Tuesday, June 7, 2011

எங்கே எதிர் கட்சிகள் ????

இப்போதெல்லாம் தொடர்ந்து யாராவது ஊழல், கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம், உண்ணாவிரதம், சத்யாகிரகம் என்று அமர்க்களப்படுத்துகின்றனர். 

ஒரு அரசியல் இயக்கமாக சமூக ஆர்வலர்களான இவர்கள் மாற முடியாது என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.  இருந்தாலும் ஒரு ஒப்புக்கு இவர்களை அனுசரித்து நடப்பதுபோல இப்போதைக்கு பாசாங்கு செய்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் நாங்கள் அரசியல் செய்யவில்லை என்று நூல் பிடித்தாற்போல் சொல்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் செய்யாமல் இதை எல்லாம் சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதே ஒரு நேர்மையான பதிலாக இருக்கும்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் இதில் இறங்கி மாட்டிக் கொண்டார். பாபா அரசியல் பேசப்போவது முன் கூட்டியே தெரியாதது போல நம் அரசு நடந்து கொள்வது விந்தையிலும் விந்தை.  பெரிய ஆச்சரியம் இதில் என்னவென்றால் நம் அமைச்சர்கள் “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்யவேண்டும். அரசியல் பேசக்கூடாது” என்று எச்சரிக்கிறார்கள். 
இதில் ஒரு சவுகரியம்.. ஒரு அரசியல்வாதி ஊழல், கருப்புப் பணம் பற்றி கேள்விகேட்கும் போது “நீ மட்டும் என்ன யோக்கியமா??” என்று திருப்பி கேட்டால் அந்த போராட்டம் அத்தோடு ஒழிந்தது... அன்னா, பாபா, கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இவர்களிடம் இந்த கேள்வியை சத்தம்போட்டு கேட்க முடியாது. (இருந்தாலும் முணுமுணுத்தபடி கேட்கிறார்கள்) இந்த சவுகரியத்துக்காகவே அமைச்சர்கள் அரசியல் வாதிகளை மட்டுமே அரசியல் பேச அழைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

அப்படியானால் அரசியல்வாதிகள் மட்டும்தான் இதை தட்டிக் கேட்க முடியுமா? அவர்களுக்கு மட்டுமே இந்த தகுதி இருப்பதாக அமைச்சர் பெருமக்கள் கருதுகிறார்களா?? வோட்டுப் போட்ட ஒரு சாமானியனுக்கு நம் தேசம் இப்படி இருக்கவேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்று கருத்துக் கூறக் கூட இந்த சுதந்திர நாட்டில் உரிமை இல்லையா??

அரசியலில் இருக்கும் நம் எதிர் கட்சிகள் ஊழல் பற்றியோ, கருப்பு பணம் பற்றியோ உரத்து குரல் கொடுக்க ஏன் தயங்குகின்றன??? இவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதா??  அரசியலில் இறங்கினாலே ஊழல் செய்து கருப்புபணம் சேர்க்கிறார்களா? இதற்காக ஏன் இவர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியவில்லை?? மக்களுக்கு எதிர்கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லையா??

நிறைய கேள்விகள் எழுகின்றன... பதில் தான் சரியாக தெரியவில்லை.  நம் நாட்டின் இப்போதய சாபக்கேடு சரியான எதிர்கட்சிகள் இல்லாததே... தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களும் பெரும்பாலான நேரங்களில் ஆளும் கட்சிகளுக்கு அனுசரித்து நடந்து கொள்கின்றன. இதில் இருக்கும் சில விதி விலக்குகளால்தான் இந்த அளவுக்காவது நமக்கு ஊழல், கருப்பு பணம் பற்றி தெரிய வருகிறது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.

இப்பொழுது உடனடியாக நடக்கவேண்டியது :

1) அன்னா ஹசாரே, கிரண்பேடி, பிரசாந்த் பூசன், சாந்தி பூசன், அப்துல் கலாம், அரவிந்த் கேஜ்ரிவால், பாபா ராம்தேவ், மனித நேய ஆர்வலர்கள் -  இவர்கள் இணைந்து உடனடியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்.

2) நேர்மையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

3) ஒரு புதிய பொறுப்புள்ள எதிர் கட்சியாகவாவது அவர்கள் உருவெடுக்க வேண்டும்.

நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்...
ஆண்டவா.... நல்ல பொறுப்பான எதிர்கட்சி அமைந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் செம்மையாக நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...

7 comments:

Bala said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

தங்களின் ஆதங்கம் மிகவும் சரியானது . ஆன்மிகவாதிகள் மற்றும் யோகியர்கள் அரசியலைப்பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகள் அவர்களின் ஓட்டுகளை மட்டும் வெட்கமின்றி கேட்கிறார்கள் இல்லையென்றால் அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்கிறார்கள்.
ஒட்டு போடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு. கூடிய விரைவில் சித்தர்களின் ஆட்சி வரும் என்று நம்புவோம்.


http://gurumuni.blogspot.com/

என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

அன்புள்ள பாலா, ஆன்மீக ஆட்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் நாம் அனைவருமே இருக்கிறோம்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

முனைவர் இரா.குணசீலன் said...

கறுப்புப் பணம், ஊழல் தொடர்பான செய்திகளே அதிகமாக இருப்பதால் இனிமேல் 8-8.30 வரை ஊழல் செய்திகளும் 8.30 முதல் 9 மணிவரை இதர செய்திகளும் சொல்லப்போகிறார்களாம்

தினமணி கேலிச்சித்திரம் சொல்கிறது நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

உணவில் மாற்றம்
உடையில் மாற்றம்
பண்பாட்டில் மாற்றம்

ஆனால் அரசியலில் மட்டும்......

Sankar Gurusamy said...

திரு முனைவர்.இரா.குணசீலன், நிலமை அப்படித்தான் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே நிரந்தரம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.. எல்லாவற்றிலும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

shanmugavel said...

அருமையான கருத்துக்கள் .சங்கர் .பகிர்வுக்கு நன்றி

Sankar Gurusamy said...

ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..