Monday, January 9, 2012

கடவுள் மறுப்பு ஏன்?

கடவுளைப் பற்றிய பல விவாதங்களில் என்னிடம் எழுப்பட்ட பல சந்தேகங்களில் இருந்து ஏன் சிலர் கடவுளை மறுக்கிறார்கள் என ஆராய முற்பட்டதன் விளைவுதான் இந்த பதிவு. கடவுள் மறுப்பு என்பது அவர்களின் விருப்பம் என்றாலும், அவர்கள் இதுகுறித்து எழுப்பிய சில கேள்விகள் மிகவும் சங்கடமானவையே. அது குறித்து :

1) கடவுள் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்தான் கடவுள் மறுப்பின் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இதில் கடவுள் பங்கு நேரடியாக‌ இல்லை எனினும், கடவுளை முன்னிறுத்தி சில சமூகத்தினர் விளையாடிய அரசியல் விளையாட்டில் வாழ்வையும் உரிமையையும் பல தலைமுறைகளாக பறிகொடுத்தனர் பலர். அந்த அழுத்தத்தின் விளைவு கடவுள் மறுப்பாக வெளிப்பட்டது.

2) கடவுள் என்பவர் மந்திர / மாய சக்தி கொண்ட இன்னொரு மனிதராக அடையாளப்படுத்தி எண்ணுதல். அப்படிப்பட்ட யாரும் இங்கு வெளியில் இல்லை. நமக்குள்ளே இருக்கும் கடவுளை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அடையாளக் குறியீடுகள்தான் இந்த கடவுளர்கள். இது கடவுளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே.

3) கடவுள் என்று ஒருவர் இருந்தால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வோ, ஊழல், லஞ்சம், துரோகம், போர், இயற்கை சீற்றம் இவை இருக்க முடியாது/ கூடாது என எண்ணுதல். அந்தர் யாமியாக நமக்குள் இருக்கும் கடவுள் நம் மூலம்தான் செயல்படுகிறார். மேலும் கடவுள் நன்மை மட்டுமே செய்பவர் என்ற மாய தோற்றமும் இருக்கிறது. நாம் செய்யும் நல்ல வினைகளுக்கு நல்ல செயல்களும், தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார். நம்மைப் போன்ற மனிதர்களாலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கர்ம வினைகளாலும்தான் இந்த சமூக அரசியல் இவ்வாறு இருக்கிறதே ஒழிய இது கடவுளின் விருப்பப்ப‌ட்ட நேரடி செயல் அல்ல. இதுவும் கடவுளை தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான். மனிதன் செய்யும் வினைகளுக்கு கடவுளை பலிகடா ஆக்கி விட்டார்கள்.

4) நம் வாழ்வில் ஏற்படு நல் / தீய கர்மங்கள் பற்றிய குறுகிய அறிவு. நாம் காணும் வாழ்க்கை / பிறப்பு என்பது இப்போது இருப்பது மட்டுமல்ல. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது. ஆனால் இந்த பல பிறவிகளைப் பற்றிய தேற்றம் பொதுவில் நிறுவ முடியாதபடி இருப்பதால் இந்த குழப்பம் வந்து கடவுள் மறுப்பாக மறுவி விட்டது.

5) இறுதியாக சமூக சூழல் சம்பந்தப்பட்டது. சேரும் நட்பும் சுற்றமும் கடவுள் மறுப்பில் இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு தானும் கடவுள் மறுப்பை கைகொள்வது. எப்படி ஒரு மதத்தினரின் குடும்ப சூழலில் வளரும் குழந்தை அந்த மதத்தை கைகொள்கிறதோ அதுபோல.மொத்தத்தில் கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது.

மனிதன் கடவுளை மறுப்பதில் தவறு எதுவும் இல்லை. தன் வாழ்வில் நேர்மையும், தன்னம்பிக்கையும், மனசாட்சிப்படி நடக்கும் வல்லமையும், சக மனிதனின் மேல் அக்கரையும், அன்பும் உடைய எவரும் கடவுளை நம்ப அவசியமில்லை. ஒவ்வொரு மதமும், கடவுளும் மனிதனுக்கு இதை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன‌.

கடவுளே மஹாலிங்கம், இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும், நேர்மையோடும், சக மனிதன் மேல் அன்பும், அக்கரையும் கொண்டு, மனசாட்சிப்படி நடக்க நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

13 comments:

குலவுசனப்பிரியன் said...

// 1. சரி.
// 2. சரி.
// 3. தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார்

இதுதான் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது. இப்படிப்பட்ட கடவுளின் விதியை மீறி நோய்க்கு மருந்தும், நலிந்தவர்களை முன்னேற்ற திட்டமும் காணும் மனிதன் சாலச்சிறந்தவன்.
//4. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது.

இது அறிவா, அறிவின்மையா?

// 5. கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது
இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். அதனால் யாருக்கு தீமை.

shanmugavel said...

நல்ல அலசல்,கோடிட்ட வரிகள் மனதைக்கவர்ந்தது,பகிர்வுக்கு நன்றி.

Sankar Gurusamy said...

திரு குலவுசனப்பிரியன்,

/// 3. தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார்

இதுதான் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது. இப்படிப்பட்ட கடவுளின் விதியை மீறி நோய்க்கு மருந்தும், நலிந்தவர்களை முன்னேற்ற திட்டமும் காணும் மனிதன் சாலச்சிறந்தவன்.//

யார் பிரியப்பட்டாலும் படாவிட்டாலும், நிஜம் இதுதான். இதை மாற்ற மனிதன் தன் நன்னடத்தைகள் மூலமும், நல்ல செயல்களை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலமும் சில விசயங்களை சரி செய்து கொள்ளலாம். சில விசயங்கள் நடந்தே தீரும். நியூட்டனின் மூன்றாம் விதி இதற்கும் சாலப் பொருந்தும்.

////4. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது.

இது அறிவா, அறிவின்மையா?//

நண்பரே, காரணமில்லாமல் காரியமில்லை. இது அறிவா அறிவின்மையா என்பதை தங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இன்னும் பல கேள்விகளுக்கு நேரடி பதில் இந்த நாத்திக வாதத்தில் இல்லை என்ப‌துதான் நிஜம். அதில் இந்த கர்மா, மறுபிறவி இவைகளும் சில. இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். நம் வாழ்வில் காரணமில்லாமல் நிகழும் கெட்ட நிகழ்வுகளுக்கு ஏதாவது ஒரு காரணம் தெரிந்தால், அதை சரி செய்ய ஒரு சந்தர்ப்பத்தை நாம் தேட ஏதுவாக இருக்கும். இந்த தத்துவங்களின் பின்னணி இதுவாகவே இருக்கலாம்.

/// 5. கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது
இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். அதனால் யாருக்கு தீமை. //

எந்த மதமும் அது தன்னளவில் இருக்கும்போது நிச்சயமாக யாருக்கும் தீங்கு இல்லை. ஆனால் மதப் பிரச்சாரம் என்று ஒன்று செய்து மற்றவர்களையும் அதையே நம்ப வைக்க முனையும்போது எல்லா மதமும் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இதற்கு நாத்திகமும் விதிவிலக்கு அல்ல.

தங்கள் வருகைக்கும் மேலான‌ கருத்துக்கும் மிக்க நன்றி..

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ஸ்ரீ ஸக்தி சுமனன் said...

அருமையான பதிவு,

கடவுள் மறுப்பிற்கு இன்னுமொரு முக்கியமான காரணம் இருக்கிறது என எண்ணுகிறேன்,

தன்னையறியாமல் இருப்பது,

தன்னையறிந்த ஒருவனே தலைவனை அறியமுடியும் என என் குருநாதர் கூறுவார். தான் யார் என அறிந்த ஒருவனுக்கு மற்றவை எவை என தெளிவாக அறியும் தன்மை வரும். தன்னையே அறியவில்லையெனும் போது வரும் குழப்பத்தால் வருபவைகள்தான் நீங்கள் குறிப்பிடும் இந்தக் காரணங்கள் என்பது எனது கருத்து!

Sankar Gurusamy said...

திரு சுமனன், உண்மைதான். தன்னை அறிதல் என்பதையே தன் உடலை அறிதல் என தவறாக எண்ணும் சமூகம் நம்முடையது. இதில் அதன் சூட்சுமத்தை விளங்குபவர்கள் மிக அரிதே.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

பாலா said...

மிக அருமையான கருத்துக்கள். குறிப்பாக அடிக்கோடிட்ட வரிகள் அருமை.

Sankar Gurusamy said...

திரு பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

rajamelaiyur said...

கமல் சொன்னதுதான் நபகத்திர்க்கு வருது .. " இல்லைன்னு சொல்லல இருந்தா நல்லா இருக்கும் "

rajamelaiyur said...

அதிசயம் ஆனால் உண்மை

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Sankar Gurusamy said...

திரு "என் ராஜபாட்டை"- ராஜா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

rishvan said...

"தன் வாழ்வில் நேர்மையும், தன்னம்பிக்கையும், மனசாட்சிப்படி நடக்கும் வல்லமையும், சக மனிதனின் மேல் அக்கரையும், அன்பும் உடைய எவரும் கடவுளை நம்ப அவசியமில்லை"
....அருமை...

Sankar Gurusamy said...

திரு ரிஷ்வன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..