இப்போது எல்லாம் அடிக்கடி செய்தி ஊடகங்களில் கருப்புப் பணம் பற்றியும் அவற்றை வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டுவருவது பற்றியும் பெச்சு அடிபடுகிறது. இதுபற்றிய எனது சிந்தனைகள்..
எது கருப்புப்பணம் :
வருமான வரிக் கணக்கில் வராத , காட்டப்படாத அனைத்துமே கருப்புப்பணமே.
நாம் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிகட்டுகிறோம். அவ்வாறு கட்டிவிட்டு, வருமான வரித்துறைக்கு, எனது வருமானம் இவ்வளவு, அதற்கு இவ்வளவு வரி கட்டத் தேவை என்று கணக்குப் பார்த்து , இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன் என்று அறிக்கை தாக்கல் செய்கிறோம்.
இவ்வாறு காட்டப்படும் வருவாய்க்கு அதிகமாக சேர்க்கப்படும் அனைத்து சொத்துக்களும், வருமானங்களும் கருப்புப்பணத்தில் அடங்கும்.
எப்படி சேர்கிறது?
இருவழிகளில் கருப்புப்பணம் வருகிறது :
1) நியாயமான வழியில் வரும் வருமானத்துக்கு, சரியான கணக்குக் காட்டாமல், வரி கட்டாமல் (எந்த வரியாக இருந்தாலும்) இருத்தல். இதில் தொழிலதிபர்களும், சுய தொழில் செய்பவர்களும், சினிமாத்துறையை சார்ந்தவர்களும் வருகிறார்கள். -முதல் வழி
2) முறைகேடான வழியில் பணம் சேர்த்தல். இதற்குக் கணக்குக் காட்ட முடியாது. எனவே முழுதும் கருப்புப் பணமே. இது பெரும்பாலும், லஞ்சம், ஊழல், கடத்தல், ஹவாலா, கொள்ளை, மாபியா போன்ற சட்ட விரோதமாக சேர்க்கப் பட்டதாக இருக்கும். - இரண்டாம் வழி
இதைவைத்து என்ன செய்கிறார்கள்?
ஆடம்பர செலவு அதிகம் செய்கிறார்கள்.
நிலம், வீடு, பங்கு வர்த்தகம் என்று அதிகமாக முதலீடு செய்கிறார்கள்.
வெளிநாடுகளுக்கு பணத்தைக் கொண்டு சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார்கள்.
பெருமளவில் வெளிநாடுகளின் வங்கி, சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள். இவர்களைக் கவர்வதற்காகவே பல வெளிநாட்டு வங்கிகள், அரசாங்கங்கள் கொள்கைகளை வகுத்து கல்லாக்கட்டுகின்றன.
சட்டவிரோத தொழில்களில் அதிக லாபம் வேண்டி முதலீடு செய்கிறார்கள். இதில் தீவிர வாதிகளுக்கு பொருளுதவி செய்வதும் அடக்கம்.
இதனால் என்ன பாதிப்பு?
நியாயமான வழியில் சேராத பணத்தால் விலைவாசி உயருகிறது. வீட்டு விலை, நிலத்தின் மதிப்பு, கட்டுமானப் பொருட்களுக்கான விலை போன்ற அத்தியாவசியமான தேவைகளின் மதிப்பு பலமடங்கு உயர்ந்ததற்கு இது ஒரு மிகமுக்கிய காரணி. இப்போது நியாயமாக சம்பாதித்து வீடு வாங்குவது என்பது கனவாகவே ஆகிவிட்டது.
இப்படிப்பட்ட தவறானவர்களின் பணப்புழக்கத்தைப் பார்த்து, பிறரும் அது போல வாழ ஆசைப்பட்டு, வருமானத்தை மீறி செலவு செய்தோ, தேவை இல்லாத விஷயங்களை வாங்கி (கார், ஆடம்பர வீடு) அகலக் கால் வைத்தோ தங்களின் கையை சுட்டுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு புழங்கும் அதிகமான கருப்புப் பணத்தினால் தனிமனித ஒழுக்கம் குறைந்து வருகிறது. பணத்துக்காக எதுவும் செய்யலாம் என்ற மனநிலை பெருக இது ஒரு காரணமாக இருக்கிறது.
அரசாங்கத்துக்கு நியாயமாக வரவேண்டிய வரி வருவாய் வராமல் போவது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப் படுவது.
நமது தேசத்தின் மரியாதை சர்வதேச அரங்கில் பாதிக்கப்படுவது.
பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகம் ஏற்படுவது அதிக கருப்புப் பணம் அதில் விளையாடுவதுதான். இதனால் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது.
தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வாங்க பொருளுதவி செய்ய இந்த கருப்புப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டில் அமைதி கெடுகிறது.
ஏன் கருப்புப் பணம் சேர்கிறது?
அநியாயமான வரி விகிதங்கள். குழப்பமான வரி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் / நடைமுறைகள். வரிவசூல் செய்வதற்குத் தகுந்தாற்போல் வசதிகள் செய்யாமல் இருத்தல். நியாயமாக வரி கட்டுபவர்களும் வேறு வழிஇல்லாமல் தான் கட்டுகிறார்கள். ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அனைவருமே வரி ஏய்ப்பு செய்யத் தயங்கமாட்டார்கள்.
லஞ்சம், ஊழல், சட்ட விரோத செயல்களால் பணம் அதிகமாக சேருவது. அரசாங்கத்தால் இதை தடுக்கவோ இவ்வாறு செய்பவர்களைத் தண்டிக்கவோ முடியாமல் இருக்கும் பரிதாபன நிலை.
தண்டனைகள் வழங்குவதில் இருக்கும் தாமதம். கடுமையான தண்டனைகள் வழங்கப்படாதது. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை கிரிமினல்கள்தான் அதிகம் பயன் படுத்துகிறார்கள்.
சட்டத்தை அமல் படுத்துவதுவதிலும் அரசு எந்திரத்திலும் முறைகேடுகள் அதிகரித்து பரவலாக ஆனது.
இதைத் தடுக்க / குறைக்க என்ன செய்யவேண்டும்?
வரி விகிதங்கள் சீர் செய்யப்பட வேண்டும். வரி சம்பந்தப்பட்ட விதி முறைகள் / நடைமுறைகள் எளிமைப்படுத்தப் பட வேண்டும். நியாயமான வழியில் சேர்த்த கருப்புப் பணத்துக்கு அபராதமும் அல்லது அதற்கான வரியும் மட்டும் விதித்து மன்னித்துவிடலாம். இதனால் மேலும் வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
வாங்கும் வரிக்கு ஏற்ப பொதுமக்களுக்கு வசதிகள் செய்து தரப்படவேண்டும். நல்ல உள் கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படவேண்டும். லஞ்ச, ஊழலற்ற அரசு நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஏமாற்றாமல் வரிகட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது இந்த விசயத்தில் 100க்கு 100 உண்மை.
தவறான, சட்ட விரோத வழிகளில் சேர்த்த கருப்புப்பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்படவேண்டும். அதை செய்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இவர்கள் சமூகத்துக்கும் அரசாங்கத்தும் துரோகம் இழைத்தவர்கள் ஆவார்கள்.
சட்ட திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு, கடுமையாக அமல் படுத்தப்பட வேண்டும். விரைவில் தண்டனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
இப்போது இருக்கக்கூடிய கருப்புப் பணத்தில் ஒரு பகுதி நம் நாட்டிலேயே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளின் பெரும்பகுதி பத்திரப்பதிவு அலுவலக பதிவேட்டிலும், பங்கு வர்த்தக பதிவேடுகளிலும், வங்கிகளின் லாக்கர்களிலும், அக்கவுண்ட்களிலும், ஃபிக்சட் டிப்பாசிட் களிலுமே இருக்கிறது. இவைகளை முறைப்படுத்துவதினாலோ அல்லது பறிமுதல் செய்வதினாலோ நமக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதைவிடுத்து, வெளி நாட்டிலிருந்து கருப்புப்பணத்தைக் கொண்டு வருவது என்பது கனவுதான்.
என்ன செய்வது? இதை செய்யவேண்டிய இடத்தில் இருப்பவர்கள், இதை செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதைப் பார்க்கும் போது இவர்களும் இதில் பங்குதாரராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
கடவுளே!!! இந்த நாட்டயும் மக்களையும் காப்பாத்து!!!
சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!!!