Showing posts with label மாயை. Show all posts
Showing posts with label மாயை. Show all posts

Friday, April 29, 2011

ஞானமும் மாயையும்...

”இந்த உலக வாழ்வே மாயம். இங்கு இருப்பதெல்லாம் மாயை.”

இப்படிப்பட்ட கருத்துகளோடு சிலர் ஆன்மீகத்தில் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் ஞானம் அடைவதற்காக குடும்பத்தை விட்டுவிடுதலே முதல் படி என்றும் பிரச்சாரமும் செய்தார்கள்.

முதலில் இது எனக்கு புரியவில்லை. கடமையை விடுத்து சன்னியாசம் கொள்வது மாயையா? அல்லது கடமையை ஒழுங்காக செய்வது மாயையா?? இது குறித்த குழப்பம் இன்னும் சில இடங்களில் இருக்கிறது.

எது மாயை என்ற சிந்தனை அதிகமாகி அது பற்றி என் நண்பர்களுடன் விவாதித்த போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் இந்த உலகம் மாயை அல்ல. இதில் இருப்பவர்களும் மாயை அல்ல. நம் உறவுகள் மாயை அல்ல. நம் குடும்பம் மாயை அல்ல. எல்லாமே நிஜம்.

ஆனால் நம் அகங்காரத்தின் பொருட்டு இவற்றின்பால் ஏற்படும் உணர்வுகள்தான் மாயை.

அளவுகடந்த / விடமுடியாத  - காதல், காமம், பயம், ஆசை, பேராசை, பாசம் போன்ற உணர்வுகள் - மாயை

நம் பிறப்பின் நிமித்தமும், வளர்ப்பின் நிமித்தமும் நமக்கு ஏற்படும் உறவுகளும், கடமைகளும், அதை நிறைவேற்ற அகங்காரம் விடுத்து நாம் செய்யும் கர்மங்களும் - நிஜம்.

நமக்கு ஏற்படும் வியாதிகள் நிஜம். அதை நினைத்து நாம் வருந்துவதும் உழல்வதும் பயப்படுவதும் மாயை.

நமக்கு விதிக்கப்பட்ட கடமைகள் நிஜம். ஆனால் அதை நினைத்து கோபப்படுவது மாயை.


மனிதன் வாழ்வில் உணர்வுகள் இல்லாமல் வாழ முடியுமா?? நிச்சயம் முடியாது.

ஆனால் அந்த உணர்வுகள் எதற்காக, எவ்வளவு வெளிப்படவேண்டும் என்ற தேவையான வரையரைக்குள் இருந்தால் அது நிச்சயம் மாயையாக இருக்காது.

உணர்வுகளின் அளவுகள் தீவிரமாகும்போது அவை நம் நரம்பு மண்டலத்தில் செயல் பட ஆரம்பிக்கிறது. அதில் ஏற்படும் அழுத்தம் உடல், மன வியாதியாக பரிணமிக்கிறது.


எனவே மாயை என்பது நமக்கு வியாதியாகவும், மன அழுத்தமாகவும் மாறி நம் வாழ்வின் நோக்கத்தை சிதைத்து விடுகிறது.

ஒவ்வொரு வாழ்வின் நோக்கமும் ஞானம் அடைவதே... அதை நமக்கு மறக்கடிப்பதே இந்த மாயையின் நோக்கம்.

இந்த மாயையில் இருந்து நாம் விடுபட்டு ஞானத்தை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...