சில நாட்களுக்கு முன் என் மகன் சுட்டி டிவியில் ஜாக்கிசான் கார்டூன் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஒரு (புலி) மந்திரக்கல்லின் உதவியால் ஜாக்கி இரண்டு நபராக ஆவதாக காண்பித்தார்கள். ஒருவன் ரொம்ப நல்லவன். இன்னொருவன் ரொம்ப கெட்டவன். அதில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இவ்வாறு இரண்டு நபர்கள் இருப்பதாக ஒரு விளக்கமும் கொடுத்தார் அங்கிள்.
இது குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொழுது , ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் சில இக்கட்டான சூழல்களில் இந்த மாதிரி நமக்கு உள்ளே இருக்கும் இந்த இரண்டு நபர்களை (நல்லவன், கெட்டவன்) ஸ்பஷ்டமாக சந்திக்க முடியும். நாம் எடுக்கும் சில முடிவுகளால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசும் போது இது நமக்கு புலப்படும்.
அல்லது நம் சிந்தனை தவறாகப் போகிறதே என்று எப்போதாவது நமக்கு புலப்படும்போது இந்த கெட்டவன் தான் அங்கே வேலை செய்திருக்கிறான்.
இந்த கெட்டவன் நமக்குள்ளேயே இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் அவனுடைய சிந்தனைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நாம் எத்தனிக்கும்போதுதான் நாம் யாரென்ற உண்மையான பிம்பம் வெளிப்படும்.
விஷத்தை பாட்டிலிலேயே வைத்திருக்கும்வரை அது சாதுதான். ஆனால் எடுத்து சாப்பிட்டுவிட்டால் ??? யோசித்துப் பாருங்கள்.
இந்த இருவரில் நம் வாழ்நாளில் அதிகம் யாரை நாம் வெளி செலுத்துகிறோமோ அவராகவே நாம் அறியப்படுகிறோம். இந்த ”யாரை வெளிப் படுத்துவது?” என்ற உரிமை இயற்கையால் / கடவுளால் நமக்கு வழங்கப்பட்டு இருக்கிறது (Free-Will). அதை நாம் சரியாக உபயோகப்படுத்துவது ”நமது கை”யில்தான் இருக்கிறது.
இந்த ”நமது கை” என்பது நம் அகங்காரத்தையும் நம் வாழ்வியல் சூழலையும் சார்ந்து இருக்கிறது. இந்த இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஏனெனில் நம் வாழ்வியல் சூழல்கள் நம் அகங்காரத்தை தீமானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
நம் அகங்காரத்தை தீர்மானிப்பதில் இன்னொரு முக்கிய பங்கு நம் ஜீன்களில் இருக்கிறது. இதைத்தான் முன் ஜென்ம வினை / கர்மா எனவும் சொல்கிறார்கள்.
அதாவது, கருப்பு வெள்ளை பிலிம் உபயோகப் படுத்தி எடுத்த புகைப்படம் கருப்பு வெள்ளையில்தான் வரும். கலர்பிலிம் உபயோகப்படுத்தினால் கலர்படம் எடுக்கலாம். அதுபோல X-Ray பிலிம் உபயோகப்படுத்தி படம் எடுத்தால் அதில் நம் எலும்புகள்தான் தெரியும். பிலிம் என்ற ஒரே மீடியத்தில் இத்தனை ரகங்கள் இருக்கும்போது மனிதர்களில் எத்தனை ரகமோ??
”உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்”
எனக்கு மிகவும் பிடித்த இந்த குறள் ஒரு மனிதனின் ஆத்ம சுத்தியின் ஆழத்தைப் பற்றிப் பேசுகிறது. இதன்படி வாழ்வதே ஒரு லட்சிய வாழ்க்கை.
யோசித்துப் பாருங்கள். நமக்குள் இருக்கும் அந்த கெட்டவனை நாம் அழித்துவிட்டால்??? அப்போதுதான் இந்த நிலை சித்திக்கும்.
ஒவ்வொரு மனிதனும் நமக்குள் இருக்கும் கெட்டவனை அழிக்கமுடியுமா தெரியவில்லை . ஆனால் இப்படி ஒருவன் நமக்குள் இருக்கிறான் அவனை நாம் ஜாக்கிரதையாக கையாளவேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நாம் செயல்படத் தொடங்கினால் வாழ்வு இனிக்கும்.
கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் அந்த கெட்டவனை நீங்கதான் அழிக்கணும்..
5 comments:
படிக்கத் தொடங்குவதற்கு முன்பே தலைப்பே என்னை சிந்திக்க வைத்து விட்டது.உண்மையில் முக்கியமான தத்துவமே! உணர வேண்டியதும் ஆகும்.பகிர்வுக்கு நன்றி,
//கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் அந்த கெட்டவனை நீங்கதான் அழிக்கணும்..//
நானும் அப்படியே வேண்டிக்கறேன் சாமி
திரு ஷண்முகவேல், திரு கைலாஷி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
மிகவும் சிறப்பாகச்சொல்லியிருக்கின்றீகள்.
வாழ்க வளமுடன்
ந.ஆதி
திரு நதிமூலம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
Post a Comment