Showing posts with label அரசாங்கம். Show all posts
Showing posts with label அரசாங்கம். Show all posts

Monday, October 17, 2011

மின்சாரம் - சில கவலைகள்...

இன்று 17 அக்டோபர் 2011 முதல் 3 நாட்களுக்கு கோல் இந்தியாவில் ஊழியர்களால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நிலக்கரி இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் நம் தேசத்தில் இது ஒரு பெரிய அடியாகவே இருக்கும்...

ஏற்கனவே மின்சார தட்டுப்பாட்டால் திண்டாடும் நாம் இன்னும் சில மணிநேர மின் வெட்டிற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் அரசாங்கம் நினைப்பதுபோல் ஆயிரம் கோடிக்கணக்கில் முதலீடு செய்தால்தான் மின்சாரம் நமக்கு கிடைக்குமா? என இன்று கூகிளில் தேடிக் கொண்டிருந்தபோது சில ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன..

பீகார் மாநிலத்தில் ஒரு தனியார் கம்பெனி நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரித்து கிராமங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறதாம். ஒரு நாளைக்கு ரூ 2 செலவில் வழங்குவதாக தெரிகிறது. அந்த கம்பெனியின் வலைத்தள இணைப்புக்கு இங்கே அழுத்தவும்.  அதில் மேலும் பல விவரங்கள் கிடைக்கிறது.

இதுபோல ஒரு சில நிறுவனங்கள் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் வைத்திருக்கிறார்கள். 

மேலும் நான் எனது பள்ளி நாட்களில் கேள்விப்பட்ட கோபார் கேஸ் எனப்படும் சாண எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்க தொழில் நுட்பம் ஏற்கனவே இங்கு இருக்கிறது. அதை ஏன் தீவிரமாக முன்னெடுத்து செல்லக்கூடாது??

சிறிய சூரிய சக்தி மின் நிலையங்களை ஒவ்வொரு பெரிய கட்டிடங்களிலும் அமைக்க முடியும் என சில நிறுவனங்கள் சொல்கின்றன.. அரசாங்கமும் அதற்கு மானியம் வழங்குகிறது.

இது போல நிறுவனங்களை அணுகி அவற்றின் மூலம் நம் மின் உற்பத்திகளை பெருக்கினால் நம் மின் பற்றாக்குறைகள் தீராதா??

மேலும் நம் நாட்டில் இருக்கும் பெரிய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் புதிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து இதை மேலும் எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தம் வளாகங்களில் இப்படிப்பட்ட புதிய தொழில் நுட்பத்துடன் சிறு மின் தயாரிப்பு நிலையங்களை அமைத்தால் அவைகளுக்கான மின் பயன்பாடு மிச்சம் தானே..

உண்மையில் மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஊர் கூடி தேர் இழுத்தால் நிச்சயம் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கு அரசாங்கமும் மனசு வைத்து ஆவன செய்தால் விரைவில் தீர்வு வரும் என நம்புகிறேன்.. செய்வார்களா???

அந்த மஹாலிங்கம்தான் அருள் செய்யணும்...

சதுரகிரி நாயகனே போற்றி... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Friday, October 14, 2011

நாடு முழுதும் மின்சார பற்றாக்குறை...

கடந்த சில நாட்களாக இங்கு கல்கத்தாவில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை மின்சாரம் இருப்பதில்லை.. ஆனால் தொடர்ந்து நிறுத்தாமல் 2 மணி நேரம் வரை 3 அல்லது 4 முறை ஒவ்வொரு நாளும் நிறுத்துகிறார்கள். வீட்டில் யூபிஎஸ் இருப்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது...

இந்த நிலை நாடுமுழுதும் பரவலாகவே இருப்பதாக தெரிகிறது. இது பற்றி கடந்த சில நாட்களாக செய்திகளிலும் அடிபட்ட வண்ணம் இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் பல அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் அதற்கு கீழ்க்கண்ட காரணங்களை பட்டியலிட்டும் இருக்கிறார்கள் :

1) நிலக்கரி வரத்து மிகவும் குறைந்துவிட்டது. சில அனல் மின் நிலையங்களில் 2-3 நாட்களுக்குதான் இருப்பு இருக்கிறதாம். எப்போதும் 2-3 வாரங்களுக்கான நிலக்கரி இருப்பில் இருக்க வேண்டும்.

2) தெலுங்கானா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால் உண்டான உற்பத்தி குறைபாடு.

3) நிலக்கரி எடுக்கும் இடங்களில் பரவலாக பெய்த மழை. இது நிலக்கரி எடுப்பதையும் அதை கொண்டுசெல்வதையும் அதிகமாக பாதித்துள்ளதாக தெரிகிறது.

4) புதிய நிலக்கரி சுரங்களுக்கு அனுமதி கொடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தினாலும் அதன் சம்பந்தமான புதிய சட்டங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கவில்லை. இதனால் நிலக்கரி உற்பத்தி அளவு 2009 இருந்த அளவிலேயே இன்னும் இருக்கிறது.

5) யூனியன் பிரச்சினைகளால் உற்பத்தி அதிகரிக்க முடியாமல் போனதாம்.

6) பல மாநில மின்சார வாரியங்கள் நிலக்கரி வாங்கியதற்கு பலகோடி பாக்கி வைத்துள்ளார்களாம். இங்கு மேற்கு  வங்கத்தில் இது கிட்டத்தட்ட ரூ300 கோடி அளவில் பாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு தீர்வாக மின் கட்டணத்தை அதிகரிப்பதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ 4-25 க்கு தருகிறார்கள். இதை ரூ 6 ஆக ஏற்ற பரிசீலனையில் இருப்பதாக கேள்வி.


இப்போதைக்கு நிலைமையை சரிக்கட்ட கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன :

1) முதலில் தேவையான அளவு நிலக்கரியை உடனடியாக அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஊழல்களுக்கு வழிவகுக்கும் என எனக்குப் படுகிறது. முடிந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இந்த இறக்குமதி நடந்தால் சந்தோசப்படுவேன்.

2) இன்றைய செய்தியில் நம் நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுரங்கங்களை எடுத்துக்கொள்ள இருக்கும் புதிய வழிமுறைகள்பற்றி அரசாங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

3) நம் நாட்டிலேயே இருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை உடனடியாக அனல் மின்நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல ஆவன செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் உடனடியாக நம்மவர்கள் செய்ய வேண்டியது. இதை செய்தால்தான் மின் உற்பத்தி தங்குதடை இன்றி நடைபெற வழி செய்ய முடியும்.

4) கோல் இந்தியா லிமிடெட் என்ற நமது இந்திய நிலக்கரி கழகம் ஒவ்வொரு ஆண்டும் தனது உற்பத்தியில் 10% அளவிற்கு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி அதையும் நமது அனல் மின் நிலையங்களுக்கே கொடுக்க (விற்க) உத்தரவிடப்பட்டுள்ளது. விலையில் இருக்கும் வித்தியாசத்தினால் இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ4000 கோடி அளவுக்கு இந்த ஆண்டு இதனால் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.


எனக்கு என்னவோ இது அரசாங்கம் அனல் புனல் நிலையங்களை முடக்கி அணு மின் நிலையங்களை முன்னிறுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. 

மேலும் மின் கட்டணங்களை வகைதொகை இல்லாமல் உயர்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற பயமும் இருக்கிறது.

ஏற்கனவே விண்ணில் பறக்கும் விலைவாசியால் நசுங்கிப்போய் இருக்கும் சாமானியனுக்கு நம் அரசாங்கம் மேலும் சில விலையேற்றங்களையும் சில அணு மின் நிலையங்களையும் இந்த மின் பற்றாக்குறையை சாக்கு வைத்து பரிசாக அளிக்கப் போவது மட்டும் உறுதி.

அந்த மஹாலிங்கம்தான் நம்மளைக் காப்பாத்தணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, September 21, 2011

எது வறுமைக்கோடு ???

நம் அரசாங்கம் யாரை ஏழை என்று கருதி திட்டங்கள் தீட்டுகிறது என இன்று பேப்பரில் வந்திருக்கிறது... அதன் சுட்டி கீழே...

Spend Rs 32 a day? Govt says you can't be poor



நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பெருநகரத்தில் ரூ32 க்கு மேல்  செலவு செய்பவர் என்றால் அல்லது ஒரு சிறுநகரத்தில் அல்லது கிராமத்தில் ரூ26க்கு மேல் செலவு செய்பவர் என்றால் நீங்கள் வருமைக்கோட்டுக்கு மேல் வந்து விட்டீர்கள்... எப்பூடி...

இதில் சாப்பாட்டுக்கு , காய்கறிக்கு , எண்ணைக்கு , பாலுக்கு , கல்விக்கு என ஒரு குடும்பம் (4நபர்) எவ்வளவு செலவு செய்வது எனவும் கணக்கு வேறு சொல்கிறார்கள். படிக்கும்போதே தலை சுற்றுகிறது.
 
இந்த இலக்கைக்கூட எட்ட முடியாமல் இருக்கும் அரசு உண்மையில் வெட்கப்பட வேண்டும். பேசாமல் பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அரசு சலுகைகள் என அறிவித்துவிட்டு போய்விடலாம். (அவர்கள் கூட சண்டைக்கு வந்து விடுவார்கள்.)

அரசாங்கமே ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நபருக்கு ரூ120 சம்பளம் கொடுக்கிறது (கணக்கு காட்டவாவது). அப்படி பார்த்தால் வருடத்துக்கு 100 நாட்களுக்கு ரூ 12000-00. ஒரு குடும்பத்தில் 2 நபர்கள் இதில் வேலைக்கு சென்றால் வருடத்துக்கு ரூ 24000-00..

அதாவது நம் அரசாங்கம் இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திலேயே இந்த வறுமையை ஒழித்துவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள்...

மக்களைப்பற்றியோ அவர்கள் வாழும் சூழல் பற்றியோ இருக்கும் விலைவாசி பற்றியோ கொஞ்சமும் தெரியாத, அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத சில பல அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கோடு கேலிக்கூத்தானது..

இதைக்கூட நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாக சாதிக்கவில்லை என நினைக்கும் போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நேர்மையாக சிந்தித்தால், இன்றைய விலைவாசியில் ஒரு பெருநகரத்தில் சுமார் ரூ 2,40,000 க்கு குறைவாக செலவு செய்பவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வருபவர்கள்தான். இவர்கள் அனைவரையும் முன்னேற்றதான் நம் அரசாங்கம் பாடுபட வேண்டும். 

இதைவிடுத்து இல்லாத ஒரு வறுமைக்கோட்டை உருவாக்கி அனைவரையும் பொய் சொல்ல வைத்து அவர்களை முன்னேற்ற ஊழல் திட்டங்கள் தீட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்.. அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு எல்லை விரிவு படுத்தப்பட்டு, பரவலாக்கப்பட்டு பெரும்பான்மை சமூகம் பயனடைய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.. அவை உடனடியாக செம்மையாக ஊழலின்றி செயல்படுத்தப்பட வேண்டும்... செய்வார்களா நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்????

கடவுளே மஹாலிங்கம்... இந்த அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி குடுத்து நம் மக்கள் முன்னேற சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் படுத்தப்பட நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்... ஓம் நம சிவாய...

Saturday, August 20, 2011

லஞ்ச ஊழல் ஒழிப்பு.. எவ்வாறு சாத்தியம்..

இப்போது திரு அன்னா ஹசாரே ஜன் லோக்பால் வர உண்ணா விரதம் இருக்கிறார். என்னைப் போல் நிறைய பேர், இந்த சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, லஞ்ச  ஊழல் விவகாரத்தில் தம் எதிர்ப்பை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்து ஆதரிக்க வைத்துவிட்டார்கள்.

இன்று லஞ்சமும் ஊழலும் நீக்கமற நம் தேசம் முழுதும் உள்ள அரசு எந்திரங்களில் இருக்கிறது. இதை ஒரு சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியும் எனில் இந்த அளவுக்கு லஞ்ச ஊழல் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் ஊழல் ஒழிப்பு என்பது எப்படி சாத்தியப்படும்? குறைந்த பட்சம் மக்களை நேரடியாக பாதிக்கும் கீழ்மட்ட லஞ்ச ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?  என் சிந்தனையின் பல நாள் கனவு....

ஒரு பெரிய பூசணிக்காயை எப்போதும் முழுமையாக அப்படியே சாப்பிட முடியாது.. ஆனால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சமைத்தால் சுலபமாக சாப்பிடலாம்.

இதுபோலவே, லஞ்ச ஊழல் ஒழிப்பும் நம் தேசத்தில் இருக்கும் ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சிறுது சிறிதாக நாடு முழுவதும் பரவ வேண்டும்.

1) முதலில் ஒரு சில சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற தொகுதிகளில் சில நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏரியா கவுன்சிலரில் இருந்து பாராளுமன்ற  உறுப்பினர் வரை. இதை செய்வது கடினம் என்றாலும் குறைந்தது 2-3 தொகுதிகளிலாவது நம் பிரபல சமூக ஆர்வலர்கள் தேர்தல் நேரத்தில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தால் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

2) அவர்களுக்கு உதவ முழு நேரப்பணியாளர்களாக ஒரு ஊழல் ஒழிப்பு படை ஏற்படுத்தப்பட வேண்டும். இது முடிந்த அளவுக்கு நேர்மையும் சமூக ஆர்வமும் இருப்பவர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சமூக அர்ப்பணிப்பு உள்ள இளைஞர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும்.  மேலும் ஒவ்வொரு குடியிருப்பிலும் இருக்கும் வட்டார நல சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு செயல் பொறுப்பில் நேர்மையானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படையாக செயல் பட வேண்டும்.

3) இவர்களில் தேவையானவர்களுக்கு சம்பளம் அந்த அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபார, தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

4) இவர்களின் முழு நேரப் பணி, லஞ்சம் ஊழல், அதிகார துஷ்பிரயோகம்  நடைபெறும் இடங்களில் கண் காணிப்பு செய்வது மற்றும் பொது மக்களுக்கு ஆதரவாக உதவியாக செயல்படுவது. உதாரணம் - தாலுகா அலுவலகங்கள், வணிக வரி அலுவலகங்கள், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள், காவல் நிலையங்கள், வட்டார வழங்கல் அலுவலகங்கள், நியாய விலை கடைகள், கூட்டுறவு கொள்முதல் நிலையங்கள், வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் மற்றும் பல அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்கள். 

5)  இங்கு நடைபெறும் பணிகளில் ஏற்படும் தொய்வுகளுக்கு இந்த மக்கள் படையினர் நேரடியாக தலையிட்டு சமாதான முறையில் நேர்மையான பணி நடைபெற ஏற்பாடு செய்யலாம். முடியாத பட்சத்தில், அந்த ஏரியாவில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான மக்கள் பிரதிநிதியை அழைத்து அவர் மூலம் தீர்வு காணலாம். தேவைப்பட்டால் மேலும் ஊழல் ஒழிப்பு படையினரைத்திரட்டி ஒரு போராட்டம் செய்யலாம்.

6) ஒவ்வொரு மாதமும் இந்த படையினர் சிறு சிறு குழுக்களாக சந்தித்து தாங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கலாம். இதில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யலாம். இந்த கலந்துரையாடலில் லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரியும், சட்ட ஒழுங்கு காவல் உயர் அதிகாரியும் கலந்துகொண்டு அவர்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

7) பொது மக்கள் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஏற்படும் தாமதங்களுக்கு இந்த படையினரை அணுகி புகார் செய்யலாம். இந்த படையினர் சம்பந்தப்பட்ட துறையினருடன் அது பற்றி மேல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

8) இந்த நடைமுறையில் பிடிபடும் லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

9) இந்த நடைமுறையில் தவறு செய்ய முற்படும் பொது மக்களுக்கும் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் ஓரளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள முன்வருவார்கள்.

10) உள்ளூர் கட்டுப்பாடுகள் சில நிறைவேற்றி அதை முழுமையாக அனைவரும் கடைபிடிக்க செய்ய வேண்டும்.

11) மக்கள் நேர்மையையும் ஒழுங்கையும் வெளிப்படையாக காண்பிக்கும்போது தமக்குள் ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டு அது நம் சமூகத்தில் பிரதிபலிக்கும். (இதைத்தான் நம் முன்னோர் அந்த காலத்தில் ஊர்கட்டுப்பாடு என ஒரு கொள்கை வைத்திருந்தனர். ஆனால் அதன் நோக்கம் பிற்காலத்தில் சக மனிதனை நசுக்குவதில் சென்று முடிந்து விட்டது)

12) இந்த முறைகள் மூலம் அந்த ஒரு சில தொகுதிகளில் ஓரளவுக்கு மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

13) இதே தொகுதிகளில் மாற்றம் விரும்பும் பிற தொகுதியினரும் கலந்துகொண்டு பயிற்சி எடுத்து தமது தொகுதிகளில் செயல் படுத்த முற்பட வேண்டும்.

14) இந்த சங்கிலித்தொடர் நடவடிக்கை முதலில் ஒரு மாநிலத்திலும் பிறகு அணடை மாநிலங்களிலும் பிறகு தேசம் முழுவதும் பரவ ஒரு வாய்ப்பு இருக்கிறது.

15) இதற்கு குறைந்தது சில பத்தாண்டுகள் தேவைப்படும். ஒரு தலைமுறையில் நாம் சிரமப்பட்டு இதை செய்துவிட்டால் அடுத்து வரும் தலைமுறையினர் ஓரளவுக்கு இந்த லஞ்ச ஊழலில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பு வரும். எனக்கு நிச்சயம் இதில் நம்பிக்கை இருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்போம்.. லஞ்ச ஊழலை ஒழிப்போம்...


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இந்த லஞ்ச ஊழல் அரக்கன் ஒழிந்து நம் தேசம் சுபிட்சமாக அருள் செய்யணும்..


சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி.... ஹர ஹர மஹாதேவா சரணம்....

Tuesday, July 5, 2011

ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா??

சில நாட்களுக்கு முன் நம் மத்திய அரசு சமூக ஆர்வலர்களுடன் லோக்பால் விசயமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப் பின், இனிமேல் எந்த விதமான சட்ட விவாதத்திலும் எந்த சமூக ஆர்வலர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என அறிவித்தது.
 
அதன் பின்  நடந்த லோக்பால் பற்றிய அனைத்துகட்சி கூட்டத்தில் சமூக ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசின் நடவடிக்கையை பெரும்பாலான கட்சிகள் கண்டித்ததாகவும், அதுவும் முதலில் சமூக ஆர்வலர்களுடன் பேச்சு நடத்திவிட்டு இப்போது அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

மக்கள் நலனில் உண்மையான் அக்கரையுடன் செயல்படும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட எந்த ஜனநாயக அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

மாறாக, தேர்தலில் நின்று ஜெயித்து விட்டால் மட்டுமே மக்கள் நம்பிக்கை இருக்கிறது, இவர்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கரை கொண்டவர்கள் என்ற மாய தோற்றத்தை நம் அரசியல் வியாதிகள் ஏற்படுத்தி வருகிறார்கள். 

இது எவ்வளவு பெரிய மோசடி என்ற விசயம் நமக்கு அலைக்கற்றை ஊழலிலும், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், கருப்புப் பண விசயத்தில் இவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலும் அம்மணமாக தெரிகிறது.
 

மேலும் இன்றைய செய்தியில் அரசு கருப்பு பணத்தை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாகவும் அதில் நேற்று உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி..


இதற்கு முன் அலைக்கற்றை ஊழல் விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் விசாரணையே நடைபெற ஆரம்பித்தது. நடவடிக்கையும் ஒவ்வொரு முறை குட்டிய பிறகே நொண்டி நொண்டி எடுக்கப்படுகிறது.  இந்த சூழலில் மக்களுக்கு உச்ச நீதிமன்றம் இந்த கருப்புப் பண விசயத்தில் தலையிட்ட பின் ஒரு நம்பிக்கை கீற்று ஏற்பட்டிருக்கிறது.

இப்போது எனது சந்தேகம் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற பொறுப்பு உள்ள அரசியல்கட்சிகளின் ஆட்சியாளர்கள், மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், தம் சொந்த நலனுக்காக காரியங்கள் செய்து கொள்ளும்பொழுது, இவர்கள்மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும் / இருக்கும் என நினைக்கிறார்கள், என்பது புரியவில்லை. 

மக்களின் நம்பிக்கையைப் பெறாத அல்லது இழந்த ஆட்சியாளர்கள் செய்யும் ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது... 

இப்படி இருக்கும் நேரத்தில் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயல் படும் நம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், சமூக ஆர்வலர்களும் நம் தேசத்தை ஆள வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருட்டை விரட்டுவதற்கு எளிய வழி ஒரு விளக்கை ஏற்றுவதே....

இப்படிப்பட்ட மோசடி அரசியல்வாதிகள் ஒழிய, திரு அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் அரசியலில் குதித்து ஒரு கட்சி ஆரம்பித்து, மக்களுக்கு நல் வழி காட்ட முன்வர வேண்டும். 

திரு அப்துல் கலாம், கிரண் பேடி போன்றோர் மக்களுக்கு சரியான தலைவர்களை அடையாளம் காட்ட அரசியல் களம் காணவேண்டும். 

மேலும் நேர்மையானவர்கள் அரசியல் களம் கண்டு தேசம் செழிக்க உதவ வேண்டும்.

இதெல்லாம் நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!! சதுரகிரி நாதனே சரணம்!!!

Tuesday, June 7, 2011

எங்கே எதிர் கட்சிகள் ????

இப்போதெல்லாம் தொடர்ந்து யாராவது ஊழல், கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம், உண்ணாவிரதம், சத்யாகிரகம் என்று அமர்க்களப்படுத்துகின்றனர். 

ஒரு அரசியல் இயக்கமாக சமூக ஆர்வலர்களான இவர்கள் மாற முடியாது என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.  இருந்தாலும் ஒரு ஒப்புக்கு இவர்களை அனுசரித்து நடப்பதுபோல இப்போதைக்கு பாசாங்கு செய்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் நாங்கள் அரசியல் செய்யவில்லை என்று நூல் பிடித்தாற்போல் சொல்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் செய்யாமல் இதை எல்லாம் சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதே ஒரு நேர்மையான பதிலாக இருக்கும்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் இதில் இறங்கி மாட்டிக் கொண்டார். பாபா அரசியல் பேசப்போவது முன் கூட்டியே தெரியாதது போல நம் அரசு நடந்து கொள்வது விந்தையிலும் விந்தை.  பெரிய ஆச்சரியம் இதில் என்னவென்றால் நம் அமைச்சர்கள் “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்யவேண்டும். அரசியல் பேசக்கூடாது” என்று எச்சரிக்கிறார்கள். 
இதில் ஒரு சவுகரியம்.. ஒரு அரசியல்வாதி ஊழல், கருப்புப் பணம் பற்றி கேள்விகேட்கும் போது “நீ மட்டும் என்ன யோக்கியமா??” என்று திருப்பி கேட்டால் அந்த போராட்டம் அத்தோடு ஒழிந்தது... அன்னா, பாபா, கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இவர்களிடம் இந்த கேள்வியை சத்தம்போட்டு கேட்க முடியாது. (இருந்தாலும் முணுமுணுத்தபடி கேட்கிறார்கள்) இந்த சவுகரியத்துக்காகவே அமைச்சர்கள் அரசியல் வாதிகளை மட்டுமே அரசியல் பேச அழைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

அப்படியானால் அரசியல்வாதிகள் மட்டும்தான் இதை தட்டிக் கேட்க முடியுமா? அவர்களுக்கு மட்டுமே இந்த தகுதி இருப்பதாக அமைச்சர் பெருமக்கள் கருதுகிறார்களா?? வோட்டுப் போட்ட ஒரு சாமானியனுக்கு நம் தேசம் இப்படி இருக்கவேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்று கருத்துக் கூறக் கூட இந்த சுதந்திர நாட்டில் உரிமை இல்லையா??

அரசியலில் இருக்கும் நம் எதிர் கட்சிகள் ஊழல் பற்றியோ, கருப்பு பணம் பற்றியோ உரத்து குரல் கொடுக்க ஏன் தயங்குகின்றன??? இவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதா??  அரசியலில் இறங்கினாலே ஊழல் செய்து கருப்புபணம் சேர்க்கிறார்களா? இதற்காக ஏன் இவர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியவில்லை?? மக்களுக்கு எதிர்கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லையா??

நிறைய கேள்விகள் எழுகின்றன... பதில் தான் சரியாக தெரியவில்லை.  நம் நாட்டின் இப்போதய சாபக்கேடு சரியான எதிர்கட்சிகள் இல்லாததே... தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களும் பெரும்பாலான நேரங்களில் ஆளும் கட்சிகளுக்கு அனுசரித்து நடந்து கொள்கின்றன. இதில் இருக்கும் சில விதி விலக்குகளால்தான் இந்த அளவுக்காவது நமக்கு ஊழல், கருப்பு பணம் பற்றி தெரிய வருகிறது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.

இப்பொழுது உடனடியாக நடக்கவேண்டியது :

1) அன்னா ஹசாரே, கிரண்பேடி, பிரசாந்த் பூசன், சாந்தி பூசன், அப்துல் கலாம், அரவிந்த் கேஜ்ரிவால், பாபா ராம்தேவ், மனித நேய ஆர்வலர்கள் -  இவர்கள் இணைந்து உடனடியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்.

2) நேர்மையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

3) ஒரு புதிய பொறுப்புள்ள எதிர் கட்சியாகவாவது அவர்கள் உருவெடுக்க வேண்டும்.

நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்...
ஆண்டவா.... நல்ல பொறுப்பான எதிர்கட்சி அமைந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் செம்மையாக நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...

Monday, June 6, 2011

அடிமை மட்டுமே வேண்டும் அரசாங்கம்...

ஜூன் 5, ஞாயிறு அன்று அதிகாலையில் பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை போலீசார் அடக்கிய விதம் சற்று நெருடலாகவே இருந்தது. அவர் நல்லவரா கெட்டவரா என்பதை விட, அவர் மீது ஏவி விடப்பட்ட போலீசாரின் வன்முறை தாக்குதல் மோசமானதாக இருந்தது.

இது ”ஊழலற்ற நிர்வாகம்” / “கருப்புப் பணத்தை திரும்ப கொண்டுவருதல்”  பற்றிய நம் நாட்டின் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை -'attitude' எடுத்துக்காட்டியது.

அமைதியான போராட்டம் நடத்தியவர்கள் மீது, நம் தேசத்தின் தலைநகரின் மையத்திலேயே,   மீடியா முன்னிலையிலேயே, இப்படி ஒரு  வன்முறை நடவடிக்கை எடுக்கும் இவர்கள் தம் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், கண்காணாத இடத்தில் இருக்கும் நம் சாதாரண பொதுமக்களின் மற்றும் பழங்குடியினரின் போராட்டத்தின் போது எப்படி நடந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும்போது நடுக்கமாக இருக்கிறது.

இதில் நம் மதிப்பு மிக்க அமைச்சர்கள் கூற்று இன்னும் வேடிக்கையாக இருந்தது. “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்ய வேண்டும்.. அரசியல் பேசக்கூடாது... ” என்று திருவாய் மலர்ந்தருளினர்.

இனிமேல் அரசியல்வாதிகள் தவிர வேறு யாரும் அரசியல் பேசக் கூடாது என்ற தடை உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (இப்போது இதை அமைச்சர்கள் டிவி பேட்டிகளில் சொல்கிறார்கள். நாளை இது ஒரு சட்டமாகவே வரலாம்.)

போராட்டதுக்கு முன் அனுமதி, பொதுக் கூட்டத்துக்கு முன் அனுமதி, உண்ணாவிரத்துக்கு முன் அனுமதி, போராட்டம் நடத்த ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாத இடத்தில் அனுமதி,  முன்னறிவிப்பின்றி அனுமதி ரத்து, நேர்மையான அதிகாரிகளுக்கு தண்டனை, அமைதியாக போராடினாலும் தாக்குதல்.... வெள்ளையர்கள் ஆட்சி செய்தபொழுது இருந்த சட்ட நடைமுறைகள் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையோ என்ற பிரமை எழுகிறது. வெள்ளையர்களுக்குப் பதில் இந்த கேடு கெட்ட ஊழல் அரசியல்வாதிகள் நம்மை ஆள்கிறார்கள். இதுதான் ஒரே வித்தியாசம்.

இவர்களுக்குத் தேவை- இவர்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாத அடிமைகள் மட்டுமே... இதற்கு இவர்கள் நாட்டை ஆள வேண்டியதில்லை. ஆட்டுமந்தையை ஆண்டாலே போதும்.

கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இவங்களுக்கு நல்ல புத்திய குடுத்து தேசத்தை காப்பாத்தணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, April 11, 2011

ஞானமும் இன்றைய அரசியலும் - ### !!!! ????

ஞானத்தைப் பற்றியும் அதை அடையும் வழியில் இருக்கும் தடங்கல்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது இன்றைய அரசியலுக்கும் ஞானத்துக்கும் சில அதிசயமான ஒப்பீடுகள் தோன்றியது. அது பற்றியதுதான் இந்தப் பதிவு :

மனிதனாகிய நாம், வாக்காளர்களாகவும், ஞானம் என்பது ஒரு நல்ல ஆட்சிக்கான அடையாளமாகவும்,  ஞானத்திற்கான நம் முயற்சி வாக்குகளாகவும், நாம் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி ஞானம் என்ற உயர்ந்த விஷயத்தை அடைவதற்குத் தடங்கல்களாக உள்ள சில அமானுஷ்ய சக்திகள்,  பணம், புகழ் போன்றவற்றை கொண்டு திருப்தி அடைந்து ஞானத்தை விட்டு நாம் விலகி விடுவது போலவே, நம் மக்களும் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கும், கையூட்டுகளுக்கும் ஏமாந்து தீயவர்களை அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுத்து நல்ல ஆட்சியை விட்டு விலகிவிடுகிறார்கள். இதனால் தீமையே விளையும். 

எப்படி ஞானம் அடைவது ஒரு மனிதனின் நடத்தையைப் பொருத்ததோ, அதுபோலவே ஒரு நல்ல ஆட்சி அமைவதும் நம்  வாக்காளர்களின் நல்ல நடத்தையைப் பொருத்ததே. அதாவது லஞ்சம், இலவசம் வாங்காமல், அதை நோக்காகக் கொள்ளாமல் வாக்களிக்க முற்பட்டால் நல்லாட்சி நிச்சயம்.

எப்படி ஒருவரின் விதிப்படியே ஞானம் கிடைக்கிறதோ அதுபோலவே, நம் விதிப்படியே நம் அரசாங்கம் அமைகிறது. உண்மையாக இருந்தால் உண்மையாகவும், போலியாக இருந்தால் போலியாகவும். 

இதில் இருக்கும் சூட்சுமம் மிகவும் சுவாராசியமானது.  நம் சமூகத்தின் பொது மனதில் இருக்கும் நல்ல தீய எண்ணங்களின் பாதிப்புதான் நம் வேட்பாளர்களிடம் பிரதிபலிக்கிறது. எனவே சமூகத்தில் நிகழும் நற்சிந்தனை பரவலைப் பொறுத்து நம் வேட்பாளர்களின் சிந்தனை அமைப்பு அமைகிறது. இதையே விதி என்று சொல்கிறோம்.


ஆனால் இந்த கலிகாலத்தில் தீமைகள் வளர்ந்து நன்மைகள் குறைவதைப் பார்க்கும்போது நல்லாட்சி என்பது வெறும் கனவு போலவே தோன்றுகிறது. ஆனாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நற்  சிந்தனைகளும், தனிமனித,  சமூக ஒழுக்கமும் வளர்ந்தால் நல்லாட்சி நிச்சயம் அமையும்.

எனவே நற்சிந்தனை வளர்ப்போம், இலவசங்களை புறந்தள்ளுவோம்,  லஞ்சத்தை மறுப்போம். நல்லாட்சி ஏற்பட உதவுவோம்.


சதுரகிரியாரே சரணம்!!!  சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Monday, March 14, 2011

வலைப்பதிவுகளுக்கு அரசாங்கம் விதிக்கும் புதிய சட்டம்

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை யில் வந்த ஒரு செய்தி பற்றியதே இன்றய பதிவு.

வலைப்பதிவுகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ இருக்கும் ஒரு ச‌ட்ட‌த் திருத்த‌ம் ப‌ற்றிய‌ செய்தியே அது.


அது ப‌ற்றி மேலும் விள‌க்க‌மாக‌ப் ப‌டிக்க‌ கீழ்க் க‌ண்ட‌ சுட்டிக‌ளை சொடுக்க‌வும்.



இவ‌ற்றிலிருந்து நான் புரிந்து கொண்ட‌வை :

1) அர‌சாங்க‌ம் ந‌ம‌து நாட்டில் செய‌ல்ப‌டும் இண்ட‌ர்னெட் ச‌ம்ப‌ந்த‌மாக‌ சேவைக‌ள் த‌ரும் இடைத்த‌ர‌க‌ர்க‌ள்/ ம‌த்திய‌ஸ்த‌ர்க‌ள் என‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை முறைப்ப‌டுத்த‌ ஒரு ச‌ட்ட‌ திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ ஏற்பாடு செய்கிற‌து.

2) இதில் அக‌ஸ்மாத்தாக‌ ப்ளாக்க‌ர் என‌ப்ப‌டும் வ‌லைப்ப‌திவர்க‌ளையும்  சேர்த்துவிட்ட‌து.

3) அதாக‌ப்ப‌ட்ட‌து, பதிவர்களாகிய‌ நாம் செய்ய‌க்கூடாத‌வ‌ற்றை கீழ்க்க‌ண்டவாறு ப‌ட்டிய‌லிட்டுள்ளார்க‌ள்.

 
Article 2) The intermediary shall notify users of computer resource not to use, display, upload, modify, publish, transmit, update, share or store any information that : —

(a) belongs to another person;

(b) is harmful, threatening, abusive, harassing,  blasphemous, objectionable, defamatory, vulgar, obscene, pornographic, paedophilic, libellous, invasive of another’s privacy, hateful, or racially, ethnically or otherwise objectionable, disparaging, relating or encouraging money laundering or gambling, or otherwise unlawful in any manner whatever;

(c) harm minors in any way;

(d) infringes any patent, trademark, copyright or other proprietary rights;

(e) violates any law for the time being in force;

(f) discloses sensitive personal information of other person or to which the user does not have any right to;

(g) causes annoyance or inconvenience or deceives or misleads the addressee about the origin of such messages or communicates any information which is grossly offensive or menacing in nature;

(h) impersonate another person;

(i) contains software viruses or any other computer code, files or programs designed to interrupt, destroy or limit the functionality of any computer resource;

(j) threatens the unity, integrity, defence, security or sovereignty of India, friendly relations with foreign states, or or public order or  causes incitement to the commission of any cognizable offence or prevents investigation of any offence or is insulting any other nation.

ஒரு விஷ‌ய‌த்தை முறைப்ப‌டுத்துவ‌து என்ப‌து வ‌ர‌வேற்க‌த்த‌குந்த‌து என்றாலும், இப்போத‌ய‌ அர‌சிய‌ல் சூழ‌லில், எந்த‌ வித‌மான‌ பொருளாதார ஆதாய‌த்துக்கும் ஆசைப்ப‌டாம‌ல் உள்ள‌தை உள்ள‌ப‌டி கூறிக்கொண்டு இருக்கும் ப‌திவுல‌கிற்கு இந்த‌க் க‌ட்டுப்பாடுக‌ள் ஒரு க‌டிவாள‌மாக‌வே இருக்கும் என்று தோன்றுகிற‌து.

மேலும் ந‌ம் ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் இதைத் த‌வ‌றாக‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சாத்திய‌க்கூறுக‌ள் அதிகமாக‌வே தோன்றுகிற‌து. இதைப் ப‌ய‌ன்ப‌டுத்தி அர‌சாள்ப‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ எழுதுப‌வ‌ர்க்ளை முட‌க்க‌ முய‌ற்சிக‌ள் அதிக‌ம் மேற்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்.

இனிமேல் வ‌லைப்ப‌திவு எழுதுப‌வ‌ர்க‌ள் ஒரு வ‌ழ‌க்குரைஞ‌ரை அம‌ர்த்திக் கொண்டு எழுதுவ‌து ந‌ல்ல‌து என்றே தோன்றுகிற‌து.

 
ம‌ஹாலிங்க‌ம்!!! நீங்க‌தான் இத‌னால் எந்த‌ பிர‌ச்சினையும் ந‌ம் சக வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டாம‌ல் பாதுகாக்க‌ணும்!!!

ஓம் ந‌ம‌சிவாய‌!!! ச‌துர‌கிரி சுந்த‌ர‌ ம‌ஹாலிங்க‌த்துக்கு அரோக‌ரா!!!

நன்றி : Times of India News paper, http://www.cis-india.org/