நான் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றால் சில போராட்டங்கள் நடக்கும், சில நாட்கள் லீவு விடுவார்கள். அவ்வளவுதான் தெரியும். அந்த அளவில்தான் எனது அப்போதய பொதுஅறிவு.
எனது கல்லூரி நண்பர்கள் சிலர் இலங்கைத் தமிழர்கள். அவர்களுடன் படித்தபோது தான் அந்தப் பிரச்சினையின் உண்மையான பரிணாமம் ஓரளவுக்குப் புலப்பட்டது.
தாங்கள் பிறந்த மண்ணைவிட்டு வேறு தேசத்தில் (மூதாதையர் தேசமாக இருந்தாலும், பிறந்த தேசம் போல் வருமா?) குடியேறி, முழு உரிமைகள் இல்லாமல், வாழும் அந்த சோகம் சில காலம் என்னையும் பாதித்தது.
ஆனால் நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது. அப்போதுதான் மொத்தமாக அவர்களைப் பார்த்து ஒரு வித பயமும் ஒரு அன்னியத் தன்மையும் ஏற்பட ஆரம்பித்தது.
அதுவரை ஆதரவாக இருந்த தமிழகத்தில் அவர்கள் உண்மையிலேயே வேண்டாதவர்களாக ஆகிவிட்டார்கள். அதன் பிறகு கெடுபிடிகள் பல ஏற்பட்டு உண்மையான அகதிகள்கூட கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள்.
பிறகு கல்லூரி முடித்த பிறகு நானும் இவர்களைப் பற்றி ஓரளவுக்கு மறந்தேவிட்டேன்(எனக்கும் ஆயிரம் பிரச்சினைகள்).
மீண்டும் சுனாமியின் பொழுது இலங்கை நிகழ்வுகள் செய்தியாகின. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச உதவிகள் கூட சரியாக சென்று சேராத படி பார்த்துக் கொண்ட இலங்கை அரசின் வன்மம் மிகவும் கொடுமையானது. இறுதியாக ஈழப் போர் உக்கிரமடையத் தொடங்கிய பொழுது, அகதிகள் வருகை அதிகரித்து, ஈழப் போரின் கொடுமைபற்றிய செய்திகள் உலகம் முழுதும் இணையத்தில் வலம் வரத் தொடங்கிய பொழுது மிகவும் வருத்தப் பட்டேன். இதில் முக்கியமான வருத்தம் நமது அரசாங்கம் இன்னும் பழைய விசயங்களைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு போதுமான உதவிகள் செய்யாமல் இருந்தது. மேலும் சில தவறாக, இலங்கை அரசுக்கு உதவிகள் செய்து தமிழர்களை அழிக்கவும் உறுதுணையாக இருந்தது மிகவும் வேதனை அளித்தது. இங்கு தமிழகத்தில் இருக்கும் முன்னணி தமிழினக் காவலர்கள் அதற்கு சிறு முணுமுணுப்பு கூட தெரிவிக்காமல் ஊழலில் திழைத்துக் கொண்டிருந்தது கொடுமையின் உச்சம்.
என்ன செய்வது? சொந்த நாட்டில் இருக்கும் மக்களுக்கே துரோகம் செய்பவர்களிடம்,,கொள்ளை அடிப்பவர்களிடம், ஈழத்தமிழருக்கு உதவி செய்வதற்கு எதிர்பார்ப்பதே தவறுதான்.
வெற்றிகரமாக இப்போது இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அழித்து, ஈழத்தில் மறு குடியேற்றம் என்ற போர்வையில் ராணுவத்தினரைக் குவித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இதன் செய்தி என்னவென்றால் "ஈழத் தமிழர்களே! உங்களுக்கு இங்கே இடமில்லை. வந்தாலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. நாங்கள் எங்கள் நாட்டில் எதுவும் செய்வோம். இதைப் பற்றி நாங்கள் சொல்வதை மட்டுமே சர்வதேச சமூகமும் நம்பவேண்டும். நீங்கள் கேள்வி கேட்கவோ, குரலெழுப்பவோ உரிமை அற்றவர்கள். வந்து அடிமைகளாக இருப்பதற்குத் தயாரென்றால் வாருங்கள். குடியேறுங்கள். "
இதுதான் இந்த நிகழ்வின் மறைமுகச் செய்தி.
இதற்குத் தீர்வு என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குக்கூட என்னால் முடியவில்லை. ஆனால் ஈழத் தமிழர்கள் உண்மையிலேயே காலத்தாலும் விதியாலும் புடம்போடப்பட்ட மறவர்கள் (சாதி இல்லை... வீரர்கள்). எதையும் சாதிக்கும் வலிமை இப்போதும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தியாகத்திற்கு ஒரு விடையைக் காலம்தான் சொல்லவேண்டும்.
மஹாலிங்கம்!! என் கண்ணீருக்கிடையில், உங்களிடம் என்னுடைய பிரார்த்தனை. தயவுசெய்து இவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள். ஈழம் மலர்கிறதோ இல்லையோ, ஈழத் தமிழர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களின் வாழ்வு மலரட்டும். அவர்களின் காயத்துக்கு காலமும் விதியும் சரியான மருந்துகள் இடட்டும்.
சதுரகிரியாரே போற்றி!!! சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!
2 comments:
அன்புள்ள சங்கர் குருசாமி,
தாங்கள் கூறியதை படிக்கும் போதே , கண்கள் குளமாகின்றன.
சித்தன் ஆட்சி கூடிய சீக்கிரம் இலங்கையில் மலரும் .
எண்ணற்ற அரசியல் தலைவர்களின் கதி உலகமே அறியும் ,அதைப்போல்
ஈழத்தில் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ,
பதினெண் சித்தர்களே நம் மக்களை காக்க வழி செய்யுங்கள் .
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
பாலா, இலங்கைத் தமிழர்களின் வலிமைக்கு சான்று தேவையில்லை. அவர்களுக்கு நம் பரிதாபமும் தேவையில்லை. ஆனால் நம் இயல்பான மனதில் அப்படிப்பட்ட உணர்வு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
அவர்களுக்கு ஆலோசனை கூற எனக்கு தகுதி இல்லை என்றே நினைக்கிறேன். எனவேதான் நான் வழக்கமாக எழுதும் தீர்வுகளை இதில் எழுதவில்லை.
அவர்களுக்கு உண்மையாகத் தேவையானவற்றைப் பெற நம் பிரார்த்தனைகள் உதவினால் அதுவே போதும்.
உங்கள் வருகைக்கும் கமெண்ட்கும் நன்றி.
Post a Comment