Wednesday, June 8, 2011

மொழியும், குழந்தைகளும் ....

போன வாரம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு குடும்பத்துடன் ரயிலில் வந்து கொண்டிருந்தேன். எங்களுக்கு அருகில் ஒரு பெங்காலி குடும்பம் இருந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர் - வயது 7 , 5.

அந்த குழந்தைகள் என் மகனுடன்(வயது 4) விளையாட ஆரம்பித்தார்கள்.  சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. ஏதேதோ பேசினார்கள். எப்படியெல்லாமோ விளையாடினார்கள். கல கல என்று ஒரு சிரிப்பு மயமாக இருந்த்து.

இதில் முக்கியமான விசயம் என் மகனுக்கு பெங்காலி ஒரு வரி கூட தெரியாது.. எனக்கும் தான். அவர்களுக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியாது. என் மகன் படிப்பதும் ஒரு சாதாரண பள்ளி வகுப்பில்தான். எனவே பெரிய ஆங்கில, இந்தி பரிச்சயமும் இல்லை. சில ஆங்கில வார்த்தைகள், சில இந்தி வார்த்தைகள் என என் மகன் சமாளித்துக் கொண்டிருந்தான்.

கடைசியில் என்னிடம் வந்து அவர்கள் என்ன கூறினார்கள் என்று கேட்டான். நானும் எனக்கு தெரியாது என்று கூறி, அவனிடம், ஒன்றும் புரியாமல் என்ன விளையாண்டாய் என்று கேட்டேன்.

அதற்கு அவன் ஒரே ஒரு புன் சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் அவர்களுடன் விளையாட சென்று விட்டான். மீண்டும் அவர்களுக்குள் கல கல சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.


மொழி புரியாவிட்டாலும், குழந்தைகளுக்குள் ஏதோ ஒரு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் உலகம் மிக சுதந்திரமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அதில் இடம் இருக்கிறது. எது புரிகிறதோ இல்லையோ மனதின் மகிழ்ச்சியை சரியாக புரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொண்டும் விளையாடுகிறார்கள்.

அன்பும் மகிழ்ச்சியும் ததும்பும் பொழுது மொழி அமைதியாகி விடுகிறதை கண் கூடாக காண முடிந்தது.

மொழி தெரிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த விளையாட்டு இருக்கும்போலவும் தோன்றியது.

இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதைவிட அவர்கள் விளையாட்டை ரசிப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து அதை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தேன்.


இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த கடவுளுக்கு நன்றி..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.

10 comments:

மதுரை சரவணன் said...

மொழி நம்மை போன்ற வளர்ச்சியடைந்தவர்களுக்கு தான் தேவையாக இருக்கிறது.. குழந்தைகளுக்கு எளிதில் கமினிகேட் செய்யும் திறன் பெற்றுள்ளனர். அதாவது தொடர்பு கொள்ள நமக்கு மொழி மட்டுமே தேவை என்ற எண்ணம் உள்ளதால் வேறு வழியில் முயற்சிப்பது இல்லை. ஆனால் குழந்தைகள் அப்படி யில்லை எல்லாவழிகளிலும் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். வாழ்த்துக்கள். இரயில் பயணம் குறித்த என் இடுகையை பார்க்கவும்.

Sankar Gurusamy said...

திரு மதுரை சரவணன், இது மிகவும் நுட்பமாக ஆராயப்படவேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

உண்மைதான் தோழரே..

உண்மையான அன்பிற்கு மொழி தேவையில்லை..
சைகையே போதும்..

ஆதி காலத்தில் மனிதன் அப்படித்தான் வாழ்ந்தான் என்பதும் சைகையிலேயே அவன் தனது அன்பை பரிமாறிக்கொண்டான் என்பதும் வரலாற்று உண்மைகள் அல்லவா ?

இறைவனும் மன வாக்கிற்கு அப்பாற்பட்டவனல்லவா ?
எனவே அவன் எல்லா மொழிக்கும் நாயகன்..

நல்ல செய்தி தோழரே..
மேலும் மொழி தொடர்பாக எமது சிவயசிவ - வில் வெளியிட்ட ஒரு செய்தியை ஓய்விருக்கும்போது படித்துப் பாருங்கள்...

http://sivaayasivaa.blogspot.com/2011/03/blog-post.html

நன்றி..

Bala said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை இந்த நிகழ்வு ஒன்றே உணர்த்துகிறது.



குணம் என்பது இங்கு மொழி என்று எடுத்துகொள்ளலாம் .



http://gurumuni.blogspot.com/

என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களுக்கு, தங்கள் வட மொழி தமிழ் மொழி குறித்த கட்டுரை அருமை.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

Sankar Gurusamy said...

அன்புள்ள பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம்...

தோழரே..

தங்களுடைய அருமையான பதில்கள் இடம்பெற்ற
அனுபவஜோதிடம் - தில்லு துரை நெம். 1 சங்கர் குருசாமி

பதிவை அனுபவஜோதிடத்தில் படித்தேன்..

அருமையாக பதில் தந்திருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்..

கேள்வி கேட்ட முருகேசன் சாருக்கும்..
நன்றி..


மேலும் அடியவனது " சிவயசிவ " வலைத்தளத்தையும் + எம்மையும் தங்களுடைய பிடித்த பதிவர் + வலைத்தளம் பட்டியலில் வைத்திருப்பதற்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்..

நன்றி சங்கர் குருசாமி அவர்களே..

Sankar Gurusamy said...

திரு சிவ.சி.மா. ஜானகிராமன், இது நம்மை சரியாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. அதனாலேயே உடனடியாக எனது பதில்களை அனுப்பினேன். தாங்களும் அனுப்பலாமே...

நன்றி..

Chittoor Murugesan said...

//மொழி தெரிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த விளையாட்டு இருக்கும்போலவும் தோன்றியது. //

இல்லிங்க மொழி தெரியாததே அந்த மகிழ்ச்சிக்கு காரணம்னு நான் நினைக்கிறேன்.

மொழி தெரிஞ்சிருந்தா கொஞ்ச நாழியில அந்த கம்பார்ட்மென்ட் காந்தி பவன் ஆகியிருக்கும்.

நிற்க .தில்லு துரைகளுக்கான கேள்விகளை பிரஸ்தாபித்த அன்புள்ளங்களுக்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு முருகேசன், தாங்கள் கூறுவதுபோலவும் இருக்கலாம்.

தில்லு துரைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த உங்களுக்குதான் நாங்கள் நன்றி சொல்லவேண்டும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...