Friday, March 25, 2011

ஆன்மீக ஞானம்

எனது ஆன்மீகப்பயணத்தில் ஞானம் பற்றியும் ஞானிகள் பற்றியும் நான் கேள்விப்பட்ட விஷயங்களின் தொகுப்பே இந்தப்பதிவு..

நான் ஆன்மீகப் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தபோது, ஞானம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? எப்படி அடைவது? அது வந்ததற்கான அடையாளங்கள் என்ன??? இப்படி பல கேள்விகள் எனக்குள் தொக்கி இருந்தது.

பதில் தெரியாமல் பலரையும் தொந்தரவு செய்திருக்கிறேன். கடைசியில் ஓரளவுக்கு விசயம் தெரிந்த சில நண்பர்கள் அது பற்றி என்னுடன் பகிர்ந்தது :


1) முதலில் ஞானம் என்று ஒன்று இருக்கிறது என நம்பவேண்டும். இந்த நிலையில்  அதிகம் கேள்விகள் கேட்பவகளுக்கு அது பின்னால் புரியாமலே போய்விடும்.

2) அதற்கு வழிகாட்டும் குரு ஒருவரை அடையவேண்டும். நானே அடைந்துகொள்கிறேன் என்பது இங்கு வேலைக்காகாது. ஞானம் அடையும் வேட்கை உடைவர்களுக்கு குரு தானாக அமைவார் என்றும் கூறுகிறார்கள்.

3) அவர் காட்டும் பாதையில் கேள்விகேட்காமல் செல்லவேண்டும். அதிக கேள்விகள் அதிக தாமதம்.


ஞானம் என்பது தான் ஒரு மனிதன் அடைய வேண்டிய உண்மையான உன்னதமான இலக்கு. பணமோ, பதவியோ, புகழோ இல்லை.  ஞானம் அடையாமல் இவைகளை அடைந்தால் பேரழிவுதான்.

எல்லா மதங்களும், ஆன்மீக சாதனைகளும் மனிதனை ஞானத்தை நோக்கியே தள்ளுகின்றன. 

ஞானத்தை அடைய பல படிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் எதுவுமே இந்த  வரிசைப்படிதான் நடக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

பல பிறவிகளில் சாதனை செய்தும் ஞானம் அடையாதவர்களும் உண்டு. ஒரே வினாடியில் ஞானம் அடைபவர்களும் உண்டு.  எனவே இதற்கு கால அவகாசமும் கணித்துக் கூற முடியாது.

ஒரு ஆகாசம் போல, காலம் போல, ஒரு கட்டுக்குள், ஒழுங்குக்குள் அடைக்க முடியாதது ஞானம். ஆனாலும் அது கட்டுப்பாடான ஒழுக்கமானது.


ஞானத்தை மனிதனாகிய நாம் அடைகிறோம் என்று கூறுவதைவிட, மனிதனாகிய நம்மை ஞானமே தேடி வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால் அடைய முடியாது.

“அவனருளால் அவன் தாள் வணங்குதல்”

ஞானத்தை அடையும் கருவியே நம் மனம். அந்தக் கருவியை சுமக்கும் வாகனமே நம் உடல். நம் மனத்தின் உயிர் ஞானம். எனவே இது நம்மை நாமே தேடுவதுபோன்றது.


ஏதாவது ஒரு பிறவியில் எப்படியாவது யார் மூலமாகவாவது இந்த ஞானம் மனிதனை அடைகிறது. அதை படைத்தவனே அறிய முடியும்.


கடவுளே!! மஹாலிங்கம், நீங்கதான் எங்களுக்கு ஞானத்தை விரைவில் கொடுத்து அருளணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!

4 comments:

sathishkumar said...

அருமையான பதிவு ஐயா தொடரட்டும் தங்களின் பணி

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி ,

அருமையான பதிவு ஆரம்பமாகயுள்ளது உங்கள் மனதிலும் உங்கள் வலைப்பூவிலும்.

உங்களின் பதிவில் எனக்கு பிடித்த வரிகள்.

மனிதனாகிய நம்மை ஞானமே தேடி வந்தடைய வேண்டும்.

ஞானத்தை அடையும் கருவியே நம் மனம்.அந்தக் கருவியை சுமக்கும் வாகனமே நம் உடல்.


ஞானம் என்பது அனுபவத்தால் வருவது தான். உண்மையான தத்துவத்தை உணர ஆரம்பித்தாலே உங்களுக்கு ஞானம் வர ஆரம்பமாகிவிட்டது என்று நீங்கள் உணரலாம் .

ஞானம் = அறிவு = அனுபவம் : இது நாம் வசிக்கும் இந்த பூமியில் பழகும் தொழிலைக்கொண்டு பிரிக்கலாம். இது நமது வருமானத்திருக்கு ,மன திருப்திக்கும் உதவும்.


உண்மையான ஞானம் என்பது நமது உயிர் மற்றும் உடலின் அமைப்பு ,பிறப்பு ,இறப்பு உண்மைகளை பற்றி அறிதல் ஆகும்.

ஆன்மிக‌ ஞான‌ம் என்ப‌து எமக்கு தெரிந்த சிவவாக்கியரின் பாட‌லில்...

கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்ற‌து ஏத‌டா
வாயினால் தொழுது நின்ற மந்திர‌ங்க‌ள் ஏத‌டா
ஞான‌மான ப‌ள்ளியில் ந‌ன்மையில் வ‌ண‌ங்கினால்
காய‌மான ப‌ள்ளியில் காணலாம் இறையையே...

தூர‌ம் தூர‌ம் தூரம் என்று சொல்வார்க‌ள் சோம்ப‌ர்க‌ள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப் ப‌ராப‌ர‌ம்
ஊருநாடு காடுதேடி உழ‌ன்றுதேடும் ஊமைகாள்
நேர‌தாக‌ உம்முளே அறிந்து உண‌ர்ந்து கொள்ளுமே.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Sankar Gurusamy said...

பாலா, இந்த ஞான விஷயத்தில் நான் இன்னும் ஒரு படி கூட ஏறவில்லை. கேள்விப்பட்ட விஷயங்களை இங்கே பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. கேள்விப்பட்டவர்களெல்லாம் ஞானியாக முடியும் என்றால் இங்கு எல்லாருமே ஞானிகள்தான்..

:-)

இது பற்றி இன்னும் விரிவாக நான் கேள்விப்பட்டவற்றை எழுத இருக்கிறேன். அதில் மேலும் பல தகவல்கள் இருக்கும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sankar Gurusamy said...

திரு சதீஷ் குமாருக்கு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..