Friday, December 30, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4a குருவைத் தேடி-2

குரு அடையாளம் தெரிந்த சில நாட்களில் மீண்டும் குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது. நம் குருவுக்கும் நாம் கும்பிடும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரையும் அருவமாகவே உணர முடிகிறது. நேரில் இருக்கும் குரு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

எனது குருதேவரிடமே மீண்டும் பிரார்த்தனை ஆரம்பித்தது. எனக்கு தங்கள் ஆசியை கொண்டுவந்து கொடுப்பவர் இன்னார்தான் என அடையாளம் காட்ட வேண்டினேன்.

இந்த நேரத்தில், எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. உண்மையில் மனம் உடைந்து விட்டது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட காலம் என்பதால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 45 நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சென்றுவிட்டேன்.  சம்பளம் தருவார்களா என தெரியவில்லை.  சோதனை மேல் சோதனை. குருவின் மீது பாரத்தைப் போட்டு இருந்தேன்.

அப்போது மன அழுத்தம் மிக அதிகமாகி கடவுள், குரு, சுற்றம்,  நட்பு எல்லாம் என்னை விட்டு விலகி அனாதை ஆகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு ஆட்கொண்ட நேரம்.

அப்போது ஆனந்த விகடன் புத்தகத்தில் ஒரு ராஜ யோக பயிற்சியாளர் பண சம்பத்தை அளிக்கும் பூஜை கற்றுத்தர ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். ஜாதகத்துடன் விண்ணப்பிக்க சொல்லி இருந்தது.

இதற்கு விண்ணப்பித்து, அந்த பூஜைகள் செய்து ஏதாவது மாறுதல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் ஒரு விண்ணப்பம் தட்டி விட்டேன். சில நாட்களில் அதை மறந்தும் விட்டேன்.

உடல்நிலை ஓரளவு தேறி, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு அந்த ராஜ யோக பயிற்சியாளர், அந்த பூஜை முறை கற்றுக்கொள்ள எனக்கு தகுதி இருப்பதாகவும், உடனடியாக கிளம்பி வரவும் என கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தை படித்த விநாடியில் இருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது. மனம் ஒரு நிலையில் இல்லை. கட்டுப்பாடு இழந்து சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக‌ இருந்தது. ஆனால் பணம் செலவளித்து இதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை அலைக்களித்தது.

மறுநாள் மீண்டும் மனதில் ஒருவிதமான வித்தியாசமான உணர்வு பரவுவதை உணர்ந்தேன். இப்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற ஒரு உணர்வில் மயக்கமான நிலைக்கு போய்விட்டேன்.

எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னை கவனித்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டினார். நான் நடந்த விசயங்களை சொல்லி அந்த ராஜ யோக பயிற்சியாளர் அனுப்பிய கடிதத்தை காண்பித்தேன்.

அவர் உடனடியாக ஒரு ஆஞ்சனேய உபாசகரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் சென்று பார்க்கும்படி கூறினார். அங்கு சென்றதும் அவர் என்னிடம் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து, எனக்கு திருஷ்டி பாதிப்பு இருப்பதாகவும், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி அது செய்ய வைத்தார்.

அப்போதிலிருந்து தொடர்ந்து சுமார் 10 நாட்கள், அந்த பயம் போன்ற  உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தியான ஆசிரியரிடம் ஏதாவது தியானம் மூலம் இதை சரி செய்ய முடியுமா என்று வினவினேன். அவர் அந்த ஆஞ்சனேய பக்தரிடம் தொடர்ந்து சென்று வர ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில் எனது சகஜ மார்க்க நண்பர்கள் மூலம் அவர்களின் தியானமுறையில் இதை சரி செய்ய முடியுமா என முயற்சித்தேன். ஆனால் அவர்கள் தியானம் கற்றுக் கொண்டால்தான் அது குறித்து முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு சுமார் ஒரு மணிநேரம் அதன் முக்கியத்துவதுவம் குறித்து விளக்க உரையும் கொடுத்தார்கள். எனக்கு தியானம் புதிதாக கற்றுகொள்ள விருப்பம் இல்லை என கூறி விட்டு அப்போது வந்து விட்டேன்.

ஆனால் மறுநாள் என்னால் வீட்டில் இருக்க முடிய வில்லை. எப்படியாவது சகஜ மார்க்க தியானம் கற்று கொள்ள வேண்டும் என்று என் மனதில் இருந்து திரும்ப திரும்ப சிந்தனை வந்து கொண்டிருந்தது. அது ஒரு மிகப் பெரிய உந்து சக்தி போல என்னைத் தள்ள ஆரம்பித்தது. தாங்க முடியவில்லை என்னால்.

உடனடியாக எனது தியான ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, சில நாட்கள் சகஜ மார்க்க தியானம் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். அதற்கு தங்கள் அனுமதி தேவை என விண்ணப்பித்தேன். அவர் என்னை நேரில் வரும்படி பணித்தார்.

எங்கள் குழு தியான அறையில் தியான ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டேன். மானசீகமாக என் குருநாதர் விக்கிரகத்துக்கு முன் மண்டியிட்டு என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் எந்த நிலையிலும் எனக்கு துணையாக இருக்கும்படியும் வேண்டினேன்.

சிறிது நேரத்தில் தியான ஆசிரியர் அந்த அறைக்குள் வந்தார். நேராக குருவின் மூர்த்திக்கு ஆரத்தி காண்பித்து என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, எந்த தியானமானாலும் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி பாதியில் விட்டு செல்லக்கூடாது. மாற்றி மாற்றி தியானம் செய்தால் அது நல்லதல்ல என அறிவுரை கூறினார். பிறகு வேறு தியானம் செய்வது என் சொந்த விருப்பம் எனவும், சிறிது நேரம் தியான அறையில் ஓய்வு எடுத்துவிட்டு செல்லும் படியும் பணித்து சென்றுவிட்டார்.

அவர் தியான அறையை விட்டு அகன்ற விநாடியில் என் மனதில் இருந்த அந்த அரிப்பு அகன்று விட்டது. சுமார் 15 நிமிடங்கள் அந்த தியான அறையில் அமைதியாக இருந்த பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு. மனதில் ஒரு தெளிவு. என் குருநாதரின் பரிபூரண ஆசி எங்கள் தியான ஆசிரியர் மூலம் எங்களுக்கு வருவதை குறிப்பால் உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்ததுபோன்ற ஒரு தோற்றம் மனதில் ஏற்பட்டது. வாழ்வோ சாவோ இனி நம் குருதேவருடன் தான் என மன தெளிவு வந்தது.

அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.

பிறகு தொடர்ந்து 3 மாதங்கள் சில பரிகாரங்கள் வீட்டில் செய்து அந்த ஆஞ்சனேயர் உபாசகர் மூலம் தாயத்து செய்து அணிந்த பிறகு பூரண குணம் கிடைத்தது.

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

5 comments:

shanmugavel said...

தங்கள் அனுபவங்கள் குருவின் அவசியத்தை உணர்த்துகிறது.நம்முடைய கட்டுப்பாட்டை மீறி மனம்,உடல் சஞ்சலத்துக்கு ஆளாகும்போது குருவால் அதை நீக்க முடியும்.பகிர்வுக்கு நன்றி

S.Muruganandam said...

//அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.//

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்று தெளிவாக விளக்குகின்றது தங்கள் அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், கைலாஷி ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Appu said...

Good Experience. Good Sharing..

Sankar Gurusamy said...

திரு அப்பு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..