Friday, December 23, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4 ‍- குருவைத் தேடி.. 1

என்னதான் நாம் கடவுள்மீது பக்தி செலுத்தினாலும் ஒரு குரு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனாலும் யாரை குருவாகக் கொள்வது எனவும் மனதில் ஒரே குழப்பமாகவும் இருந்தது.

அப்போது எனது நண்பர்கள் சிலர் சகஜ மார்க்கம் எனப்படும் ராமச்சந்திரா மிஷனில் தியானம் செய்பவர்களாக இருந்தார்கள்(இன்னும் இருக்கிறார்கள்). அவர்களை அவ்வப்போது சென்று அவர்கள் மணப்பாக்கம் ஆசிரமத்தில் சந்திப்பேன்.

அந்த ரம்யமான சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர்கள் மார்க்கம் சார்ந்த சில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் தியானம் கற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்ததால் கற்றுக் கொள்ளவில்லை. பலவிதமான விசயங்களைப்பற்றி விவாதங்கள் செய்வோம். அதில் கடவுள், பக்தி, தியானம், யோகம் இவைதான் அதிகம் இருக்கும்.

இந்த சூழலில் எனது குரு தேடலைப் பற்றி தெரிந்த அந்த நண்பர், கடவுளிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்தால் நல்ல குரு அமைவார் என அறிவுறுத்தினார். நான் அப்போதெல்லாம், சைதை காரணீஸ்வரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்கேயே இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மருந்துகளை அறவே நிறுத்திவிட்டு ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து எடுத்து வந்தேன்.

அலுவலகத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் நிலையை அடிக்கடி பாதித்துக் கொண்டே வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஹோமியோபதி மருந்துகள் எடுத்தும் ஒன்றும் பெரிய முன்னேற்றம் இல்லை.

எனது ஹோமியோபதி மருத்துவர் ஒரு முறை எனது ரத்த அழுத்தத்தை சோதித்தபோது மிக அதிகமாக இருந்தது. அதற்கு மருந்தாக ஆழ்நிலை தியானம் கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். வேறு மருந்து எதுவும் தரவில்லை.

உடனடியாக மறுநாள் 23 ஜனவரி 1997 அன்று, மஹரிஷி வித்யா மந்திர் சென்று ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன். அப்போதும் எனக்கு ஒரே குழப்பம். இந்த தியானம் சொல்லிக் கொடுப்பவர் தான் எனது குருவா?? இருந்தாலும் ஒரு தெளிவு. நம் பிரார்த்தனைக்கு கடவுள் எப்படி செவி சாய்க்கிறார் என‌ பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

தியானம் கற்றுக் கொண்ட சில நாட்களிலேயே எனது ரத்த அழுத்தம் சீராகி விட்டது. இருந்தாலும் மருத்துவர் அறிவுரைப்படி தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

அடுத்த ஆறு மாதங்களில் ஆழ்நிலை தியானத்தின் அடுத்த நிலையான சித்திப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்போது எனக்கே ஒரு ஆர்வம் வர ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஆர்வமுடன், தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

தியானம் தொடர்ந்து செய்துவர எனக்கு மனதின் ஆழத்தில் இவர்தான் எனது குரு என அடையாளம் தெரிந்தது. ஆம்!! ஆழ்நிலை தியானம் செய்வதற்காக பூஜை செய்யும் தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள்தான் அது.

மனதில் மிக ஆழமாக என் குரு பதிந்துவிட்டார். அவர் அப்போது தன் பூத உடலில் இல்லாவிட்டாலும் அவர்தம் கருணை பூரணமாக வியாபித்திருப்பதை உணர முடிந்தது.

ஜெய் குரு தேவ்...

9 comments:

shanmugavel said...

குருவின் துணையுடன் தான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும்.உங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை.பகிர்வுக்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! பல பதிவுகளும் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Unknown said...

உங்களின் பதிவு மிகவும் அருமை. ஆம் நான் சென்னையில் இருந்த காலத்தில் திருக்காரனிச்சரம் எனும் சைதாபேட்
காரநிஸ்வரர்தான் எனக்கு முதலில் அறிமுகமானவர். பலமுறை அவர் திருவருளை அங்கு உணர்ந்துள்ளேன் மிகவும்
சக்தி வாய்ந்தவர். அதன் பிறகு சென்னையில் சில சிவாலயங்களை கண்டேன். சென்னையை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சில் நிறைந்திருப்பவர் அவர். அதனை பிறகு குடுபத்துடன் ஒரு முறை சென்று வந்தேன்.

உங்களின் குரு தேடல் விருப்பத்தை ஏற்று உங்களுக்கு குருவை காட்டி அருளி உள்ளார்.

என்னுடைய கருத்து என்னவெனில் அவனே நம்மை ஆட்டுவிக்கும்போது அவனையே.......

அன்புடன்
சிவனருள் பதிவன்

Sankar Gurusamy said...

திரு திண்டுக்கல் தனபாலன், திரு சிவன் அருள், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

S.Muruganandam said...

அடியேனும் சொர்ணாம்பிகா சமேத காரணீஸ்வரரின் பக்தன்.

Sankar Gurusamy said...

திரு கைலாஷி ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Unknown said...

ஞானம் பெற ஒவ்வொருவரும் உள்நோக்கிப் பயணித்தல் மிக அவசியம் என்பது புரிகிறது. எப்படியாயினும் இதை எல்லாரும் உணர்ந்தால் உலகம் நன்றாக இருக்கும்.

Sankar Gurusamy said...

திரு அப்பு, உண்மைதான்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..