ஒரு வழியாக ஒரு கெடுபிடியான தேர்தல் ஓரளவுக்கு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதில் உண்மையான வெற்றி மக்களுக்குதான். சுமார் 77% வாக்குப்பதிவு என்பது ஒரு சாதனைதான்.
தேர்தல் முடிவுகளுக்காக மே 13 வரை காத்திருக்க வேண்டும். இது ஒரு சோதனையான கட்டம். மக்களின் வாக்குகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும். இவ்வளவு திறமையாக தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையம் இந்தப்பணியையும் சிறப்பாக செய்யும் என்று நம்புகிறேன்.
நம் ஜனநாயகத்தின் முக்கிய நிகழ்வான இந்தத் தேர்தலை செம்மையாக நடத்த நம் தேர்தல் ஆணையம் பட்ட பாடுகளைப் பார்க்கும்போது நம் மக்களுக்கு / அரசியல்வாதிகளுக்கு உண்மையான ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததுபோலவே தெரிகிறது.
எங்கும் பணம். எதிலும் பணம்.. இதுவே இந்தத் தேர்தலில் ஒலித்த தாரக மந்திரம். தேர்தல் ஆணையம் சட்ட விரோதமான 34 கோடி ரூபாய் பிடித்ததாக செய்தி வந்தது.
இது மிகவும் கம்மி. இதை 234 தொகுதிக்கு பிரித்துப் பார்த்தால் இதன் அளவு தெரிய வரும். ஒரு தொகுதிக்கு வெறும் 19 லட்ச ரூபாய் வருகிறது. மேலும் ஒரு வேட்பாளருக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் வருகிறது.
ஆனால் தேர்தலில் தோராயமாக எவ்வளவு செலவாகி இருக்கும் என்று நாம் கணக்குப்போட்டால் கண்ணைக்கட்டுகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 130 போலிங் பூத் வைத்துக் கொண்டால் கூட, 3 கட்சி வேட்பாளர்களும் மொத்தம் 234 தொகுதியிலும் தம் பூத் ஏஜெண்ட் களுக்கு சுமார் ரூ10000 கொடுத்தால் கூட இது மட்டுமே 90 கோடி ரூபாய் வருகிறது.(வாக்காளர்களுக்கே ரூ 2000 தரும் போது இது மிக குறைந்த எஸ்டிமேட்தான்)
இது தவிர தொண்டர்களுக்கு தினம் வாங்கித்தரும் சரக்கு, பிரியாணி, பேட்டா வகையில், 15 நாட்களுக்கு சுமார் 500 வேட்பாளர்கள் சுமார் 1000 தொண்டர்களுக்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ 1000 வீதம் செலவு செய்திருந்தால் இது ஒரு 740 கோடி ரூபாய் வருகிறது.
இது தவிர வாகன ஏற்பாட்டில் சுமார் 500 வேட்பாளர்கள் 20 வண்டிகள் ஒரு நாளைக்கு ரூ 2000 வாடகைக்கு 15 நாட்களுக்கு சுற்ற ஆன செலவு மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்கள்.
மொத்தமாக மிகக் குறைந்ததாக சுமார் 800 கோடி ரூபாய் செலவு செய்திருந்த இந்த தேர்தலில் 34 கோடி ரூபாய் ஒன்றுமே இல்லை. இதுவும் வாக்காளர்களுக்கு தந்த பணம் கணக்கில் இல்லை. வேண்டாம். அதையும் கணக்கிட்டால் தலை சுற்றுகிறது.
இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? எந்த தைரியத்தில் செலவழிக்கிறார்கள்? இதைத் திருப்பி எடுக்க என்னவெல்லாம் செய்வார்கள்? நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது..
சதுரகிரியார்தான் நம் மக்களை இவங்ககிட்ட இருந்து காப்பாத்தணும்.
சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!
2 comments:
//இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? எந்த தைரியத்தில் செலவழிக்கிறார்கள்? இதைத் திருப்பி எடுக்க என்னவெல்லாம் செய்வார்கள்? நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது..//
நடுக்கம் வேண்டாம் .காலம் காலமாக நடப்பதுதான்
திரு ஷண்முகவேல், அப்படி விட்டுவிட மனம் வரவில்லை. என்றாவது ஒருநாள் இதை நிறுத்தவேண்டும். அதற்கு முதல்படி அது குறித்த விழிப்புணர்வு. அதன் விளைவே இந்தப் பதிவு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Post a Comment