Thursday, May 5, 2011

அகங்காரம் - இரண்டு அனுபவங்கள்

நம் நாட்டில் நடக்கும் சில விசயங்களைக் கேள்விப்படும்போது, அனுபவிக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வுகள் உண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடா? அல்லது அது ஒரு இயல்பான உணர்வு நிலையா என்று என்னால் கணிக்கமுடியவில்லை.

எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் அந்த சந்தேகத்தை மேலும் குழப்பிவிட்டது..

சம்பவம் 1

கல்கத்தாவுக்கு வந்த புதிதில் எனது பான் அட்டையில் எனது விலாசம் மாற்ற ஆன் லைனில் விண்ணப்பித்து இருந்தேன். என் விலாசத்துக்கு சான்றாக எனது G SANKAR என்ற பெயருடன் அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி அனுப்பி இருந்தேன்.

அதற்கு பதிலாக எனக்கு வந்தது மிக அதிர்ச்சியாக இருந்தது. 

”தங்கள் பெயர் எங்கள் அலுவலக பதிவேடுகளில் உள்ளதுபோல இல்லை. எனவே தாங்கள் வேறு சான்று சமர்ப்பிக்கவும்.”

விஷயம் என்னவென்றால் அவர்களுடய பதிவேடுகளில் எனது பெயர் SANKAR GURUSAMY  என்று இருக்கிறது.

ஏனெனில் இவர்கள் எப்போதுமே இனிஷியலை விரிவாக எழுதும்படிதான் விண்ணப்பங்களில் கேட்கிறார்கள். 

வினோதம் என்னவென்றால் எனது பான் அட்டையில் எனது பெயர் G SANKAR என்றுதான் பதிவாகி இருக்கிறது.

நான் அவர்களுக்கு போன் செய்து இதைப்பற்றி விளக்கமாக கூறினேன். அவர்கள் மிக அமைதியாக தங்கள் அட்டை தவறாக பிரிண்ட் போட்டு தரப்பட்டது என்று கூறி வெறுப்பேற்றினார்கள். மேலும் தாங்கள் புதிய விலாச சான்று சமர்ப்பித்தால்தான் விலாசம் மாற்ற முடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

பிறகு நான் அவர்களுக்கு இதுபற்றி விளக்கி ஒரு சில ஈமெயில் அனுப்பினேன்.  அவர்கள் மசியவில்லை.

பிறகு சில நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில்  வேறு சான்றிதழ் பெற்று எனது விலாசத்தை மாற்றினேன்.

சம்பவம் 2

நேற்று பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்க சென்றிருந்தேன். அங்கும் இதேபோல எனது அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ் கொடுத்தேன்.

இந்த முறை உஷாராக எனது முழு பெயருடன் கொடுத்தேன். இவர்கள் இணையத்தில் அலுவலக சான்றிதழ் ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது. ஆனால் இவர்கள் அலுவலக சான்றிதழ் செல்லாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்கள்.  

மேலும் விலாச சான்றில் முழு பெயரும் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

3 மணிநேரம் டாக்சி பயணம், ரூ 450 டாக்சி சார்ஜ்,  2 மணிநேர காத்திருப்பு. 3 மணிநேர அப்ளிகேசன் தயாரிப்பு -எல்லாம் வீண்.

குழப்பம்

எனது எல்லா விதமான செயல்பாடுகளும் என் G SANKAR என்ற பெயரில் தான் இருக்கிறது -  எனது பள்ளி, கல்லூரி சர்டிஃபிகேட், மேரேஜ் சர்டிஃபிகேட், பாங்க் அக்கவுண்ட், ரேசன் கார்ட், பான் கார்ட், வோட்டர் ஐடி, கேஸ் கனெக்சன் (இதில் இனிஷியல்கூட இல்லை).

எதிலுமே எனது முழுபெயரான SANKAR GURUSAMY  என்பது இல்லை.

இப்போது எனக்கு எப்படி என் பாஸ்போர்ட் புதுப்பிப்பது என்று புரியவில்லை.  இதற்காக புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா என்றும் ஒரே குழப்பமாக உள்ளது.

உளைச்சல் :

மிக சாதாரண சம்பவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு சம்பவங்களிலும் என் மனம் மிகவும் உளைச்சல் அடைந்துவிட்டது. நேற்று முழுவதும் மிகவும் அப்செட். ஒரே படபடப்பாக இருந்தது. சற்று பயமாகவும் இருந்தது - ”எப்படி பாஸ்போர்ட் புதுப்பிக்கப்போகிறோம்” என்று. ஆனாலும் சற்று பொறுமையாக சிந்தித்து இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தெளிவு இப்போது இருக்கிறது. பார்க்கலாம்.


அகங்காரம்  :

இது எந்த வகை அகங்காரம் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் நல்லதற்கில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. உணர்வுகளின் வெளிப்பாடு மனதையும் உடலையும் பாதிக்கிறது. ஆனால் நான் இது எதோ ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடு என்பதை பூரணமாக உணர்கிறேன். அந்த விழிப்புணர்வும் இருந்தது / இருக்கிறது.  ஆனாலும் என்னால் அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

நம் தவறு என்பது இல்லாமல் நாம் பாதிக்கப்படும்பொழுது ஏற்படும் இந்த உணர்வு எப்படி அகங்காரமாகும் என்ற ஒரு குதர்க்கமான கேள்வி இங்கு எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  கடவுள்தான் இதில் தீர்ப்பு சொல்லணும்.


கடவுளே மஹாலிங்கம், இதில் ஒரு தெளிவையும் தீர்வையும் நீங்கதான் தரணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

12 comments:

bandhu said...

பாஸ்போர்ட் அப்ளை பண்ணும்பொழுது Surname என்றிருக்கும் இடத்தில் GURUSAMY என்றும் Given Name என்றிருக்கும் இடத்தில் SANKAR என்றும் எழுதி அப்ளை பண்ணவும்.
இந்த குழப்பம் பொதுவாக தமிழருக்கு மட்டுமே. மற்றவர்களுக்கு லாஸ்ட் நேம் என்று ஒன்றும் பஸ்ட் நேம் என்றும் இருப்பதனால் குழப்பம் இல்லை. நமக்கோ, பஸ்ட் நேம் என்பது நம்முடைய பெயர் (SANKAR in your case), லாஸ்ட் நேம் என்பது தந்தை பெயர் (GURUSAMY )

நானும் இந்த குழப்பத்தை கடந்து வந்தேன்

Sankar Gurusamy said...

அன்புள்ள திரு பந்து, குழப்பம் அதில் இல்லை. எனது விலாச சான்றாக இப்போது அவர்கள் கேட்கும் எந்த விசயத்திலும் எனது முழு பெயரில் இல்லை. ஆனால் விலாச சான்றின் முழு பெயர் இருந்தால்தான் ஏற்றுக்கொள்வேன் என்கிறார்கள். அதுவே குழப்பம்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா,

இதில் அகங்காரம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நம்முடைய கலாசாரியத்தை அடுத்த மாநிலத்தில் எடுத்து சொல்வது ரொம்ப கஷ்டம்.

வெளி மாநிலத்தில் வசிக்கும் எல்லாருக்கும் இது போல பல பிரச்சனைகள் உண்டு.

வேடிக்கை என்பது அது நமக்கு வராத வரைக்கும் தான்.

இதற்க்கான விளக்கம் உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

அன்புள்ள பாலா, இதுவும் ஒருவித அகங்காரம்தான். நம்மை அறியாமல் நம்முள் இருக்கும் ஒருவிதமான வினோத உணர்வு. இது வெளியேறினால்தான் நல்லது.

இது நிச்சயம் ஒரு உடனடி எதிர் வினை உணர்வு (spontaneous reaction) அல்ல. அப்படி இருந்தால் அது உடனே சரியாகி இருக்கும்.

இது வேறுமாதிரி இருந்தது. இதற்கு முன்பும் இதுபோன்ற உணர்வை அனுபவித்து இருக்கிறேன். வெகு நாட்களுக்கு பிறகு இப்படிப்பட்ட உணர்வு மீண்டும் ஏற்பட்டது சற்று சங்கடமாகவும் உணர்ந்தேன். அதன் விளைவுதான் இந்த பதிவு.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

shanmugavel said...

இம்மாதிரி பிரச்சினை வெகு சாதாரணம்.அலுவலர்களின் செக்குமாட்டு சிந்தனைதான் காரணம்.நல்ல பகிர்வு.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சங்கர் அவர்களே,

அகங்காரம் - என்பது காரியம் முடிந்த நிலையில் பெருமிதம் கொள்வதாகும்.

உங்களுக்கோ இந்த அனுபவங்களில் காரியமே நடைபெறவில்லை !

அப்படியிருக்க இதை அகங்காரம் என்பது குறிப்பிடுவது பொருந்தாது

மேலும் இந்த அகங்காரம் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள எமது சிவயசிவ பிளாகரில் பதிவிடப்பட்டுள்ள

கடவுளை எப்படி வழிபட வேண்டும் ?

என்னும் பதிவை படியுங்கள்.
தொடர்புக்கு - http://sivaayasivaa.blogspot.com/2011/04/blog-post_04.html

மிகையாக ஆலோசனை சொல்லியிருந்தால் பொறுத்தருள்க.

நன்றி

Sankar Gurusamy said...

அன்புள்ள ஷண்முகவேல், தாங்கள் கூறியதுபோல அரசாங்க ஊழியர்கள் செக்கு மாடு மனநிலையில் இருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு யார் பொறுப்பாவது என்ற அடிப்படை சிந்தனை இங்கு யாருக்கும் இல்லை.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Sankar Gurusamy said...

அன்புள்ள திரு சிவ சி மா ஜானகிராமன் அவர்களுக்கு, வெற்றியின் மகிழ்ச்சி மட்டும் ஆணவம் அல்ல.. தோல்வி ஏற்படும்போது ஏற்படும் வலியும் நம் ஆழ்மனதின் ஆணவத்தின் வெளிப்பாடுதான். இதுதான் உண்மையான சூட்சுமமான ஆணவத்தின் வெளிப்பாடு.

வெற்றி ஏற்படும்போது ஆணவமாக இல்லாதிருக்க நம்மால் முயற்சி செய்யமுடியும். ஆனால் தோல்வியில் சில காலமாவது துவளாமல் இருக்க முடியவில்லை. இதை நான் என் வாழ்வில் உணர்கின்ற சில சந்தர்ப்பங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

”நான்” என்ற ஆணவத்தின் இன்னொரு பக்கம் இது. இது என் மனதின் சுய பச்சாதாபத்தின் வெளிப்பாடு. இதுதான் நம் உலக இருப்பின் நிஜம்.


தங்கள் கடவுளை வழிபடுவது எப்படி என்ற அருமையான கட்டுரையை படித்தேன். அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி..

தங்கள் மேலான ஆலோசனைகள் எப்போதும் சரியான கண்ணோட்டத்துடனே ஏற்றுக் கொள்ளப்படும். இது பற்றி சங்கடப்பட தேவை இல்லை. குறைந்த பட்சம் எனது பதிவுகளில் தங்கள் நேர் மற்று எதிர் மறை விமரிசனங்களை நேரடியாக தெரிவிக்கலாம்.

தங்களின் வருகைக்கும் மேலான ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சங்கர் அவர்களே,

மே 5 க்கு பிறகு ஏன் புதிய பதிவுகளே காணோம்..
வேலைப்பளுவோ ?

தாங்கள் தொடர்ந்து சிவயசிவ - விற்கு எழுந்தருளி கருத்துரைகள் இட்டு எம்மை ஊக்கப்படுத்துவதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்.

தங்களது அடுத்து பதிவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்.

http://sivaayasivaa.blogspot.com/

Sankar Gurusamy said...

திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களுக்கு,
இப்போது சற்று வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பதிவுகள் எழுத முடியவில்லை.

இருப்பினும் நான் பின் தொடரும் வலைத்தளங்களுக்கு சென்று எனது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

தங்கள் அக்கறைக்கு நன்றி.

arul said...

nalla thagaval

Sankar Gurusamy said...

திரு அருள், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..