கடவுளைப் பற்றிய பல விவாதங்களில் என்னிடம் எழுப்பட்ட பல சந்தேகங்களில் இருந்து ஏன் சிலர் கடவுளை மறுக்கிறார்கள் என ஆராய முற்பட்டதன் விளைவுதான் இந்த பதிவு. கடவுள் மறுப்பு என்பது அவர்களின் விருப்பம் என்றாலும், அவர்கள் இதுகுறித்து எழுப்பிய சில கேள்விகள் மிகவும் சங்கடமானவையே. அது குறித்து :
1) கடவுள் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்தான் கடவுள் மறுப்பின் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இதில் கடவுள் பங்கு நேரடியாக இல்லை எனினும், கடவுளை முன்னிறுத்தி சில சமூகத்தினர் விளையாடிய அரசியல் விளையாட்டில் வாழ்வையும் உரிமையையும் பல தலைமுறைகளாக பறிகொடுத்தனர் பலர். அந்த அழுத்தத்தின் விளைவு கடவுள் மறுப்பாக வெளிப்பட்டது.
2) கடவுள் என்பவர் மந்திர / மாய சக்தி கொண்ட இன்னொரு மனிதராக அடையாளப்படுத்தி எண்ணுதல். அப்படிப்பட்ட யாரும் இங்கு வெளியில் இல்லை. நமக்குள்ளே இருக்கும் கடவுளை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அடையாளக் குறியீடுகள்தான் இந்த கடவுளர்கள். இது கடவுளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே.
3) கடவுள் என்று ஒருவர் இருந்தால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வோ, ஊழல், லஞ்சம், துரோகம், போர், இயற்கை சீற்றம் இவை இருக்க முடியாது/ கூடாது என எண்ணுதல். அந்தர் யாமியாக நமக்குள் இருக்கும் கடவுள் நம் மூலம்தான் செயல்படுகிறார். மேலும் கடவுள் நன்மை மட்டுமே செய்பவர் என்ற மாய தோற்றமும் இருக்கிறது. நாம் செய்யும் நல்ல வினைகளுக்கு நல்ல செயல்களும், தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார். நம்மைப் போன்ற மனிதர்களாலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கர்ம வினைகளாலும்தான் இந்த சமூக அரசியல் இவ்வாறு இருக்கிறதே ஒழிய இது கடவுளின் விருப்பப்பட்ட நேரடி செயல் அல்ல. இதுவும் கடவுளை தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான். மனிதன் செய்யும் வினைகளுக்கு கடவுளை பலிகடா ஆக்கி விட்டார்கள்.
4) நம் வாழ்வில் ஏற்படு நல் / தீய கர்மங்கள் பற்றிய குறுகிய அறிவு. நாம் காணும் வாழ்க்கை / பிறப்பு என்பது இப்போது இருப்பது மட்டுமல்ல. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது. ஆனால் இந்த பல பிறவிகளைப் பற்றிய தேற்றம் பொதுவில் நிறுவ முடியாதபடி இருப்பதால் இந்த குழப்பம் வந்து கடவுள் மறுப்பாக மறுவி விட்டது.
5) இறுதியாக சமூக சூழல் சம்பந்தப்பட்டது. சேரும் நட்பும் சுற்றமும் கடவுள் மறுப்பில் இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு தானும் கடவுள் மறுப்பை கைகொள்வது. எப்படி ஒரு மதத்தினரின் குடும்ப சூழலில் வளரும் குழந்தை அந்த மதத்தை கைகொள்கிறதோ அதுபோல.மொத்தத்தில் கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது.
மனிதன் கடவுளை மறுப்பதில் தவறு எதுவும் இல்லை. தன் வாழ்வில் நேர்மையும், தன்னம்பிக்கையும், மனசாட்சிப்படி நடக்கும் வல்லமையும், சக மனிதனின் மேல் அக்கரையும், அன்பும் உடைய எவரும் கடவுளை நம்ப அவசியமில்லை. ஒவ்வொரு மதமும், கடவுளும் மனிதனுக்கு இதை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
கடவுளே மஹாலிங்கம், இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும், நேர்மையோடும், சக மனிதன் மேல் அன்பும், அக்கரையும் கொண்டு, மனசாட்சிப்படி நடக்க நீங்கதான் அருள் செய்யணும்.
சதுரகிரி சுந்தமஹாலிங்கத்துக்கு அரோஹரா...