Showing posts with label அகங்காரம். Show all posts
Showing posts with label அகங்காரம். Show all posts

Wednesday, November 9, 2011

நல்லவன், கெட்டவன்... ஒருவரே !!!!!! ????

சில நாட்களுக்கு முன் என் மகன் சுட்டி டிவியில் ஜாக்கிசான் கார்டூன் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஒரு (புலி) மந்திரக்கல்லின் உதவியால் ஜாக்கி இரண்டு நபராக ஆவதாக காண்பித்தார்கள். ஒருவன் ரொம்ப நல்லவன். இன்னொருவன் ரொம்ப கெட்டவன். அதில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இவ்வாறு இரண்டு நபர்கள் இருப்பதாக ஒரு விளக்கமும் கொடுத்தார் அங்கிள்.

இது குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொழுது , ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் சில இக்கட்டான சூழல்களில் இந்த மாதிரி நமக்கு உள்ளே இருக்கும் இந்த இரண்டு நபர்களை (நல்லவன், கெட்டவன்) ஸ்பஷ்டமாக சந்திக்க முடியும். நாம் எடுக்கும் சில முடிவுகளால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசும் போது இது நமக்கு புலப்படும். 

அல்லது நம் சிந்தனை தவறாகப் போகிறதே என்று எப்போதாவது நமக்கு புலப்படும்போது இந்த கெட்டவன் தான் அங்கே வேலை செய்திருக்கிறான்.

இந்த கெட்டவன் நமக்குள்ளேயே இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் அவனுடைய சிந்தனைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நாம் எத்தனிக்கும்போதுதான் நாம் யாரென்ற உண்மையான பிம்பம் வெளிப்படும்.

விஷத்தை பாட்டிலிலேயே வைத்திருக்கும்வரை அது சாதுதான். ஆனால் எடுத்து சாப்பிட்டுவிட்டால் ??? யோசித்துப் பாருங்கள்.

இந்த இருவரில் நம் வாழ்நாளில் அதிகம் யாரை நாம் வெளி செலுத்துகிறோமோ அவராகவே நாம் அறியப்படுகிறோம்.  இந்த ”யாரை வெளிப் படுத்துவது?” என்ற உரிமை இயற்கையால் / கடவுளால் நமக்கு வழங்கப்பட்டு இருக்கிறது (Free-Will). அதை நாம் சரியாக உபயோகப்படுத்துவது ”நமது கை”யில்தான் இருக்கிறது.

இந்த ”நமது கை” என்பது நம் அகங்காரத்தையும் நம் வாழ்வியல் சூழலையும் சார்ந்து இருக்கிறது.  இந்த இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஏனெனில் நம் வாழ்வியல் சூழல்கள் நம் அகங்காரத்தை தீமானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நம்  அகங்காரத்தை தீர்மானிப்பதில் இன்னொரு முக்கிய பங்கு நம் ஜீன்களில் இருக்கிறது. இதைத்தான் முன் ஜென்ம வினை / கர்மா எனவும் சொல்கிறார்கள்.

அதாவது, கருப்பு வெள்ளை பிலிம் உபயோகப் படுத்தி எடுத்த புகைப்படம் கருப்பு வெள்ளையில்தான் வரும். கலர்பிலிம் உபயோகப்படுத்தினால் கலர்படம் எடுக்கலாம். அதுபோல X-Ray பிலிம் உபயோகப்படுத்தி படம் எடுத்தால் அதில் நம் எலும்புகள்தான் தெரியும். பிலிம் என்ற ஒரே மீடியத்தில் இத்தனை ரகங்கள் இருக்கும்போது மனிதர்களில் எத்தனை ரகமோ??


”உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்”

எனக்கு மிகவும் பிடித்த இந்த குறள் ஒரு மனிதனின் ஆத்ம சுத்தியின் ஆழத்தைப் பற்றிப் பேசுகிறது. இதன்படி வாழ்வதே ஒரு லட்சிய வாழ்க்கை. 

யோசித்துப் பாருங்கள். நமக்குள் இருக்கும் அந்த கெட்டவனை நாம் அழித்துவிட்டால்??? அப்போதுதான் இந்த நிலை சித்திக்கும்.

ஒவ்வொரு மனிதனும் நமக்குள் இருக்கும் கெட்டவனை அழிக்கமுடியுமா தெரியவில்லை . ஆனால் இப்படி ஒருவன் நமக்குள் இருக்கிறான் அவனை நாம் ஜாக்கிரதையாக கையாளவேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நாம் செயல்படத் தொடங்கினால் வாழ்வு இனிக்கும்.



கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் அந்த கெட்டவனை நீங்கதான் அழிக்கணும்..

சதுரகிரி சுந்தரனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Thursday, May 5, 2011

அகங்காரம் - இரண்டு அனுபவங்கள்

நம் நாட்டில் நடக்கும் சில விசயங்களைக் கேள்விப்படும்போது, அனுபவிக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வுகள் உண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடா? அல்லது அது ஒரு இயல்பான உணர்வு நிலையா என்று என்னால் கணிக்கமுடியவில்லை.

எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் அந்த சந்தேகத்தை மேலும் குழப்பிவிட்டது..

சம்பவம் 1

கல்கத்தாவுக்கு வந்த புதிதில் எனது பான் அட்டையில் எனது விலாசம் மாற்ற ஆன் லைனில் விண்ணப்பித்து இருந்தேன். என் விலாசத்துக்கு சான்றாக எனது G SANKAR என்ற பெயருடன் அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி அனுப்பி இருந்தேன்.

அதற்கு பதிலாக எனக்கு வந்தது மிக அதிர்ச்சியாக இருந்தது. 

”தங்கள் பெயர் எங்கள் அலுவலக பதிவேடுகளில் உள்ளதுபோல இல்லை. எனவே தாங்கள் வேறு சான்று சமர்ப்பிக்கவும்.”

விஷயம் என்னவென்றால் அவர்களுடய பதிவேடுகளில் எனது பெயர் SANKAR GURUSAMY  என்று இருக்கிறது.

ஏனெனில் இவர்கள் எப்போதுமே இனிஷியலை விரிவாக எழுதும்படிதான் விண்ணப்பங்களில் கேட்கிறார்கள். 

வினோதம் என்னவென்றால் எனது பான் அட்டையில் எனது பெயர் G SANKAR என்றுதான் பதிவாகி இருக்கிறது.

நான் அவர்களுக்கு போன் செய்து இதைப்பற்றி விளக்கமாக கூறினேன். அவர்கள் மிக அமைதியாக தங்கள் அட்டை தவறாக பிரிண்ட் போட்டு தரப்பட்டது என்று கூறி வெறுப்பேற்றினார்கள். மேலும் தாங்கள் புதிய விலாச சான்று சமர்ப்பித்தால்தான் விலாசம் மாற்ற முடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

பிறகு நான் அவர்களுக்கு இதுபற்றி விளக்கி ஒரு சில ஈமெயில் அனுப்பினேன்.  அவர்கள் மசியவில்லை.

பிறகு சில நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில்  வேறு சான்றிதழ் பெற்று எனது விலாசத்தை மாற்றினேன்.

சம்பவம் 2

நேற்று பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்க சென்றிருந்தேன். அங்கும் இதேபோல எனது அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ் கொடுத்தேன்.

இந்த முறை உஷாராக எனது முழு பெயருடன் கொடுத்தேன். இவர்கள் இணையத்தில் அலுவலக சான்றிதழ் ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது. ஆனால் இவர்கள் அலுவலக சான்றிதழ் செல்லாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்கள்.  

மேலும் விலாச சான்றில் முழு பெயரும் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

3 மணிநேரம் டாக்சி பயணம், ரூ 450 டாக்சி சார்ஜ்,  2 மணிநேர காத்திருப்பு. 3 மணிநேர அப்ளிகேசன் தயாரிப்பு -எல்லாம் வீண்.

குழப்பம்

எனது எல்லா விதமான செயல்பாடுகளும் என் G SANKAR என்ற பெயரில் தான் இருக்கிறது -  எனது பள்ளி, கல்லூரி சர்டிஃபிகேட், மேரேஜ் சர்டிஃபிகேட், பாங்க் அக்கவுண்ட், ரேசன் கார்ட், பான் கார்ட், வோட்டர் ஐடி, கேஸ் கனெக்சன் (இதில் இனிஷியல்கூட இல்லை).

எதிலுமே எனது முழுபெயரான SANKAR GURUSAMY  என்பது இல்லை.

இப்போது எனக்கு எப்படி என் பாஸ்போர்ட் புதுப்பிப்பது என்று புரியவில்லை.  இதற்காக புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா என்றும் ஒரே குழப்பமாக உள்ளது.

உளைச்சல் :

மிக சாதாரண சம்பவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு சம்பவங்களிலும் என் மனம் மிகவும் உளைச்சல் அடைந்துவிட்டது. நேற்று முழுவதும் மிகவும் அப்செட். ஒரே படபடப்பாக இருந்தது. சற்று பயமாகவும் இருந்தது - ”எப்படி பாஸ்போர்ட் புதுப்பிக்கப்போகிறோம்” என்று. ஆனாலும் சற்று பொறுமையாக சிந்தித்து இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தெளிவு இப்போது இருக்கிறது. பார்க்கலாம்.


அகங்காரம்  :

இது எந்த வகை அகங்காரம் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் நல்லதற்கில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. உணர்வுகளின் வெளிப்பாடு மனதையும் உடலையும் பாதிக்கிறது. ஆனால் நான் இது எதோ ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடு என்பதை பூரணமாக உணர்கிறேன். அந்த விழிப்புணர்வும் இருந்தது / இருக்கிறது.  ஆனாலும் என்னால் அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

நம் தவறு என்பது இல்லாமல் நாம் பாதிக்கப்படும்பொழுது ஏற்படும் இந்த உணர்வு எப்படி அகங்காரமாகும் என்ற ஒரு குதர்க்கமான கேள்வி இங்கு எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  கடவுள்தான் இதில் தீர்ப்பு சொல்லணும்.


கடவுளே மஹாலிங்கம், இதில் ஒரு தெளிவையும் தீர்வையும் நீங்கதான் தரணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Thursday, April 28, 2011

ஞானமும் அகங்காரமும்...

சுய அகங்காரம் (ஈகோ) அற்ற நிலையில் ஞானம் எளிதில் வெளிப்படும்.  நம் அகங்காரமும் அதன் விளைவுகளும்தான் ஞானத்தை நம்மிடம் இருந்து மறைக்கும் திரை.

முதலில் எது அகங்காரம் என்று வரையறை செய்வோம்.


1) நான் வேறு / மற்றவர்கள் வேறு என்ற வேறுபடுத்தும் உணர்வே அகங்காரம்.

2) எந்த காரணத்தால் சுகமும், துக்கமும் நம் மனதைப் பாதிக்கிறதோ அதுவே அகங்காரம்.

3) ஒரு செயல் செய்ததால் ஏற்படும் விளைவுகளை எண்ணி ஏற்படும் உணர்வுகளும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள்தாம்.

4) நான் என்ற அகங்கார நிலையில் செய்யும் செயல்கள் கர்மாவை உண்டு பண்ணும். அதாவது நம் நரம்பு மண்டலங்களில் ஒருவித நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.


உண்மையைக் கூறினால் நம் அகங்காரம்தான் நம் அடையாளம். அது இருப்பதால்தான் நம்மால் இந்த உலகில் வாழ முடிகிறது. 

நான் வாழ்கிறேன், நான் செய்கிறேன், என்னால்தான் நடந்தது, நான் தான் செய்யவேண்டும், என்னால்தான் முடிந்தது, என் மூலம்தான் நடக்க வேண்டும், நான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன் என்ற உணர்வுகள் எல்லாம் அகங்காரத்தின் வெளிப்பாடுகள். 

இந்த உணர்வுகள்தான் நம்மைப்பற்றி நமக்குள் / சமூகத்தில்  ஒரு உயர்ந்த அபிப்பிராயம் /அந்தஸ்து / மரியாதை  தரும்நிலையில் வைத்திருக்கின்றன.

ஆனால் ஞானம் வேண்டுமெனில் இதை விட்டுத்தான் ஆகவேண்டும். இந்த அகங்காரத்திரை விலகினால்தான் ஞான தரிசனம் கிடைக்கும்.

இதனால் நாம் யார் என்ற கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்கும்.  ஞானம் இதைவிட சிறப்பாக நம்மை வாழ வைக்கும்.


கடவுளே மஹாலிங்கம்.. உடனடியா இந்த அகங்காரம் அகன்று ஞானம் வர அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!