Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

Thursday, May 19, 2011

எது நல்லாட்சியாக இருக்க முடியும்..

ஒருவழியாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைந்து விட்டது. இந்த நேரத்தில் நமக்கு தேவையான நல்லாட்சி எது என்பதை பதிவு செய்வது நம் கடமை.

1) அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழல் இருக்க வேண்டும்.

2) அரசாங்கத்தின் சலுகைகள் தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் சேரவேண்டும்.

3) லஞ்ச ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் அமைய வேண்டும்.

4) அரசு பணி ஏற்று செய்பவர்கள் நேர்மையாகவும் தர்மத்துக்கு கட்டுப்பட்டும் நடக்க வேண்டும். (அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு வேலைகளை ஏற்று நடத்தும் ஒப்பந்தகாரர்கள்)

5) நீதி பரிபாலனம் சரியான நேரத்தில் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

6) அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமான வருமானத்துக்கான வாழ்வாதாரங்கள் அமைக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும்.

7)  தரமான கல்வி, மருத்துவம், சட்டஉதவி குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

8) நியாயமான, மக்கள் வருமானத்திற்கு ஏற்றதான விலைவாசி நிலை இருக்க வேண்டும்.

9) மக்களுக்கு தேவையான உள் கட்டமைப்புகள் - சாலைவசதி, பொது போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரமான குடியிருப்புகள், சுற்றுச்சூழல் - சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

10) விவசாயம் செழிக்க வேண்டும்.


என் மனசுக்கு தேவைன்னு பட்டதையெல்லாம் எழுதி இருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கலாம். இப்போதைக்கு இவ்வளவுதான்.

நமது ஆட்சியாளர்கள் இவைகள் ஏற்பட பாடுபட்டாலே நம் நாடு சிறப்பான நிலையை அடையும்.

கடவுளே! சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்.. நீங்கதான் இவையெல்லாம் நிறைவேற அருள் செய்யணும்.

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!

Friday, April 15, 2011

மக்களை விட்டு முற்றிலும் விலகிய அரசியல்வாதிகள்..

உயர்திரு அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதம் நடந்த போது லோக்பால் குழுவில் பொதுமக்களின் பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களும் அமைச்சர்களும் அந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர் என்பதே.

அப்படியென்றால் அவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதி இல்லையா? அப்படி இல்லை என்றால் ஏன்?

இந்த முக்கியமான கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.. இதற்கு பதில் இது பற்றிய டிவி விவாதங்களில் கிடைத்தது..

இப்போது நம் சமூகம் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கிறது. முதல் பிரிவு அரசியல்வாதிகள், இரண்டாம் பிரிவு அரசு அதிகாரிகள், மூன்றாம் பிரிவு பொதுமக்கள்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களை ஆள்வதற்காக இருக்கிறார்கள். அது நல்லாட்சியாக இருக்க வேண்டியதற்கு முக்கிய காரணி ஒருவ்வொருவர் மீதும் இருக்க வேண்டிய நம்பிக்கை. அது இப்போது இல்லாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.


அரசியல்வாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் உண்மையில் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற காரியங்களை செய்வதில்லை. எனவே அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல..

அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் இவர்கள் தத்தமது சொந்த ஆதாயங்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காவுமே காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களும் மக்களுக்காக யோசிக்கப்போவதில்லை.

இப்போதய பெரும்பாலான அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் பொது மக்களைவிட்டு வெகுதொலைவு விலகிவிட்டார்கள். எனவேதான் மக்களுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை இல்லை.

என்வேதான் நமது பொதுமக்கள் எங்கள் பிரதிநிதியும் சட்டங்கள் உருவாக்குவதில் பங்குபெறவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


இது உண்மையில் ஜனநாயகத்தின் அடிநாதத்தைக் கேலிக் கூத்தாக்குவதாக இருக்கிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளான அரசியல்வாதிகளைவிட திரு அன்னா ஹசாரேயால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் நம்புவது நம் ஜனநாயகத்தின் கோர நிஜம்.


இப்போது நாம் கவனமாக இருக்கவேண்டியது கீழ்க்கண்ட விசயங்களில்தான்:

1) எப்படிப்பட்ட சட்டமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சரியாக இல்லாதபட்சத்தில் அது வீணாகவே போகும். அந்த கதி இந்த ஜன் லோக்பால் சட்டத்துக்கு ஏற்படாமல் இருக்கவேண்டும்.

2) எவ்வளவோ நேர்மையான அமைப்புகளை வெற்றிகரமாக ஆக்கிரமித்த, கெடுத்த நம் கேடுகெட்ட அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட பொதுமக்கள் அமைப்புகளையும் கெடுப்பதற்கு வெகுகாலம் ஆகாது.

இது நம் ஜனநாயகத்தின் இன்னொரு கோர முகம்.

கடவுள்தான் இதுக்கெல்லாம் ஒரு வழி சொல்லணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்!!!

Friday, March 18, 2011

நம் ஜனநாயகம் ஒரு பணநாயகம்....

நேற்று பாராளுமன்றத்தில், சில உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விஷயமாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு கேபிள் பற்றி,  நடந்த புயலைப் பார்த்துவிட்டு, நம் நாட்டில் நடப்பது ஜனநாயகமா அல்லது பண நாயகமா என்ற சந்தேகம் மீண்டும் வந்துவிட்டது .

இதற்கு முன்பும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒருமுறை பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் பணத்தை எடுத்து லஞ்சமாக கொடுக்க முயன்றதாக புயலைக் கிளப்பியுள்ளார்கள்.

மேலும், ஒருமுறை அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் பெற்றதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது.

இதைவிடக் கேவலமாக, சில கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்காக, லஞ்சம் கேட்ட உறுப்பினர்களை சில ஆங்கில சேனல்கள் ஒளிபரப்பி தேசத்தின் மானத்தை காற்றில் பறக்க விட்டனர்.

இவ்வளவுக்குப்பிறகும் நாம்தான் உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது.

என்ன செய்வது? இங்கு ஜனநாயகத்தின் எல்லாமட்டத்திலும், எல்லாவற்றிற்கும் பணம் விளையாடுகிறது...

தேர்தலுக்கு முன் :

கூட்டணி வைக்க பணம்.- கட்சிகளுக்கு

தனித்து நிற்கவும் பணம். - கட்சிகளுக்கு

தேர்தலில் நிற்க பணம் - கட்சிகளுக்கு, சில சுயேச்சைகளுக்கு

தேர்தலில் நிற்காமலிருக்கப் பணம் - கட்சிகளுக்கு, சில சுயேச்சைகளுக்கு

ஓட்டு சேர்க்க பணம். - வாக்காளர்களுக்கு

ஓட்டு பிரிக்கப் பணம். - வேட்பாளர்களுக்கு

ஓட்டு போடப் பணம். - வாக்காளர்களுக்கு

தேர்தலுக்குப் பின்:

கூட்டணி வைக்க பணம்.- கட்சிகளுக்கு

கூட்டணி மாற வைக்க பணம்.- கட்சிகளுக்கு

பிரதிநிதிகள் ஓட்டுப் போடப் பணம்.  - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

பிரதிநிதிகள் ஓட்டு மாற்றிப் போடப் பணம். - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

கேள்வி கேட்கப் பணம் - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

கேள்வி கேட்காமல் இருக்கப் பணம் - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

தமக்கு சாதகமான முடிவுகளுக்குப் பணம் - அமைச்சர்களுக்கு, கட்சிகளுக்கு

எதிரிகளுக்கு பாதகமான முடிவுகளுக்குப் பணம் - அமைச்சர்களுக்கு, கட்சிகளுக்கு


இன்றைய சூழலில் அரசியல் என்பது மக்கள் சேவை என்பது போய், பணம் சம்பாதிக்கும் அல்லது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஒரு தொழில் என்ற நிலை வந்துவிட்டது. இதுவே நம் ஜனநாயகத்துக்கு விதிக்கப் பட்ட சாபக்கேடு.

யார் ஆண்டாலும் பணம், பணம், பணம்.....

நம் தேசத்தின் பணப்புழக்கம், நம் ஜனநாயகத்தைச் சுற்றியே இருக்கிறது. அதனால்தான் இன்று நல்லவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்.

இருக்கும் சில நல்லவர்களும் துரத்தி அடிக்கப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட நம் ஜனநாயகத்தை இனி பணநாயகம் என்றே அழைப்போம். இந்தப் பண வெள்ளத்தில் மக்கள் நலன் என்ற வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதை நேர்மையாளர்கள் வேதனையோடு கவனிக்கிறார்கள்.


கடவுளே!!! இந்த நிலை மாறி அரசியல் என்பது மக்கள் சேவை என்ற உணர்வு உள்ளவர்கள் நம் பிரதிநிதிகளாகி, பணநாயகம் ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் காப்பாற்றப் பட நீங்கள்தான் அருள் செய்யணும்.

ஓம் நம சிவாய... சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி....

Friday, March 11, 2011

ஜனநாயகத்துக்குத் தகுதியானதா நமது தேசம்????

நமது நாட்டில் இப்போதெல்லாம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், கோடிகளில் ஊழலும் மிகவும் சகஜமாக ஆகிவிட்டது.

1) எந்த அரசாங்க போஸ்டிங்குக்கும் ஒரு வசூல் வேட்டை நடத்தப்படுவது வாடிக்கையாக ஆகிவிட்டது. அதற்கு போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் லஞ்சம் கொடுக்க முன்வருகிறார்கள்(ஒரே போஸ்டிங்குக்கு 2 / 3 பேர் வரை வசூல் செய்கிற கொடுமையும் நடக்கிறது).

2) பெரும்பாலான அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் தம் கடமையை செய்வதற்கே கையூட்டுப் பெறுவதும்,  அது சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதும் மிகவும் கேவலமான ஒன்று.

3) ஓட்டுப் போடுவ‌த‌ற்கும், ஓட்டு வாங்குவ‌த‌ற்கும் ப‌ண‌ம் த‌ர‌வேண்டும் என்ற‌ ஒரு மோச‌மான‌ முன்னுதார‌ண‌த்தை ந‌ம் தாய்த் த‌மிழ‌க‌ம் ஏற்ப‌டுத்திக் கொடுத்து இருக்கிற‌து.. இப்போதே இந்த‌ தேர்த‌ல் அறிக்கையில் இலவசம் மிக்சியா கிரைண்ட‌ரா என்ற‌ வாக்குவாத‌ம் ந‌ட‌க்கிற‌தாம்... தூ... வெட்கக்கேடு.

4) நீதிப‌திக‌ளும் ல‌ஞ்ச‌ம் கொடுத்து நிய‌மிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள் என்று ஒரு கேர‌ள‌ அமைச்ச‌ர் கொழுத்திப் போட்டு வாங்கிக் க‌ட்டிக் கொண்டார். இன்னும், ந‌ம் உச்ச‌ நீதிம‌ன்ற‌ ஒரு முன்னாள் நீதிப‌தியின் உற‌வின‌ர்க‌ள் வ‌ருமான‌த்துக்கு அதிக‌மாக‌ சொத்து சேர்த்திருப்ப‌தாக‌ வ‌ருமான‌ வ‌ரித்துறை கேஸ் ந‌ட‌த்துகிற‌து.

5) ஒரு க‌வ‌ர்ன‌ர் விப‌ச்சார‌ அழ‌கிக‌ளுட‌ன் உல்லாச‌மாக‌ இருப்ப‌துபோல‌ வீடியோ எடுத்து வெளியிடுகிறார்க‌ள்.

6) ஒரு துற‌வி ஒரு ந‌டிகையுட‌ன் உல்லாச‌மாக‌ இருப்ப‌துபோல‌ வீடியோ வெளியாகிற‌து.

7) போலீசைப் ப‌ற்றிக் கேட்க‌வேண்டாம். அவ‌ர்க‌ள் மான‌ம் ஒவ்வொரு நெடுஞ்சாலை ஓர‌மும் ஒவ்வொரு சிக்ன‌லின் முன்பும் காற்றில் ப‌ற‌க்கிற‌து. ஒரு க‌ம்ப்ளைய்ண்ட் கொடுக்க‌ தைரிய‌மாக‌ போலீஸ் ஸ்டேச‌ன் போக‌ முடிய‌வில்லை.

8) ராணுவ‌த்திலும் த‌ள‌வாட‌ங்க‌ள் வாங்குவ‌திலும், ராணுவத்துக்கு சொந்த‌மான‌ நில‌ங்க‌ளை கொள்ளை அடித்த‌திலும் அவர்களின் லட்சணம் ச‌ந்தி சிரிக்கிற‌து.

9) ஒவ்வொரு தொழில‌திப‌ரும் ஏதேனும் ஒரு வித‌த்தில் ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌து வாடிக்கையாக‌ப் போகிவிட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிகளுக்காக‌ட்டும், அமைச்ச‌ர்க‌ளுக்காக‌ட்டும் அவ‌ர்க‌ள்தான் இதை முக்கிய‌மாக‌ ஊக்குவிக்கிறார்க‌ள்.


இன்னும் ஏராள‌மாக‌ ந‌ம் ச‌மூக‌, அர‌சிய‌ல் அமைப்பில் ல‌ஞ்ச‌மும் ஊழ‌லும் ஒழுக்கமின்மையும் பூர‌ண‌மாக‌ ஒரு ர‌த்த‌ப் புற்றுநோயைப் போல‌ ஊடுறுவி விட்ட‌து.


இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மக்களையும் இவர்கள் விடவில்லை. ந‌ம‌து தேச‌த்தைச் சேர்ந்த‌ மக்க‌ள் வெளிநாடுக‌ளில் க‌ஷ்ட‌ப்ப‌டும்போது கூட‌ உத‌விசெய்ய‌ ம‌ன‌மில்லாத‌ அர‌சாங்க‌ம்தான் இங்கு ந‌டைபெறுகிற‌து. உதார‌ண‌ம் ‍ இல‌ங்கை, எகிப்து, லிபியா, ஆஸ்திரேலியா, வ‌ளைகுடாநாடுக‌ள், ம‌ற்றும் ப‌ல‌. தூத‌ர‌க‌ங்க‌ள் பெய‌ருக்கு, பொம்மை அலுவ‌ல‌க‌ங்க‌ளாக‌ இய‌ங்குகின்ற‌ன‌வோ என்ற‌ ச‌ந்தேக‌மும் வ‌ருகிற‌து.


ந‌ம‌து வ‌ரிப்ப‌ண‌ம் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்டு க‌ருப்புப்ப‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் யார்யார் பெய‌ரிலோ ப‌துக்க‌ப்ப‌டுவ‌தைப் பார்க்கும்போது ஒரு ச‌மூக‌ப் பிர‌க்ஞை உள்ள‌ குடிம‌க‌னாக‌ என்னால் ம‌னமுவந்து வ‌ரிகட்ட‌ முடிய‌வில்லை. நான் ஏன் வ‌ரிக‌ட்ட‌வேண்டும் என்ற‌ சிந்த‌னை இய‌ற்கையாக‌ எழுகிற‌து.(என்ன‌ செய்வ‌து? வேற‌ வ‌ழி இல்லை)

எவ்வ‌ள‌வோ இல்லைக‌ள் இருந்தாலும் ந‌ம் தேச‌ம் என்ற‌ ப‌ற்று ம‌ட்டும் குறைய‌வே இல்லை.


இத‌ற்கு தீர்வு என்ன‌வாக‌ இருக்க‌முடியும் என்று யோசித்த‌போது என்னால் கீழ்க்க‌ண்ட‌ கேள்விக‌ளைத் த‌விர்க்க‌ முடிய‌வில்லை.


1)நாம் உண்மையிலேயே ஜ‌ன‌நாய‌க‌த்துக்குத் த‌குதியுட‌ய‌வ‌ர்க‌ள் தானா?

2)இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு சுத‌ந்திர‌ம் ந‌ம‌க்குத் தேவையா?

3)சில / பல‌ ஆண்டுக‌ள் (இந்த‌ நோயைக் குண‌ப்ப‌டுத்த) சுத‌ந்திர‌த்தையும் ஜ‌ன‌நாய‌க‌த்தையும் விட்டுக் கொடுத்தால்தான் என்ன‌??

இப்போது ந‌ம‌க்குத் தேவை ஒரு மாவீர‌ன் சுபாஷ் ச‌ந்திர‌ போஸ் போன்ற‌ ஒரு வீர‌மும் விவேக‌மும் துணிவும் உள்ள‌ ஒரு இரும்புத் த‌லைமை. அது எங்கிருந்து வ‌ரும் என்றும் புரிய‌வில்லை.


ஒரு தன்னலமில்லாத தலைவனின் ராணுவ‌ ஆட்சி ந‌ம‌க்கு இப்போத‌ய‌ உட‌ன‌டித் தேவை... யார் கொடுப்பார்கள் என்றுதான் தெரியவில்லை...

ஆண்டவா.. மஹாலிங்கம்!!! என் சிந்தனை சரியான்னு தெரியல... ஆனா இதுதான் சரின்னு எனக்குப் படுது...


உங்க கடாட்சம் பூரணமாக வெளிப்பட்டு, இந்த ரத்தப் புற்றுநோயை உடனடியாக் குணப்படுத்தி என் பாரதத் தாய் மீண்டும் தரணியில் தலை நிமிர்ந்து நிற்க வழிசெய்ய ஆவன செய்யுங்கள்...


சதுரகிரிவாழ் சுந்தரனே போற்றி!!!! சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா........