Monday, March 21, 2011

மீண்டும் இலவசங்கள்....

இலவசங்கள் பற்றிய முந்தய பதிவு :

இலவசங்கள் - தேவையா? என்ன குடுக்கலாம் (!) (?)


சென்ற சட்டமன்றத்தேர்தலில் தேர்தல் அறிக்கைகள் தான் கதாநாயகியாக செயல்பட்டன. ஏனெனில் அவற்றில் ஏராளமான இலவசத் திட்டங்களும், சில மக்கள் நல(??) கவர்ச்சித் திட்டங்களும் இருந்தன. இப்போது 2011 தேர்தலிலும், இலவசங்கள் முன்னிருத்தப்படுகின்றன. முன்பு டிவி, இப்போது கிரைண்டர், மிக்சி, லேப்டாப், அரிசி என்று பட்டியல் நீள்கிறது. மாற்றுக் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் வேறு என்ன இலவசங்கள் அறிவிக்கப்படும் என்ற பரபரப்பு நிலவுவதை தடுக்க முடியவில்லை.

நாய்க்கு எலும்புத்துண்டு வீசுவது போல, மக்களுக்கு இந்த இலவசங்கள் தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு கடைசியில் திருவோடும், பிச்சை எடுக்க அரசு அலுவலகங்களுமே மிஞ்சும் என்று தோன்றுகிறது.

யாருமே இது நமது வரிப்பணம் என்று சிந்திப்பது இல்லை. உண்மையில் வருமான வரிக் கட்டுபவர்கள் தான் வரிக் கட்டுகிறார்கள் என்று எண்ணுகிறார்கள். நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் வரி கட்டப்பட்டிருக்கிறது..

அன்றாடம் உபயோகப்படும், சோப்பு, துணிமணிகள், மற்றும் பல அன்றாட உபயோகப்பொருள் அனைத்துக்கும் அரசு வரி விதிக்கிறது. அதில் வரும் வரி வருமானத்தைக் கொண்டுதான் இந்த இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

மேலும் மக்களை நிரந்தரக் குடிகாரர்களாக ஆக்கி, அதில் வரும் வருமானமும் அதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

இங்கு யாருக்கும் யோசிப்பதற்கு அவகாசமில்லை. ”கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு இதுவும் கிடைக்காது.” என்ற மனோபாவமே மேலோங்கி இருக்கிறது.

பொதுமக்கள் சிந்தனையில் இப்போது, நமது அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பற்றி கீழ்க்கண்ட சிந்தனையே பொதுவாக இருக்கிறது :

1) நமக்குத் தேவையானபோது இவர்கள் உதவுவதில்லை
2) நமக்குத் தேவையானவற்றை இவர்கள் செய்யப்போவதில்லை.
3) இவர்கள் இஷ்டம்போல பொது சொத்துகளை கொள்ளை அடிக்கிறார்கள்.
4) இவர்கள் இஷ்டம்போல ஊழல் செய்து சொத்து சேர்க்கிறார்கள்.
5) இவ்வாறு செய்வது அவர்களின் பிறப்புரிமை. இவ்வாறு செய்யாதவர்கள் / செய்யத் தெரியாதவர்கள் - பிழைக்கத் தெரியாதவர்கள்.
6) இவர்களிடம் இருந்து, நமக்கு சந்தர்ப்பம் வரும்போது, நாமும் முடிந்த அளவு பிடுங்கிக்கொள்ளவேண்டும்.

இந்த மனநிலையில்தான், மக்கள் வோட்டுப் போட பணம் வாங்குவதும், இல்வசங்களுக்காக ஓட்டுப் போடுவதும் நடக்கிறது.

இந்தத் தேர்தலிலும் நாம் (பதிவர்கள், சமூக ஆர்வலர்கள்,  பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள்) எவ்வளவுதான் கூவினாலும் மக்கள் தீர்ப்பு, யார் அதிக இலவசங்கள் தருவார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கும்போலத்தான் தெரிகிறது.

என்ன செய்வது, கடைசியில், நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்து நம் மக்களை பிச்சைக்காரர்களைவிடக் கேவலமாக ஆக்கிவிட்டார்கள்.


கடவுளே!!! என் தேசத்தை நீங்கதான் காப்பாத்தணும்....

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்!!!

8 comments:

Anonymous said...

நீங்க இதுவர எந்த பொருளும் இலவசமா அரசாங்கத்திடம் இருந்து வாங்க வில்லை என்று உறுதியாக சொல்ல முடிமா ??? ஓரளவுக்கு எதிர்த்து போராடிட்டு வந்து சொல்லுங்க .... உங்களுக்கு கிடய்க்க வில்லை என்பதற்காக இலவசம் வேண்டாம் என்கிறிர்கலே ...இது நியாயமா !!!! எத்தனையோ ஏழைகள் பசி ஆறுவது இந்த ஒரு ரூபாய் அரிசி திட்டத்தில் தான் தெர்யுமா . ஏழைகளுக்கு பசி வயிற்றில்... ஆனால் உங்கள மாதிரி ஆளுகளுக்கு அது பத்தி தெரிய நியாயம் இல்ல ... சும்மா ac ரூம்ல இருந்துகிட்டு எத வேணும்னாலும் எழுதலாம் அப்படின்னு எழுதகூடாது .களத்துக்கு வந்து பார்த்துட்டு எழுதுங்க !!!

Sankar Gurusamy said...

அன்புள்ள அனானிமஸ், தாங்கள் எனது 2 பதிவுகளையும் படிக்கவும். ஒருபதிவு மட்டும் படித்துவிட்டு மறுமொழி இடவேண்டாம். 1ரூபாய் அரிசித் திட்டம் பற்றிய எனது கருத்தும், வேறு என்ன இலவசங்கள் தேவை என்பது பற்றியும் எனது கருத்து அந்த இணைப்பில் உள்ள பதிவில் உள்ளது.

நான் தற்போது மேற்கு வங்கத்தில் இருப்பதால் இதுவரை எந்த இலவசமும் மனமறிந்து வாங்கியதில்லை. தமிழ்நாட்டில் இருந்தபோதும் வாங்கியதில்லை.. ரேசனில் போட்ட சில பருப்புவகைகள் மட்டும் வாங்கி இருக்கிறேன்.

ஏசி ரூமில் இருப்பவர்கள் மீது ஏன் இந்த கோபம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

வேண்டுமென்றால் நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். பணம் பிரச்சினை என்றால், இப்போது தவணை முறையிலும் கிடைக்கிறது..

Anonymous said...

சங்கர்ஜி.. நீங்கள் எங்கு இருக்கிறிர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள் எல்லாம் தெரியும் . நான் முன்னமே சொல்லி இருக்கிறன்.... சில வாத பிரதிவாதங்களுக்கு இப்படி இருப்பது நல்லது .... நான் கிராம பண்பாட்டில் வளர்ந்தவன் என்னால் முகத்தில் அரேய்ந்தாற்போல் பேச தெரியாது ... அதனால் எனக்கு இந்த முக மூடி அவசியம் . இப்பொழுது வருவோம் வாதத்துக்கு.... என்னுடைய விவசாய சகோதரர்களுக்கு ஒரு நாளைய்க்கு இரு வேளை சாப்பாட்டுக்கே போதுமான வருமானம் இல்லை . அவன் உழைபில் தான் இந்த உலகத்தில் உள்ளவர்கள் உண்டு களிக்கிரிர்கள் . அவனுடைய ஆச பாசங்களுக்கும் ஏதோ இந்த இலவசம்தான் .. கொஞ்சம் பூர்த்தி செய்கிறது . அது எங்களுக்கு எந்த ஆட்சியாளர் தந்தாலும் ஓகே தான் .இவளவு பேசும் நீங்கள் யாரும் ஆட்சியாளர்கள் தரும் கல்வி இலவசங்களை மறுப்பதில்லை .... ஏன் எனில் அது உங்களுக்கு தேவை . அவர்கள் entrance எக்ஸாம் வேண்டாம் ... எல்லாரும் பத்தாவது வரை பாஸ் ...இப்படி ஏக பட்ட சலுகைகள் கல்வியில் அதை யாரும் மறுப்பதில்லை ... ஆனால் ஒரு ஏழை விவசாயின் சில ஆசைகலை இந்த ஆட்சியாளர்கள் தெரிந்தோ தெரியமலோ பூர்த்தி பண்ணுவதை பொறுக்க முடிய வில்லை . வாய் கூசாமல் இதை பிச்சை என்று சொல்லுபவர்களுக்கு , நான் சொல்லுவது ஆமாம் நாங்கள் பிச்சை காரர் களாகத்தான் இருக்கிறோம் .. இதுக்கு காரணம் ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல ... இப்படி படித்த மேதாவிக்களும்ந்தான் காரணம் .... உங்களுக்கு ac என்பது ஒரு அத்தியாவசிய பொருள் .... எங்களுக்கு பசிக்கிற வயத்துக்கு சோறு தேவை ... அது கிடய்க்காமல் எங்கள் விவசாய சகோதரர்கள் படும் பாடு உங்களுக்கு தெரியாது ... வெளியில் சொல்லவும் முடியாமல் ... நீங்கள் எல்லாரும் சொல்லுகிறிர்களே அந்த பிச்சை (இலவசம்) கூட எடுக்க கேவலப்பட்டு நாங்கள் வாழும் வாழ்க்கை உங்களுக்கு தெரியாது . உண்மை நிலைய தெரியாமல் வேணும் எண்டால் ac போட்டு கொள்ள சொல்லிட்டிங்க ... எழுதுவது ரொம்ப சுலபம் .... நிஜம் வேறு விதமானது .

Sankar Gurusamy said...

அன்புள்ள அனானிமஸ், தங்கள் கருத்துக்கு நன்றி.. நீங்களும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து உங்களின் கருத்துக்களையும் முன் வையுங்கள். அதுவும் இப்படிப்பட்ட பின்னணி உடையவர்களின் குரல் சற்று ஓங்கியே ஒலிக்கவேண்டும் என்பது என் அவா...

இப்போது இவர்கள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களினால் நம் அரசாங்கத்து இழப்புதான். இது நாம் கட்டும் வரிப்பணம். நமக்கும் இழப்புதான். ரூ2500 க்கு டிவி வாங்கியதாக நமக்கு கணக்கு காட்டி இவர்கள் அடித்த கமிசன் எவ்வளவு? இலவச (அல்) ரூ 1 அரிசி எவ்வளவு கடத்தி விற்றார்கள்/விற்கிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளை இலவசங்களைப்பற்றி இவர்கள் அறிவிக்கும்போது தவிர்க்கமுடியவில்லை. இன்றைய அரசியல் சூழலில் ஏழை மக்களை கேடயமாகப் பயன்படுத்தி நம் அரசியல்வாதிகள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் நமக்கு எலும்புத்துண்டு கொடுத்து, கறியை லவட்டிக் கொள்கிறார்கள் என்று எழுதுகிறேன்.

இவர்கள் மாற வழி இருப்பதாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. எனது வருத்தத்தை இப்படி பகிர்ந்துகொள்கிறேன்.

உங்கள் வருத்தம் என்னைவிடப்பெரியது என்று தோன்றுகிறது. உங்களையும் பதிவுலகத்துக்கு வரவேற்கிறேன்(நீங்கள் ஏற்கனவே இங்கு இல்லாமலிருந்தால்). உங்கள் கருத்துகளை எனது பதிவிலேகூட நீங்கள் எழுதலாம். வாய்ப்பளிக்க நான் தயார் ... எடுத்துக் கொள்ள நீங்கள் தயாரா??? அதற்கு தங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளத் துணியவேண்டும்..

Chittoor Murugesan said...

சங்கர் ஜீ,
நிஜம் அந்த முனையிலும் இல்லை. இந்த முனையிலும் இல்லை. நடுவில் உள்ளது.

மீன் பிடிக்க தெரியாம பட்டினி இருக்கிறவனுக்கு அவன் மீன் பிடிக்க கத்துக்கற வரை ( டெட் லைன் ஈஸ் மஸ்ட்)இலவசமா ஒரு மீன் தரலாம்.

தப்பே இல்லை. ஆனால் அதையே ஆயுள் சந்தா மாதிரி பண்ணிட்டா நாறிடும்.

Sankar Gurusamy said...

திரு முருகேசன் அவர்களுக்கு, நானும் தங்கள் கருத்தை ஒத்துக்கொள்கிறேன்.

இப்போதய அரசியல் வாதிகள் மக்கள் எப்போதும் அடிமைகளாகவே இருப்பதற்காக இதை செய்வதுபோல் தெரிகிறது. எனவே இந்த பதிவு.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

தங்களின் பதிவு கண்டு பெருமை கொள்கிறேன்.

இலவசம் என்ற பேரில் நம்மை எல்லாரும் இல்லை இனி எதுவும் உங்கள் வசம் என்று ஆக்கிகொண்டு இருக்கிறார்கள்.

தங்களின் கருத்து வெளிப்பாடு மிக அருமை , ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களே இவ்வாறு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள் .

கருத்துகளை முன் வைப்பவர்கள் யாரும் அனானிமஸ் என்ற பெயரில் கூற தேவையில்லை. இந்த வலைப்பூ பொதுவானது என்பதால் தங்களின் முழு பெயருடன் வந்து பதிவு செய்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் முடியும் நிலையில் இன்னும் எங்களுக்கு இலவச டிவி கிடைக்கவில்லை .

அடுத்த ஆட்சியில் கண்டிப்பாக லேப்டாப் கிடைக்கும் என நம்புவோம் ?

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Sankar Gurusamy said...

பாலா, இந்த அனானிமஸ் எனது நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் என்றே எண்ணுகிறேன். (என் கணிப்பு சரியாக இருந்தால், அவர் பெயரும் உங்கள் பெயரும் ஒன்றே :-) ) என்னைப்போலவே, அவருக்குள் இருக்கும் ஆதங்கத்தில் அவர் இவ்வாறு எழுதுகிறார். அதை நான் எப்போதும் சரியான கண்ணோட்டத்திலேயே அணுகுகிறேன். மற்றபடி அவரும் நம்மைப்போலவே..

என் வலைப்பூவை ஒத்த கருத்துள்ளோர் மட்டுமன்றி மாற்றுக் கருத்துள்ளோரும் படிக்கவேண்டும் என்பதே என் அவா.. ஆனால் என் வலைப்பூவில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் யாரும் வருவதில்லை என்பதே உண்மை :-(. எப்படி இருந்தாலும் என் பணி தொடரும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.