Monday, April 4, 2011

அரசியல் பேசினால் ???

நேற்று விஜய் டீவியில் பொது இடங்களில் மக்கள் அரசியல் பேச தயங்குவது பற்றிய ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அது பற்றிய எனது கண்ணோட்டம்.

முதலில், மக்களுக்கு நமது அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை போய்விட்டது. தகுதியான தலைவர்கள் இல்லாததால் புதிய தலைமுறைக்கு அரசியல் ஆர்வம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. இப்போதுகூட‌ க‌ட‌மையே என்று வோட்டுப்போடுப‌வ‌ர்க‌ள்தான் அதிக‌ம். 60ல் இருந்து 70 ச‌த‌ம் வாக்குக‌ள்தான் ப‌திவாகிற‌து. இதை அதிக‌ப்ப‌டுத்த‌ எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் செய்தாலும் பெரிய‌ ப‌ல‌ன் எதுவும் இல்லை.

சென்ற‌ த‌லைமுறையில், அர‌சியலினால் ஏற்பட்ட சில மோசமான விளைவுக‌ளைப் (Emergency, Naxalism)  ப‌ற்றி அறிந்த‌ குடும்ப‌ப் பெரிய‌வ‌ர்க‌ள், த‌ம‌து குடும்ப‌த்தில் உள்ள‌ இளைஞ‌ர்க‌ள் அதுப‌ற்றி பேசினாலே க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள். (இதுபோன்ற எதிர்ப்பு, யோகா, தியானம் போன்ற சில‌ ஆன்மீக‌ சாத‌னைக‌ளுக்கும் இருந்த‌து. இப்போது ப‌ர‌வாயில்லை.) இத‌னால் அர‌சை பெரும்பாலும் சாராம‌ல் வாழ‌ப்ப‌ழ‌கும் ஒரு த‌லைமுறை உருவாகிவ‌ருகிற‌து.

வியாபாரிகள், ஒரு ர‌வுடிக்கு மாமூல் கொடுப்ப‌துபோல வேறு வழியில்லாமல் அர‌சாங்க‌த்துக்கு வ‌ரி க‌ட்டிவிட்டு, அவ‌ர்க‌ள் செய்யும் சொற்ப‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளை ம‌ட்டும் ஏற்றுக் கொண்டு, அவர்கள் செய்யும் அட்டூழியங்களைக் கேள்விகேட்காம‌ல் வாழ‌ப்ப‌ழ‌கும் ஒரு ச‌மூக‌ம் உருவாகிவ‌ருகிற‌து.

அலுவலகங்களில், பொது இடங்களில் அரசியல் பற்றி பேசுபவர்கள் வேண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறார்கள். தனிமனித துதிகளே இன்றைய அரசியலின் முக்கிய முகமாக ஆகிவிட்டது. கொள்கைக‌ள், ம‌க்க‌ள் பிர‌ச்சினைக‌ள் இர‌ண்டாம், மூன்றாம் ப‌ட்ச‌மாக‌ ஆகிவிட்டன. பெரும்பாலும் அடிதடி சண்டையை நோக்கியே இந்த விவாதங்கள் செல்கின்றன. என‌வேதான் இந்த‌ விவாத‌ங்க‌ள் த‌விர்க்க‌ப்படுகின்ற‌ன‌.

வேறு வழி இல்லாமல் போராட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்தான் இன்று அரசியல் பற்றி, போராட்டங்கள் பற்றி பேசவே செய்கிறார்கள்.

எது அரசியல் என்பது பற்றிய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நானறிந்தவரை பொது ந‌லன், பொது மக்கள், தேசம் சார்ந்த‌ அனைத்துமே அர‌சிய‌ல்தான்.  அரசியல்தான் உண்மையான மக்கள் சேவை. அரசியல்தான் மனிதகுலத்துக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தொண்டு. அரசியல்தான் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரம்.

ஆனால் இப்போது அறிய‌ப்ப‌டும் அர‌சிய‌ல் என்ப‌து என்ன‌? ர‌வுடியிச‌ம், ப‌ழிவாங்குத‌ல், பயமுறுத்துதல், ஏமாற்றுத‌ல், காலைவாறுத‌ல், த‌‌னிம‌னித துதி, காழ்ப்புண‌ர்ச்சி, க‌ட்சிதாவுத‌ல், ல‌ஞ்ச‌ம், ஊழ‌ல். 

இந்த‌நிலையில், மக்க‌ளை திசைதிருப்ப‌ சினிமாவும், தொலைக்காட்சியும், கிரிக்கெட்டும், குடியும் உப‌யோக‌ப்ப‌ட்ட‌ன‌. இந்த‌ போதைக‌ளில் ஊறிய‌ பெரும்பான்மை ம‌க்க‌ள் உண்மையான‌ அர‌சிய‌லை ம‌ற‌ந்துவிட்ட‌ன‌ர்.

இது இன்றய நிலை. இது மாற என்ன செய்ய வேண்டும்.

1) மீண்டும் ஒரு தலைமுறை இவ்வாறு உருவாகாமல் தடுக்கவேண்டும்.

2) பள்ளி கல்லூரிகளில் நாட்டு நடப்பு பற்றியும் , சமூகம் பற்றியும் உண்மையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். இதை ஒரு தனிப்பாடமாகவும் வைக்கலாம்.

3) நம் மனநிலை மாற, நல்லவர்கள், உதாரண புருஷர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இப்போது ஆன்மீகத்தில்தான் ஓரளவுக்கு உதாரண புருஷர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் கட்சி ஆரம்பித்ததாக படித்தேன். அதற்குமுன் பாபா ராம்தேவ் கட்சி ஆரம்பித்தார். இன்னும் ஆன்மீக வாதிகள் ஒருங்கிணைந்து ஒரு தேசிய இயக்கம் நடத்த முன்வர வேண்டும். சுவாமி தயானந்த சரஸ்வதி, ஜக்கி வாசுதேவ், சத்ய சாய்பாபா போன்ற குருமார்கள் இணைந்து ஒருங்கிணைந்த தேசிய, மாநில அரசியல் இயக்கம் ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும்.

4) இந்த நிலை மாறவேண்டும் என நம் மனதார கடவுளிடம் தினந்தோறும் பிரார்த்தனை செய்யவேண்டும். இதுவும் கொஞ்சம் உதவும்.

கடவுளே மஹாலிங்கம், இந்த நிலை மாற நீங்கதான் மனசு வைக்கணும்.

சதுரகிரி சுந்தரனே போற்றி!!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!

0 comments: