Thursday, April 21, 2011

எது ஞானம்... அதனால் என்ன பயன்..

ஞானம் என்றால் என்ன?  அது எப்படி இருக்கும்?  அதனால் என்ன பயன்?  இதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?  இதுபோன்ற சில கேள்விகள் என் நண்பர் ஒருவரால் சில நாட்களுக்கு முன் எழுப்பப்பட்டது.

ஞானம் என்றால் என்ன?

இதற்கு ஒருவரியில் விளக்கம் இல்லை. இதற்கு முழுமையான பதில் தெரியாததால் தான் நான் இன்னும் இப்படியே இருக்கிறேன். இது பற்றி எவ்வளவு படித்தாலும் எழுதினாலும் அதன் சுவையை சுவைத்து அறிவது போல் இருக்காது. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட,  அறிந்த,  புரிந்த சில சிறு விளக்கங்கள் :

1) ஞானம் என்பது தன்னை அறிதல் / உணர்தல். (படித்தல் அல்ல) எவ்வளவுதான் ஞானம் பற்றி கேள்விப்பட்டாலும், படித்து அறிந்தாலும் தனக்குள் தானே உணர்ந்து அறியும்போதுதான் அது பற்றிய முழுமையான உணர்வு கிடைக்கும். இதை யாரும் முழுமையாக இன்றுவரை விளக்க முடியவில்லை.

2) ஞானம் என்பது தன்னை அனைத்திலும் உணர்ந்து அறிதல். ”நான்” என்பது எதுவோ அதுவே எல்லாமாக இருக்கிறது என்ற உணர்வு ஞானம்.

3) ஞானம் என்பது அனைத்தையும் தன்னில் உணர்ந்து அறிதல். இந்த உலகில் உள்ள அனைத்தாகவும் எது இருக்கிறதோ அதுவே ”நான்” என்பதாகவும் இருப்பதாக உணர்தல்.

4) ஞானம் என்பது படித்து அறிதல் அல்ல. உணர்ந்து அறிதல். சில நேரங்களில் இதற்கு புத்தகப் படிப்பு உதவலாம்.  ஆனால் அதுவே முக்கியமல்ல.


இதனால் யாருக்கு என்ன பயன்?
இதில் பல கேள்விகள் எழுகின்றன.  நமக்கோ அல்லது சமூகத்துக்கோ ஞானத்தால் ஏதாவது பயன் கிடைத்தால்தான் அது உண்மையான ஞானம் என்று வாதம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஞானம் அடைந்தால் நிறைய பணம் வருமா? எங்கள் கஷ்டம் தீருமா? வியாதி அகலுமா? அமானுஷ்ய சக்தி கிடைக்குமா?  மக்களை / எதிரிகளை வசியம் செய்ய முடியுமா? நம் ஊழல் அரசியல்வாதிகளை / அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? இயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா? போர்களை நிறுத்த முடியுமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் என் தற்போதய பதில் ஆம் மற்றும் இல்லை. 

ஞானத்தை அடைய முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை / கடமை. அதன் பிறகு அதை அடைவதும் அதனால் என்ன செய்யவேண்டும் என்பதும் ஞானத்தின் வேலை. ஞானத்தை அதைத் தவிர வேறு யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு கட்டளை இடவும் முடியாது.

1) யாருக்கு எப்போது என்ன தருவது என்பது ஞானத்துக்கு நன்றாகத் தெரியும்.

2) ஞானிகள் இருக்கும் இடத்தில் இயற்கையின் விதிகள் செவ்வனே செயல் படுத்தப்படும்.
3) யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில செயல்கள் நடந்தே தீரும். அவை எவை என்பதே ஞானமே முடிவு செய்யும்.  ஞானிகள் ஞானத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கிறார்கள் - ஞானத்தின் அனுமதியோடு மட்டுமே.

4) ஞானம் செயல்படும்போது சத்வ சக்திகளின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கும். தாமச சக்திகள் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும்.

5) இந்த உலகில் ஞானிகள் அதிகமாக வாழ்ந்தால் தீய சக்திகளின் ஆதிக்கம் குறைந்து நல்ல சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.


என் சிற்றறிவுக்கு எட்டியவரை பகிர்ந்துள்ளேன். இவை தவிரவும் நிறைய இருக்கலாம். ஞானிகளின் கடாட்சத்தினால் அவை வெளிப்படும்போது மேலும் பகிர்வேன்.

இதில் சில தப்பாகவும் இருக்கலாம். இப்போதைக்கு என் புரிதல் படி எழுதி இருக்கிறேன்.  உண்மையிலேயே ஞானம் வந்தால் தான் அதுபற்றி முழுமையாக கூறமுடியும்.


சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்..  விரைவில் ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம். சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

5 comments:

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

ஞானத்தைப்பற்றி அருமையான விளக்கம் உங்களால் தரப்பட்டுள்ளது .

ஞானம் அடைந்தவன் இயற்கையோடு இயற்கையாகவே வாழும் தன்மை உடையவன், பஞ்ச பூதங்களின் தத்துவத்தை உணர்ந்தவன் .

எல்லாம் அவன் செயல் என்று உணர்ந்து ,சில நேரங்களில் மக்களுக்காக தம்மையே அர்பணித்து கொள்பவன் .

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்ற கோட்பாட்டை உடையவன் .

ஞானிகள் உணரும் அனுபவம் மெய்ஞானம் ஆகும். இதனை அவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும் .

ஊமை கனவு கண்டால் எப்படி இருக்குமே ,அதைப்போல ஞானத்தை அடைந்தவன் இருப்பான் .

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்கனே .


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

பாலா, ஞானத்திற்கு இன்னொரு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

shanmugavel said...

//ஞானம் என்றால் என்ன?//

சிறப்பான அணுகுமுறை நன்றி

Sankar Gurusamy said...

அன்புள்ள ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Sankar Gurusamy said...

திரு சிவம்ஜோதி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.