Wednesday, January 4, 2012

ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்..

நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது.

புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் துக்கம் உண்டாக்கி விடுகின்றன.

குடும்பம், குழந்தை, வேலை, அயல்நாடு, ஆடம்பரப் பொருட்கள்... எல்லாவற்றிலும் இன்பமும் இருக்கின்றது.. துன்பமும் இருக்கின்றது.

வாழ்வில் எல்லாமே ஆனந்தமும் துக்கமும் கலந்தே இருக்கின்றன. ஆனந்தம் மட்டுமே தருவது என்றோ, துக்கம் மட்டுமே தருவது என்றோ எதுவுமே இல்லை.

நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலிலும் ஆனந்த மயமான ஒரு பகுதி உண்டும். அதை பார்க்க கற்றுக் கொண்டு துக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நம் மனம் பழக வில்லை என்பதுதான் நிஜம்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால், இந்த ஆனந்தமும் துக்கமும் வெளியுலக விஷயங்களுக்கு தொடர்பு இல்லாதது புரியும். உண்மையில் நம் மனம் நம் அகங்காரத்துடன் கை கோர்த்து நமக்குள் நடத்தும் நாடகம் தான் ஆனந்தமும் துக்கமும்.

மனித ஆத்மாவின் இயல்பு ஆனந்தம்தான். எனவேதான் நாம் அந்த ஆனந்தத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றோம். அது வெளியில் எங்கும் இல்லை. நம் மனதில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. மனம் ஆழ்ந்த அமைதி பெறும்போது இந்த ஆனந்தம் தானே வெளி வருகிறது.

நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமே இந்த உள்ளிருக்கும் ஆனந்தத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பதுதான். ஆன்மீகம் அதற்கு பெரிதும் துணை புரிகிறது.  தியானமும் யோகமும் நமக்கு இந்த ஆனந்தத்தை கண்டுபிடித்து தருகின்றன.

வெளிச்சம் போன்ற இந்த ஆன்ம ஆனந்தம் இருக்கும்போது மனம் தானாகவே துக்கம் எனும் இருளை விரட்டி விடுகிறது. இந்த ஆனந்த வெளிச்சம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைகிறது. இதுதான் ஆனந்த வாழ்வின் சூத்திரம்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோரும் ஒரு ஆனந்தமயமான வாழ்வை வாழ அருள் செய்யுங்க..

சதுரகிரி நாயகனே சரணம்..

6 comments:

shanmugavel said...

உள்ளிருக்கும் ஆனந்தமே உண்மையான ஆனந்தம்.நானும் இதைப்பற்றி சிந்தித்து வந்திருக்கிறேன்.நல்ல பகிர்வு,நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Appu said...

ஆனந்தம் உள்ளிருந்து வருவதே..

Sankar Gurusamy said...

திரு அப்பு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

kumarkannan said...

உள்ளிருக்கும் ஆனந்தமே உண்மையான ஆனந்தம்.

Sankar Gurusamy said...

திரு குமார் கண்ணன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..