Friday, January 27, 2012

நம் குடியரசுக்கு வந்த வியாதிகள்..

நம் தேசம் சுதந்திரமடைந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தை கைக்கொண்ட நினைவு தினம் நம் குடியரசு தினம். இந்த நாளில் நமது தேசத்தின் முன்னேற்றத்தினை தடுத்துக்கொண்டிருக்கும் சில பிரச்சினைகளை பற்றிய எனது அனுமானத்தை முன் வைக்கிறேன்..


தனிமனித ஒழுக்கமும், கடமை உணர்வும், நேர்மையும், சத்தியமும் அபாயமான அளவுக்கு குறைந்துபோனது.

மக்களிடையே குறைந்துவரும் சமூக பொறுப்பும், அதிகரிக்கும் வடிகட்டிய சுயநல சிந்தனைகளும்.

பணம் பிரதானமாகவும், மனிதம் கடைசியாகவும் கருத்தப்படும் ஒரு வாழ்வியலை கைக்கொள்ளும் ஒரு தலைமுறை உருவெடுத்தது.

அதிகரித்துவரும் குடி/போதைப்பழக்கமும், அதுதான் நாகரீகம் என இளைய சமுதாயம் தீவிரமாக நம்புவதும்.

சிதைந்துவரும் விவசாயத்தை அடியோடு புறக்கணிக்கும் அரசாங்கம்.

அரசாங்கத்தில் மலிந்துவிட்ட லஞ்சமும் ஊழலும்.

அதிகரிக்கும் விலைவாசியும், உயரும் வறுமையும்.

சட்டங்கள் சரியான முறையில், எல்லோருக்கும் சமமாக அமல் படுத்தப்படாதது. வலுத்தவனுக்கு ஒருவிதமாகவும், இளைத்தவனுக்கு ஒருவிதமாகவும் அமலாகும் சட்டங்களும் அதை அமல்படுத்துபவர்களும்.

சட்டங்களில் இவ்வளவு ஓட்டைகள் இருப்பது தெரிந்தும் அதை அடைக்க யாரும் பெரிய அளவில் முயற்சி செய்யாதது. மற்றும் புதிய சட்டங்கள் செய்யும்போதும் பொத்தல்களுடனேயே செய்ய  முனைவது.


கடவுளே, மஹாலிங்கம், நினைக்கையிலேயே கண்ணைக் கட்டுதே.. ஏதாவது செஞ்சு நம்ம தேசத்து மக்களை காப்பாத்துங்க..

சதுரகிரி நாயகனே சரணம்.. சரணம்..

Tuesday, January 17, 2012

அடிப்படை ஆரம்பக் கல்வி..

எனது 5 வயது மகனையும் இன்னும் 4 மாணவர்களையும் இந்த கல்வியாண்டில் இருந்து , வகுப்பில் நன்றாக படிப்பதாக சொல்லி,  எல் கே ஜி யில் இருந்து நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர சொல்லி இருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக அவ‌ன் பள்ளி செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறான். புதிய வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இந்த அவஸ்தைதான். நேற்று, எனது மகனை படிக்க சொன்னபோது அழ ஆரம்பித்து விட்டான். நானும் பொறுமையாக அவனுக்கு எடுத்து சொல்லி படிக்க வைத்தேன். ஆனால் அவனால் எழுத்துக்களை முழுமையாக ஞாபகம் வைக்க முடியவில்லை என்பதையும் எழுத்து கூட்டி படிக்க முடியவில்லை என்பதையும் கவனித்தேன்.

இன்று அவனது பள்ளியில் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து பேசி சற்று சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் செய்வதாக சொல்லி இருக்கிறார்.

இது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.


அதாவது நமது நாட்டின் கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு படிக்கவும் கணித திறமையிலும் அதிகபட்ச‌ குறைபாடுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது.

இந்த செய்தியையும் இன்றைய எனது மகன் சம்பந்தமாக பள்ளியில் பேசிய நிகழ்வையும் இணைத்து என்னால் இந்த செய்திக்கான மூல காரணங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

எழுத்துக்களை மாணவர்களுக்கு போதித்து, அடிப்படை வாசிக்கும் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானது. இந்த திறமையை வைத்துத்தான் மற்ற பாடங்களை மாணவர்கள் கற்க  முடியும். இதிலேயே தகராறு எனும்போது மிகவும் சிரமம்தான். இதற்கு சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை பயிற்சியை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியின் தார்மீக கடமை.

ஆனால், பள்ளியில் பாடத்திட்டத்தை முடிப்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், அதை எத்தனை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் பெரும்பான்மை மாணவர்களாவது புரிந்து கொள்ளுமளவுக்கு அடிப்படை கல்வியை கவனமாக‌ போதிப்பதில்லை.

இப்போது எழுதப்படிக்க கற்றுத்தரும் ஆரம்பக்கல்வி என்பது சில நாட்களுக்குள் முடித்து மேற்பாடங்களை போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு அரசு தலையிட்டு சரியான பாடத்திட்டம் உருவாக்கி, அதை முறையாக பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.

இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இப்படிப் பட்ட சம்பளம் தருவதில்லை. இதனால் ஒரு சிலர் தவிர மற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நம் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்களா என கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் உடனடியாக பள்ளியில் சென்று வகுப்பு ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து ஆலோசனை செய்து ஆரம்பக் கல்வி சரியாக குழந்தைகளை அடைய ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய சமூக சூழலில் டி வியும், இணையமும், சினிமாவும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் வீட்டில் டிவியிலும் கணிணியிலும் தம் கவனத்தை அதிகம் வைக்கிறார்கள். நாம்தான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.


மொத்ததில் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பதில் அரசு, பள்ளி, ஆசிரியர், பெற்றோர் என்ற நான்கு சமூகமும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கம், ஆரம்பக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் செம்மையாக கிடைக்க அருள் செய்யுங்க..

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, January 9, 2012

கடவுள் மறுப்பு ஏன்?

கடவுளைப் பற்றிய பல விவாதங்களில் என்னிடம் எழுப்பட்ட பல சந்தேகங்களில் இருந்து ஏன் சிலர் கடவுளை மறுக்கிறார்கள் என ஆராய முற்பட்டதன் விளைவுதான் இந்த பதிவு. கடவுள் மறுப்பு என்பது அவர்களின் விருப்பம் என்றாலும், அவர்கள் இதுகுறித்து எழுப்பிய சில கேள்விகள் மிகவும் சங்கடமானவையே. அது குறித்து :

1) கடவுள் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்தான் கடவுள் மறுப்பின் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இதில் கடவுள் பங்கு நேரடியாக‌ இல்லை எனினும், கடவுளை முன்னிறுத்தி சில சமூகத்தினர் விளையாடிய அரசியல் விளையாட்டில் வாழ்வையும் உரிமையையும் பல தலைமுறைகளாக பறிகொடுத்தனர் பலர். அந்த அழுத்தத்தின் விளைவு கடவுள் மறுப்பாக வெளிப்பட்டது.

2) கடவுள் என்பவர் மந்திர / மாய சக்தி கொண்ட இன்னொரு மனிதராக அடையாளப்படுத்தி எண்ணுதல். அப்படிப்பட்ட யாரும் இங்கு வெளியில் இல்லை. நமக்குள்ளே இருக்கும் கடவுளை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அடையாளக் குறியீடுகள்தான் இந்த கடவுளர்கள். இது கடவுளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே.

3) கடவுள் என்று ஒருவர் இருந்தால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வோ, ஊழல், லஞ்சம், துரோகம், போர், இயற்கை சீற்றம் இவை இருக்க முடியாது/ கூடாது என எண்ணுதல். அந்தர் யாமியாக நமக்குள் இருக்கும் கடவுள் நம் மூலம்தான் செயல்படுகிறார். மேலும் கடவுள் நன்மை மட்டுமே செய்பவர் என்ற மாய தோற்றமும் இருக்கிறது. நாம் செய்யும் நல்ல வினைகளுக்கு நல்ல செயல்களும், தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார். நம்மைப் போன்ற மனிதர்களாலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கர்ம வினைகளாலும்தான் இந்த சமூக அரசியல் இவ்வாறு இருக்கிறதே ஒழிய இது கடவுளின் விருப்பப்ப‌ட்ட நேரடி செயல் அல்ல. இதுவும் கடவுளை தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான். மனிதன் செய்யும் வினைகளுக்கு கடவுளை பலிகடா ஆக்கி விட்டார்கள்.

4) நம் வாழ்வில் ஏற்படு நல் / தீய கர்மங்கள் பற்றிய குறுகிய அறிவு. நாம் காணும் வாழ்க்கை / பிறப்பு என்பது இப்போது இருப்பது மட்டுமல்ல. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது. ஆனால் இந்த பல பிறவிகளைப் பற்றிய தேற்றம் பொதுவில் நிறுவ முடியாதபடி இருப்பதால் இந்த குழப்பம் வந்து கடவுள் மறுப்பாக மறுவி விட்டது.

5) இறுதியாக சமூக சூழல் சம்பந்தப்பட்டது. சேரும் நட்பும் சுற்றமும் கடவுள் மறுப்பில் இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு தானும் கடவுள் மறுப்பை கைகொள்வது. எப்படி ஒரு மதத்தினரின் குடும்ப சூழலில் வளரும் குழந்தை அந்த மதத்தை கைகொள்கிறதோ அதுபோல.மொத்தத்தில் கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது.

மனிதன் கடவுளை மறுப்பதில் தவறு எதுவும் இல்லை. தன் வாழ்வில் நேர்மையும், தன்னம்பிக்கையும், மனசாட்சிப்படி நடக்கும் வல்லமையும், சக மனிதனின் மேல் அக்கரையும், அன்பும் உடைய எவரும் கடவுளை நம்ப அவசியமில்லை. ஒவ்வொரு மதமும், கடவுளும் மனிதனுக்கு இதை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன‌.

கடவுளே மஹாலிங்கம், இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும், நேர்மையோடும், சக மனிதன் மேல் அன்பும், அக்கரையும் கொண்டு, மனசாட்சிப்படி நடக்க நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Friday, January 6, 2012

கடவுள் இருக்கிறாரா?

சில வருட‌ங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருடன் காரசாரமான விவாதம். கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றி. கடவுள் இருக்கிறார் என நானும், கடவுள் என்பவர் இல்லவே இல்லை, எல்லாம் ஏமாற்று வேலை என என் நண்பரும்.

வாதங்களும் பிரதி வாதங்களும் மாற்றி மாற்றி சுழற்றி அடிக்க, இருவருமே அவரவர் நிலையில் இருந்து இறங்கவே இல்லை. சலித்து விட்டது. கடைசி வரை என்னால் எனது நண்பரை கடவுள் இருக்கிறார் என நம்ப வைக்க முடியவில்லை. அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து எனது இன்னொரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். அவர் அப்போது இந்த கடவுள் விவாதம் குறித்து எனக்கு கூறிய சில விசயங்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதானதாக இருந்தது. அவற்றில் சில :

1) மனிதன் கடவுளை தன் புலன்களால் உணர நினைக்கிறான். ஆனால் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.

2) நாம் வேண்டியதை உடனேயே நிறைவேற்றி தரும் கடவுளையே எல்லோரும் தேடுகின்றார்கள். ஆனால் கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டு நிற்கிறார். எல்லோருக்கும் எல்லா வேண்டுதல்களும் எப்போதுமே நிறைவேறுவதில்லை.

3) கடவுளை வணங்கினால் அவர்களுக்கு பிரச்சினைகள் வராது அல்லது குறைவாக வரும் என்பது மூட நம்பிக்கை. அதிகம் கடவுளை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய கர்ம கணக்கு விரைவில் தீர அதிக கஷ்டங்கள் வரும் வாய்ப்புதான் அதிகம்.

4) எவ்வளவு தவறு செய்தாலும் கடவுளிடம் சென்று ஒரு முறை மன்னிப்பு கேட்டால் அல்லது காணிக்கை செலுத்தினால் எல்லாம் சரியாகி விடும். மீண்டும் அடுத்த தவறு செய்ய தயாராகலாம். இதுவும் ஒரு மடத்தனமான நம்பிக்கை.

5) கர்மா என்று ஒன்று இருக்கிறது, இது பாவம், இது புண்ணியம் என நம்புகின்றவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது ஏற்படுத்த முடியும். கர்மாவை நம்பாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது.

6) கடவுள் என்பதை நம்புவது அவரவர் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் அளவையும் அவற்றை தீர்க்க அவரவருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களின் நிலையையும் பொருத்தது.

சிலருக்கு கஷ்டங்கள் வரும்போதே அவற்றுக்கான தீர்வும் உடன் வரும். இவர்களுக்கு பல நேரம் ஓரளவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களை அதிகம் அனுபவித்த பிறகு அவர்கள் நம்பிக்கையின் விளிம்பில் இருக்கும் போது தீர்வு வரும். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களின் விடிவு என்பது அவர்கள் காணும்போது வராமலே போகலாம். இவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவோ அல்லது ஞானிகளாகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கஷ்டங்களே ஏற்படாத ஒரு வசதியான நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு அவரவர் குடும்ப, நட்பு சூழலைப் பொறுத்து கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது இல்லாமல் போகும்.

7) கடவுளை அவரவரே சாதகம் செய்து, கஷ்டப்பட்டு உணரவேண்டும். ஒருவர் வார்த்தைகளில் போதித்து மட்டும் இன்னொருவர் நிச்சயம் உணர முடியாது. எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அது அவரவரே உணர்ந்து கொள்ளட்டும். இன்றைக்கு இல்லை என்று சொல்பவர் நாளைக்கே இருக்கிறது என்றும் சொல்லலாம். இன்றைக்கு இருக்கிறது என்று சொல்பவர் நாளைக்கே இல்லை என்றும் சொல்லலாம். அது கடவுள் தன்னை யாரிடம் எப்போது வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ அதைப் பொறுத்தது.


கடவுளே மஹாலிங்கம்.. நீங்க உங்களை எல்லோரிடத்தும் வெளிப்படுத்திக் கிடணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Wednesday, January 4, 2012

ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்..

நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது.

புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் துக்கம் உண்டாக்கி விடுகின்றன.

குடும்பம், குழந்தை, வேலை, அயல்நாடு, ஆடம்பரப் பொருட்கள்... எல்லாவற்றிலும் இன்பமும் இருக்கின்றது.. துன்பமும் இருக்கின்றது.

வாழ்வில் எல்லாமே ஆனந்தமும் துக்கமும் கலந்தே இருக்கின்றன. ஆனந்தம் மட்டுமே தருவது என்றோ, துக்கம் மட்டுமே தருவது என்றோ எதுவுமே இல்லை.

நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலிலும் ஆனந்த மயமான ஒரு பகுதி உண்டும். அதை பார்க்க கற்றுக் கொண்டு துக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நம் மனம் பழக வில்லை என்பதுதான் நிஜம்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால், இந்த ஆனந்தமும் துக்கமும் வெளியுலக விஷயங்களுக்கு தொடர்பு இல்லாதது புரியும். உண்மையில் நம் மனம் நம் அகங்காரத்துடன் கை கோர்த்து நமக்குள் நடத்தும் நாடகம் தான் ஆனந்தமும் துக்கமும்.

மனித ஆத்மாவின் இயல்பு ஆனந்தம்தான். எனவேதான் நாம் அந்த ஆனந்தத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றோம். அது வெளியில் எங்கும் இல்லை. நம் மனதில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. மனம் ஆழ்ந்த அமைதி பெறும்போது இந்த ஆனந்தம் தானே வெளி வருகிறது.

நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமே இந்த உள்ளிருக்கும் ஆனந்தத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பதுதான். ஆன்மீகம் அதற்கு பெரிதும் துணை புரிகிறது.  தியானமும் யோகமும் நமக்கு இந்த ஆனந்தத்தை கண்டுபிடித்து தருகின்றன.

வெளிச்சம் போன்ற இந்த ஆன்ம ஆனந்தம் இருக்கும்போது மனம் தானாகவே துக்கம் எனும் இருளை விரட்டி விடுகிறது. இந்த ஆனந்த வெளிச்சம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைகிறது. இதுதான் ஆனந்த வாழ்வின் சூத்திரம்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோரும் ஒரு ஆனந்தமயமான வாழ்வை வாழ அருள் செய்யுங்க..

சதுரகிரி நாயகனே சரணம்..