Friday, December 30, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4a குருவைத் தேடி-2

குரு அடையாளம் தெரிந்த சில நாட்களில் மீண்டும் குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது. நம் குருவுக்கும் நாம் கும்பிடும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரையும் அருவமாகவே உணர முடிகிறது. நேரில் இருக்கும் குரு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

எனது குருதேவரிடமே மீண்டும் பிரார்த்தனை ஆரம்பித்தது. எனக்கு தங்கள் ஆசியை கொண்டுவந்து கொடுப்பவர் இன்னார்தான் என அடையாளம் காட்ட வேண்டினேன்.

இந்த நேரத்தில், எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. உண்மையில் மனம் உடைந்து விட்டது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட காலம் என்பதால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 45 நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சென்றுவிட்டேன்.  சம்பளம் தருவார்களா என தெரியவில்லை.  சோதனை மேல் சோதனை. குருவின் மீது பாரத்தைப் போட்டு இருந்தேன்.

அப்போது மன அழுத்தம் மிக அதிகமாகி கடவுள், குரு, சுற்றம்,  நட்பு எல்லாம் என்னை விட்டு விலகி அனாதை ஆகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு ஆட்கொண்ட நேரம்.

அப்போது ஆனந்த விகடன் புத்தகத்தில் ஒரு ராஜ யோக பயிற்சியாளர் பண சம்பத்தை அளிக்கும் பூஜை கற்றுத்தர ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். ஜாதகத்துடன் விண்ணப்பிக்க சொல்லி இருந்தது.

இதற்கு விண்ணப்பித்து, அந்த பூஜைகள் செய்து ஏதாவது மாறுதல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் ஒரு விண்ணப்பம் தட்டி விட்டேன். சில நாட்களில் அதை மறந்தும் விட்டேன்.

உடல்நிலை ஓரளவு தேறி, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு அந்த ராஜ யோக பயிற்சியாளர், அந்த பூஜை முறை கற்றுக்கொள்ள எனக்கு தகுதி இருப்பதாகவும், உடனடியாக கிளம்பி வரவும் என கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தை படித்த விநாடியில் இருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது. மனம் ஒரு நிலையில் இல்லை. கட்டுப்பாடு இழந்து சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக‌ இருந்தது. ஆனால் பணம் செலவளித்து இதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை அலைக்களித்தது.

மறுநாள் மீண்டும் மனதில் ஒருவிதமான வித்தியாசமான உணர்வு பரவுவதை உணர்ந்தேன். இப்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற ஒரு உணர்வில் மயக்கமான நிலைக்கு போய்விட்டேன்.

எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னை கவனித்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டினார். நான் நடந்த விசயங்களை சொல்லி அந்த ராஜ யோக பயிற்சியாளர் அனுப்பிய கடிதத்தை காண்பித்தேன்.

அவர் உடனடியாக ஒரு ஆஞ்சனேய உபாசகரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் சென்று பார்க்கும்படி கூறினார். அங்கு சென்றதும் அவர் என்னிடம் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து, எனக்கு திருஷ்டி பாதிப்பு இருப்பதாகவும், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி அது செய்ய வைத்தார்.

அப்போதிலிருந்து தொடர்ந்து சுமார் 10 நாட்கள், அந்த பயம் போன்ற  உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தியான ஆசிரியரிடம் ஏதாவது தியானம் மூலம் இதை சரி செய்ய முடியுமா என்று வினவினேன். அவர் அந்த ஆஞ்சனேய பக்தரிடம் தொடர்ந்து சென்று வர ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில் எனது சகஜ மார்க்க நண்பர்கள் மூலம் அவர்களின் தியானமுறையில் இதை சரி செய்ய முடியுமா என முயற்சித்தேன். ஆனால் அவர்கள் தியானம் கற்றுக் கொண்டால்தான் அது குறித்து முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு சுமார் ஒரு மணிநேரம் அதன் முக்கியத்துவதுவம் குறித்து விளக்க உரையும் கொடுத்தார்கள். எனக்கு தியானம் புதிதாக கற்றுகொள்ள விருப்பம் இல்லை என கூறி விட்டு அப்போது வந்து விட்டேன்.

ஆனால் மறுநாள் என்னால் வீட்டில் இருக்க முடிய வில்லை. எப்படியாவது சகஜ மார்க்க தியானம் கற்று கொள்ள வேண்டும் என்று என் மனதில் இருந்து திரும்ப திரும்ப சிந்தனை வந்து கொண்டிருந்தது. அது ஒரு மிகப் பெரிய உந்து சக்தி போல என்னைத் தள்ள ஆரம்பித்தது. தாங்க முடியவில்லை என்னால்.

உடனடியாக எனது தியான ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, சில நாட்கள் சகஜ மார்க்க தியானம் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். அதற்கு தங்கள் அனுமதி தேவை என விண்ணப்பித்தேன். அவர் என்னை நேரில் வரும்படி பணித்தார்.

எங்கள் குழு தியான அறையில் தியான ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டேன். மானசீகமாக என் குருநாதர் விக்கிரகத்துக்கு முன் மண்டியிட்டு என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் எந்த நிலையிலும் எனக்கு துணையாக இருக்கும்படியும் வேண்டினேன்.

சிறிது நேரத்தில் தியான ஆசிரியர் அந்த அறைக்குள் வந்தார். நேராக குருவின் மூர்த்திக்கு ஆரத்தி காண்பித்து என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, எந்த தியானமானாலும் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி பாதியில் விட்டு செல்லக்கூடாது. மாற்றி மாற்றி தியானம் செய்தால் அது நல்லதல்ல என அறிவுரை கூறினார். பிறகு வேறு தியானம் செய்வது என் சொந்த விருப்பம் எனவும், சிறிது நேரம் தியான அறையில் ஓய்வு எடுத்துவிட்டு செல்லும் படியும் பணித்து சென்றுவிட்டார்.

அவர் தியான அறையை விட்டு அகன்ற விநாடியில் என் மனதில் இருந்த அந்த அரிப்பு அகன்று விட்டது. சுமார் 15 நிமிடங்கள் அந்த தியான அறையில் அமைதியாக இருந்த பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு. மனதில் ஒரு தெளிவு. என் குருநாதரின் பரிபூரண ஆசி எங்கள் தியான ஆசிரியர் மூலம் எங்களுக்கு வருவதை குறிப்பால் உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்ததுபோன்ற ஒரு தோற்றம் மனதில் ஏற்பட்டது. வாழ்வோ சாவோ இனி நம் குருதேவருடன் தான் என மன தெளிவு வந்தது.

அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.

பிறகு தொடர்ந்து 3 மாதங்கள் சில பரிகாரங்கள் வீட்டில் செய்து அந்த ஆஞ்சனேயர் உபாசகர் மூலம் தாயத்து செய்து அணிந்த பிறகு பூரண குணம் கிடைத்தது.

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Friday, December 23, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4 ‍- குருவைத் தேடி.. 1

என்னதான் நாம் கடவுள்மீது பக்தி செலுத்தினாலும் ஒரு குரு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனாலும் யாரை குருவாகக் கொள்வது எனவும் மனதில் ஒரே குழப்பமாகவும் இருந்தது.

அப்போது எனது நண்பர்கள் சிலர் சகஜ மார்க்கம் எனப்படும் ராமச்சந்திரா மிஷனில் தியானம் செய்பவர்களாக இருந்தார்கள்(இன்னும் இருக்கிறார்கள்). அவர்களை அவ்வப்போது சென்று அவர்கள் மணப்பாக்கம் ஆசிரமத்தில் சந்திப்பேன்.

அந்த ரம்யமான சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர்கள் மார்க்கம் சார்ந்த சில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் தியானம் கற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்ததால் கற்றுக் கொள்ளவில்லை. பலவிதமான விசயங்களைப்பற்றி விவாதங்கள் செய்வோம். அதில் கடவுள், பக்தி, தியானம், யோகம் இவைதான் அதிகம் இருக்கும்.

இந்த சூழலில் எனது குரு தேடலைப் பற்றி தெரிந்த அந்த நண்பர், கடவுளிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்தால் நல்ல குரு அமைவார் என அறிவுறுத்தினார். நான் அப்போதெல்லாம், சைதை காரணீஸ்வரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்கேயே இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மருந்துகளை அறவே நிறுத்திவிட்டு ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து எடுத்து வந்தேன்.

அலுவலகத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் நிலையை அடிக்கடி பாதித்துக் கொண்டே வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஹோமியோபதி மருந்துகள் எடுத்தும் ஒன்றும் பெரிய முன்னேற்றம் இல்லை.

எனது ஹோமியோபதி மருத்துவர் ஒரு முறை எனது ரத்த அழுத்தத்தை சோதித்தபோது மிக அதிகமாக இருந்தது. அதற்கு மருந்தாக ஆழ்நிலை தியானம் கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். வேறு மருந்து எதுவும் தரவில்லை.

உடனடியாக மறுநாள் 23 ஜனவரி 1997 அன்று, மஹரிஷி வித்யா மந்திர் சென்று ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன். அப்போதும் எனக்கு ஒரே குழப்பம். இந்த தியானம் சொல்லிக் கொடுப்பவர் தான் எனது குருவா?? இருந்தாலும் ஒரு தெளிவு. நம் பிரார்த்தனைக்கு கடவுள் எப்படி செவி சாய்க்கிறார் என‌ பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

தியானம் கற்றுக் கொண்ட சில நாட்களிலேயே எனது ரத்த அழுத்தம் சீராகி விட்டது. இருந்தாலும் மருத்துவர் அறிவுரைப்படி தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

அடுத்த ஆறு மாதங்களில் ஆழ்நிலை தியானத்தின் அடுத்த நிலையான சித்திப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்போது எனக்கே ஒரு ஆர்வம் வர ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஆர்வமுடன், தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

தியானம் தொடர்ந்து செய்துவர எனக்கு மனதின் ஆழத்தில் இவர்தான் எனது குரு என அடையாளம் தெரிந்தது. ஆம்!! ஆழ்நிலை தியானம் செய்வதற்காக பூஜை செய்யும் தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள்தான் அது.

மனதில் மிக ஆழமாக என் குரு பதிந்துவிட்டார். அவர் அப்போது தன் பூத உடலில் இல்லாவிட்டாலும் அவர்தம் கருணை பூரணமாக வியாபித்திருப்பதை உணர முடிந்தது.

ஜெய் குரு தேவ்...

Monday, December 19, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍ 3a - மாரியம்மன்

சென்னைக்கு வந்த புதிது.  எனது ஒரு நண்பன் ஒருவருடன் இணைந்து ஒரு ரூம் எடுத்து தங்கினோம்.அவர் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தார். நாங்கள் இணைந்து ரூம் எடுப்பதற்கு முன் ஒரு கிறிஸ்தவ பாஸ்டர் ஒருவரின் குடும்பத்துடன் தங்கி இருந்தார். என்னை அந்த பாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

என்னைப் பார்த்தது முதல் அந்த பாஸ்டர் தன் மதப் பிரச்சாரத்தை தொடங்கினார். கிறிஸ்துதான் ஒரே கடவுள்; மற்ற அனைத்தும் பேய்; அதை வழிபடுபவர்கள் சாத்தான்கள் என்று சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டார்.

எனக்கே நான் கும்பிடுவது பேய்தானோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு குழப்பிவிட்டார். நானும் அப்போது அவரிடம் பேசி சமாளித்தாலும் நன்றாக குழம்பிவிட்டேன்.

என் நண்பனும் பாஸ்டரின் அருமை பெருமைகளை பற்றி விலாவரியாக கூறிக்கொண்டிருந்தான். மதம் மாறினால் நம்மை நன்றாக கவனித்துக் கொள்வார்கள், நம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள், வாழ்க்கை விடிந்து விடும் என தூபம் போட்டுக்கொண்டிருந்தான். வாழ்வின் பல பிரச்சினைகளில் இருந்த எனக்குள் முயற்சி செய்தால்தான் என்ன? என்ற சிந்தனைகூட வர ஆரம்பித்து விட்டது.

மேலும் என்னைப் பயமுறுத்த, அந்த பாஸ்டர் ஒரே மாதத்தில் என்னை மதமாற்றம் செய்ய தீவிர பிரார்த்தனை செய்வதாக கூறி கிலி ஊட்டினான்.

எனக்கு சாமி படத்தை பார்த்தாலே பேயைப் பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. உலகமே எனக்கு ஒரு வித்தியாசமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஆட்கொண்டது.

இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டே வந்தது. இரண்டு வாரங்களில் தினந்தோறும் ஆஸ்துமா ஊசி போட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இந்த நிலையில் பல விதமான காட்சிகள் மனதில் பிரமைகளாக ஓடுவதை உணர முடிந்தது. எது கடவுள் என்ற சிந்தனை தீவிரமாக ஆட்கொண்டது.

நாம் அறியும் பெயரும் உருவமும்தான் கடவுளா? இந்த வேறுபாட்டில்தானே மதங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுள் எல்லாமதத்தவரின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறாரே? அது எப்படி? கடவுள் என்பது பெயரை உருவத்தை மீறி இருக்கும் ஒரு சக்தியோ?

என் சொந்த அனுபவத்தில் ஏற்பட்ட பல கடவுள் அனுபவங்கள் என் மனதில் ஓடுகின்றன. குழப்பம் .. மேலும் குழ்ப்பம்..

அப்போது என் நண்பன் என் நிலைமையைப் பார்த்து அந்த பாஸ்டரை என் வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்ய சொல்வதாக சொன்னான். நானும் உடன்பட்டேன். எனக்காக, என் உடல் நலனுக்காக அவரும் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு சென்றார்..

மறுநாள், காலையில் உடலில் அத்தனை சக்தியும் வடிந்துவிட்டதுபோன்ற ஒரு பிரமை. மிகவும் அசதியாக இருந்தது. மனம் மிகவும் தளர்ந்திருந்தது.

மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்றேன்.. ஒரே அதிர்ச்சி.. ரத்தமாக மலவாய் வழியாக போக ஆரம்பித்தது.. மனதில் உயிர் பயம் வர ஆரம்பித்தது.. செத்துவிடுவோமோ என்ற சிந்தனை வந்தது.

உடனடியாக கோவிலுக்கு செல்லவேண்டும் என தோன்றியது. உடனே குளித்து ரெடியாகி இருக்கும் காசை எடுத்துக்கொண்டு மாங்காடு சென்றேன்.

அங்கு சன்னிதி முன் நின்று கோ என தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். வேகுநேர அழுகைக்கு பின், மனதில் ஒரு முடிவு. வாழ்வில் மிக நல்ல நிலைக்கு வந்தால்தான் ஊருக்கு போகவேண்டும். இல்லாவிட்டால் என் தாய் உயிருக்கு போராடினால்தான் என் ஊருக்கு செல்வேன். அதுவரை செல்வதில்லை, என சங்கல்பம் எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டேன்.

மேலும் சில முறை ரத்தமாக போனது. கவலைப்படவில்லை. ஆவது ஆகட்டும். செத்தால் மொத்த விடுதலை.


சுமார் 2 மணி அளவில் என் அலுவலகத்தில் இருந்து என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் கையில் ஒரு பேப்பர்.

என் தாயார் மிகவும் சீரியசாக இருப்பதாக ஊரில் இருந்து தந்தி வந்திருப்பதாக சொன்னார். தலைக்கு மேல் வெள்ளம். கையில் காசில்லை. அலுவலகம் சென்று சம்பளத்தில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.

பஸ் ஊரை நெருங்க நெருங்க உடலில் ஒரு புது சக்தி வருவதாக உணர்ந்தேன். வேகமாக வீட்டை அடைந்தால், என் தாயார் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். என்ன விசயம் என யாரும் ஒன்றும் கூறவில்லை.

உடனே என்னைக் கிளப்பிக் கொண்டு குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு வைத்து அப்போது எனக்கு மாவிளக்கு எடுத்தார்கள்..

எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அப்போது என் தாயார் முன் தினம் மதியம் இருக்கன்குடி வந்திருந்ததாகவும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கு அருள் வந்து உடனடியாக எனக்கு என் தாயார் சீரியசாக இருப்பதாக தந்தி அடித்து வரவழைக்குமாறும் கூறியதாக சொன்னார்கள். நான் இன்னும் இரண்டு நாளில் இங்கு வராவிட்டால் என் உயிருக்கு ஆபத்து என்றும், இப்படி தந்தி கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் எனவும் கூறி இருக்கிறார்கள்..

எல்லாம் எனக்கு அந்த வினாடியில் விளங்கிவிட்டது. நேற்று என் அம்மாவுக்கு அருள் வாக்கு கிடைத்தது, நான் மாங்காடுவில் பிரார்த்தனை செய்துவிட்டு கிளம்பிய அதே நேரம்.

அந்த காக்கும் தாய் என்னைக் காப்பாற்ற என் தாயை பணித்து இருக்கிறாள்..

மெய் சிலிர்த்தது. உண்மையான கடவுள் உருவத்திலோ பெயரிலோ இல்லை என புரிந்தது. உண்மையான பக்தியுடனும் ஏக்கத்துடனும் எங்கிருந்து என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அந்த கடவுள் மனிதனுக்கு இரங்குவார் என தெளிந்தது..

ஓம் சக்தி.. இருக்கன்குடி மாரியம்மனே சரணம்.

Thursday, December 15, 2011

அரசு நிர்வாகம்

இன்று நம் தேச‌த்தின் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது ஒழுங்கற்ற அரசு நிர்வாகம். அரசாங்கம் செயல்படுத்த எண்ணும் ஒவ்வொரு செயலையையும் இப்படிப்பட்ட ஒரு ஒழுங்கற்ற நிர்வாக அமைப்பு எவ்வாறு செம்மையாக செயல்படுத்த முடியும்.

இதில் குறை எங்கு இருக்கிறது?? நிர்வாக அமைப்பில் சில குறைகள் இருந்தாலும் அதை நிர்வகிப்பவர்களில் தான் பெரும் குறை இருக்கிறது. ஒவ்வொரு சட்டமும் நியதியும் நடைமுறைகளும் மக்களை முன்னிறுத்தி, மக்கள் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த‌ மாபெரும் உண்மையை மறந்து, இவற்றை வெறும் வார்த்தைகளாகவும், பொது நலனைவிட சுயநலனுக்காகவும் சில தனிநபர் நலனுக்காக‌ இவற்றை வளைக்கவும் மக்களை வதைக்கவும் இவற்றை பயன்படுத்தும் அதிகாரிகளால்தான் பிரச்சினையே.

பல அதிகாரிகள் மக்களை வதைப்பதிலும், பொது நலனை சாகடித்து, தனிநபர்களின் நலன் பேணுவதில் ஆவலாகவுமே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் அரசியல் நிர்ப்பந்தங்களினாலும் இவ்வாறு ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.

அதிசயமாக சில உண்மையான அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் செயல்படுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மிக அதிகம்..

இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசு நிர்வாகம்தான், கோடிக்கணக்கான மக்கள் பணத்தை கையாள்கிறது என்பது ஒரு சோகமான உண்மை.

இவர்களுக்கு எஜமானர்களான நம் நாட்டு அரசியல் தலைவர்களும், இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்லர். "உன்னாலே நான் கெட்டேன் ,  என்னாலே நீ கெட்டாய்" என்பது அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் பொருந்தும்.

மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து பொதுமக்களாகிய நம் பணத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் ஜனநாயகத்தில் பொதுஜனமாகிய நமக்கு வேறு போக்கிடம் இல்லை. நீதி மன்றங்களில் தீர்ப்புகள் வர ஆண்டுக்கணக்கில் ஆவதும் நம் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கி விடுகிறது.

இந்த லட்சணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மேலும் மேலும் செலவு செய்து நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைந்துகொண்டே இருக்கிறது.

ஓட்டைப்பானையில் எவ்வளவு நீர் ஊற்றினாலும் குடிப்பதற்கு நிற்காது. அது போல இந்த ஓட்டை அரசு நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவராமல் புதிய நலத்திட்டங்கள் பலன் தராது.

முதலில் அரசு தன் நிர்வாகத்தை செம்மைப் படுத்தவேண்டும். அதற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

இது சரியாகிவிட்டால் பல விசயங்கள் தானே சரியாகும். அரசு செம்மையாக நடக்கும். மக்களும் சுபிட்சமாக இருப்பர்.. செய்வார்களா??


கடவுளே மஹாலிங்கம், இந்த அரசு நிர்வாக குறைபாடுகள் சரியாக நீங்கதான் ஒரு நல்ல வழி செய்யணும்..

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கமே போற்றி...

Monday, December 12, 2011

எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்???

போன வாரம் இங்கு கொல்கத்தாவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தீப்பிடித்து சுமார் 93 பேர் மரணமடைந்துவிட்டனர்.

இதற்கு முன்பும் கொல்கத்தாவில் இதே போல் சில இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்று பலர் இறந்திருக்கிறார்கள்.

கொல்கத்தா மட்டுமல்ல, கும்பகோணம் பள்ளி, திருச்சி திருமண மண்டபம், தில்லி தியேட்டர் என்று பல இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்றிருக்கின்றன.

மனித உயிர்களை மிகவும் துச்சமாக மதித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதே இந்த அனைத்து விபத்துகளுக்கும் மூல காரணம்.

திட்டமிடாத நகர வளர்ச்சி.. குறுகலான இட வசதிகள்.. நெருக்கடியான வசதி குறைவான இடங்கள்..

இதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் வெறும் கடிதம் கொடுத்துவிட்டு தம் கடமையை நிறைவேற்றி விட்டதாக ஜம்பமடித்துக் கொள்கின்றனர்.

மரித்துப்போன மனிதர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் என்ன பதில்?? அரசாங்கம் அறிவிக்கும் சில ஆயிரம் / லட்ச ரூபாய்களால் அந்த இழப்புகளை சரிசெய்ய முடியுமா??

இதேபோல இன்னும் எத்தனை இடங்கள் தீயில் எரிய காத்திருக்கின்றனவோ தெரியவில்லை.

இந்த பிரச்சினையின் ஆணிவேர் நம் அலட்சியம். தேவையான வசதிகளை செய்வதில் அலட்சியம். செய்பவர்களை கண்காணிப்பவர்களின் அலட்சியம். இந்த சூழலில் இருக்கும் சில லஞ்ச லாவண்யமும் மிக முக்கிய காரணம்..

இந்த இறப்புகளுக்கு யாருக்கு என்ன தண்டனை தர?? இவர்களையும் அப்படியே எரித்துவிடலாமா??

எரிந்த பின் எல்லோரும் அழவும், சிலர் மரிக்கவும் ஒருசிலரின் இந்த அலட்சியம் காரணமாகின்றது.

எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்து, தேவையான வசதிகளை, சட்டப்படி செய்து, அதிகாரிகளும் நேர்மையுடன் இதை கண்காணித்து, தேவையான நேரத்தில், சரியான நடவடிக்கைகள் எடுத்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.. செய்வார்களா??? காலமும் கடவுளும் தான் பதில் சொல்லணும்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தரமஹாலிங்கமே போற்றி...

Wednesday, December 7, 2011

சமூக அவலங்களும், கர்ம வினைகளும், ஞானிகளும்

நம் வாழ்வில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கான மூல காரணம் நம் கர்ம வினைகளின்பால் உள்ளது. அதுபோல நம் சமூகத்தில் நிலவும் பலவித பிரச்சினைகளுக்கான காரணமும் இந்த கர்ம வினைகளை சார்ந்தே இருக்க முடியும். பல தனிமனிதர்களின் கர்ம வினைகள்தான் ஒரு சமூகத்தில் பிரதிபலிக்கின்றன.

கர்ம வினை எனப்படுவது என்ன? இதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும், நான் எளிதில் புரிந்துகொண்டிருக்கும் சில விளக்கங்கள் கீழே

நாம் செய்யும் நல்ல / கெட்ட செயல்களால் நமக்குள் / அதனால் பாதிப்படைபவருக்குள் உருவாகும் எண்ண அலைகளின் பாதிப்புதான்.

ஒருவித எதிர்பார்ப்போடு செய்யப்படும் / செயல்படும் வினைகளின் விளைவு சிந்தனை மூலம் வெளிப்படும். இந்த சிந்தனைகளின் பாதிப்புதான் கர்ம வினை.

எந்த ஒரு செயலும் நல்லது அல்லது கெட்டது என்று வகைப்படுத்த நம் சிந்தனையில் அந்த செயல் ஏற்படுத்தும் பாதிப்பே முக்கிய காரணம். ஒரு விசயத்தை நாம் மனதளவில் எடுத்துக்கொள்ளும் / ஏற்றுக்கொள்ளும் விதம்(பக்குவம்)தான், அதனால் நாம் பாதிப்படைகிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

பாதிப்படைந்தால் கர்ம வினை நிச்சயம். பாதிப்படையாமல் இருக்க பழகிக்கொள்ளவே பல ஆன்மீக சாதனைகள் உதவுகின்றன.


சுருக்கமாக சொன்னால் இந்த கர்ம வினை என்பதும் ஒருவித‌ சக்திதான்.  எனவே The law of conservation of energy இங்கும் பொருந்தும்.

The law of conservation of energy states that energy may neither be created nor destroyed. Therefore the sum of all the energies in the system is a constant.

அதாவது இந்த உலகின் கர்ம வினை என்பது ஒரே நிலையில் இருக்கும். இதை அழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியதாகினும், இதை நிச்சயம் வேறு திசைகளில் திருப்பிவிட முடியும் என்பது புலனாகிறது.

மனிதர்களுக்கிடையில் இந்த கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றிக் கொள்ளும் வல்லமை நிச்சயம் இருக்கும். அதை சில ஞானிகள் உபயோகப்படுத்தியும் இருக்கிறார்கள்.

இதுபோல் சமூகத்தில் இருக்கும் கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றும் வல்லமை இருக்கும் ஞானிகள் இருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் இதற்குள் ஏதாவது செய்து சமூக அவலங்களை தடுத்திருப்பார்கள்.

அதனால் அப்படி யாரும் இதுவரை இல்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் விரைவில் உருவாக வேண்டும். அவர்களால் இந்த சமூகத்துக்கும் அதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்.

கடவுளே மஹாலிங்கம் சிறந்த ஞானிகள் நாட்டில் தோன்றி சமூகத்தின் கர்ம வினைகளை சீர்படுத்தி மக்கள் சுபிட்சமாக வாழ அருள் செய்யுங்க..

சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..