Monday, December 19, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍ 3a - மாரியம்மன்

சென்னைக்கு வந்த புதிது.  எனது ஒரு நண்பன் ஒருவருடன் இணைந்து ஒரு ரூம் எடுத்து தங்கினோம்.அவர் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தார். நாங்கள் இணைந்து ரூம் எடுப்பதற்கு முன் ஒரு கிறிஸ்தவ பாஸ்டர் ஒருவரின் குடும்பத்துடன் தங்கி இருந்தார். என்னை அந்த பாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

என்னைப் பார்த்தது முதல் அந்த பாஸ்டர் தன் மதப் பிரச்சாரத்தை தொடங்கினார். கிறிஸ்துதான் ஒரே கடவுள்; மற்ற அனைத்தும் பேய்; அதை வழிபடுபவர்கள் சாத்தான்கள் என்று சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டார்.

எனக்கே நான் கும்பிடுவது பேய்தானோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு குழப்பிவிட்டார். நானும் அப்போது அவரிடம் பேசி சமாளித்தாலும் நன்றாக குழம்பிவிட்டேன்.

என் நண்பனும் பாஸ்டரின் அருமை பெருமைகளை பற்றி விலாவரியாக கூறிக்கொண்டிருந்தான். மதம் மாறினால் நம்மை நன்றாக கவனித்துக் கொள்வார்கள், நம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள், வாழ்க்கை விடிந்து விடும் என தூபம் போட்டுக்கொண்டிருந்தான். வாழ்வின் பல பிரச்சினைகளில் இருந்த எனக்குள் முயற்சி செய்தால்தான் என்ன? என்ற சிந்தனைகூட வர ஆரம்பித்து விட்டது.

மேலும் என்னைப் பயமுறுத்த, அந்த பாஸ்டர் ஒரே மாதத்தில் என்னை மதமாற்றம் செய்ய தீவிர பிரார்த்தனை செய்வதாக கூறி கிலி ஊட்டினான்.

எனக்கு சாமி படத்தை பார்த்தாலே பேயைப் பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. உலகமே எனக்கு ஒரு வித்தியாசமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஆட்கொண்டது.

இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டே வந்தது. இரண்டு வாரங்களில் தினந்தோறும் ஆஸ்துமா ஊசி போட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இந்த நிலையில் பல விதமான காட்சிகள் மனதில் பிரமைகளாக ஓடுவதை உணர முடிந்தது. எது கடவுள் என்ற சிந்தனை தீவிரமாக ஆட்கொண்டது.

நாம் அறியும் பெயரும் உருவமும்தான் கடவுளா? இந்த வேறுபாட்டில்தானே மதங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுள் எல்லாமதத்தவரின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறாரே? அது எப்படி? கடவுள் என்பது பெயரை உருவத்தை மீறி இருக்கும் ஒரு சக்தியோ?

என் சொந்த அனுபவத்தில் ஏற்பட்ட பல கடவுள் அனுபவங்கள் என் மனதில் ஓடுகின்றன. குழப்பம் .. மேலும் குழ்ப்பம்..

அப்போது என் நண்பன் என் நிலைமையைப் பார்த்து அந்த பாஸ்டரை என் வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்ய சொல்வதாக சொன்னான். நானும் உடன்பட்டேன். எனக்காக, என் உடல் நலனுக்காக அவரும் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு சென்றார்..

மறுநாள், காலையில் உடலில் அத்தனை சக்தியும் வடிந்துவிட்டதுபோன்ற ஒரு பிரமை. மிகவும் அசதியாக இருந்தது. மனம் மிகவும் தளர்ந்திருந்தது.

மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்றேன்.. ஒரே அதிர்ச்சி.. ரத்தமாக மலவாய் வழியாக போக ஆரம்பித்தது.. மனதில் உயிர் பயம் வர ஆரம்பித்தது.. செத்துவிடுவோமோ என்ற சிந்தனை வந்தது.

உடனடியாக கோவிலுக்கு செல்லவேண்டும் என தோன்றியது. உடனே குளித்து ரெடியாகி இருக்கும் காசை எடுத்துக்கொண்டு மாங்காடு சென்றேன்.

அங்கு சன்னிதி முன் நின்று கோ என தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். வேகுநேர அழுகைக்கு பின், மனதில் ஒரு முடிவு. வாழ்வில் மிக நல்ல நிலைக்கு வந்தால்தான் ஊருக்கு போகவேண்டும். இல்லாவிட்டால் என் தாய் உயிருக்கு போராடினால்தான் என் ஊருக்கு செல்வேன். அதுவரை செல்வதில்லை, என சங்கல்பம் எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டேன்.

மேலும் சில முறை ரத்தமாக போனது. கவலைப்படவில்லை. ஆவது ஆகட்டும். செத்தால் மொத்த விடுதலை.


சுமார் 2 மணி அளவில் என் அலுவலகத்தில் இருந்து என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் கையில் ஒரு பேப்பர்.

என் தாயார் மிகவும் சீரியசாக இருப்பதாக ஊரில் இருந்து தந்தி வந்திருப்பதாக சொன்னார். தலைக்கு மேல் வெள்ளம். கையில் காசில்லை. அலுவலகம் சென்று சம்பளத்தில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.

பஸ் ஊரை நெருங்க நெருங்க உடலில் ஒரு புது சக்தி வருவதாக உணர்ந்தேன். வேகமாக வீட்டை அடைந்தால், என் தாயார் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். என்ன விசயம் என யாரும் ஒன்றும் கூறவில்லை.

உடனே என்னைக் கிளப்பிக் கொண்டு குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு வைத்து அப்போது எனக்கு மாவிளக்கு எடுத்தார்கள்..

எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அப்போது என் தாயார் முன் தினம் மதியம் இருக்கன்குடி வந்திருந்ததாகவும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கு அருள் வந்து உடனடியாக எனக்கு என் தாயார் சீரியசாக இருப்பதாக தந்தி அடித்து வரவழைக்குமாறும் கூறியதாக சொன்னார்கள். நான் இன்னும் இரண்டு நாளில் இங்கு வராவிட்டால் என் உயிருக்கு ஆபத்து என்றும், இப்படி தந்தி கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் எனவும் கூறி இருக்கிறார்கள்..

எல்லாம் எனக்கு அந்த வினாடியில் விளங்கிவிட்டது. நேற்று என் அம்மாவுக்கு அருள் வாக்கு கிடைத்தது, நான் மாங்காடுவில் பிரார்த்தனை செய்துவிட்டு கிளம்பிய அதே நேரம்.

அந்த காக்கும் தாய் என்னைக் காப்பாற்ற என் தாயை பணித்து இருக்கிறாள்..

மெய் சிலிர்த்தது. உண்மையான கடவுள் உருவத்திலோ பெயரிலோ இல்லை என புரிந்தது. உண்மையான பக்தியுடனும் ஏக்கத்துடனும் எங்கிருந்து என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அந்த கடவுள் மனிதனுக்கு இரங்குவார் என தெளிந்தது..

ஓம் சக்தி.. இருக்கன்குடி மாரியம்மனே சரணம்.

7 comments:

shanmugavel said...

இப்படி பலருடைய அனுபவங்களை கேட்டிருக்கிறேன்.நீங்கள் விவரித்துள்ள விதம் அருமை.

rishvan said...

நல்ல அனுபவம்...... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

Sankar Gurusamy said...

திரு ரிஷ்வன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. நிச்சயம் தங்கள் வலைப்பூவை வந்து பார்க்கிறேன்..

S.Muruganandam said...

அருமையான அனுபவம். படித்ததும் உடல் சிலிர்த்தது.

Sankar Gurusamy said...

திரு கைலாஷி ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

மாதேவி said...

நல்ல அனுபவம்.

Sankar Gurusamy said...

திருமதி மாதவி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..