Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Tuesday, November 15, 2011

லஞ்சத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா?

இன்றைய சூழலில் லஞ்சம் என்பது பரவலாக காணப்படுகிறது. பிறப்பு  / இறப்பு சான்றிதழ் வாங்க, ரேஷன் அட்டை வாங்க / மாற்ற, சாதி சான்றிதழ் வாங்க, சில அரசு அனுமதிகள் வாங்க, மற்றும் பல சந்தர்ப்பங்களில் லஞ்சம் என்பது நீக்கமற நிறைந்துவிட்டது.  சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் இடைத்தரகர்கள் மூலமும் இது வாங்கப்படுகிறது. 

லஞ்சமே கொடுக்காமல் ஒரு மனிதன் நம் தேசத்தில் வாழ முடிந்தால் உண்மையில் அவர் ஒரு மிகப்பெரிய லட்சியவாதிதான். ஆனால் இதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை நினைத்து என்னைப் போன்ற பலருக்கு பயமாக இருக்கிறது.

லஞ்சம் எப்போதெல்லாம் கொடுக்கப்படுகிறது ?

1) தங்களுக்கு நேர்மையாக ஆகவேண்டிய காரியம் தாமதமில்லாமல் குறித்த நேரத்தில் ஆவதற்கு

2) அதே காரியம் குறித்த நேரத்துக்கு முன்பாகவே சற்று விரைவாக ஆவதற்கு

3) சட்ட விரோதமாக சில காரியங்கள் செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு.

4) சில அதிகாரிகளின் பேராசையால அலைக்களிக்கப்படாமல் இருப்பதற்கு அல்லது அலைக்களிக்கப்பட்டு லஞ்சம் தர தூண்டுவது 

இவற்றில் 2 வது காரணத்துக்கு லஞ்சம் கொடுப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் / தனி மனிதர்கள் விரும்புகின்றனர்.  இவ்வாறு காரியம் ஆகிவிடாதா என்ற நப்பாசையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர்.

நான் பார்த்தவரை, 4 வது காரணம்தான் லஞ்சம் வாங்கும் உத்தியாக பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. காரியம் ஆவதற்காக பலரை ”இன்றுபோய் நாளை வா” பாணியில் அலைக்களிப்பது சர்வ சாதாரணமாக நமது அரசு அலுவலங்களில் நடைபெறுகிறது. மேலும் பொறுப்பாக பதில் சொல்லும் அதிகாரிகளும் மிகக் குறைவே.

இந்த நிலையில் போராட மனமும் நேரமும் இல்லாத பலர் லஞ்சம் கொடுத்துதான் இன்றும் காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் (கொண்டிருக்கிறோம்). 

இவ்வாறு லஞ்சம் கொடுப்பதும் குற்றமே எனினும் கொடுக்காமல் கஷ்டப்படுவதைவிட கொடுத்து சற்று நிம்மதியாக இருக்கலாமே என்ற எண்ணம்தான் காரணம்.

இந்த சூழ்நிலையில் நேற்றைய செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி - இந்த லஞ்சத்தை சட்டப்பூர்வமாக ஆக்கிவிடவேண்டும் என்ற வேண்டுகொள் நம் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வந்திருக்கிறது. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்கபோல இருக்கு. அதன் சுட்டி கீழே :

'Payment of Rs 5-10k speed money can be legitimised'



பொதுஜனமாகிய நாம் கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத நம் அரசு இவர்கள் சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள். 

ஆனால் இந்த விசயத்தில்  லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கினால் இதற்கு மேலும் யார் லஞ்சம் தருவார்கள் என்றுதான்  பெரும்பாலான அதிகாரிகள் அலைவார்கள். எனவே நம் அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரிக்கத்தான் செய்ய வேண்டும்.

ஆனால் நம் நாடு ஜனநாயக நாடு . என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும். என்ன நடந்தாலும் நாம்தான் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சங்குதான். போன பதிவு அந்த சங்கொலியின் ஒரு எதிரொலிதான். எல்லாம் விதி..


கடவுளே மஹாலிங்கம், இந்த லஞ்சம் இல்லாமல் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஏதாவது செஞ்சு அதை ஒழிச்சுக் கட்ட உங்களாலதான் முடியும். தயவு செய்து மனசு வையுங்க.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Tuesday, September 6, 2011

குழந்தைகளைக் கொல்லும் அரசு மருத்துவமனைகள்....

இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் இறந்தது ஒரு சிறு செய்தியாக வந்தது. இன்று வேறு செய்திகளின் சுழலில் அடித்து செல்லப்பட்டு விட்டது...

Andhra infant deaths: hospital ill equipped, says govt

இது பற்றி கருத்து கூறிய ஒரு ஆந்திர அமைச்சர் இது கடவுளின் செயல் என கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் சுமார் 18 (இறுதி எண்ணிகை 26) குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்தது பெரிய செய்தியாகி பிறகு அடங்கி விட்டது.

 இதே மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு குழந்தை எறும்புகள் கடித்து அரசு மருத்துவமனையில் இறந்த செய்தி நெஞ்சை நடுங்கச்செய்தது.

'Ant bite' death: Body of newborn exhumed

இந்த குழந்தையை இன்குபேட்டரில் வைக்கும்போது அங்கு இருந்த எறும்புகளைப் பார்த்த குழந்தையின் உறவினர் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியபோது அது சாதாரணமானதுதான் என பதிலுரைத்ததாகவும் செய்தியில் உள்ளது.

இதுதான் நம் தேசத்தின் அரசு மருத்துவமனைகளின் லட்சணம். இது ஏதோ பிற மாநிலங்களில்தான் இப்படி என எண்ண வேண்டாம். நம் தாய்த் தமிழகத்திலும் இதே நிலைதான்.. அதுவும் குழந்தைகளின் பராமரிப்பில் இருக்கும் அலட்சியம் அதிர வைக்கிறது.

நம் அரசாங்கங்கள் நம் மக்களுக்கு டீவி, கிரைண்டர், லேப்டாப், மிக்சி இலவசமாக வழங்குவதற்கு பதிலாக இப்படிப்பட்ட  அரசு மருத்துவமனைகளை சிறப்பாக பராமரித்து நல்ல சேவை வழங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். இப்போது  அங்கும் குழந்தை பிறந்தால், ஆபரேசன் செய்தால், மருத்துவமனை  ஊழியர்களையும் தனியாக “கவனிக்க” வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இதை அந்த தனியார் மருத்துவமனைகளும் ஊக்குவிக்கின்றன. இங்கு அனைத்து ஊழியர்களுக்கும் மோசமான சம்பளம்தான் தருகிறார்கள்.

வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகிறார்கள். ஸ்டான்லி போன்ற அரசு மருத்துவமனைகள் ஓரளவுக்கு சிறப்பான மருத்துவ வசதி அளித்தாலும், கீழ் மட்டத்தில் இருக்கும் லஞ்ச ஊழல் கிஞ்சித்தும் இரக்கமில்லாமலும், பாரபட்சமில்லாமலும் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. 

அரசு மருத்துவமனைகள் குறித்து நான் ஜனவரி 12,2011ல் எழுதிய பதிவின் சுட்டி கீழே :

அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

நம் அரசாங்கம் மக்களுக்கு தரமான மதுவகைகளை வழங்க செலவு செய்யும் நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது தரமான மருத்துவ வசதிகள் வழங்க செலவு செய்தால் நன்றாக இருக்கும்.. செய்வார்களா???

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் இந்த அரசாங்கங்களோட கண்ண திறந்து இதுக்கு ஒரு நல்ல வழி செய்யணும்.

சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Saturday, August 20, 2011

லஞ்ச ஊழல் ஒழிப்பு.. எவ்வாறு சாத்தியம்..

இப்போது திரு அன்னா ஹசாரே ஜன் லோக்பால் வர உண்ணா விரதம் இருக்கிறார். என்னைப் போல் நிறைய பேர், இந்த சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, லஞ்ச  ஊழல் விவகாரத்தில் தம் எதிர்ப்பை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்து ஆதரிக்க வைத்துவிட்டார்கள்.

இன்று லஞ்சமும் ஊழலும் நீக்கமற நம் தேசம் முழுதும் உள்ள அரசு எந்திரங்களில் இருக்கிறது. இதை ஒரு சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியும் எனில் இந்த அளவுக்கு லஞ்ச ஊழல் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் ஊழல் ஒழிப்பு என்பது எப்படி சாத்தியப்படும்? குறைந்த பட்சம் மக்களை நேரடியாக பாதிக்கும் கீழ்மட்ட லஞ்ச ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?  என் சிந்தனையின் பல நாள் கனவு....

ஒரு பெரிய பூசணிக்காயை எப்போதும் முழுமையாக அப்படியே சாப்பிட முடியாது.. ஆனால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சமைத்தால் சுலபமாக சாப்பிடலாம்.

இதுபோலவே, லஞ்ச ஊழல் ஒழிப்பும் நம் தேசத்தில் இருக்கும் ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சிறுது சிறிதாக நாடு முழுவதும் பரவ வேண்டும்.

1) முதலில் ஒரு சில சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற தொகுதிகளில் சில நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏரியா கவுன்சிலரில் இருந்து பாராளுமன்ற  உறுப்பினர் வரை. இதை செய்வது கடினம் என்றாலும் குறைந்தது 2-3 தொகுதிகளிலாவது நம் பிரபல சமூக ஆர்வலர்கள் தேர்தல் நேரத்தில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தால் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

2) அவர்களுக்கு உதவ முழு நேரப்பணியாளர்களாக ஒரு ஊழல் ஒழிப்பு படை ஏற்படுத்தப்பட வேண்டும். இது முடிந்த அளவுக்கு நேர்மையும் சமூக ஆர்வமும் இருப்பவர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சமூக அர்ப்பணிப்பு உள்ள இளைஞர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும்.  மேலும் ஒவ்வொரு குடியிருப்பிலும் இருக்கும் வட்டார நல சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு செயல் பொறுப்பில் நேர்மையானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படையாக செயல் பட வேண்டும்.

3) இவர்களில் தேவையானவர்களுக்கு சம்பளம் அந்த அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபார, தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

4) இவர்களின் முழு நேரப் பணி, லஞ்சம் ஊழல், அதிகார துஷ்பிரயோகம்  நடைபெறும் இடங்களில் கண் காணிப்பு செய்வது மற்றும் பொது மக்களுக்கு ஆதரவாக உதவியாக செயல்படுவது. உதாரணம் - தாலுகா அலுவலகங்கள், வணிக வரி அலுவலகங்கள், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள், காவல் நிலையங்கள், வட்டார வழங்கல் அலுவலகங்கள், நியாய விலை கடைகள், கூட்டுறவு கொள்முதல் நிலையங்கள், வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் மற்றும் பல அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்கள். 

5)  இங்கு நடைபெறும் பணிகளில் ஏற்படும் தொய்வுகளுக்கு இந்த மக்கள் படையினர் நேரடியாக தலையிட்டு சமாதான முறையில் நேர்மையான பணி நடைபெற ஏற்பாடு செய்யலாம். முடியாத பட்சத்தில், அந்த ஏரியாவில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான மக்கள் பிரதிநிதியை அழைத்து அவர் மூலம் தீர்வு காணலாம். தேவைப்பட்டால் மேலும் ஊழல் ஒழிப்பு படையினரைத்திரட்டி ஒரு போராட்டம் செய்யலாம்.

6) ஒவ்வொரு மாதமும் இந்த படையினர் சிறு சிறு குழுக்களாக சந்தித்து தாங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கலாம். இதில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யலாம். இந்த கலந்துரையாடலில் லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரியும், சட்ட ஒழுங்கு காவல் உயர் அதிகாரியும் கலந்துகொண்டு அவர்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

7) பொது மக்கள் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஏற்படும் தாமதங்களுக்கு இந்த படையினரை அணுகி புகார் செய்யலாம். இந்த படையினர் சம்பந்தப்பட்ட துறையினருடன் அது பற்றி மேல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

8) இந்த நடைமுறையில் பிடிபடும் லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

9) இந்த நடைமுறையில் தவறு செய்ய முற்படும் பொது மக்களுக்கும் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் ஓரளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள முன்வருவார்கள்.

10) உள்ளூர் கட்டுப்பாடுகள் சில நிறைவேற்றி அதை முழுமையாக அனைவரும் கடைபிடிக்க செய்ய வேண்டும்.

11) மக்கள் நேர்மையையும் ஒழுங்கையும் வெளிப்படையாக காண்பிக்கும்போது தமக்குள் ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டு அது நம் சமூகத்தில் பிரதிபலிக்கும். (இதைத்தான் நம் முன்னோர் அந்த காலத்தில் ஊர்கட்டுப்பாடு என ஒரு கொள்கை வைத்திருந்தனர். ஆனால் அதன் நோக்கம் பிற்காலத்தில் சக மனிதனை நசுக்குவதில் சென்று முடிந்து விட்டது)

12) இந்த முறைகள் மூலம் அந்த ஒரு சில தொகுதிகளில் ஓரளவுக்கு மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

13) இதே தொகுதிகளில் மாற்றம் விரும்பும் பிற தொகுதியினரும் கலந்துகொண்டு பயிற்சி எடுத்து தமது தொகுதிகளில் செயல் படுத்த முற்பட வேண்டும்.

14) இந்த சங்கிலித்தொடர் நடவடிக்கை முதலில் ஒரு மாநிலத்திலும் பிறகு அணடை மாநிலங்களிலும் பிறகு தேசம் முழுவதும் பரவ ஒரு வாய்ப்பு இருக்கிறது.

15) இதற்கு குறைந்தது சில பத்தாண்டுகள் தேவைப்படும். ஒரு தலைமுறையில் நாம் சிரமப்பட்டு இதை செய்துவிட்டால் அடுத்து வரும் தலைமுறையினர் ஓரளவுக்கு இந்த லஞ்ச ஊழலில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பு வரும். எனக்கு நிச்சயம் இதில் நம்பிக்கை இருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்போம்.. லஞ்ச ஊழலை ஒழிப்போம்...


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இந்த லஞ்ச ஊழல் அரக்கன் ஒழிந்து நம் தேசம் சுபிட்சமாக அருள் செய்யணும்..


சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி.... ஹர ஹர மஹாதேவா சரணம்....

Thursday, January 27, 2011

நேர்மையின் மரணம்....

கடந்த 25ம் தேதியில் ஒரு நேர்மையான அரசு அதிகாரியை சமூக விரோதிகள் பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து நெருப்பிட்டுக் கொளுத்திக் கொன்றிருக்கிறார்கள்.  நமது சமூகத்தில் நேர்மையாக நடப்பதனால் சந்திக்க விழையும் சில பரிதாபமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிட்டது. இது தவிர, பணியில் தேவையற்ற அலைக்களிப்பு, தேவை இல்லாத பணிமாற்றம், பணி இடைநீக்கம்,  ஆசிட் வீச்சு, குடும்பத்தினருக்குத் தொல்லை, தாக்குதல் இப்படி பலவும் அடக்கம்.  

நேர்மையாகப் பணி செய்வது அவ்வளவு பெரிய குற்றமா?? ஏன் இப்படி ஆகிவிட்டது? என்ன செய்யலாம்? இதுபற்றிய எனது சிந்தனைகள்....

ஏன் இப்படி ஆனது ?

இதற்கு முதல் காரணம் குற்றச்செயல்கள் நடைபெறும்போது ஆரம்பத்திலேயே தடுக்காதது. முளையிலேயே கிள்ளி எரியாமல் விட்டது.. தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதையாய்ப் போய்விட்டது. இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை முதலில் சாதாரணமான தவறுகள்   செய்யும்போதே சரியானபடி தண்டிக்காமல், அவர்களை வளரவிட்டுவிட்டு, இப்போது அவர்கள் சமூக, பண, அரசியல் செல்வாக்கோடு திகழும்போது ஒன்றும் செய்யமுடிவதில்லை.

அரசு நிர்வாகத்தில் இருக்கும் அவலமான நிலை

நிர்வாணமானவர்கள் இருக்கும் ஊரில், கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள். அரசு எந்திரத்தில் இப்போது அங்கங்கே ஆயில் போட்டால்தான் ஆகவேண்டிய காரியங்களே ஆகும் நிலையிருக்கிறது. அதுவும் காசுக்காக எதுவும் செய்யும் அரசும், ஊழியர்களும் பெருகிவரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அரசுப் பணிகளில் சேர, தேர்தல்களில் போட்டியிட, வெற்றிபெற திறமையைவிட பணமே பிரதானமாக ஆகிவிட்டது. ஆகவே, கிடைக்கும் பதவியை வைத்து, செலவிட்ட பணத்தை எவ்வளவு விரைவில் எடுத்து மேலும் லாபம் பார்க்கவேண்டிய நிலைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நேர்மையானவர்கள் இருப்பதே அபூர்வமாகிவிட்டது.அப்படியும் நேர்மையாய் இருப்பவர்களுக்கு இச்சமூகம் "பொழக்கத்தெரியாதவன்(ர்)" என்ற பட்டப் பெயர் கொடுக்கிறது. இந்தச் சமூக சூழலில் நேர்மை என்பது சொல்லப்பட மட்டுமே கூடிய, செயல்படுத்தப்படக் கூடாத ஒன்றாக ஆகிவிட்டது.

தாமதப்படுத்தப்படும் தண்டனைகள்

நமது நாட்டில் எந்தக் குற்றத்திற்கும் தண்டனை கிடைக்க ஏற்படும் காலதாமதம் குற்றம் செய்வதை ஊக்குவிக்கிறது. எப்படியும் தப்பிவிடலாம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது.

தேவைகள் பெருகிப் போனது

இன்றய "Consumerism" சூழலில் விளம்பரங்களினாலும், சமூக அழுத்தத்தினாலும், தேவைகள் பெருகிப் போனது. தேவைக்காக பொருள் வாங்கியது போய், விளம்பரங்களுக்காக வாங்கவேண்டிய அழுத்தம் வந்தது.


என்ன செய்யலாம் ?

முதலில் நேர்மையான அதிகாரிகளுக்கு பணிப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும்,  சட்டப் பாதுகாப்பும் தேவைப்படுகிறது.

இவர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது, மீடியாவில் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு அந்த பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவிகள் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

சமூகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் செய்பவர்கள் இவர்களை ஒதுக்கிவைக்கலாம். (இவர்களுக்குத்தான் யார் தயவும் தேவை இல்லையே... :-(   ). முக்கியமாக பள்ளி கல்லூரிகளில் தவறு செய்பவர்களின் குழந்தைகளிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படச்செய்யவேண்டும். இவர்களாலேயே இவர்களின் பெற்றோரைத் திருத்த முடியும். ஏனெனில் இவர்களுக்காக சொத்து சேர்ப்பதற்காகத்தானே த்வறுகள் செய்கிறார்கள்...

குற்றச்செயல்களுக்கு உடனடியான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.  லஞ்சம் ஊழல் இவற்றுக்கான தண்டனைகளும் கடுமையாக்கப்படவேண்டும். முக்கியமாக சிலராவது கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.  அப்போதுதான் தண்டனைகளுக்கான பயம் இருக்கும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடுகிறது..



யோசிக்க நல்லாத்தான் இருக்கு... நடக்கணுமே...

மஹாலிங்கமே சரணம்... ஏதாவது செஞ்சு இந்த நிலைய மாத்துங்க.. அரோஹரா...