Showing posts with label ஊழல். அரசியல். Show all posts
Showing posts with label ஊழல். அரசியல். Show all posts

Saturday, August 20, 2011

லஞ்ச ஊழல் ஒழிப்பு.. எவ்வாறு சாத்தியம்..

இப்போது திரு அன்னா ஹசாரே ஜன் லோக்பால் வர உண்ணா விரதம் இருக்கிறார். என்னைப் போல் நிறைய பேர், இந்த சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, லஞ்ச  ஊழல் விவகாரத்தில் தம் எதிர்ப்பை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்து ஆதரிக்க வைத்துவிட்டார்கள்.

இன்று லஞ்சமும் ஊழலும் நீக்கமற நம் தேசம் முழுதும் உள்ள அரசு எந்திரங்களில் இருக்கிறது. இதை ஒரு சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியும் எனில் இந்த அளவுக்கு லஞ்ச ஊழல் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் ஊழல் ஒழிப்பு என்பது எப்படி சாத்தியப்படும்? குறைந்த பட்சம் மக்களை நேரடியாக பாதிக்கும் கீழ்மட்ட லஞ்ச ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?  என் சிந்தனையின் பல நாள் கனவு....

ஒரு பெரிய பூசணிக்காயை எப்போதும் முழுமையாக அப்படியே சாப்பிட முடியாது.. ஆனால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சமைத்தால் சுலபமாக சாப்பிடலாம்.

இதுபோலவே, லஞ்ச ஊழல் ஒழிப்பும் நம் தேசத்தில் இருக்கும் ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சிறுது சிறிதாக நாடு முழுவதும் பரவ வேண்டும்.

1) முதலில் ஒரு சில சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற தொகுதிகளில் சில நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏரியா கவுன்சிலரில் இருந்து பாராளுமன்ற  உறுப்பினர் வரை. இதை செய்வது கடினம் என்றாலும் குறைந்தது 2-3 தொகுதிகளிலாவது நம் பிரபல சமூக ஆர்வலர்கள் தேர்தல் நேரத்தில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தால் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

2) அவர்களுக்கு உதவ முழு நேரப்பணியாளர்களாக ஒரு ஊழல் ஒழிப்பு படை ஏற்படுத்தப்பட வேண்டும். இது முடிந்த அளவுக்கு நேர்மையும் சமூக ஆர்வமும் இருப்பவர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சமூக அர்ப்பணிப்பு உள்ள இளைஞர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும்.  மேலும் ஒவ்வொரு குடியிருப்பிலும் இருக்கும் வட்டார நல சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு செயல் பொறுப்பில் நேர்மையானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படையாக செயல் பட வேண்டும்.

3) இவர்களில் தேவையானவர்களுக்கு சம்பளம் அந்த அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபார, தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

4) இவர்களின் முழு நேரப் பணி, லஞ்சம் ஊழல், அதிகார துஷ்பிரயோகம்  நடைபெறும் இடங்களில் கண் காணிப்பு செய்வது மற்றும் பொது மக்களுக்கு ஆதரவாக உதவியாக செயல்படுவது. உதாரணம் - தாலுகா அலுவலகங்கள், வணிக வரி அலுவலகங்கள், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள், காவல் நிலையங்கள், வட்டார வழங்கல் அலுவலகங்கள், நியாய விலை கடைகள், கூட்டுறவு கொள்முதல் நிலையங்கள், வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் மற்றும் பல அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்கள். 

5)  இங்கு நடைபெறும் பணிகளில் ஏற்படும் தொய்வுகளுக்கு இந்த மக்கள் படையினர் நேரடியாக தலையிட்டு சமாதான முறையில் நேர்மையான பணி நடைபெற ஏற்பாடு செய்யலாம். முடியாத பட்சத்தில், அந்த ஏரியாவில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான மக்கள் பிரதிநிதியை அழைத்து அவர் மூலம் தீர்வு காணலாம். தேவைப்பட்டால் மேலும் ஊழல் ஒழிப்பு படையினரைத்திரட்டி ஒரு போராட்டம் செய்யலாம்.

6) ஒவ்வொரு மாதமும் இந்த படையினர் சிறு சிறு குழுக்களாக சந்தித்து தாங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கலாம். இதில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யலாம். இந்த கலந்துரையாடலில் லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரியும், சட்ட ஒழுங்கு காவல் உயர் அதிகாரியும் கலந்துகொண்டு அவர்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

7) பொது மக்கள் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஏற்படும் தாமதங்களுக்கு இந்த படையினரை அணுகி புகார் செய்யலாம். இந்த படையினர் சம்பந்தப்பட்ட துறையினருடன் அது பற்றி மேல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

8) இந்த நடைமுறையில் பிடிபடும் லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

9) இந்த நடைமுறையில் தவறு செய்ய முற்படும் பொது மக்களுக்கும் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் ஓரளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள முன்வருவார்கள்.

10) உள்ளூர் கட்டுப்பாடுகள் சில நிறைவேற்றி அதை முழுமையாக அனைவரும் கடைபிடிக்க செய்ய வேண்டும்.

11) மக்கள் நேர்மையையும் ஒழுங்கையும் வெளிப்படையாக காண்பிக்கும்போது தமக்குள் ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டு அது நம் சமூகத்தில் பிரதிபலிக்கும். (இதைத்தான் நம் முன்னோர் அந்த காலத்தில் ஊர்கட்டுப்பாடு என ஒரு கொள்கை வைத்திருந்தனர். ஆனால் அதன் நோக்கம் பிற்காலத்தில் சக மனிதனை நசுக்குவதில் சென்று முடிந்து விட்டது)

12) இந்த முறைகள் மூலம் அந்த ஒரு சில தொகுதிகளில் ஓரளவுக்கு மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

13) இதே தொகுதிகளில் மாற்றம் விரும்பும் பிற தொகுதியினரும் கலந்துகொண்டு பயிற்சி எடுத்து தமது தொகுதிகளில் செயல் படுத்த முற்பட வேண்டும்.

14) இந்த சங்கிலித்தொடர் நடவடிக்கை முதலில் ஒரு மாநிலத்திலும் பிறகு அணடை மாநிலங்களிலும் பிறகு தேசம் முழுவதும் பரவ ஒரு வாய்ப்பு இருக்கிறது.

15) இதற்கு குறைந்தது சில பத்தாண்டுகள் தேவைப்படும். ஒரு தலைமுறையில் நாம் சிரமப்பட்டு இதை செய்துவிட்டால் அடுத்து வரும் தலைமுறையினர் ஓரளவுக்கு இந்த லஞ்ச ஊழலில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பு வரும். எனக்கு நிச்சயம் இதில் நம்பிக்கை இருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்போம்.. லஞ்ச ஊழலை ஒழிப்போம்...


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இந்த லஞ்ச ஊழல் அரக்கன் ஒழிந்து நம் தேசம் சுபிட்சமாக அருள் செய்யணும்..


சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி.... ஹர ஹர மஹாதேவா சரணம்....

Monday, August 1, 2011

திருடர்களின் சொர்க்க பூமி

இன்று Times of India வெப் சைட்டில் இருந்த ஒரு செய்தி : ஆஸ்திரேலியாவில் ஒரு ரேடியோ விருந்தினர் இந்தியாவைப்பற்றியும் கங்கையைப் பற்றியும் அவதூறாகப் பேசியதற்கு அனைவரும் எதிர்ப்பு, கண்டனம் தெரிவிக்கும் ஒரு செய்திதான் அது. அதன் சுட்டி கீழே :

Australian radio host calls India 'shit hole', Ganga a 'junkyard'


உண்மையில் ஒரு வெளிநாட்டவர் செய்ததை ஒரு தேசப்பற்று (????) உணர்வுடன் நானும் கண்டிக்கும் அதேவேளையில் இது பற்றி ஒரு நேர்மையான கேள்வியை வைக்கவும் வேண்டி இருக்கிறது...

இது பொய்யா? உண்மையா? நம் தேசம் உண்மையில் திருடர்களின் சொர்க்கம். என்ன ஒன்று சாதா திருடர்களுக்குத்தான் போலீஸ் தண்டனை கிடைக்கும். பெரிய திருடர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, சட்ட பாதுகாப்பு எல்லாமே கிடைக்கும். என்ன ஒன்று??? அவர்களையும் இந்த திருட்டில் பங்கு கொள்ள வைக்க வேண்டும். அவ்வளவுதான். இதற்கு பல உதாரணங்கள் .

1) பங்கு மார்கெட்டில் தில்லு முல்லு செய்யும் புத்திசாலி தரகர்கள் - ஹர்சத் மேத்தா போன்றோர்

2) போலி பத்திரம் தயாரித்து அதை உண்மையானதுபோல MBA பட்டதாரிகளைக் கொண்டு பெரிய கம்பெனிகளுக்கு மார்க்கெட்டிங்க் செய்தவர்கள் - தெல்கி

3) அரசியல் தொழிலில் ஊழல் செய்பவர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் - ஹசன் அலி

4) ஊழல் அரசியல் தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் - உதாரணம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்

5) அரசியல் தொழில் செய்பவர்களுடைய ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கும் பெரிய அதிகாரிகள்.

6) திடீரென்று பணக்காரர்களாகும் கணக்குக் காட்ட தேவை இல்லாத கட்சிக்காரர்கள்

7) விஷம் போல உயரும் விலைவாசிக்குக் காரணமாக இருக்கும் பதுக்கல்காரர்கள்

8) கங்கையை மாசு படுத்தும் குவாரி முதலாளிகள் - (இவர்கள் பற்றி முழுமையாக தெரிந்தும் இவர்களை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட சுவாமி நிகமானந்த் பரிதாபத்துக்குறியவர்)

9) கங்கையில் கலக்கும் பல மாசுக் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளின் முதலாளிகள்.


உண்மையில் என்னால் முழுமையாக பட்டியல் இட முடியவில்லை. 

இவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?? பிடி படுபதே சாதனையாக இருக்கும்போது, தண்டனை தருவது என்பது குதிரைக் கொம்புதான்.

இப்படிப்பட்ட சூழலில் திருடர்களின் சொர்க்க பூமியாக திகழும் பாரதத்தில் கங்கையும் உண்மையில் சாக்கடையாக மாறத்தொடங்கிவிட்டது.

இப்போது நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்அவர் சொன்னது உண்மையா அல்லது பொய்யா??? எனக்கு சத்தம்போட்டு சொல்ல கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது...


கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் என் தேசத்தைக் காப்பாத்தணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...

Friday, July 29, 2011

ஊழலை ஒழிக்க விரும்பாத அரசு.....

நேற்று அரசு தயாரித்த லோக்பால் மசோதாவை நமது அமைச்சர்கள் குழு அங்கீகரித்ததாக செய்தி வந்தது. திரு அரவிந்த் கேஜ்ரிவால் சொன்னதுபோல இது ஒரு லோக்பால் இல்லை.. ஜோக்பால். இதன் தொடர்ச்சியாக திரு அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்..

உண்மையில் நம் அரசிற்கு ஊழலை ஒழிக்கும் நோக்கத்தைவிட ஊழலை ஒளிக்கும் நோக்கம்தான் அதிகம் இருக்கிறது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இதில் கட்சி பாகுபாடு இல்லாமல் ஆளும் கட்சியாக வரும் எல்லா கட்சிகளும் ஊழலில் திளைப்பது வருத்தம் தரக்கூடியதாகவே இருக்கிறது.

இது ஒரு மிக மோசமான சூழலை ஏற்படுத்தும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கை போய்விடும். சர்வாதிகாரமும் நக்சலிசமும் மீண்டும் தலை தூக்க இது ஒரு மூல காரணமாக ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் வெறும் வட்டி விகிதங்களை அதிகப்படுத்தி நடுத்தர மக்களை வதைக்கிறது. விலை வாசிகள் குறைய அரசு மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் நடப்பதாகவே தெரியவில்லை.

நம் நாட்டில் உண்மையில் சில பணக்காரர்களைத்தவிர அனைவருமே ஏழைகள்தான். இன்றைய விலைவாசியில் இதுதான் நிதர்சனம்.

ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இது புரிய வாய்ப்பில்லை.

இந்த நிலையில் திரு அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தை நம் அரசியல் வாதிக் குஞ்சுகள எப்படி கையாள்வார்கள் என்பது தெரிந்ததே. அதற்கு தயாராகவே அவர்களும் இருப்பதாக தெரிகிறது.

இதில் எனது ஆலோசனை எல்லாம், திரு அன்னா ஹசாரே, திரு அரவிந்த் கேஜ்ரிவால், திருமதி கிரண்பேடி இவர்கள் இப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை விட்டு பேசாமல் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு நல்லவர்களை பாராளுமன்றத்துக்கு /சட்டமன்றங்களுக்கு / ஊராட்சி,நகராட்சி மன்றங்களுக்கு அனுப்ப முயற்சி செய்யலாம். இதில் நிறைய இளைஞர்களும், திரு அப்துல்கலாம் போன்ற நேர்மையாளர்களும் பங்கு கொள்வார்கள் என்பது நிச்சயம். செய்வார்களா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்..

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் இதுக்கு ஒரு நல்ல வழி காட்டணும்..

சதுரகிரி வாழ் சுந்தரனே போற்றி... ஹர ஹர சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...