Wednesday, April 6, 2011

உண்ணாவிரதமிருக்கும் உயர்திரு அன்னா ஹசாரே...

உயர்திரு அன்னா ஹசாரே அவர்கள் நேற்றிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.  இதுபற்றி “Times of India" வில் வந்த செய்திகளுக்கான லின்க் கீழே தரப்பட்டுள்ளது.



இவர் யார் என்பது பெரும்பாலோருக்கு தெரிந்திருந்தாலும் அவர் பற்றி ஒரு சிறு அறிமுகம் :

இவர் வயது 72. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர் / போராளி. பல காந்தீய வழிப் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்.

இப்போது இவர் எதற்காக இந்த உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார் என்பதுதான் மிக முக்கிய செய்தி.

நம் அரசியல் வாதிகள் ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம், ஊழலுக்கு எதிரான அமைப்புகள் உருவாக்குவோம் என்று கூவிக் கொண்டிருந்தாலும் சுமார் 42 ஆண்டுகளாக அப்படி ஒரு சட்டம் கொண்டுவர முயற்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் கொண்டு வர வில்லை.

அதுவும் அவர்களே கூடி முடிவு செய்வார்களாம். பொதுமக்கள் பிரதிநிதிகளோ, சமூக ஆர்வலர்களோ அதில் பங்கேற்கக் கூடாதாம்.

மிக முக்கியமாக அவர்கள் ஏற்படுத்த இருக்கும் அந்த ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு எந்த அதிகாரமும் தரப்படாதாம். அவர்கள் ஊழல்களை விசாரித்து என்ன நடவடிக்கை யார் மீதெல்லாம் எதற்காக எடுக்கலாம் என்று ஆலோசனை சொல்ல மட்டுமே செய்ய வேண்டுமாம்.

இதில் அரசியல்வாதிகளை மட்டுமே விசாரிக்கமுடியும் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இப்போது ஏற்படுத்தப்படும் விசாரணைக் கமிசன்களுக்கும் இந்த ஊழலுக்கு எதிரான அமைப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.


இதைத் தான் 72 வயது திரு அன்னா ஹசாரே எதிர்த்துப் போராடுகிறார்.  அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள (???) லோக்பால் சட்டத்துக்கு மாற்றாக ஒரு ஜன லோக்பால் சட்ட வரைவு தயாரித்து அரசாங்கத்தில் அனைவருக்கும் அனுப்பி அலுத்து இப்போது சாகும் வரை உண்ணவிரதம் உட்கார்ந்துவிட்டார்.

இவர் தயாரித்துள்ள ஜன லோக்பால் சட்ட வரைவில் கீழ்க்கண்ட அம்சம்கள் சேர்க்கப்பட்டுள்ளன :

1) லோக்பால் அமைப்புக்கு ஒரு போலீசுக்கும், கோர்ட்டுக்கும் இருக்கும்  அதிகாரம் வேண்டும்.

2) நடவடிக்கை எடுப்பதிலிருந்து தண்டனை அமல் படுத்துவது வரை லோக்பால் செயல்பாடு இருக்கும்.

3) இதில் அரசியல் வாதிகளோடு, அனைத்து அரசு உயர் அதிகாரிகளையும் விசாரித்து தண்டனைதர முடியும்.

4) இந்த சட்டம் கொண்டுவர பொதுமக்களின் பிரதிநிதிகளையும் (அரசியல் வாதிகள் அல்ல), சமூக ஆர்வலர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.

5) இந்த சட்டத்தில் பிரதமர் அலுவலகத்தையும் விசாரிக்கும் உரிமை உண்டு.

ஆனால் நம் அரசியல் வாதிகள் வழக்கம்போல் கட்சிபேதமில்லாமல் இதை நடைமுறைப்படுத்த தாமதப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதால் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

நம் தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் இதை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு அன்னா ஹசாரே அவர்களின் போராட்டம் வெற்றி பெற்று இந்த சட்டம் வர வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறேன்.


கடவுளே மஹாலிங்கம், அவருக்கு நீங்கதான் துணையா இருந்து இதை நடைமுறைப்படுத்தித் தரணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!

0 comments: