Friday, July 29, 2011

ஊழலை ஒழிக்க விரும்பாத அரசு.....

நேற்று அரசு தயாரித்த லோக்பால் மசோதாவை நமது அமைச்சர்கள் குழு அங்கீகரித்ததாக செய்தி வந்தது. திரு அரவிந்த் கேஜ்ரிவால் சொன்னதுபோல இது ஒரு லோக்பால் இல்லை.. ஜோக்பால். இதன் தொடர்ச்சியாக திரு அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்..

உண்மையில் நம் அரசிற்கு ஊழலை ஒழிக்கும் நோக்கத்தைவிட ஊழலை ஒளிக்கும் நோக்கம்தான் அதிகம் இருக்கிறது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இதில் கட்சி பாகுபாடு இல்லாமல் ஆளும் கட்சியாக வரும் எல்லா கட்சிகளும் ஊழலில் திளைப்பது வருத்தம் தரக்கூடியதாகவே இருக்கிறது.

இது ஒரு மிக மோசமான சூழலை ஏற்படுத்தும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கை போய்விடும். சர்வாதிகாரமும் நக்சலிசமும் மீண்டும் தலை தூக்க இது ஒரு மூல காரணமாக ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் வெறும் வட்டி விகிதங்களை அதிகப்படுத்தி நடுத்தர மக்களை வதைக்கிறது. விலை வாசிகள் குறைய அரசு மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் நடப்பதாகவே தெரியவில்லை.

நம் நாட்டில் உண்மையில் சில பணக்காரர்களைத்தவிர அனைவருமே ஏழைகள்தான். இன்றைய விலைவாசியில் இதுதான் நிதர்சனம்.

ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இது புரிய வாய்ப்பில்லை.

இந்த நிலையில் திரு அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தை நம் அரசியல் வாதிக் குஞ்சுகள எப்படி கையாள்வார்கள் என்பது தெரிந்ததே. அதற்கு தயாராகவே அவர்களும் இருப்பதாக தெரிகிறது.

இதில் எனது ஆலோசனை எல்லாம், திரு அன்னா ஹசாரே, திரு அரவிந்த் கேஜ்ரிவால், திருமதி கிரண்பேடி இவர்கள் இப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை விட்டு பேசாமல் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு நல்லவர்களை பாராளுமன்றத்துக்கு /சட்டமன்றங்களுக்கு / ஊராட்சி,நகராட்சி மன்றங்களுக்கு அனுப்ப முயற்சி செய்யலாம். இதில் நிறைய இளைஞர்களும், திரு அப்துல்கலாம் போன்ற நேர்மையாளர்களும் பங்கு கொள்வார்கள் என்பது நிச்சயம். செய்வார்களா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்..

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் இதுக்கு ஒரு நல்ல வழி காட்டணும்..

சதுரகிரி வாழ் சுந்தரனே போற்றி... ஹர ஹர சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

5 comments:

shanmugavel said...

அரசியல் கட்சி ஆரம்பிப்ப்து ஆகிற காரியம் இல்லை.பணம் வேண்டும்.இப்போதைய சூழலில் நல்லவர்கள் வருவது கொஞ்சம் கஷ்டம்.பகிர்வுக்கு நன்றி

Karthikeyan Rajendran said...

குற்றத்தை ஒழிக்க வேண்டியவர்களே குற்றம் செய்பவராய் இருந்தால் சட்டம் எப்படி போடுவார்கள் !!!!!

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், திரு ஸ்பார்க் கார்த்தி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Geetha said...

அரசியல் கட்சி இவர்கள் ஆரம்பிக்க மாட்டார்கள். இவர்கள் பாமர மக்கள் கட்சி.ஊழலில் திளைக்கும் அரசியல் வாதிகளை எதிர்த்து இப்படி தான் போராட வேண்டும்.

அன்னா ஹசாரே செய்வது நல்ல முயற்சி. ஒவ்வொரு இந்தியா குடிமகனும் அவரை ஆதரிக்க
வேண்டும். வந்தேமாதரம் !

Sankar Gurusamy said...

திருமதி கீதா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..