Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Friday, December 30, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4a குருவைத் தேடி-2

குரு அடையாளம் தெரிந்த சில நாட்களில் மீண்டும் குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது. நம் குருவுக்கும் நாம் கும்பிடும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரையும் அருவமாகவே உணர முடிகிறது. நேரில் இருக்கும் குரு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

எனது குருதேவரிடமே மீண்டும் பிரார்த்தனை ஆரம்பித்தது. எனக்கு தங்கள் ஆசியை கொண்டுவந்து கொடுப்பவர் இன்னார்தான் என அடையாளம் காட்ட வேண்டினேன்.

இந்த நேரத்தில், எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. உண்மையில் மனம் உடைந்து விட்டது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட காலம் என்பதால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 45 நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சென்றுவிட்டேன்.  சம்பளம் தருவார்களா என தெரியவில்லை.  சோதனை மேல் சோதனை. குருவின் மீது பாரத்தைப் போட்டு இருந்தேன்.

அப்போது மன அழுத்தம் மிக அதிகமாகி கடவுள், குரு, சுற்றம்,  நட்பு எல்லாம் என்னை விட்டு விலகி அனாதை ஆகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு ஆட்கொண்ட நேரம்.

அப்போது ஆனந்த விகடன் புத்தகத்தில் ஒரு ராஜ யோக பயிற்சியாளர் பண சம்பத்தை அளிக்கும் பூஜை கற்றுத்தர ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். ஜாதகத்துடன் விண்ணப்பிக்க சொல்லி இருந்தது.

இதற்கு விண்ணப்பித்து, அந்த பூஜைகள் செய்து ஏதாவது மாறுதல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் ஒரு விண்ணப்பம் தட்டி விட்டேன். சில நாட்களில் அதை மறந்தும் விட்டேன்.

உடல்நிலை ஓரளவு தேறி, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு அந்த ராஜ யோக பயிற்சியாளர், அந்த பூஜை முறை கற்றுக்கொள்ள எனக்கு தகுதி இருப்பதாகவும், உடனடியாக கிளம்பி வரவும் என கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தை படித்த விநாடியில் இருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது. மனம் ஒரு நிலையில் இல்லை. கட்டுப்பாடு இழந்து சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக‌ இருந்தது. ஆனால் பணம் செலவளித்து இதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை அலைக்களித்தது.

மறுநாள் மீண்டும் மனதில் ஒருவிதமான வித்தியாசமான உணர்வு பரவுவதை உணர்ந்தேன். இப்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற ஒரு உணர்வில் மயக்கமான நிலைக்கு போய்விட்டேன்.

எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னை கவனித்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டினார். நான் நடந்த விசயங்களை சொல்லி அந்த ராஜ யோக பயிற்சியாளர் அனுப்பிய கடிதத்தை காண்பித்தேன்.

அவர் உடனடியாக ஒரு ஆஞ்சனேய உபாசகரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் சென்று பார்க்கும்படி கூறினார். அங்கு சென்றதும் அவர் என்னிடம் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து, எனக்கு திருஷ்டி பாதிப்பு இருப்பதாகவும், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி அது செய்ய வைத்தார்.

அப்போதிலிருந்து தொடர்ந்து சுமார் 10 நாட்கள், அந்த பயம் போன்ற  உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தியான ஆசிரியரிடம் ஏதாவது தியானம் மூலம் இதை சரி செய்ய முடியுமா என்று வினவினேன். அவர் அந்த ஆஞ்சனேய பக்தரிடம் தொடர்ந்து சென்று வர ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில் எனது சகஜ மார்க்க நண்பர்கள் மூலம் அவர்களின் தியானமுறையில் இதை சரி செய்ய முடியுமா என முயற்சித்தேன். ஆனால் அவர்கள் தியானம் கற்றுக் கொண்டால்தான் அது குறித்து முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு சுமார் ஒரு மணிநேரம் அதன் முக்கியத்துவதுவம் குறித்து விளக்க உரையும் கொடுத்தார்கள். எனக்கு தியானம் புதிதாக கற்றுகொள்ள விருப்பம் இல்லை என கூறி விட்டு அப்போது வந்து விட்டேன்.

ஆனால் மறுநாள் என்னால் வீட்டில் இருக்க முடிய வில்லை. எப்படியாவது சகஜ மார்க்க தியானம் கற்று கொள்ள வேண்டும் என்று என் மனதில் இருந்து திரும்ப திரும்ப சிந்தனை வந்து கொண்டிருந்தது. அது ஒரு மிகப் பெரிய உந்து சக்தி போல என்னைத் தள்ள ஆரம்பித்தது. தாங்க முடியவில்லை என்னால்.

உடனடியாக எனது தியான ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, சில நாட்கள் சகஜ மார்க்க தியானம் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். அதற்கு தங்கள் அனுமதி தேவை என விண்ணப்பித்தேன். அவர் என்னை நேரில் வரும்படி பணித்தார்.

எங்கள் குழு தியான அறையில் தியான ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டேன். மானசீகமாக என் குருநாதர் விக்கிரகத்துக்கு முன் மண்டியிட்டு என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் எந்த நிலையிலும் எனக்கு துணையாக இருக்கும்படியும் வேண்டினேன்.

சிறிது நேரத்தில் தியான ஆசிரியர் அந்த அறைக்குள் வந்தார். நேராக குருவின் மூர்த்திக்கு ஆரத்தி காண்பித்து என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, எந்த தியானமானாலும் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி பாதியில் விட்டு செல்லக்கூடாது. மாற்றி மாற்றி தியானம் செய்தால் அது நல்லதல்ல என அறிவுரை கூறினார். பிறகு வேறு தியானம் செய்வது என் சொந்த விருப்பம் எனவும், சிறிது நேரம் தியான அறையில் ஓய்வு எடுத்துவிட்டு செல்லும் படியும் பணித்து சென்றுவிட்டார்.

அவர் தியான அறையை விட்டு அகன்ற விநாடியில் என் மனதில் இருந்த அந்த அரிப்பு அகன்று விட்டது. சுமார் 15 நிமிடங்கள் அந்த தியான அறையில் அமைதியாக இருந்த பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு. மனதில் ஒரு தெளிவு. என் குருநாதரின் பரிபூரண ஆசி எங்கள் தியான ஆசிரியர் மூலம் எங்களுக்கு வருவதை குறிப்பால் உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்ததுபோன்ற ஒரு தோற்றம் மனதில் ஏற்பட்டது. வாழ்வோ சாவோ இனி நம் குருதேவருடன் தான் என மன தெளிவு வந்தது.

அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.

பிறகு தொடர்ந்து 3 மாதங்கள் சில பரிகாரங்கள் வீட்டில் செய்து அந்த ஆஞ்சனேயர் உபாசகர் மூலம் தாயத்து செய்து அணிந்த பிறகு பூரண குணம் கிடைத்தது.

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Friday, December 23, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4 ‍- குருவைத் தேடி.. 1

என்னதான் நாம் கடவுள்மீது பக்தி செலுத்தினாலும் ஒரு குரு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனாலும் யாரை குருவாகக் கொள்வது எனவும் மனதில் ஒரே குழப்பமாகவும் இருந்தது.

அப்போது எனது நண்பர்கள் சிலர் சகஜ மார்க்கம் எனப்படும் ராமச்சந்திரா மிஷனில் தியானம் செய்பவர்களாக இருந்தார்கள்(இன்னும் இருக்கிறார்கள்). அவர்களை அவ்வப்போது சென்று அவர்கள் மணப்பாக்கம் ஆசிரமத்தில் சந்திப்பேன்.

அந்த ரம்யமான சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர்கள் மார்க்கம் சார்ந்த சில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் தியானம் கற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்ததால் கற்றுக் கொள்ளவில்லை. பலவிதமான விசயங்களைப்பற்றி விவாதங்கள் செய்வோம். அதில் கடவுள், பக்தி, தியானம், யோகம் இவைதான் அதிகம் இருக்கும்.

இந்த சூழலில் எனது குரு தேடலைப் பற்றி தெரிந்த அந்த நண்பர், கடவுளிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்தால் நல்ல குரு அமைவார் என அறிவுறுத்தினார். நான் அப்போதெல்லாம், சைதை காரணீஸ்வரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்கேயே இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மருந்துகளை அறவே நிறுத்திவிட்டு ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து எடுத்து வந்தேன்.

அலுவலகத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் நிலையை அடிக்கடி பாதித்துக் கொண்டே வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஹோமியோபதி மருந்துகள் எடுத்தும் ஒன்றும் பெரிய முன்னேற்றம் இல்லை.

எனது ஹோமியோபதி மருத்துவர் ஒரு முறை எனது ரத்த அழுத்தத்தை சோதித்தபோது மிக அதிகமாக இருந்தது. அதற்கு மருந்தாக ஆழ்நிலை தியானம் கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். வேறு மருந்து எதுவும் தரவில்லை.

உடனடியாக மறுநாள் 23 ஜனவரி 1997 அன்று, மஹரிஷி வித்யா மந்திர் சென்று ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன். அப்போதும் எனக்கு ஒரே குழப்பம். இந்த தியானம் சொல்லிக் கொடுப்பவர் தான் எனது குருவா?? இருந்தாலும் ஒரு தெளிவு. நம் பிரார்த்தனைக்கு கடவுள் எப்படி செவி சாய்க்கிறார் என‌ பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

தியானம் கற்றுக் கொண்ட சில நாட்களிலேயே எனது ரத்த அழுத்தம் சீராகி விட்டது. இருந்தாலும் மருத்துவர் அறிவுரைப்படி தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

அடுத்த ஆறு மாதங்களில் ஆழ்நிலை தியானத்தின் அடுத்த நிலையான சித்திப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்போது எனக்கே ஒரு ஆர்வம் வர ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஆர்வமுடன், தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

தியானம் தொடர்ந்து செய்துவர எனக்கு மனதின் ஆழத்தில் இவர்தான் எனது குரு என அடையாளம் தெரிந்தது. ஆம்!! ஆழ்நிலை தியானம் செய்வதற்காக பூஜை செய்யும் தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள்தான் அது.

மனதில் மிக ஆழமாக என் குரு பதிந்துவிட்டார். அவர் அப்போது தன் பூத உடலில் இல்லாவிட்டாலும் அவர்தம் கருணை பூரணமாக வியாபித்திருப்பதை உணர முடிந்தது.

ஜெய் குரு தேவ்...

Tuesday, July 19, 2011

முத்தான மூன்று..

திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களின் அழைப்பிற்கிணங்க முத்தான மூண்று என்ற தலைப்பில் இந்த சங்கிலிப் பதிவு :

குரு :
மூன்று என்றவுடன் நியூமராலஜியில் குருவைக் குறிக்கும். முதலில் என் குருவை வணங்கி இந்த சங்கிலிக் கண்ணிப் பதிவு நல்ல படியாக வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...

கடவுள் கடாட்சம் :
அந்த உலகளந்த பெருமாள் மூன்று அடிகளால் இந்த உலகத்தை அளந்து மாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி ஆட்கொண்டதாக புராணம் கூறுகிறது.. அந்த மாயவன் இறைவன் நம் அனைவரின் மும்மலங்களான கர்மங்களை அடக்கி ஆட்கொள்வானாக...

குடும்பத் துணை :
இந்துக்களான நம் திருமண வாழ்க்கை தாலியில் மூன்று முடிச்சுடன் தொடங்குகிறது.. அனைவருக்கும் சிறப்பான திருமண வாழ்வு அமைந்து சுபிட்சமாக வாழ ஆண்டவன் அருளட்டும்...

சந்தர்ப்பங்கள் :
நீரில் நீச்சல் தெரியாதவர்கள் விழுந்துவிட்டால் மூன்று முறை அவர்களை நீர் மேலே தூக்கி விடுமாம்.. அதுபோல் நம் வாழ்விலும் இக்கட்டான நிலைகளில் ஆண்டவனும் நம்மை பலமுறை தூக்கி விடுகிறான்.

மகிழ்ச்சி :
அந்த காலத்தில் சினிமாவில் ஹீரோ வில்லனிடம் எப்பவும் மூன்று அடி வாங்கி விட்டுத்தான் திருப்பி அடிக்க ஆரம்பிப்பார். அது என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை. இப்ப நினைச்சாலும் புரியவில்லை...ஆனா நம்மளால அத விசில் அடிச்சு சந்தோசமா எஞ்ஜாய் பண்ண முடிஞ்சது...


கடவுளே மஹாலிங்கம்,  உலக மக்கள் அனைவருக்கு அருமையான குரு அமைந்து, கடவுள் கடாட்சம் கிடைத்து, சிறந்த குடும்பத் துணை அமைந்து, வாழ்வில் முன்னேற சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைத்து, மகிழ்ச்சியான, நிறைவான ஒரு வாழ்க்கை ஏற்பட அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....ஹரஹர மஹாதேவா போற்றி...

இந்த சங்கிலித் தொடரைத்தொடர திரு ஷண்முகவேல் அவர்களை அழைக்கிறேன்... http://counselforany.blogspot.com/

Tuesday, April 5, 2011

ஞான குருவின் உபதேச மகிமை...

ஒரு மனிதன் ஞானம் அடைவதற்கு ஒரு குருவின் துணை மிகவும் அவசியம். இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது, என் மனதில் எழுந்த சிந்தைகள், சில பழைய நிகழ்வுகளின் நினைவுகளின் பதிவு.

தனியாக மனிதன் ஞானம் அடைய முடியாது. குரு இல்லாமல் ஞானம் இல்லை. குரு உபதேசம் மிகமுக்கியம். ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவர்களாலேயே உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும். உடனடியாக இல்லாவிட்டாலும், சற்று தாமதமாகவாது. குரு உபதேசித்த வழி நடந்தாலே ஞானம் சித்திக்கும்.

குரு உபதேசம் பொதுவானது அல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. அது எப்படிப்பட்டது என்பதை குருவே முடிவு செய்வார். ஒருவருக்கான உபதேசம் மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை. அதனால் இதில் உயர்ந்த உபதேசம், தாழ்ந்த உபதேசம் என்ற பேதமில்லை. அவரவருக்கு அவரவருக்கான குரு உபதேசமே உயர்ந்தது, சிறந்தது. அதுவே அவரவருக்கான வழி. இதை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதை கடமையாகக் கொண்டால் கண்டிப்பாக ஞானம் சித்திக்கும்.

இதைப்பற்றி சிந்திக்கும் பொழுது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பரின் நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்ட அவரின் அனுபவம் ஞாபகத்தில்  வருகிறது.

அவ‌ருட‌னான‌ என‌து ச‌ந்திப்பு ஒருமுறைதான் ந‌ட‌ந்தாலும், அந்த அனுபவம் என் ம‌ன‌தில் மிக‌ ஆழ‌மாக‌ப் ப‌திந்துவிட்ட‌து. அவ‌ருக்கான‌ குரு உப‌தேச‌மாக‌க் கிடைத்த‌து, "ப‌சி ஆற்றுத‌ல்". அன்ன‌தான‌ம் செய்ய‌வேண்டும்.

அவ‌ரோ மிக‌வும் வ‌றுமையில் இருப்ப‌வ‌ர். குறைந்த‌ ச‌ம்பாத்தியத்தில் நிறைவான குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர். இருந்தாலும் குரு உப‌தேச‌த்தை சிர‌மேற்கொண்டு அவ‌ர் ப‌சி ஆற்றுத‌ல் ஆர‌ம்பித்தார். த‌ன் சொந்த‌ செல‌வில்தான். சில நண்பர்க்ள் உதவியும் சேர அது கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. சிறிய அளவிலானதானாலும் தின‌ந்தோறும் செய்து வ‌ந்தார்.

ஒரு நாள், மிக‌க் க‌டின‌மான‌ சூழ‌லில், வீட்டுக்கு ச‌மைக்க‌வே ஒன்றும் இல்லாத‌ நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து. அன்று அவ‌ர் ம‌ன‌தில்  எப்ப‌டி செய்வ‌து? என்ன செய்வது? என்று ப‌ல‌ ச‌ஞ்ச‌ல‌ங்க‌ள். க‌டைசியில் அவ‌ர் முடிவு செய்த‌து "அடுப்பை மூட்டி, த‌ண்ணீரை வைப்போம். கொதிக்க‌ வேண்டிய‌து, வெறும் த‌ண்ணீரா அல்ல‌து அரிசியா என்ப‌தை க‌ட‌வுள் முடிவு செய்ய‌ட்டும்"

அதிகாலை, வெறும் அடுப்பை மூட்டிக் கொண்டிருந்த‌ போது அவ‌ர‌து ந‌ண்ப‌ர் அனுப்பிய‌தாக‌ சில‌ மூட்டை அரிசியும் காய்க‌றி ம‌ளிகை சாமானுட‌ன் ஒரு மாட்டு வ‌ண்டியில் ஒருவ‌ர் வ‌ந்து கொடுத்தாராம். மிக‌ ம‌கிழ்ச்சியுட‌ன் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ச‌மைய‌ல் செய்து அன்ன‌ தான‌ம் செய்தாராம்.

அப்போது அவ‌ர் உண‌ர்ந்த‌து : "இதை ந‌ட‌த்துவ‌து நான் அல்ல. குரு உப‌தேச‌ம் தான் இதை ந‌ட‌த்துகிற‌து". அப்போது முதல் தடையின்றி அன்னதானம் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

குருவின் உப‌தேச‌த்தின் ப‌டி "நாம்" ந‌ட‌ப்ப‌தாக‌ நாம் எண்ணினாலும் அதை உண்மையில் ந‌ட‌த்துவ‌து அந்த‌ ஞான‌ குருவின் ஆசீர்வாதமே.. எனவே உபதேசம் ப‌ற்றிய‌ சாத்திய‌ அசாத்திய‌ங்க‌ளைப்ப‌ற்றி அதிக‌ ஆராய்ச்சி செய்ய‌த் தேவை இல்லை. குருவின் ஞான உபதேசத்தை அப்படியே கடைப்பிடித்தால் ஞானம் நிச்சயம்.


க‌ட‌வுளே ம‌ஹாலிங்க‌ம், உங்க‌ள் அருளாலே அனைவ‌ருக்கும்  ஞான‌ ஆர்வ‌ம் ஏற்ப‌ட்டு, ந‌ல்ல ஞான‌ குரு அமைந்து, ஞான உபதேசம் கிடைத்து, ஞானம் அடையணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி..