Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Friday, December 30, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4a குருவைத் தேடி-2

குரு அடையாளம் தெரிந்த சில நாட்களில் மீண்டும் குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது. நம் குருவுக்கும் நாம் கும்பிடும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரையும் அருவமாகவே உணர முடிகிறது. நேரில் இருக்கும் குரு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

எனது குருதேவரிடமே மீண்டும் பிரார்த்தனை ஆரம்பித்தது. எனக்கு தங்கள் ஆசியை கொண்டுவந்து கொடுப்பவர் இன்னார்தான் என அடையாளம் காட்ட வேண்டினேன்.

இந்த நேரத்தில், எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. உண்மையில் மனம் உடைந்து விட்டது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட காலம் என்பதால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 45 நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சென்றுவிட்டேன்.  சம்பளம் தருவார்களா என தெரியவில்லை.  சோதனை மேல் சோதனை. குருவின் மீது பாரத்தைப் போட்டு இருந்தேன்.

அப்போது மன அழுத்தம் மிக அதிகமாகி கடவுள், குரு, சுற்றம்,  நட்பு எல்லாம் என்னை விட்டு விலகி அனாதை ஆகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு ஆட்கொண்ட நேரம்.

அப்போது ஆனந்த விகடன் புத்தகத்தில் ஒரு ராஜ யோக பயிற்சியாளர் பண சம்பத்தை அளிக்கும் பூஜை கற்றுத்தர ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். ஜாதகத்துடன் விண்ணப்பிக்க சொல்லி இருந்தது.

இதற்கு விண்ணப்பித்து, அந்த பூஜைகள் செய்து ஏதாவது மாறுதல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் ஒரு விண்ணப்பம் தட்டி விட்டேன். சில நாட்களில் அதை மறந்தும் விட்டேன்.

உடல்நிலை ஓரளவு தேறி, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு அந்த ராஜ யோக பயிற்சியாளர், அந்த பூஜை முறை கற்றுக்கொள்ள எனக்கு தகுதி இருப்பதாகவும், உடனடியாக கிளம்பி வரவும் என கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தை படித்த விநாடியில் இருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது. மனம் ஒரு நிலையில் இல்லை. கட்டுப்பாடு இழந்து சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக‌ இருந்தது. ஆனால் பணம் செலவளித்து இதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை அலைக்களித்தது.

மறுநாள் மீண்டும் மனதில் ஒருவிதமான வித்தியாசமான உணர்வு பரவுவதை உணர்ந்தேன். இப்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற ஒரு உணர்வில் மயக்கமான நிலைக்கு போய்விட்டேன்.

எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னை கவனித்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டினார். நான் நடந்த விசயங்களை சொல்லி அந்த ராஜ யோக பயிற்சியாளர் அனுப்பிய கடிதத்தை காண்பித்தேன்.

அவர் உடனடியாக ஒரு ஆஞ்சனேய உபாசகரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் சென்று பார்க்கும்படி கூறினார். அங்கு சென்றதும் அவர் என்னிடம் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து, எனக்கு திருஷ்டி பாதிப்பு இருப்பதாகவும், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி அது செய்ய வைத்தார்.

அப்போதிலிருந்து தொடர்ந்து சுமார் 10 நாட்கள், அந்த பயம் போன்ற  உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தியான ஆசிரியரிடம் ஏதாவது தியானம் மூலம் இதை சரி செய்ய முடியுமா என்று வினவினேன். அவர் அந்த ஆஞ்சனேய பக்தரிடம் தொடர்ந்து சென்று வர ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில் எனது சகஜ மார்க்க நண்பர்கள் மூலம் அவர்களின் தியானமுறையில் இதை சரி செய்ய முடியுமா என முயற்சித்தேன். ஆனால் அவர்கள் தியானம் கற்றுக் கொண்டால்தான் அது குறித்து முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு சுமார் ஒரு மணிநேரம் அதன் முக்கியத்துவதுவம் குறித்து விளக்க உரையும் கொடுத்தார்கள். எனக்கு தியானம் புதிதாக கற்றுகொள்ள விருப்பம் இல்லை என கூறி விட்டு அப்போது வந்து விட்டேன்.

ஆனால் மறுநாள் என்னால் வீட்டில் இருக்க முடிய வில்லை. எப்படியாவது சகஜ மார்க்க தியானம் கற்று கொள்ள வேண்டும் என்று என் மனதில் இருந்து திரும்ப திரும்ப சிந்தனை வந்து கொண்டிருந்தது. அது ஒரு மிகப் பெரிய உந்து சக்தி போல என்னைத் தள்ள ஆரம்பித்தது. தாங்க முடியவில்லை என்னால்.

உடனடியாக எனது தியான ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, சில நாட்கள் சகஜ மார்க்க தியானம் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். அதற்கு தங்கள் அனுமதி தேவை என விண்ணப்பித்தேன். அவர் என்னை நேரில் வரும்படி பணித்தார்.

எங்கள் குழு தியான அறையில் தியான ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டேன். மானசீகமாக என் குருநாதர் விக்கிரகத்துக்கு முன் மண்டியிட்டு என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் எந்த நிலையிலும் எனக்கு துணையாக இருக்கும்படியும் வேண்டினேன்.

சிறிது நேரத்தில் தியான ஆசிரியர் அந்த அறைக்குள் வந்தார். நேராக குருவின் மூர்த்திக்கு ஆரத்தி காண்பித்து என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, எந்த தியானமானாலும் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி பாதியில் விட்டு செல்லக்கூடாது. மாற்றி மாற்றி தியானம் செய்தால் அது நல்லதல்ல என அறிவுரை கூறினார். பிறகு வேறு தியானம் செய்வது என் சொந்த விருப்பம் எனவும், சிறிது நேரம் தியான அறையில் ஓய்வு எடுத்துவிட்டு செல்லும் படியும் பணித்து சென்றுவிட்டார்.

அவர் தியான அறையை விட்டு அகன்ற விநாடியில் என் மனதில் இருந்த அந்த அரிப்பு அகன்று விட்டது. சுமார் 15 நிமிடங்கள் அந்த தியான அறையில் அமைதியாக இருந்த பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு. மனதில் ஒரு தெளிவு. என் குருநாதரின் பரிபூரண ஆசி எங்கள் தியான ஆசிரியர் மூலம் எங்களுக்கு வருவதை குறிப்பால் உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்ததுபோன்ற ஒரு தோற்றம் மனதில் ஏற்பட்டது. வாழ்வோ சாவோ இனி நம் குருதேவருடன் தான் என மன தெளிவு வந்தது.

அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.

பிறகு தொடர்ந்து 3 மாதங்கள் சில பரிகாரங்கள் வீட்டில் செய்து அந்த ஆஞ்சனேயர் உபாசகர் மூலம் தாயத்து செய்து அணிந்த பிறகு பூரண குணம் கிடைத்தது.

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Thursday, July 14, 2011

தியானமும், மதங்களும்...

இன்றைக்கு இருக்கும் தியான முறைகள் பெரும்பாலும் மதம் சார்ந்தே இருக்கின்றன.. அல்லது இந்துமதம், பௌத்த மதம், ஜைன மதம் இப்படிப்பட்ட மதங்களில் இருந்துதான் வந்துள்ளன.. என்னதான் பல தியான முறைகள் மதத்துக்கு அப்பாற்பட்டது என்று பிரச்சாரம் செய்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனாலும் உண்மையில் தியானம் தோன்றிய மதங்கள் எதுவாயினும் தியானம் என்பது மனிதனுக்குள் ஒரு நன்மையான மாற்றம் விளைவிக்கும் ஒரு மருந்துதான்.

மருந்து தயாரிப்பவர் அல்லது தருபவர் யாராக இருந்தாலும் வியாதி குணமானால் சரிதானே?? உளியை செய்தது யாராக இருந்தாலும் அது சிற்பம் வடிக்க உதவினால் சரிதானே??? அதுபோலவே தியானமும், மூல மதம் எதுவாக இருந்தாலும் அது நம்மை சரியான வழியில் செலுத்த உதவி செய்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்றே நான் எண்ணுகிறேன்.


ஆனால், தம் மதத்தின் மீது அதீத பற்று உடைவர்கள் இதை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் ஒரு நெருடலுடன் தியானம் செய்வதற்கு பதிலாக தம் மதத்தின் கடமைகளை சரியாக செய்தாலே ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

விமானம் யார் கண்டுபிடித்தாலும் விரைவாக பயணம் செய்ய அதை நாம் உபயோகப் படுத்துவதுபோல, தியானமும், நாம் ஆன்மீகத்தில் விரைவாக ஞானம் நோக்கி பயணம் செய்ய உதவுகிறது. இதை புரிந்து கொண்டு தியானம் செய்த சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.

அவர்களின் தியான அனுபவம் மிக அதிசயமானது. அவர்கள் கூற்றுப்படி, அவர்கள் செய்துவந்த தியானம் அவர்களுக்கு வேறு மதத்தின் பாற்பட்டதானாலும், தத்தமது மதக் கடமைகளில் அதிக கவனம் செலுத்தும் படியாக அவர்கள் வாழ்க்கைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. தியானமும் செய்து, தம் மதக் கடமைகளையும் அவர்கள் செவ்வனே செய்து வந்திருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு காலப்போக்கில் இது நம் மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விசயம் தானா என்ற நெருடல் ஏற்பட தியானம் செய்வதை நிறுத்திவிட்டார்..

எனவே தியானங்களின் மதத்தைப்பற்றி அதிக சிந்தனை செய்வதை விட்டுவிட்டு அவற்றின் அளப்பரிய பலன்களை எண்ணிப் பார்த்து பயிற்சி செய்தால் நம் வாழ்வு சிறக்கும். ஞானம் விரைவில் சித்திக்கும்.

கடவுளே மஹாலிங்கம், தியானத்தின் இந்த உண்மையான தன்மை எல்லாருக்கும் புரிஞ்சு அவங்க செம்மையாக தியானம் செய்து விரைவில் ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி நாதனே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...

Tuesday, July 12, 2011

தியானம் - பல நிலைகள்????

நான் தியானம் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் எனது பல நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்வி - “நீ தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறாய்??” என்பது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவர்களும் வெவ்வேறு விதமான தியான முறைகளை முறையாக பயின்று, தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள்.

முதலில் எனக்கு இது புரியவில்லை. பிறகு அவர்களின் தியான முறைகளுக்கு உட்பட்ட சில விளக்கங்கள் கேட்ட பிறகு ஓரளவுக்கு புரிந்தது..

அதாவது நாம் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்வதை தியானம் செய்வதோடு ஒப்பிட்டால், வழியில் , செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், உழுந்தூர் பேட்டை, திருச்சி, இப்படி வரும் ஊர்கள் போல நம் தியான இலக்கு நோக்கி எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதன் அளவீடுதான் இந்த நிலைகள் என்று ஒருவழியாக புரிந்து கொண்டேன்.

இது சம்பந்தமாக எனக்கு தியானம் கற்றுத்தந்த ஆசிரியர் ஒன்றும் கூறி இருக்கவில்லை. அவரிடம் இது பற்றி விளக்கம் கூறுமாறு கேட்டபோது சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

1) நமது தியான நிலையின் அளவீடுகள் உண்மையில் மதிப்பிடுவது சாதாரணமாக முடியாத காரியம்.

2) அதை உண்மையில் கண்டறிவது நம் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் வைத்தே கணிக்க முடியும்.

3) தியானத்தின் உயர்நிலை தாழ் நிலை என எதுவும் வரையறுக்கப் படவில்லை.

4) பெரும்பாலும் இது அவரவர்கள் கற்றுத்தரும் போது மாணவர்களுக்கு ஒரு மேலதிக ஆர்வம் உருவாக்க உபயோகப் படுத்துகிறார்கள்.


இதுபற்றி நான் மேலும் அறிய புகுந்தபோது கிடைத்த தகவல்கள்:

சில தியான முறைகளில், ஒரு குறிப்பிட்ட நாட்கள் தியானம் செய்தபின் அவர்கள் அடுத்த நிலைக்கு வந்துவிட்டதாக கணக்கிடுகிறார்கள்.

இன்னும் சில தியான முறைகளில், அவர்களின் மேலேயே இன்னொருவர் தியானம் செய்தும் உண்மையாக கண்டுபிடிக்கிறார்கள்.

சில முறைகளில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொருவிதமான தியானங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அது நாம் செய்யும் தியானத்தின் பால் சார்ந்ததே ஒழிய அது ஒன்றும் ஒரு பொதுப்படுத்தப்பட்ட விசயம் இல்லை.


மேலும் நாம் தியானத்தின் உண்மையான இலக்கான ஞானத்தை அடைய எடுக்கும் கால அளவு எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே போதுமானது.  சிலருக்கு பலபிறவிகளும் தேவைப்படுகிறது. அது நம் மனநிலையையும் நம் கர்மசொத்துக் கணக்கையையும் பொருத்தது.

தொடர்ந்து தினமும் தியானம் செய்தால் நிச்சயம் ஞானம் அடையலாம். எப்போது என்ற கேள்வியை விட்டுவிட்டு, அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து தியானம் செய்துவந்தால் ஞானம் நிச்சயம் சித்திக்கும்.

எனக்கு தெரிந்து தியானத்தில் இரண்டே நிலைகள்தான்.. ஒன்று தொடர்ந்து தியானம் செய்யும் நிலை. இன்னொன்று தியானத்தை விட்ட நிலை.

இதில் தியானம் செய்யும் நிலையில் நாம் எப்போதும் இருந்தால் ஞானம் சித்திக்கும்..

கடவுளே மஹாலிங்கம் எல்லாரும் தொடர்ந்து தினமும் தியானம் செய்து ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.. ஹரஹர மஹாதேவா போற்றி...

Monday, July 11, 2011

எது தியானம்???

தியானம் என்றால் என்ன? இது ஒரு கடினமான கேள்வி.. இதற்கு ஒரே பதில் தரவும் முடியாது...

சிலர் அமைதியாக அமர்ந்திருப்பதே தியானம் என்கிறார்கள்.

சிலர் மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் என்கிறார்கள்.

சிலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும் வழிபடுவதையும் தியானம் என்கிறார்கள்

சிலர் மந்திரம் உச்சாடம் செய்வது தியானம் என்கிறார்கள்.

சிலர் முனைப்போடு காரியம் செய்வதையும் தியானம் என்றே சொல்கிறார்கள்.

இப்படி பல சிலர் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள்..


ஒரே குழப்பம்.. யார் சொல்வதை எடுத்துக் கொள்வது. எதை விடுவது. எது சிறந்தது. எது ஒவ்வாதது.

முதலில், இதில் நாமாக, சுயமாக செய்யும் எதுவுமே ஒவ்வாவதுதான்... அது தியானமாகாது. முக்கியமாக ஒரு ஆசிரியர் மூலம் கற்காத தியானம் தியானமே அல்ல.

அது எந்த வகையானதாக இருந்தாலும் ஒரு தேர்ந்த தியான ஆசிரியரைப் பணிந்து தியானம் கற்றுக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும்.  அதுவே உண்மையான தியானம்... அது நம் வாழ்வில் தேவையானதை எல்லாம் நமக்கு அளிக்கும்..

கடவுளே மஹாலிங்கம்... நம் மக்கள் அனைவரும் ஒரு நல்ல தியான ஆசிரியரிடம் தியானம் கற்று சிறப்பாக பயிற்சி செய்திட நீங்கதான் அருள் செய்யணும்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, July 7, 2011

ஞானமும், தியானமும்...

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும், நம் வாழ்வில் நாம் அடைய வேண்டிய இலக்கு ஞானம். இதற்கு எவ்வளவோ வழிகள் இருந்தாலும், விரைவில், பாதுகாப்பாக அடைய சரியான வழி தியானமே..

தியானம் செய்வதால் என்ன பயன்? நமக்கு சக்திகள் கிடைக்குமா? பறக்க முடியுமா? மறைய முடியுமா? எதிரியை அழிக்க முடியுமா? நிறைய பணம் கிடைக்குமா?? அது என்னதான் செய்யும்?

நானும் தியானம் கற்று சில நாட்களாக செய்து வருகிறேன்.. என் அனுபவத்தில் அறிந்தவை :

முதலில் நமக்கு நம்மை உண்மையாக அறிமுகம் செய்து வைக்கும்.. நமது கொள்ளளவு (Capacity) என்ன என்று நமக்கு உணர்த்தும். நாம் நினைப்பது போல் ஒரு சூப்பர்மேன் அல்ல அல்லது ஒரு உதவாக்கரை அல்ல..  நமது உண்மையான மதிப்பீடு நமக்கு மிக முக்கியம். இதிலிருந்துதான் நாம் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான சூட்சுமம் அடங்கி இருக்கிறது. அதை நமக்கு அழகாக நாசூக்காக உணர்த்துகிறது.

அடுத்து நம் வாழ்வின் உண்மையான வாழ்வியல் தேவைகள் என்ன  என நமக்கு உணர்த்தி நம்மை அதை நோக்கி தள்ளுகிறது. மேலும் சில தேவையில்லாத விசயங்களில் நாம் மதி மயங்கி மூழ்கிக் கிடக்கும் போது அதிலிருந்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கிறது..

இது நம் பழக்க வழக்கங்களில் ஒரு நேர் மறையான மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

நம் வாழ்வின் இலக்கான ஞானம் அடைய நமக்கு பொருத்தமான ஒரு Custom made வழியில் நம் வாழ்வை வழி நடத்துகிறது. ஞானம் அடைய நாம் செய்யவேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வைக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இதை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.



இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான தியான முறைகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. யார் யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள். பல பிரபலமான அமைப்புகளும் இருக்கின்றன.

யாரிடம் கற்பது? எதை கற்பது? எது சரியான தியானம்? எது போலி தியானம்? ஆயிரம் கேள்விகள்..

இவற்றிற்கு உண்மையான, நேர்மையான பதில், நம் மனதுக்கு பிடித்த ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளலாம். நமக்கு யார் மீது அபிமானம் இருக்கிறதோ அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம். நமது சுற்றத்தார் / நட்பு வட்டத்தில் நம்பிக்கைக்கு உரிவர்கள் பரிந்துரைக்கும் தியானம் கற்றுக் கொள்ளலாம்.
என் தியான ஆசிரியர் கூறிய ஒரு மிக முக்கியமான விசயம் - ”தியானம் எல்லாமே ஒரே விதமான பலன் தரும். அதை சொல்லிக் கொடுப்பவர்கள்தான் அதை பாகுபடுத்தி அதில் ஒரு உயர்வு தாழ்வு ஏற்படுத்திவிட்டார்கள். எனவே ஏதாவது ஒரு தியானத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். மாறி மாறி மனதை அதுவோ இதுவோ என்று அலைய விடாதீர்கள்.”

இதில் அதி முக்கியமான விசயம் தொடர்ந்த தியான பயிற்சி. இதுவே நம் வாழ்வின் இலக்கான ஞானத்துக்கு நம்மை பாதுகாப்பாக இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. உங்க அருளால எல்லாரும் தியானம் செய்து வாழ்வின் லட்சியமான ஞானத்தை அடைய அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.... ஹரஹர மஹாதேவா போற்றி...