Tuesday, June 14, 2011

ஊழலற்ற நிர்வாகமே உடனடி தேவை....

இப்போது கருப்பு பணத்தை கட்டுப்படுத்த நமது வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாக நம் அரசு நேற்று அறிவித்துள்ளது.

இது பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது நம் நாட்டில் இருக்கும் சட்டங்களை எப்படியெல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள்... அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எப்படியெல்லாம் அதை நீர்த்துபோக செய்கிறார்கள்.. என்பதை பற்றியும், உண்மையில் நம் நாட்டில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பதைப் பற்றியுமான பதிவு...


எந்த ஒரு நாட்டிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டும். அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். அதை பாரபட்சமின்றி அமல் படுத்த வேண்டும். சாமானியனுக்கு ஒரு விதமாகவும், பணக்காரர்கள், அரசியல் தரகர்கள், அரசியல்வாதிகளுக்கு வேறு விதமாகவும் இருக்க கூடாது.

நம் நாட்டில் இப்போது இருக்கக்கூடிய தலையாய பிரச்சினை, சட்டத்தை அமல் படுத்த வேண்டிய நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு இருக்கும் நிர்பந்தங்களும், அனைவரையும் சமமாக பாவிக்காமல் இருக்கும் ஒரு கறை படிந்த நிர்வாக அமைப்புமே ஆகும்.

இவர்கள் இருக்கும் சட்டங்களை சரியாக அமல் செய்துவிட்டார்களா??? இதை சரி செய்வதற்கு யாரும் முயற்சி செய்வதுபோலவே தெரியவில்லை. புதிய சட்டங்கள் இயற்றவும், இருக்கும் சட்டங்களை திருத்தவும் கிளம்பி விட்டார்கள்.

புதிய, திருத்திய சட்டங்களையும் இவர்கள் சரியாக அமல் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்??? இதை யார் கண்காணிப்பது???

சில ஊழல் அதிகாரிகள் ஒரு நல்ல சட்டத்தை  அமல் படுத்த கூடாது என்று நினைத்தால், சில அப்பாவிகளை அதில் சிக்க வைத்து, படாத பாடு படுத்தி, ஒரு குழப்பமான சூழலை விளைவித்து அந்த சட்டத்தை அமல் படுத்துவதையே நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளிவிடுகிறார்கள். இதில் பலியாடான அந்த அப்பாவிகளுக்கு கடைசியில் நீதி கிடைப்பதற்கு வருடக்கணக்காகிறது.  இந்த மாதிரியான சூழலை மாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது???

இந்த நிலை புதிய ஜன் லோக்பால் சட்டத்துக்கும், மாற்றப்பட்ட வருமான வரி சட்டத்துக்கும் வரும் என்றே தோன்றுகிறது.


இதை மாற்ற என்ன செய்யலாம் ???

1) நம் அரசாங்கம் மக்களுக்கானது என்ற நம்பிக்கையை மீண்டும் மக்களிடம் விதைக்க வேண்டும்.

2)  அரசு நிர்வாகம் அனைவருக்கும் சமமாக லஞ்ச ஊழல் இல்லாமல் மாற்றப்பட்டாலே இந்த நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கும்...

3) அரசு நிர்வாகத்தை கணிணி மயமாக்குதல் இந்த லஞ்ச ஊழலை குறைக்க முதல் படி ஆகும்.

4)  நீதி பரிபாலனம் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நடைபெற வேண்டும். இதற்கு அவ்வப்போது பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நீதித்துறை நிர்வாகத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நீதிபதி காலி இடங்களை உடனடியாக நேர்மையானவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

5) பாரபட்சம் காட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தாலே, பலர் திருந்த ஆரம்பிப்பர்.

6) சட்ட விரோதமாக சேர்க்கும் சொத்துகளை பறிமுதல் செய்து அவ்வாறு செய்தவர்களுக்கு குடும்பத்துடன் பாஸ்போர்ட்டை முடக்கவேண்டும்.


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் நம் நாட்டுல ஒரு லஞ்ச ஊழலற்ற அரசு நிர்வாகம் அமைய அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....

7 comments:

Sankar Gurusamy said...

திரு சரோ, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

சட்டம் தன் கடமையை செய்யும் !!!!!!!

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், சட்டம் கடமையை சரியாக செய்யவேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் அவா...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

shanmugavel said...

சட்டம் வரட்டும் சங்கர் .அமல்படுத்துவதற்கு நீதி அமைப்புகள் இருக்கின்றன.நல்ல பகிர்வு.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், பார்க்கலாம். இப்போது இருக்கும் சூழலில், அமல் படுத்துவது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என்று தோன்றுகிறது,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தங்களது கருத்துகள் மிக அருமை தோழரே..

ஆனால் இன்றைய காலச் சூழலில் சட்டம் போட்டெல்லாம் யாரையும் திருத்த முடியும் என்று எமக்குத் தோணவில்லை..

சட்டத்தை மீறுவதே அந்த சட்டத்தை வரையறுப்பவர்கள் தான் என்பது என் கருத்து..

ஏற்கனவே நாம் கேட்டுப் பழகிப் போன ஒரு பாடலை
இங்கு நினைவூட்டுகிறேன்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது..

அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது..

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

என்பதே அது..

ஆக சாமானிய கவுன்சிலரிலிருந்து - உயர்மட்ட ஜனாதிபதி வரையிலுமான ஒவ்வொருவரும் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் பயப்பட ஆரம்பித்தால் மட்டுமே ஊழலற்ற நிர்வாகம் சாத்தியம் என்பது எமது கருத்து..

பதிவிற்கு வாழ்த்துக்கள்...நன்றி..

Sankar Gurusamy said...

திரு சிவ.சி.மா. ஜானகிராமன்,

//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..//

ஆனாலும் திருடன் தண்டிக்கப்படவேண்டியவனே..

இன்று தண்டிக்கும் பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் பாரபட்சமாக நடக்கிறார்கள் அல்லது அவர்கள் அவ்வாறு பாரபட்சம்காட்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

திருடனை தண்டிக்கும் நிர்வாகம் சீர் செய்யப்படாமல் புதிய சட்டங்கள் என்ன மாற்றம் தரும் என்ற சிந்தனையை தூண்டுவதே இந்த பதிவு...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...