும் நம் எதிர் கட்சிகள் ஊழல் பற்றியோ, கருப்பு பணம் பற்றியோ உரத்து குரல் கொடுக்க ஏன் தயங்குகின்றன??? இவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதா??  அரசியலில் இறங்கினாலே ஊழல் செய்து கருப்புபணம் சேர்க்கிறார்களா? இதற்காக ஏன் இவர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியவில்லை?? மக்களுக்கு எதிர்கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லையா??

நிறைய கேள்விகள் எழுகின்றன... பதில் தான் சரியாக தெரியவில்லை.  நம் நாட்டின் இப்போதய சாபக்கேடு சரியான எதிர்கட்சிகள் இல்லாததே... தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களும் பெரும்பாலான நேரங்களில் ஆளும் கட்சிகளுக்கு அனுசரித்து நடந்து கொள்கின்றன. இதில் இருக்கும் சில விதி விலக்குகளால்தான் இந்த அளவுக்காவது நமக்கு ஊழல், கருப்பு பணம் பற்றி தெரிய வருகிறது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.

இப்பொழுது உடனடியாக நடக்கவேண்டியது :

1) அன்னா ஹசாரே, கிரண்பேடி, பிரசாந்த் பூசன், சாந்தி பூசன், அப்துல் கலாம், அரவிந்த் கேஜ்ரிவால், பாபா ராம்தேவ், மனித நேய ஆர்வலர்கள் -  இவர்கள் இணைந்து உடனடியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்.

2) நேர்மையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

3) ஒரு புதிய பொறுப்புள்ள எதிர் கட்சியாகவாவது அவர்கள் உருவெடுக்க வேண்டும்.

நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்...
ஆண்டவா.... நல்ல பொறுப்பான எதிர்கட்சி அமைந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் செம்மையாக நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...

Monday, June 6, 2011

அடிமை மட்டுமே வேண்டும் அரசாங்கம்...

ஜூன் 5, ஞாயிறு அன்று அதிகாலையில் பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை போலீசார் அடக்கிய விதம் சற்று நெருடலாகவே இருந்தது. அவர் நல்லவரா கெட்டவரா என்பதை விட, அவர் மீது ஏவி விடப்பட்ட போலீசாரின் வன்முறை தாக்குதல் மோசமானதாக இருந்தது.

இது ”ஊழலற்ற நிர்வாகம்” / “கருப்புப் பணத்தை திரும்ப கொண்டுவருதல்”  பற்றிய நம் நாட்டின் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை -'attitude' எடுத்துக்காட்டியது.

அமைதியான போராட்டம் நடத்தியவர்கள் மீது, நம் தேசத்தின் தலைநகரின் மையத்திலேயே,   மீடியா முன்னிலையிலேயே, இப்படி ஒரு  வன்முறை நடவடிக்கை எடுக்கும் இவர்கள் தம் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், கண்காணாத இடத்தில் இருக்கும் நம் சாதாரண பொதுமக்களின் மற்றும் பழங்குடியினரின் போராட்டத்தின் போது எப்படி நடந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும்போது நடுக்கமாக இருக்கிறது.

இதில் நம் மதிப்பு மிக்க அமைச்சர்கள் கூற்று இன்னும் வேடிக்கையாக இருந்தது. “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்ய வேண்டும்.. அரசியல் பேசக்கூடாது... ” என்று திருவாய் மலர்ந்தருளினர்.

இனிமேல் அரசியல்வாதிகள் தவிர வேறு யாரும் அரசியல் பேசக் கூடாது என்ற தடை உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (இப்போது இதை அமைச்சர்கள் டிவி பேட்டிகளில் சொல்கிறார்கள். நாளை இது ஒரு சட்டமாகவே வரலாம்.)

போராட்டதுக்கு முன் அனுமதி, பொதுக் கூட்டத்துக்கு முன் அனுமதி, உண்ணாவிரத்துக்கு முன் அனுமதி, போராட்டம் நடத்த ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாத இடத்தில் அனுமதி,  முன்னறிவிப்பின்றி அனுமதி ரத்து, நேர்மையான அதிகாரிகளுக்கு தண்டனை, அமைதியாக போராடினாலும் தாக்குதல்.... வெள்ளையர்கள் ஆட்சி செய்தபொழுது இருந்த சட்ட நடைமுறைகள் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையோ என்ற பிரமை எழுகிறது. வெள்ளையர்களுக்குப் பதில் இந்த கேடு கெட்ட ஊழல் அரசியல்வாதிகள் நம்மை ஆள்கிறார்கள். இதுதான் ஒரே வித்தியாசம்.

இவர்களுக்குத் தேவை- இவர்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாத அடிமைகள் மட்டுமே... இதற்கு இவர்கள் நாட்டை ஆள வேண்டியதில்லை. ஆட்டுமந்தையை ஆண்டாலே போதும்.

கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இவங்களுக்கு நல்ல புத்திய குடுத்து தேசத்தை காப்பாத்தணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...