Thursday, November 17, 2011

என் கனவில் கடவுள்....

அது 1993ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 1ம் தேதி. 

மிகுந்த மன வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் நான்  வாழ்வின் நம்பிக்கையை முழுமையாக் இழந்திருந்த நேரம். 

பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக துரத்த வாழ்வில் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நேரம்.

எண்ணங்கள் தட தட என தவறாக ஓட ஆரம்பிக்க என்ன செய்வது என்ற நிலை தடுமாறி ஒரு மயக்கத்தில் தூங்காமல் விழித்திருந்த நேரம்.

வாழ்வின் நமக்கு தெரிந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு பெரும் பாரமான உணர்வு மனதில் அழுந்த கண்களில் நீர் பூக்க திக்கு தெரியாமல் திணறிய நேரம்.

சாய்ந்து அழ தோள் கூட இல்லாமல் தனிமையில் மருகி நின்றிருந்த நேரம்.

இரவின் இருட்டு பேயாய் அழுத்த, கண்ணீரில் தலையணை நனைந்து தூக்கம் தொலைந்த நேரம்.

அசதியிலும் ஆற்றாமையிலும் லேசாக கண்ணயர, கனவு விரிகிறது :


ஒரு ரயிலடி. யாரையோ ரயில் ஏற்றிவிட வந்திருக்கிறேன். திடீரென்று எல்லோரும் எங்கோ ஓடுகிறார்கள். தோள்களில் பைகளுடன் நானும் அவர்களுடன் ஓடுகிறேன். 

ஒரு சிறு மண்டபம் போன்ற ஒரு கட்டிடத்துக்குள் ஈ நுழைய முடியாத அளவு கூட்டம். உள்ளே ஒன்றும் தெரியவில்லை. நான் வெளியில். ஓ!! ஏதோ கோயில் போல இருக்கிறது. அதுதான் கூட்டமாக இருக்கிறதே என ஒரு அசட்டையுடன் திரும்ப எத்தனிக்கையில், 

கோவில் மணி ஒலி கணீரென்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. திரும்பிப்பார்க்கிறேன். முன்னால் நின்றிருந்த அனைவரும் ஒருசேர விழுந்து வணங்குகிறார்கள். பின்னால் நிற்கும் எனக்கு அந்த ஆண்டவனின் தரிசனம்.

கண்கள் பனிக்க, கைகள் துவள, பைகள் விடுபட, கண்ணீரோடு வணங்குகிறேன். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிய அவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்.


திடீரென்று கனவில் இருந்து விழித்து எழுகிறேன். வியர்த்திருக்கிறது. கண்ணீரால் கன்னம் நனைந்திருக்கிறது. விடிகாலை 4 மணி. 

அதன் பிறகு தூக்கம் வரவில்லை. இந்த கனவின் நினைவோடு புரண்டு புரண்டு படுக்கிறேன். ஒரே சிந்தனை. இதற்கு என்ன அர்த்தம். அல்லது அனர்த்தமா? கடவுளைப்பற்றி நேற்று ஒரு விநாடி கூட நினைக்க வில்லையே. பிறகு எப்படி இப்படி ஒரு கனவு வரும். ஆழ்ந்த யோசனை..

சில மாதங்களுக்கு முன் கடவுளிடம் விட்ட சவால் ஞாபகம் வந்தது. 

”நீ வந்து என்னைப்பார்க்காமல் உன்னை வந்து நான் ஏன் பார்க்கவேண்டும்??”

ஓ இதனால்தான் கடவுள் என்னை பார்க்க வந்தாரா?? யாருமே எனக்கு இல்லை என்ற எண்ணத்தைப் போக்க வந்தாரோ?? ஒன்றும் புரியவில்லை.

ஆனால் மனதில் ஒரு புதிய நம்பிக்கை கீற்று ஒளிவீச ஆரம்பித்திருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மாற்றம் ஆழ் மனதில். ஏதோ நல்லது நடக்கும் என்ற ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 

“கடவுள் நிச்சயம் நமக்கு துணை இருப்பார்”

அந்த நம்பிக்கையோடு முதல் முறையாக கடவுளைக் காண்பதற்காக கோயிலை நோக்கி பயணப்பட்டேன்...


- இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். மீண்டும் இன்று கார்த்திகை 1ம் தேதி.

எனக்கு அடைக்கலம் கொடுத்த மஹாலிங்கத்துக்கு வணக்கம். உலகமக்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து காப்பாற வேண்டுகிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்..

6 comments:

shanmugavel said...

சில கனவுகள் வழிகாட்டியதுண்டு.சில ஆச்சர்யம்.சுவாரஸ்யமான அனுபவம்.பகிர்வுக்கு நன்றி.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

பாலா said...

Thanks for sharing....

Sankar Gurusamy said...

பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Anonymous said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

arul said...

thangal pathivukku nandri