Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Wednesday, September 28, 2011

புலனடக்கம்...

பல ஆன்மீக சாதனைகளுக்கு புலனடக்கம் முக்கியமானதாக பேசப்படுகிறது... அது ஏன்?

நமது கர்மாக்கள் நம் புலன்கள் மூலமே வெளிப்படுகின்றன அல்லது நிறைவேற்றப்படுகின்றன. கர்மாக்களை வெளியேற்ற / புதிதாக சேர்க்க இந்த ஐம்புலன்களும் ஒரு வாசலாக செயல்படுகின்றன..

ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சொல்லி இருக்கிறார்... இந்த ஆசைகள் நம் மனதில் இருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு புறக் காரணிகள் தேவை இருக்கிறது.. அந்த தூண்டுதல் இந்த ஐம்புலன்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.

இவ்வாறு தூண்டப்படும் ஆசைகள் நியாயமான முறையில் / அளவாக இருக்கும் போது / வெளிப்படும்போது கர்மாக்கள் குறையவும், அநியாயமான முறையில் / அபரிமிதமாக இருக்கும்போது / வெளிப்படும்போது புதிய கர்மாக்கள் சேரவும் செய்கின்றன...

இந்த புலன்களில் மிக சக்திவாய்ந்த புலன்கள் கண்களும், நாசியும். இவை பிற ஆசைகளைத் தூண்டுவதில் முதலிடம் வகிக்கின்றன. எனவே இவற்றை மிக கவனமாக உபயோகப்படுத்தவேண்டும். இதில் சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போதும் திறந்திருக்கும் புலன்கள் இரண்டு மூக்கு, செவி. எனவே நுகர்ச்சியும், கேட்டலும் முற்றிலும் நாம் இருக்கும் சூழல் சம்பந்தப்பட்டது.

எனவே நல்ல சூழல் அமைவது புலனடக்கத்துக்கு மிக அவசியம்.

புலனடக்கம் கைகூடினால் ஆன்மீக முன்னேற்றம் எளிதில் சித்திக்கும். அது நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோருக்கும் புலனடக்கம் கைகூடி ஆன்மீக முன்னேற்றம் சிறப்பா ஏற்பட்டு ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Tuesday, July 12, 2011

தியானம் - பல நிலைகள்????

நான் தியானம் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் எனது பல நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்வி - “நீ தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறாய்??” என்பது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவர்களும் வெவ்வேறு விதமான தியான முறைகளை முறையாக பயின்று, தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள்.

முதலில் எனக்கு இது புரியவில்லை. பிறகு அவர்களின் தியான முறைகளுக்கு உட்பட்ட சில விளக்கங்கள் கேட்ட பிறகு ஓரளவுக்கு புரிந்தது..

அதாவது நாம் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்வதை தியானம் செய்வதோடு ஒப்பிட்டால், வழியில் , செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், உழுந்தூர் பேட்டை, திருச்சி, இப்படி வரும் ஊர்கள் போல நம் தியான இலக்கு நோக்கி எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதன் அளவீடுதான் இந்த நிலைகள் என்று ஒருவழியாக புரிந்து கொண்டேன்.

இது சம்பந்தமாக எனக்கு தியானம் கற்றுத்தந்த ஆசிரியர் ஒன்றும் கூறி இருக்கவில்லை. அவரிடம் இது பற்றி விளக்கம் கூறுமாறு கேட்டபோது சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

1) நமது தியான நிலையின் அளவீடுகள் உண்மையில் மதிப்பிடுவது சாதாரணமாக முடியாத காரியம்.

2) அதை உண்மையில் கண்டறிவது நம் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் வைத்தே கணிக்க முடியும்.

3) தியானத்தின் உயர்நிலை தாழ் நிலை என எதுவும் வரையறுக்கப் படவில்லை.

4) பெரும்பாலும் இது அவரவர்கள் கற்றுத்தரும் போது மாணவர்களுக்கு ஒரு மேலதிக ஆர்வம் உருவாக்க உபயோகப் படுத்துகிறார்கள்.


இதுபற்றி நான் மேலும் அறிய புகுந்தபோது கிடைத்த தகவல்கள்:

சில தியான முறைகளில், ஒரு குறிப்பிட்ட நாட்கள் தியானம் செய்தபின் அவர்கள் அடுத்த நிலைக்கு வந்துவிட்டதாக கணக்கிடுகிறார்கள்.

இன்னும் சில தியான முறைகளில், அவர்களின் மேலேயே இன்னொருவர் தியானம் செய்தும் உண்மையாக கண்டுபிடிக்கிறார்கள்.

சில முறைகளில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொருவிதமான தியானங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அது நாம் செய்யும் தியானத்தின் பால் சார்ந்ததே ஒழிய அது ஒன்றும் ஒரு பொதுப்படுத்தப்பட்ட விசயம் இல்லை.


மேலும் நாம் தியானத்தின் உண்மையான இலக்கான ஞானத்தை அடைய எடுக்கும் கால அளவு எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே போதுமானது.  சிலருக்கு பலபிறவிகளும் தேவைப்படுகிறது. அது நம் மனநிலையையும் நம் கர்மசொத்துக் கணக்கையையும் பொருத்தது.

தொடர்ந்து தினமும் தியானம் செய்தால் நிச்சயம் ஞானம் அடையலாம். எப்போது என்ற கேள்வியை விட்டுவிட்டு, அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து தியானம் செய்துவந்தால் ஞானம் நிச்சயம் சித்திக்கும்.

எனக்கு தெரிந்து தியானத்தில் இரண்டே நிலைகள்தான்.. ஒன்று தொடர்ந்து தியானம் செய்யும் நிலை. இன்னொன்று தியானத்தை விட்ட நிலை.

இதில் தியானம் செய்யும் நிலையில் நாம் எப்போதும் இருந்தால் ஞானம் சித்திக்கும்..

கடவுளே மஹாலிங்கம் எல்லாரும் தொடர்ந்து தினமும் தியானம் செய்து ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.. ஹரஹர மஹாதேவா போற்றி...

Monday, July 11, 2011

எது தியானம்???

தியானம் என்றால் என்ன? இது ஒரு கடினமான கேள்வி.. இதற்கு ஒரே பதில் தரவும் முடியாது...

சிலர் அமைதியாக அமர்ந்திருப்பதே தியானம் என்கிறார்கள்.

சிலர் மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் என்கிறார்கள்.

சிலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும் வழிபடுவதையும் தியானம் என்கிறார்கள்

சிலர் மந்திரம் உச்சாடம் செய்வது தியானம் என்கிறார்கள்.

சிலர் முனைப்போடு காரியம் செய்வதையும் தியானம் என்றே சொல்கிறார்கள்.

இப்படி பல சிலர் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள்..


ஒரே குழப்பம்.. யார் சொல்வதை எடுத்துக் கொள்வது. எதை விடுவது. எது சிறந்தது. எது ஒவ்வாதது.

முதலில், இதில் நாமாக, சுயமாக செய்யும் எதுவுமே ஒவ்வாவதுதான்... அது தியானமாகாது. முக்கியமாக ஒரு ஆசிரியர் மூலம் கற்காத தியானம் தியானமே அல்ல.

அது எந்த வகையானதாக இருந்தாலும் ஒரு தேர்ந்த தியான ஆசிரியரைப் பணிந்து தியானம் கற்றுக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும்.  அதுவே உண்மையான தியானம்... அது நம் வாழ்வில் தேவையானதை எல்லாம் நமக்கு அளிக்கும்..

கடவுளே மஹாலிங்கம்... நம் மக்கள் அனைவரும் ஒரு நல்ல தியான ஆசிரியரிடம் தியானம் கற்று சிறப்பாக பயிற்சி செய்திட நீங்கதான் அருள் செய்யணும்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, July 7, 2011

ஞானமும், தியானமும்...

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும், நம் வாழ்வில் நாம் அடைய வேண்டிய இலக்கு ஞானம். இதற்கு எவ்வளவோ வழிகள் இருந்தாலும், விரைவில், பாதுகாப்பாக அடைய சரியான வழி தியானமே..

தியானம் செய்வதால் என்ன பயன்? நமக்கு சக்திகள் கிடைக்குமா? பறக்க முடியுமா? மறைய முடியுமா? எதிரியை அழிக்க முடியுமா? நிறைய பணம் கிடைக்குமா?? அது என்னதான் செய்யும்?

நானும் தியானம் கற்று சில நாட்களாக செய்து வருகிறேன்.. என் அனுபவத்தில் அறிந்தவை :

முதலில் நமக்கு நம்மை உண்மையாக அறிமுகம் செய்து வைக்கும்.. நமது கொள்ளளவு (Capacity) என்ன என்று நமக்கு உணர்த்தும். நாம் நினைப்பது போல் ஒரு சூப்பர்மேன் அல்ல அல்லது ஒரு உதவாக்கரை அல்ல..  நமது உண்மையான மதிப்பீடு நமக்கு மிக முக்கியம். இதிலிருந்துதான் நாம் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான சூட்சுமம் அடங்கி இருக்கிறது. அதை நமக்கு அழகாக நாசூக்காக உணர்த்துகிறது.

அடுத்து நம் வாழ்வின் உண்மையான வாழ்வியல் தேவைகள் என்ன  என நமக்கு உணர்த்தி நம்மை அதை நோக்கி தள்ளுகிறது. மேலும் சில தேவையில்லாத விசயங்களில் நாம் மதி மயங்கி மூழ்கிக் கிடக்கும் போது அதிலிருந்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கிறது..

இது நம் பழக்க வழக்கங்களில் ஒரு நேர் மறையான மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

நம் வாழ்வின் இலக்கான ஞானம் அடைய நமக்கு பொருத்தமான ஒரு Custom made வழியில் நம் வாழ்வை வழி நடத்துகிறது. ஞானம் அடைய நாம் செய்யவேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வைக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இதை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.



இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான தியான முறைகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. யார் யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள். பல பிரபலமான அமைப்புகளும் இருக்கின்றன.

யாரிடம் கற்பது? எதை கற்பது? எது சரியான தியானம்? எது போலி தியானம்? ஆயிரம் கேள்விகள்..

இவற்றிற்கு உண்மையான, நேர்மையான பதில், நம் மனதுக்கு பிடித்த ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளலாம். நமக்கு யார் மீது அபிமானம் இருக்கிறதோ அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம். நமது சுற்றத்தார் / நட்பு வட்டத்தில் நம்பிக்கைக்கு உரிவர்கள் பரிந்துரைக்கும் தியானம் கற்றுக் கொள்ளலாம்.
என் தியான ஆசிரியர் கூறிய ஒரு மிக முக்கியமான விசயம் - ”தியானம் எல்லாமே ஒரே விதமான பலன் தரும். அதை சொல்லிக் கொடுப்பவர்கள்தான் அதை பாகுபடுத்தி அதில் ஒரு உயர்வு தாழ்வு ஏற்படுத்திவிட்டார்கள். எனவே ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். மாறி மாறி மனதை அதுவோ இதுவோ என்று அலைய விடாதீர்கள்.”

இதில் அதி முக்கியமான விசயம் தொடர்ந்த தியான பயிற்சி. இதுவே நம் வாழ்வின் இலக்கான ஞானத்துக்கு நம்மை பாதுகாப்பாக இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. உங்க அருளால எல்லாரும் தியானம் செய்து வாழ்வின் லட்சியமான ஞானத்தை அடைய அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.... ஹரஹர மஹாதேவா போற்றி...

Monday, July 4, 2011

பிரார்த்தனைகள் - 2

நாம் அடையும் எல்லா விஷயங்களும் கடவுளிடம் இருந்து நமக்கு வருபவை என்றாலும், சில விஷயங்கள் கடவுளால் மட்டுமே தர முடியும் என்ற நிலையில் இருப்பவை... அவை பற்றி...


1) நல்ல உடல், மன ஆரோக்கியம்

2) சுயநலமில்லா பந்து மித்திரர்கள், சுற்றத்தார்கள்

3) சத் சங்கம், சத் சிந்தனை

4) நல்ல மனைவி, மக்கள்

5) தேச, உலக நலன்

6) மன நிம்மதி, ஆனந்தம், மன அமைதி

7) ஞானம்


இவை அனைத்தும் இறைவன் மட்டுமே தர முடியும். மேலும் நமது, ”இந்த உலகில் எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்ற பிரார்த்தனைகளின் முடிவு மேற்கண்ட ஏதாவது ஒன்றில் வந்து தான் நிற்கும்.

எனவே பொதுவாக இவற்றை பிரார்த்தனை செய்தாலே இறைவன் நமக்கு இந்த உலகில் இவற்றை அடைய தேவையானவற்றை உடனடியாக அளிப்பான் என்பதில் சந்தேகமில்லை.

குறைந்த பட்சம், மன நிம்மதியும் ஞானமும் நமக்கு வாய்த்தால் வேறு எதுவும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை.

இதில் ஞானம் கை கூடினால் நிம்மதி தானாக கிடைக்கும்.  எனவே ஞானம் வேண்டி பிரார்த்திப்போம். ஒரு நிம்மதியான சமுதாயம் படைப்போம்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லாருக்கும் மன நிம்மதியும் ஞானமும் கைகூட அருள் செய்யுங்கள்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....

Friday, April 29, 2011

ஞானமும் மாயையும்...

”இந்த உலக வாழ்வே மாயம். இங்கு இருப்பதெல்லாம் மாயை.”

இப்படிப்பட்ட கருத்துகளோடு சிலர் ஆன்மீகத்தில் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் ஞானம் அடைவதற்காக குடும்பத்தை விட்டுவிடுதலே முதல் படி என்றும் பிரச்சாரமும் செய்தார்கள்.

முதலில் இது எனக்கு புரியவில்லை. கடமையை விடுத்து சன்னியாசம் கொள்வது மாயையா? அல்லது கடமையை ஒழுங்காக செய்வது மாயையா?? இது குறித்த குழப்பம் இன்னும் சில இடங்களில் இருக்கிறது.

எது மாயை என்ற சிந்தனை அதிகமாகி அது பற்றி என் நண்பர்களுடன் விவாதித்த போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் இந்த உலகம் மாயை அல்ல. இதில் இருப்பவர்களும் மாயை அல்ல. நம் உறவுகள் மாயை அல்ல. நம் குடும்பம் மாயை அல்ல. எல்லாமே நிஜம்.

ஆனால் நம் அகங்காரத்தின் பொருட்டு இவற்றின்பால் ஏற்படும் உணர்வுகள்தான் மாயை.

அளவுகடந்த / விடமுடியாத  - காதல், காமம், பயம், ஆசை, பேராசை, பாசம் போன்ற உணர்வுகள் - மாயை

நம் பிறப்பின் நிமித்தமும், வளர்ப்பின் நிமித்தமும் நமக்கு ஏற்படும் உறவுகளும், கடமைகளும், அதை நிறைவேற்ற அகங்காரம் விடுத்து நாம் செய்யும் கர்மங்களும் - நிஜம்.

நமக்கு ஏற்படும் வியாதிகள் நிஜம். அதை நினைத்து நாம் வருந்துவதும் உழல்வதும் பயப்படுவதும் மாயை.

நமக்கு விதிக்கப்பட்ட கடமைகள் நிஜம். ஆனால் அதை நினைத்து கோபப்படுவது மாயை.


மனிதன் வாழ்வில் உணர்வுகள் இல்லாமல் வாழ முடியுமா?? நிச்சயம் முடியாது.

ஆனால் அந்த உணர்வுகள் எதற்காக, எவ்வளவு வெளிப்படவேண்டும் என்ற தேவையான வரையரைக்குள் இருந்தால் அது நிச்சயம் மாயையாக இருக்காது.

உணர்வுகளின் அளவுகள் தீவிரமாகும்போது அவை நம் நரம்பு மண்டலத்தில் செயல் பட ஆரம்பிக்கிறது. அதில் ஏற்படும் அழுத்தம் உடல், மன வியாதியாக பரிணமிக்கிறது.


எனவே மாயை என்பது நமக்கு வியாதியாகவும், மன அழுத்தமாகவும் மாறி நம் வாழ்வின் நோக்கத்தை சிதைத்து விடுகிறது.

ஒவ்வொரு வாழ்வின் நோக்கமும் ஞானம் அடைவதே... அதை நமக்கு மறக்கடிப்பதே இந்த மாயையின் நோக்கம்.

இந்த மாயையில் இருந்து நாம் விடுபட்டு ஞானத்தை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...




Thursday, April 28, 2011

ஞானமும் அகங்காரமும்...

சுய அகங்காரம் (ஈகோ) அற்ற நிலையில் ஞானம் எளிதில் வெளிப்படும்.  நம் அகங்காரமும் அதன் விளைவுகளும்தான் ஞானத்தை நம்மிடம் இருந்து மறைக்கும் திரை.

முதலில் எது அகங்காரம் என்று வரையறை செய்வோம்.


1) நான் வேறு / மற்றவர்கள் வேறு என்ற வேறுபடுத்தும் உணர்வே அகங்காரம்.

2) எந்த காரணத்தால் சுகமும், துக்கமும் நம் மனதைப் பாதிக்கிறதோ அதுவே அகங்காரம்.

3) ஒரு செயல் செய்ததால் ஏற்படும் விளைவுகளை எண்ணி ஏற்படும் உணர்வுகளும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள்தாம்.

4) நான் என்ற அகங்கார நிலையில் செய்யும் செயல்கள் கர்மாவை உண்டு பண்ணும். அதாவது நம் நரம்பு மண்டலங்களில் ஒருவித நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.


உண்மையைக் கூறினால் நம் அகங்காரம்தான் நம் அடையாளம். அது இருப்பதால்தான் நம்மால் இந்த உலகில் வாழ முடிகிறது. 

நான் வாழ்கிறேன், நான் செய்கிறேன், என்னால்தான் நடந்தது, நான் தான் செய்யவேண்டும், என்னால்தான் முடிந்தது, என் மூலம்தான் நடக்க வேண்டும், நான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன் என்ற உணர்வுகள் எல்லாம் அகங்காரத்தின் வெளிப்பாடுகள். 

இந்த உணர்வுகள்தான் நம்மைப்பற்றி நமக்குள் / சமூகத்தில்  ஒரு உயர்ந்த அபிப்பிராயம் /அந்தஸ்து / மரியாதை  தரும்நிலையில் வைத்திருக்கின்றன.

ஆனால் ஞானம் வேண்டுமெனில் இதை விட்டுத்தான் ஆகவேண்டும். இந்த அகங்காரத்திரை விலகினால்தான் ஞான தரிசனம் கிடைக்கும்.

இதனால் நாம் யார் என்ற கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்கும்.  ஞானம் இதைவிட சிறப்பாக நம்மை வாழ வைக்கும்.


கடவுளே மஹாலிங்கம்.. உடனடியா இந்த அகங்காரம் அகன்று ஞானம் வர அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!

Monday, April 25, 2011

ஞானமும்.. மதங்களும்..

ஞானம் என்பது மதம் சார்ந்ததா? ஒரு மதத்தை சாராமல் ஞானம் அடைய முடியாதா? எந்த மதத்தில் இருந்தால் ஞானம் கிடைக்கும்? இவை மிகவும் கடினமான கேள்விகள். நம் ஆழ் மனதில் ஞானம் என்பது மதத்துடன் சம்பந்தப்பட்டதாகவே அறிந்திருக்கிறோம்.

உண்மையில் ஞானம் என்பது மதம் சம்பந்தப்பட்டதல்ல. கடவுள் என்பதுவும் ஞானத்துக்கான ஒரு வழியாக இருந்தாலும், அவரின் உருவமோ பெயரோ அதற்கு முக்கியமில்லை. மேலும் கடவுள் இல்லாமலும் ஞானம் அடையலாம்.

மதங்கள் மனிதனை நல் வழிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டன. எப்பொழுது மனிதன் நல் வழியில் இருக்கிறானோ அப்போதே அவன் ஞானப் பயணம் ஆரம்பமாகி விடுகிறது.

உண்மையில் நம்மை அறிவதற்கு இயற்கையாக இருக்கும் ஒரு பாதைதான் நமது இந்த உலக வாழ்க்கை.

ஆத்ம சாதகங்களான குரு உபதேசமும், ஆழ்ந்த பக்தியும், தியானமும் யோகமும் அதைப் பயணத்தை விரைவு படுத்துகின்றன.

இந்த மதத்தினர்தான் ஞானம் அடைய முடியும் என்றோ, இவர்கள் அடைய முடியாது என்றோ நிச்சயம் இல்லை.

கடவுளே இல்லை என்று கூறுபவர்களும்  கடவுளை தூஷிப்பவர்களும் கூட நல்ல மனதும் கருணை சிந்தனையும் பரந்த தன்னலமில்லா  உள்ளமும் கொண்டு வாழ முடியும் என்றால் அவர்களாலும் ஞானம் அடைய முடியும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உள்ளாற ஆழ்ந்து வரவேண்டும். அப்படி வருவதற்குத்தான் யோகமும், தியானமும், பக்தியும் உதவி செய்கின்றன. இவற்றை மதத்திலிருந்து பெறுபவர்கள் நிச்சயம் ஞானம் அடைவார்கள்.

மதம் இல்லாமல் பெற்றவர்களும் ஞானம் அடைவர்.

எல்லா மதத்திலும் பல நல்ல விசயங்களும் சில இந்த காலக்கட்டத்துக்கு தேவையில்லாத விசயங்களும் இருக்கின்றன. ஒரு அன்னப்பறவை போல தேவையானவற்றை கடை பிடித்து தேவை இல்லாதவற்றை விலக்கினாலே நல் வழி புலப்படும். அந்த தெளிவே நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லும்.


கடவுளே எல்லாருக்கும் இந்த தெளிவு ஏற்பட்டு ஞானம் அனைவருக்கும் சித்திக்க அருள் செய்யுங்க.

சதுரகிரியாரே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Thursday, April 21, 2011

எது ஞானம்... அதனால் என்ன பயன்..

ஞானம் என்றால் என்ன?  அது எப்படி இருக்கும்?  அதனால் என்ன பயன்?  இதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?  இதுபோன்ற சில கேள்விகள் என் நண்பர் ஒருவரால் சில நாட்களுக்கு முன் எழுப்பப்பட்டது.

ஞானம் என்றால் என்ன?

இதற்கு ஒருவரியில் விளக்கம் இல்லை. இதற்கு முழுமையான பதில் தெரியாததால் தான் நான் இன்னும் இப்படியே இருக்கிறேன். இது பற்றி எவ்வளவு படித்தாலும் எழுதினாலும் அதன் சுவையை சுவைத்து அறிவது போல் இருக்காது. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட,  அறிந்த,  புரிந்த சில சிறு விளக்கங்கள் :

1) ஞானம் என்பது தன்னை அறிதல் / உணர்தல். (படித்தல் அல்ல) எவ்வளவுதான் ஞானம் பற்றி கேள்விப்பட்டாலும், படித்து அறிந்தாலும் தனக்குள் தானே உணர்ந்து அறியும்போதுதான் அது பற்றிய முழுமையான உணர்வு கிடைக்கும். இதை யாரும் முழுமையாக இன்றுவரை விளக்க முடியவில்லை.

2) ஞானம் என்பது தன்னை அனைத்திலும் உணர்ந்து அறிதல். ”நான்” என்பது எதுவோ அதுவே எல்லாமாக இருக்கிறது என்ற உணர்வு ஞானம்.

3) ஞானம் என்பது அனைத்தையும் தன்னில் உணர்ந்து அறிதல். இந்த உலகில் உள்ள அனைத்தாகவும் எது இருக்கிறதோ அதுவே ”நான்” என்பதாகவும் இருப்பதாக உணர்தல்.

4) ஞானம் என்பது படித்து அறிதல் அல்ல. உணர்ந்து அறிதல். சில நேரங்களில் இதற்கு புத்தகப் படிப்பு உதவலாம்.  ஆனால் அதுவே முக்கியமல்ல.


இதனால் யாருக்கு என்ன பயன்?
இதில் பல கேள்விகள் எழுகின்றன.  நமக்கோ அல்லது சமூகத்துக்கோ ஞானத்தால் ஏதாவது பயன் கிடைத்தால்தான் அது உண்மையான ஞானம் என்று வாதம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஞானம் அடைந்தால் நிறைய பணம் வருமா? எங்கள் கஷ்டம் தீருமா? வியாதி அகலுமா? அமானுஷ்ய சக்தி கிடைக்குமா?  மக்களை / எதிரிகளை வசியம் செய்ய முடியுமா? நம் ஊழல் அரசியல்வாதிகளை / அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? இயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா? போர்களை நிறுத்த முடியுமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் என் தற்போதய பதில் ஆம் மற்றும் இல்லை. 

ஞானத்தை அடைய முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை / கடமை. அதன் பிறகு அதை அடைவதும் அதனால் என்ன செய்யவேண்டும் என்பதும் ஞானத்தின் வேலை. ஞானத்தை அதைத் தவிர வேறு யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு கட்டளை இடவும் முடியாது.

1) யாருக்கு எப்போது என்ன தருவது என்பது ஞானத்துக்கு நன்றாகத் தெரியும்.

2) ஞானிகள் இருக்கும் இடத்தில் இயற்கையின் விதிகள் செவ்வனே செயல் படுத்தப்படும்.
3) யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில செயல்கள் நடந்தே தீரும். அவை எவை என்பதே ஞானமே முடிவு செய்யும்.  ஞானிகள் ஞானத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கிறார்கள் - ஞானத்தின் அனுமதியோடு மட்டுமே.

4) ஞானம் செயல்படும்போது சத்வ சக்திகளின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கும். தாமச சக்திகள் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும்.

5) இந்த உலகில் ஞானிகள் அதிகமாக வாழ்ந்தால் தீய சக்திகளின் ஆதிக்கம் குறைந்து நல்ல சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.


என் சிற்றறிவுக்கு எட்டியவரை பகிர்ந்துள்ளேன். இவை தவிரவும் நிறைய இருக்கலாம். ஞானிகளின் கடாட்சத்தினால் அவை வெளிப்படும்போது மேலும் பகிர்வேன்.

இதில் சில தப்பாகவும் இருக்கலாம். இப்போதைக்கு என் புரிதல் படி எழுதி இருக்கிறேன்.  உண்மையிலேயே ஞானம் வந்தால் தான் அதுபற்றி முழுமையாக கூறமுடியும்.


சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்..  விரைவில் ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம். சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Monday, April 18, 2011

ஞானம் - சில மூட நம்பிக்கைகள்...

ஞானம், ஆன்மீக சாதகங்களுக்காக ஒருவர் முயற்சி செய்யும் பொழுது, முதல் எதிர்ப்பு அவரின் குடும்பங்களில் இருந்துதான் வருகிறது. இந்த  வயசிலேயே ஏன் சன்னியாசி ஆகப் போகிறாய் என்ற கேள்வியை பலரால் தவிர்க்க முடியவில்லை.

ஞானம் என்பது ஏதோ வயதான மற்றும் சன்யாசிகளுக்கு உரியது போன்ற ஒரு தோற்றம் இப்போது இருக்கிறது. ஆனால் உண்மையில் ஞானம் குடும்பஸ்தர்களுக்கே அதிகம் தேவை. அதுவும் இளமையில் இருப்பவர்களுக்குத்தான் ஞானத்தின் தேவை மிக அதிகம்.

ஆன்மீகமும், ஞான மார்க்கமும், ரிடயர்ட் ஆன பின்னால் ஓய்வாக செய்ய வேண்டிய ஒரு பொழுதுபோக்கு என்ற சிந்தனை நம் சமூகத்தில் மிக ஆழமாக இருப்பது கசப்பான உண்மை. இப்போது இது ஓரளவுக்கு மாறி இருந்தாலும் சில வேறுவிதமான அனர்த்தங்களில் இது முடிகிறது.

இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆன்ம சாதகங்கள் ஏதோ ஒரு சில பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக அல்லது விடுபடுவதற்காகவே செய்கிறார்கள். உதாரணமாக வறுமை, வேலை இன்மை, திருமண நோக்கம், குழந்தை பிறப்பு, மன அழுத்தம், வியாதிகளிலிருந்து விடுதலை.. இப்படி பல...

ஆனால் இது மனிதன் வாழும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறையின் பாடம் என்பது பெரும்பாலோனோருக்கு புரியவில்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து ஓரளவுக்கு விடுதலை கிடைப்பதுபோல் தெரிந்தாலே சாதகத்தை விட்டுவிடுகிறார்கள்.

இப்போது ஆத்ம சாதகம் என்பது ஞானத்திற்கான வழி என்ற நிலையில் இருந்து ஏதோ தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் சாப்பிடும் மாத்திரை போல இந்த வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு ஒரு யுனிவர்சல் மருந்து என்ற சிந்தனையே மேலோங்கி இருக்கிறது.


இதில் உண்மையில் சாதகம் செய்பவர்கள் பலருக்கே  வேறு ஏதோ உலகத்தில் இருக்கும் ஒன்றுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வும் இருக்கிறது.


ஞானம் என்பது ஒரு சாரார் மட்டுமே அடைவது என்ற மாயத் தோற்றமும் இருக்கிறது.

இந்த உலகில் பிறந்த எந்த ஜீவ ராசியும் ஞானத்தை அடையலாம். எப்போதும் அடையலாம். எவ்வளவு விரைவாக அடைகிறோமோ அவ்வளவு சிறப்பானது. இதற்கு மதம், இனம், மொழி, சாதி எதுவும் தடையில்லை.

மனதின் ஆர்வமும், மன உறுதியும், விடாமுயற்சியும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாத செயலாக்கும் திறமும், குருவின் உபதேசமும், பக்தியும், ஒழுக்கமும், நேர்மையும், இடை விடாத ஆன்ம சாதகமும் ஒருவனை நிச்சயம் ஞானத்தின்பால் கொண்டு சேர்க்கும்.  இது உறுதி..


கடவுளே!! சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்!! இந்த ஞானத்தைப் பற்றிய மூட நம்பிக்கைகள் விலகி அனைவரும் ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!

Monday, April 11, 2011

ஞானமும் இன்றைய அரசியலும் - ### !!!! ????

ஞானத்தைப் பற்றியும் அதை அடையும் வழியில் இருக்கும் தடங்கல்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது இன்றைய அரசியலுக்கும் ஞானத்துக்கும் சில அதிசயமான ஒப்பீடுகள் தோன்றியது. அது பற்றியதுதான் இந்தப் பதிவு :

மனிதனாகிய நாம், வாக்காளர்களாகவும், ஞானம் என்பது ஒரு நல்ல ஆட்சிக்கான அடையாளமாகவும்,  ஞானத்திற்கான நம் முயற்சி வாக்குகளாகவும், நாம் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி ஞானம் என்ற உயர்ந்த விஷயத்தை அடைவதற்குத் தடங்கல்களாக உள்ள சில அமானுஷ்ய சக்திகள்,  பணம், புகழ் போன்றவற்றை கொண்டு திருப்தி அடைந்து ஞானத்தை விட்டு நாம் விலகி விடுவது போலவே, நம் மக்களும் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கும், கையூட்டுகளுக்கும் ஏமாந்து தீயவர்களை அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுத்து நல்ல ஆட்சியை விட்டு விலகிவிடுகிறார்கள். இதனால் தீமையே விளையும். 

எப்படி ஞானம் அடைவது ஒரு மனிதனின் நடத்தையைப் பொருத்ததோ, அதுபோலவே ஒரு நல்ல ஆட்சி அமைவதும் நம்  வாக்காளர்களின் நல்ல நடத்தையைப் பொருத்ததே. அதாவது லஞ்சம், இலவசம் வாங்காமல், அதை நோக்காகக் கொள்ளாமல் வாக்களிக்க முற்பட்டால் நல்லாட்சி நிச்சயம்.

எப்படி ஒருவரின் விதிப்படியே ஞானம் கிடைக்கிறதோ அதுபோலவே, நம் விதிப்படியே நம் அரசாங்கம் அமைகிறது. உண்மையாக இருந்தால் உண்மையாகவும், போலியாக இருந்தால் போலியாகவும். 

இதில் இருக்கும் சூட்சுமம் மிகவும் சுவாராசியமானது.  நம் சமூகத்தின் பொது மனதில் இருக்கும் நல்ல தீய எண்ணங்களின் பாதிப்புதான் நம் வேட்பாளர்களிடம் பிரதிபலிக்கிறது. எனவே சமூகத்தில் நிகழும் நற்சிந்தனை பரவலைப் பொறுத்து நம் வேட்பாளர்களின் சிந்தனை அமைப்பு அமைகிறது. இதையே விதி என்று சொல்கிறோம்.


ஆனால் இந்த கலிகாலத்தில் தீமைகள் வளர்ந்து நன்மைகள் குறைவதைப் பார்க்கும்போது நல்லாட்சி என்பது வெறும் கனவு போலவே தோன்றுகிறது. ஆனாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நற்  சிந்தனைகளும், தனிமனித,  சமூக ஒழுக்கமும் வளர்ந்தால் நல்லாட்சி நிச்சயம் அமையும்.

எனவே நற்சிந்தனை வளர்ப்போம், இலவசங்களை புறந்தள்ளுவோம்,  லஞ்சத்தை மறுப்போம். நல்லாட்சி ஏற்பட உதவுவோம்.


சதுரகிரியாரே சரணம்!!!  சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Wednesday, April 6, 2011

ஞானம் - சில தடங்கல்கள்

ஞானம் அடைய முயற்சிகள் செய்யும்பொழுது, நமக்கு ஏற்படும் சில அனுபவங்கள் நம்மை அந்த முயற்சியிலிருந்து விலக வைக்கும் வல்லமை உள்ளது. அது பற்றி நான் பலருடன் விவாதித்ததுண்டு. இருந்தாலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. நான் புரிந்த வரை, அவை பற்றிய எனது சிந்தனைகள்.


முதலில் வருவது - அளவுக்கதிகமான ஞான ஆர்வத்தினால் தம் கடமைகளை மறத்தல் / மறுத்தல்.  சிலருக்கு ஞான ஆர்வம் வந்ததும் தத்தம் குடும்பக் கடமைகளை மறந்து, அதை மறுத்து ஞானத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக, குடும்பக் கடமைகளையே செய்ய முடியாவிட்டால் நிச்சயம் ஞானக் கடமைகளை செய்ய முடியாது. 

இதற்கு முக்கிய காரணம், ”நாம்” முயற்சி செய்து நாமே ஞானம் அடைகிறோம் என்கின்ற ஆணவம் தான். இதை முதலில் விடவேண்டும்.  ஞானம் நம்மைத் தேடி நிச்சயம் வரும். முயற்சி மட்டுமே நம்முடையது. இந்தத் தெளிவை நம் குரு மட்டுமே தர முடியும். நம் மீது உண்மையான அக்கறை கொண்ட ஞான குரு நிச்சயம் நம்மை சரியான வழியில் வழி நடத்துவார்.


அடுத்து இந்த வரிசையில் வருவது - அமானுஷ்ய சக்திகள். இந்த சக்திகள்தான் ஞான மடைவதற்கு முக்கிய எதிரிகள். நம் மனித முயற்சி தேவைப்படாத எதுவும் நமக்கானதில்லை. அது நமக்காக செய்யப்பட்டாலும் பிறருக்காக செய்யப்பட்டாலும்.  

ஞான மார்க்கத்தில் செல்லும் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இதைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. சிலர் இந்த அமானுஷ்ய சக்திதான் ஞானம் என்று அதிலேயே இருந்துவிடுவார்கள்.


அடுத்து வருவது - பதவி,  புகழ். பதவி, புகழ் என்பது ஒரு போதை.  அதற்கு அடிமையாக ஆகாமல் இருக்கவேண்டும்.  தவிர்க்க முடியாமல் வரும் பதவி, புகழ் இவற்றால் ஏற்படும்  போதை தலையில் ஏறாமல் ஞான மார்க்கத்தை விட்டு விலகாமல் சென்றால் வெற்றி நிச்சயம்.

புகழின் சில விளைவுகள் -  நம் ஆணவம், அகங்காரம் அதிகரித்தல். சொல் பேச்சு கேளாமை.  தான் தோன்றித்தனம்.  தன்னை முன்னே நிறுத்தி காரியங்கள் செய்ய முயல்தல். இவை அனைத்தும் ஞானப் பாதைக்கு எதிரானவை.


அடுத்து வருவது - அளவுக்கதிகமான பணம், செல்வம். நம் தேவைக்கு,  தகுதிக்கு அதிகமான செல்வம் வருவது போல இருந்தால் நிச்சயம் பிரச்சினைதான்.

பதவி, புகழின் அனைத்து விளைவுகளும் பணத்துக்கும் உண்டு.


அடுத்தது - தான் ஞானம் அடைந்துவிட்டதாக தானே எண்ணுதல். சிலருக்கு ஞானப் பாதையில் செல்லும்போது திடீரென்று தான் ஞானம் அடைந்துவிட்டதாகத் தோன்றும். அதற்கு போலியாக சில அறிகுறிகளும் அவர்களுக்கு இருக்கும். சுற்றி இருக்கும் சிலரும் அதை வழி மொழிவார்கள். அதையே பிடித்துக் கொண்டு ஞானப்பாதையை விட்டு விலகிவிடுதல்.

நமக்கு ஞானம் வந்தால் நிச்சயம் அது நமக்கு தெரியாது. இதை சரியாக கணிக்க வேண்டியவர் நம் குரு மட்டுமே.


எவ்வளவு இருந்தாலும், ஞானம்தான் மனிதன் அடைய வேண்டிய உன்னத லட்சியம். அதை நோக்கி பயணிப்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.  ஞானப் பயணமே நம் லட்சியப் பயணம்.


கடவுளே மஹாலிங்கம் உங்க அருளால எல்லாரும் இந்த ஞானத்தின் தடங்கல்களைத்தாண்டி பயணம் செஞ்சு ஆன்மீக ஞானத்தை அடையணும்னு வேண்டிகிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!

Tuesday, April 5, 2011

ஞான குருவின் உபதேச மகிமை...

ஒரு மனிதன் ஞானம் அடைவதற்கு ஒரு குருவின் துணை மிகவும் அவசியம். இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது, என் மனதில் எழுந்த சிந்தைகள், சில பழைய நிகழ்வுகளின் நினைவுகளின் பதிவு.

தனியாக மனிதன் ஞானம் அடைய முடியாது. குரு இல்லாமல் ஞானம் இல்லை. குரு உபதேசம் மிகமுக்கியம். ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவர்களாலேயே உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும். உடனடியாக இல்லாவிட்டாலும், சற்று தாமதமாகவாது. குரு உபதேசித்த வழி நடந்தாலே ஞானம் சித்திக்கும்.

குரு உபதேசம் பொதுவானது அல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. அது எப்படிப்பட்டது என்பதை குருவே முடிவு செய்வார். ஒருவருக்கான உபதேசம் மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை. அதனால் இதில் உயர்ந்த உபதேசம், தாழ்ந்த உபதேசம் என்ற பேதமில்லை. அவரவருக்கு அவரவருக்கான குரு உபதேசமே உயர்ந்தது, சிறந்தது. அதுவே அவரவருக்கான வழி. இதை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதை கடமையாகக் கொண்டால் கண்டிப்பாக ஞானம் சித்திக்கும்.

இதைப்பற்றி சிந்திக்கும் பொழுது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பரின் நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்ட அவரின் அனுபவம் ஞாபகத்தில்  வருகிறது.

அவ‌ருட‌னான‌ என‌து ச‌ந்திப்பு ஒருமுறைதான் ந‌ட‌ந்தாலும், அந்த அனுபவம் என் ம‌ன‌தில் மிக‌ ஆழ‌மாக‌ப் ப‌திந்துவிட்ட‌து. அவ‌ருக்கான‌ குரு உப‌தேச‌மாக‌க் கிடைத்த‌து, "ப‌சி ஆற்றுத‌ல்". அன்ன‌தான‌ம் செய்ய‌வேண்டும்.

அவ‌ரோ மிக‌வும் வ‌றுமையில் இருப்ப‌வ‌ர். குறைந்த‌ ச‌ம்பாத்தியத்தில் நிறைவான குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர். இருந்தாலும் குரு உப‌தேச‌த்தை சிர‌மேற்கொண்டு அவ‌ர் ப‌சி ஆற்றுத‌ல் ஆர‌ம்பித்தார். த‌ன் சொந்த‌ செல‌வில்தான். சில நண்பர்க்ள் உதவியும் சேர அது கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. சிறிய அளவிலானதானாலும் தின‌ந்தோறும் செய்து வ‌ந்தார்.

ஒரு நாள், மிக‌க் க‌டின‌மான‌ சூழ‌லில், வீட்டுக்கு ச‌மைக்க‌வே ஒன்றும் இல்லாத‌ நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து. அன்று அவ‌ர் ம‌ன‌தில்  எப்ப‌டி செய்வ‌து? என்ன செய்வது? என்று ப‌ல‌ ச‌ஞ்ச‌ல‌ங்க‌ள். க‌டைசியில் அவ‌ர் முடிவு செய்த‌து "அடுப்பை மூட்டி, த‌ண்ணீரை வைப்போம். கொதிக்க‌ வேண்டிய‌து, வெறும் த‌ண்ணீரா அல்ல‌து அரிசியா என்ப‌தை க‌ட‌வுள் முடிவு செய்ய‌ட்டும்"

அதிகாலை, வெறும் அடுப்பை மூட்டிக் கொண்டிருந்த‌ போது அவ‌ர‌து ந‌ண்ப‌ர் அனுப்பிய‌தாக‌ சில‌ மூட்டை அரிசியும் காய்க‌றி ம‌ளிகை சாமானுட‌ன் ஒரு மாட்டு வ‌ண்டியில் ஒருவ‌ர் வ‌ந்து கொடுத்தாராம். மிக‌ ம‌கிழ்ச்சியுட‌ன் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ச‌மைய‌ல் செய்து அன்ன‌ தான‌ம் செய்தாராம்.

அப்போது அவ‌ர் உண‌ர்ந்த‌து : "இதை ந‌ட‌த்துவ‌து நான் அல்ல. குரு உப‌தேச‌ம் தான் இதை ந‌ட‌த்துகிற‌து". அப்போது முதல் தடையின்றி அன்னதானம் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

குருவின் உப‌தேச‌த்தின் ப‌டி "நாம்" ந‌ட‌ப்ப‌தாக‌ நாம் எண்ணினாலும் அதை உண்மையில் ந‌ட‌த்துவ‌து அந்த‌ ஞான‌ குருவின் ஆசீர்வாதமே.. எனவே உபதேசம் ப‌ற்றிய‌ சாத்திய‌ அசாத்திய‌ங்க‌ளைப்ப‌ற்றி அதிக‌ ஆராய்ச்சி செய்ய‌த் தேவை இல்லை. குருவின் ஞான உபதேசத்தை அப்படியே கடைப்பிடித்தால் ஞானம் நிச்சயம்.


க‌ட‌வுளே ம‌ஹாலிங்க‌ம், உங்க‌ள் அருளாலே அனைவ‌ருக்கும்  ஞான‌ ஆர்வ‌ம் ஏற்ப‌ட்டு, ந‌ல்ல ஞான‌ குரு அமைந்து, ஞான உபதேசம் கிடைத்து, ஞானம் அடையணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி..

Wednesday, March 30, 2011

பாவமும் புண்ணியமும்..

பொதுவாக, ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படும் நன்மையும் தீமையும் அவரவர் வாழ்வின் பாவ புண்ணியங்கள்படியே என்று கூறப்படுகிறது. இது எல்லாமதங்களிலும் வெவ்வேறு முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனாலும் எனக்கு வெகு நாட்களாக இருந்த சந்தேகம் எல்லாம், இன்னிக்கு யார் அதிகம் குறுக்கு வழியில் போகிறார்களோ அவர்கள் தான் விரைவில் முன்னுக்கு வருகிறார்கள். அதிக பாவம் அதிக முன்னேற்றமா??

பாவம் மட்டுமே ஒரு மனிதன் செய்வதில்லை, கொஞ்சமாவது புண்ணியம் அறிந்தோ அறியாமலோ செய்திருக்கவேண்டும். இந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அந்தப் புண்ணியம் ஏன் அவனைக் காப்பதில்லை?

ஒரு  மனிதன் ஏன் பாவமோ புண்ணியமோ செய்யவேண்டும்? எது செய்தாலும் அது பாவ புண்ணியத்தில் பதிந்துவிடுமா??

பாவமோ புண்ணியமோ சேராமல் எப்படி வாழ்வது??

இது பற்றி எனது பலவித நண்பர்களுடன் நான் (பல வருடங்களுக்கு முன்)  விவாதித்த  பொழுது நான் புரிந்துகொண்டதன் சாராம்சமே இந்தப் பதிவு.


முதலில் ஒரு மனிதனுக்கு பாவமும், புண்ணியமுமே அவன் ஞானத்தை மறைக்கும் திரைகள். ஆம்.. புண்ணியமும் ஒரு மனிதனை ஞானத்தை விட்டு விலகச்செய்யும்.

ஒரு மனிதன் பாவம் செய்யும் போது பாவம் சேர்வது போல புண்ணியம் செய்யும்போது புண்ணியமும் சேரும். ஆனால் (வெகு)சில நேரங்களில் சில பாவங்கள் புண்ணியத்தையும் சில புண்ணியங்கள் சில பாவத்தையும் தொலைக்க வல்லவை. அது மட்டும் விதி விலக்கு. அது தவிர, அனைத்து பாவ புண்ணியங்களும் சுமைதான்.

ஒரு மனிதன் இந்த உலகில் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்ய முனையும்போது, சில செயல்களை செய்ய நேரிடுகிறது.  அதை கர்மா என்று சொல்கிறார்கள். இந்த கர்மா தான் பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுகிறது.

இவ்வாறு கர்மா பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுவதற்குக் காரணம் ”நாம்” அந்த கர்மாவை செய்கிறோம் என்ற அகங்கார எண்ணமும், அந்த கர்மாவினால் ஏற்படும் பலன், விளைவுகளைப்பற்றிய சிந்தனைகளுமே. எனவே அகங்காரத்தை விட்டுவிட்டால் நாம் செய்யும் கர்மா எதுவும் நம்மை சேராது. பலனுக்காக கர்மா செய்யாமல் இருந்தாலும் சேருவதில்லை.

அகங்காரம் இல்லாமல் நமக்கு ஒரு அடையாளம் இருக்காது. எனவே நாம் செய்யும் கர்மாக்களை கடவுளே செய்வதாக பாவனை செய்துகொண்டு செய்தால் நாளடைவில் இந்த கர்மாக்கள் சேர்வது மட்டுப்படும், குறையும். எப்போது கர்மாக்களை கடவுள் நிலையில் நம்மை நிறுத்தி செய்கிறோமோ அப்போது அது தவறான செயலாக இருந்தால் நமக்கு உடனடியாகத் தெரிந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பாவ புண்ணியத்தின் பலன்கள் இடம், பொருள், ஏவல், காலம் இவை பொறுத்தே ஒரு மனிதனுக்கு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனின் புண்ணிய பலன்கள் அனுபவிக்கும் காலத்தில் பாவமூட்டை அமைதியாக இருக்கிறது. அவன் அந்த புண்ணியத்தின் அகந்தையில் மேலும் செய்யும் பாவங்கள் அதில் சேர்ந்துகொண்டே போகிறது.

பல நேரங்களில் ஒருவன் பாவம் மற்றும் புண்ணியத்தின் பலன்களை ஒருசேர அனுபவிக்க நேரிடுகிறது. அப்போது அவற்றின் வீரியத்துக்குத் தகுந்தாற்போல் பாவத்தின் விளைவுகளை புண்ணியம் தடுக்கமுடியாவிட்டாலும், குறைக்கவாவது செய்கிறது.

தனி மனிதனுடைய பாவ புண்ணியங்கள் நம் உலகத்தின் பொது மனதில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. நம் சமூகத்தில், வன்முறைகளும், சமூக விரோத செயல்களும்,  லஞ்ச ஊழலும் பெருகுவதற்கு தனிமனித பாவபுண்ணியங்களால், பொது மனதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே மூல காரணம்.

நாம் இருக்கும் காலம் கலிகாலம் எனப்படுகிறது. இந்த கலிகாலத்தில் கெட்டவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், நல்லவர்களை கஷ்டப்படுத்தும் விதமாகவுமே காரியங்கள் நடைபெறுமாம். எனவே குறுக்கு வழியில் செல்பவர்களே அதிக முன்னேற்றத்தை அடைவது தவிர்க்க முடியாது.

இந்த பாவமும் புண்ணியமும் நாம் இறந்த பிறகும் நம்மைத் தொடர்வதாகவும் அவற்றை பல பிறவிகள் எடுத்து அனுபவித்து கழிக்கவேண்டிய நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதையே சித்தர்கள் பிறவிப்பிணி என்று சொன்னார்கள்.


கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் இந்தமாதிரி பாவ புண்ணியங்கள்ல இருந்து எங்களுக்கு விடுதலை குடுத்து, ஞானம் வர அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Friday, March 25, 2011

ஆன்மீக ஞானம்

எனது ஆன்மீகப்பயணத்தில் ஞானம் பற்றியும் ஞானிகள் பற்றியும் நான் கேள்விப்பட்ட விஷயங்களின் தொகுப்பே இந்தப்பதிவு..

நான் ஆன்மீகப் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தபோது, ஞானம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? எப்படி அடைவது? அது வந்ததற்கான அடையாளங்கள் என்ன??? இப்படி பல கேள்விகள் எனக்குள் தொக்கி இருந்தது.

பதில் தெரியாமல் பலரையும் தொந்தரவு செய்திருக்கிறேன். கடைசியில் ஓரளவுக்கு விசயம் தெரிந்த சில நண்பர்கள் அது பற்றி என்னுடன் பகிர்ந்தது :


1) முதலில் ஞானம் என்று ஒன்று இருக்கிறது என நம்பவேண்டும். இந்த நிலையில்  அதிகம் கேள்விகள் கேட்பவகளுக்கு அது பின்னால் புரியாமலே போய்விடும்.

2) அதற்கு வழிகாட்டும் குரு ஒருவரை அடையவேண்டும். நானே அடைந்துகொள்கிறேன் என்பது இங்கு வேலைக்காகாது. ஞானம் அடையும் வேட்கை உடைவர்களுக்கு குரு தானாக அமைவார் என்றும் கூறுகிறார்கள்.

3) அவர் காட்டும் பாதையில் கேள்விகேட்காமல் செல்லவேண்டும். அதிக கேள்விகள் அதிக தாமதம்.


ஞானம் என்பது தான் ஒரு மனிதன் அடைய வேண்டிய உண்மையான உன்னதமான இலக்கு. பணமோ, பதவியோ, புகழோ இல்லை.  ஞானம் அடையாமல் இவைகளை அடைந்தால் பேரழிவுதான்.

எல்லா மதங்களும், ஆன்மீக சாதனைகளும் மனிதனை ஞானத்தை நோக்கியே தள்ளுகின்றன. 

ஞானத்தை அடைய பல படிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் எதுவுமே இந்த  வரிசைப்படிதான் நடக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

பல பிறவிகளில் சாதனை செய்தும் ஞானம் அடையாதவர்களும் உண்டு. ஒரே வினாடியில் ஞானம் அடைபவர்களும் உண்டு.  எனவே இதற்கு கால அவகாசமும் கணித்துக் கூற முடியாது.

ஒரு ஆகாசம் போல, காலம் போல, ஒரு கட்டுக்குள், ஒழுங்குக்குள் அடைக்க முடியாதது ஞானம். ஆனாலும் அது கட்டுப்பாடான ஒழுக்கமானது.


ஞானத்தை மனிதனாகிய நாம் அடைகிறோம் என்று கூறுவதைவிட, மனிதனாகிய நம்மை ஞானமே தேடி வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால் அடைய முடியாது.

“அவனருளால் அவன் தாள் வணங்குதல்”

ஞானத்தை அடையும் கருவியே நம் மனம். அந்தக் கருவியை சுமக்கும் வாகனமே நம் உடல். நம் மனத்தின் உயிர் ஞானம். எனவே இது நம்மை நாமே தேடுவதுபோன்றது.


ஏதாவது ஒரு பிறவியில் எப்படியாவது யார் மூலமாகவாவது இந்த ஞானம் மனிதனை அடைகிறது. அதை படைத்தவனே அறிய முடியும்.


கடவுளே!! மஹாலிங்கம், நீங்கதான் எங்களுக்கு ஞானத்தை விரைவில் கொடுத்து அருளணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!