Friday, October 14, 2011

நாடு முழுதும் மின்சார பற்றாக்குறை...

கடந்த சில நாட்களாக இங்கு கல்கத்தாவில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை மின்சாரம் இருப்பதில்லை.. ஆனால் தொடர்ந்து நிறுத்தாமல் 2 மணி நேரம் வரை 3 அல்லது 4 முறை ஒவ்வொரு நாளும் நிறுத்துகிறார்கள். வீட்டில் யூபிஎஸ் இருப்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது...

இந்த நிலை நாடுமுழுதும் பரவலாகவே இருப்பதாக தெரிகிறது. இது பற்றி கடந்த சில நாட்களாக செய்திகளிலும் அடிபட்ட வண்ணம் இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் பல அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் அதற்கு கீழ்க்கண்ட காரணங்களை பட்டியலிட்டும் இருக்கிறார்கள் :

1) நிலக்கரி வரத்து மிகவும் குறைந்துவிட்டது. சில அனல் மின் நிலையங்களில் 2-3 நாட்களுக்குதான் இருப்பு இருக்கிறதாம். எப்போதும் 2-3 வாரங்களுக்கான நிலக்கரி இருப்பில் இருக்க வேண்டும்.

2) தெலுங்கானா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால் உண்டான உற்பத்தி குறைபாடு.

3) நிலக்கரி எடுக்கும் இடங்களில் பரவலாக பெய்த மழை. இது நிலக்கரி எடுப்பதையும் அதை கொண்டுசெல்வதையும் அதிகமாக பாதித்துள்ளதாக தெரிகிறது.

4) புதிய நிலக்கரி சுரங்களுக்கு அனுமதி கொடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தினாலும் அதன் சம்பந்தமான புதிய சட்டங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கவில்லை. இதனால் நிலக்கரி உற்பத்தி அளவு 2009 இருந்த அளவிலேயே இன்னும் இருக்கிறது.

5) யூனியன் பிரச்சினைகளால் உற்பத்தி அதிகரிக்க முடியாமல் போனதாம்.

6) பல மாநில மின்சார வாரியங்கள் நிலக்கரி வாங்கியதற்கு பலகோடி பாக்கி வைத்துள்ளார்களாம். இங்கு மேற்கு  வங்கத்தில் இது கிட்டத்தட்ட ரூ300 கோடி அளவில் பாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு தீர்வாக மின் கட்டணத்தை அதிகரிப்பதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ 4-25 க்கு தருகிறார்கள். இதை ரூ 6 ஆக ஏற்ற பரிசீலனையில் இருப்பதாக கேள்வி.


இப்போதைக்கு நிலைமையை சரிக்கட்ட கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன :

1) முதலில் தேவையான அளவு நிலக்கரியை உடனடியாக அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஊழல்களுக்கு வழிவகுக்கும் என எனக்குப் படுகிறது. முடிந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இந்த இறக்குமதி நடந்தால் சந்தோசப்படுவேன்.

2) இன்றைய செய்தியில் நம் நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுரங்கங்களை எடுத்துக்கொள்ள இருக்கும் புதிய வழிமுறைகள்பற்றி அரசாங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

3) நம் நாட்டிலேயே இருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை உடனடியாக அனல் மின்நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல ஆவன செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் உடனடியாக நம்மவர்கள் செய்ய வேண்டியது. இதை செய்தால்தான் மின் உற்பத்தி தங்குதடை இன்றி நடைபெற வழி செய்ய முடியும்.

4) கோல் இந்தியா லிமிடெட் என்ற நமது இந்திய நிலக்கரி கழகம் ஒவ்வொரு ஆண்டும் தனது உற்பத்தியில் 10% அளவிற்கு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி அதையும் நமது அனல் மின் நிலையங்களுக்கே கொடுக்க (விற்க) உத்தரவிடப்பட்டுள்ளது. விலையில் இருக்கும் வித்தியாசத்தினால் இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ4000 கோடி அளவுக்கு இந்த ஆண்டு இதனால் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.


எனக்கு என்னவோ இது அரசாங்கம் அனல் புனல் நிலையங்களை முடக்கி அணு மின் நிலையங்களை முன்னிறுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. 

மேலும் மின் கட்டணங்களை வகைதொகை இல்லாமல் உயர்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற பயமும் இருக்கிறது.

ஏற்கனவே விண்ணில் பறக்கும் விலைவாசியால் நசுங்கிப்போய் இருக்கும் சாமானியனுக்கு நம் அரசாங்கம் மேலும் சில விலையேற்றங்களையும் சில அணு மின் நிலையங்களையும் இந்த மின் பற்றாக்குறையை சாக்கு வைத்து பரிசாக அளிக்கப் போவது மட்டும் உறுதி.

அந்த மஹாலிங்கம்தான் நம்மளைக் காப்பாத்தணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

15 comments:

Anonymous said...

ஏனையா .. நீங்கள் மின்சாரம் வேண்டும் என சத்தம் போடுவீர்கள். மின்சாரம் இல்லையெனில் அரசை ஏதாவது காரணம் சொல்லுவீர்கள். மின்சாரம் கொடுப்பதற்கு ஏதாவது ஒரு திட்டத்தை அரசு செய்தால் அதற்க்கு விரோதமாக போராடுவீர்கள். மக்கள் என்றால் கேள்வி கேட்க மட்டும் தான் என்ற நினைப்பு தான் போல.

Sankar Gurusamy said...

திரு பிரபு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

இருதயம் said...

இதை கொஞ்சம் வாசியுங்கள்

http://naanoruindian.blogspot.com/#!/2011/10/blog-post.html

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இல்லை. ஆனால் மக்கள் விரோத திட்டங்களால்தான் மின்சாரம் தர முடியும் என்பதையே எதிர்க்கிறோம். ஊழல் செய்ய முடியக்கூடிய திட்டங்களால் மட்டுமே மின்சாரம் தயாரிப்போம் என்கின்ற அரசின் கொள்கைகளை எதிர்ப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Anonymous said...

மக்கள் விரோத திட்டம் என்று எதை சொல்லுகிறீர்கள் ..? எப்படி சொல்லுகிறீர்கள் ..? விளக்குங்களேன்

Sankar Gurusamy said...

திரு இருதயம், தங்கள் கட்டுரை அருமை. எனது கருத்தை அதிலேயே பதிவு செய்திருக்கிறேன்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், தங்கள் பெயரைத் தெரிவித்து கருத்திட்டால் நலம்.

அணு உலைகளைப்பற்றிய பயம் எல்லோருக்கும் இப்போது சற்று அதிகமாகவே இருக்கிறது என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். முக்கியமாக அதனால் ஏற்படும் சில தீமைகள் :

1) ரேடியேசன் கசிவு ஏற்பட்டால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்ய முடியாதவை.

2) அணுக்கழிவு மேலாண்மைக்கு சரியான வழி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். நம் பாதுகாப்பு முறைகள் பற்றிய லட்சணம் போபால் விசவாயு கேசில் சந்தி சிரித்தது எல்லோருக்கும் தெரியும்.

3) நம் அரசாங்க அதிகாரிகளின் அலட்சியப் போக்கு. இது பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவேண்டிய ஒரு துறையில் இவர்கள் பணி செய்வது மக்கள் கதி ஆண்டவன் விட்ட வழி என்றே எண்ணத் தோன்றுகிறது.

4) அணு விபத்து இழப்பீடு குறித்து முழுமையான தகவல் இன்னும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது கடலைக் கொட்டைபோல தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

5) நம் சட்ட நடை முறைகள் மக்களுக்கு சரியான நிவாரணங்கள் கிடைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலதாமதம்.

6) முக்கியமாக மக்களுக்கு செய்ய வேண்டிய நிவாரணப்பணிகள் இன்னும் செய்யப்படாமல் இருப்பது..

7) உள் கட்டமைப்பு பணிகள் செய்யப்படாமல் இருப்பது.

8) மக்களுக்கு இந்த கூடங்குளம் திட்டம் பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடத்தி அவர்கள் ஐயம் போக்க சரியான நடவடிக்கை திட்டம் துவங்கும் முன்பே செய்யாதது.

9) தும்பை விட்டு வாலைப்பிடிப்பது நம் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் கைவந்த கலைதானே.. எனவே கட்டி முடித்த பிறகு இந்த விசயங்களை பார்த்துகொள்ளலாம் என்ற சிந்தனை. மக்களை கிள்ளுக்கீரைகளாக கருதியதன் விளைவுதான் இன்றைய போராட்டம்.

மேலும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..

இதனால்தான் அணு உலைகள் மக்கள் விரோத திட்டம் என கருதுகிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .

// 1) ரேடியேசன் கசிவு ஏற்பட்டால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்ய முடியாதவை.//
உண்மை . அதனால் தான் மிக அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த 3 ம் தலைமுறை அணுமின் நிலையங்களை அரசு நியமிக்கிறது. இன்னொன்று ஒரு அணுமின் ஊழியர் தன ஆயுள் காலம் முழுவதும் தான் பெற்று கொள்ளும் கதிர்வீச்சின் அளவை 30000 அடி உயரத்தில் நாம் விமானத்தில் பறக்கும் போது பெறுகிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் . ஏன் இதை கூறுகிறேன் என்றால் நாம் 74 சதவீத கதிர்வீச்சை இயற்கையில் இருந்தே பெற்று கொண்டு தான் இருக்கிறோம். கேள்விகள் அதிகம் இருப்பதால் நான் இதுகுறித்து விவரமாய் எழுதமுடியவில்லை.

//2) அணுக்கழிவு மேலாண்மைக்கு சரியான வழி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. //
நீங்கள் தவறன கருத்து கொண்டு உள்ளீர்கள். யுரேனியும் பயன்படுத்தி போய் மீதி வருகிற ப்ளுட்டனியம் 239 மற்றும் தோரியம் 232 ஆகியவற்றை எரிபொருளாக உபயோகிக்கும் Breeder Recator தொழினுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது. அப்படி இருக்கும் போது கழிவுகள் எது..?

// ) மக்களுக்கு இந்த கூடங்குளம் திட்டம் பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடத்தி அவர்கள் ஐயம் போக்க சரியான நடவடிக்கை திட்டம் துவங்கும் முன்பே செய்யாதது.//
நீங்கள் இந்த பகுதி மாவட்ட ஆட்சியாளருக்கு தகவல் அறியும் சட்டத்தில் கேட்டு பாருங்களேன். எத்தனை முறை விளக்க கூட்டங்கள் நடந்தது என்பதை.

நீங்கள் கூறிய மற்ற கருத்துகள் அனைத்தும் ஆட்சியாளர்களை குறை சொல்லி எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் ஏன் அரசியல்வாதிகளை நம்ப வேண்டும். உங்களை போன்று இந்தியாவில் பிறந்து தேச பற்று உள்ள விஞ்ஞானிகள் சொல்லுவதை நம்பலாமே

நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அந்த மஹாலிங்கம்தான் நம்மளைக் காப்பாத்தணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், தங்கள் விளக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி...

Sankar Gurusamy said...

திருமதி இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

shanmugavel said...

//சில விலையேற்றங்களையும் சில அணு மின் நிலையங்களையும் இந்த மின் பற்றாக்குறையை சாக்கு வைத்து பரிசாக அளிக்கப் போவது மட்டும் உறுதி.//

எனக்கும் வெகுநாட்களாக இந்த சந்தேகம் உண்டு.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Anonymous said...

நீங்க, நானு, அவரு, இவரு இப்படி யார் எழுதினாலும் சரி. இந்த அம்மையாரோ, அந்த அய்யாவோ மின்சார பற்றாக்குறைக்கு இப்போதைக்கு தீர்வு காண மாட்டார்கள். தெலுங்கானாபோல் ஏதேனும் காரணம் கிடைக்காதானு இந்த அம்மா பாக்குது. அவரு ஆட்சியில் காரணமே இருக்காது. பதில் சொல்லுவார் ஆர்க்காட்டார். டிசம்பரில் சரியாகும் என்று. டிசம்பரில் கேட்டால் மார்ச்சில் சரியாகும் என்று. இரண்டு பேரும் என்னை போன்ற ஏமாளி வாக்காளர்களை ஏமாற்றுவதே இவர்களுக்கு பொழப்பா போச்சு. இரண்டு பேருமே ஒருகுட்டையில ஊருன மட்டைதான். யாரை சொல்லி என்ன பயன். என் வீட்டில் இப்போ கரண்ட் இல்லையே. தொடர்புக்கு www.saffroninfo.blogspot.com

Sankar Gurusamy said...

அன்புள்ள திரு பாலமுருகன், அரசாங்கத்தை நம்பி பிரயோசனம் இல்லை. இனி நமக்கு நாமே மாதிரி ஏதாவது செய்துக்கணும்னு நினைக்கிறேன். முடிஞ்சா ஒரு யூபிஎஸ் அல்லது ஒரு மினி ஜெனெரேட்டர் வாங்கி வச்சிக்கரதுதான் தீர்வுன்னு படுது... ஆனா எத்தனை பேரால வாங்கமுடியும்ங்கரது மில்லியன் டாலர் கேள்வி...

சில நாட்களுக்கு முன் கழுகு தளத்தில் ஒரு பதிவில் சூரிய சக்தி மின்சாரம் பத்தி ஒரு லிங்க் கொடுத்திருந்தார்கள்.. செலவு கணக்கு பார்த்ததில் சுமார் 10லிருந்து 15 லட்சம் வரை வந்தது ஒரு வீட்டுக்கு. மேலும் இடம் தேவை.. 20க்கு 20 மீட்டர் சோலார் பேனல் வைக்க மற்றும் 8 பேட்டரி மற்றும் அது சம்பந்தமான உபகரணங்கள் வைக்க மேலும் ஒரு அறை தேவை.. இது வசதியானவர்கள் கண்டிப்பாக வைத்துக் கொள்ளக்கூடியதுதான். இது மாதிரி இனி அடுக்கு மாடி குடியிருப்போ தனி குடியிருப்பு வீடோ ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸோ மாலோ கட்டினால் (ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டுக்கு மேல் உதாரணம் 60லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டுபவர்களுக்கு)இதுபோல சில ஏற்பாடுகள் செய்யவேண்டும் என ஒரு தனி சட்டம் இயற்றினால் நல்லது. பற்றாக்குறை வெகுவாக குறைய வாய்ப்பு இருக்கும்.

மேலும் இதுபற்றி தகவல் எங்காவது கிடைத்தால் நீங்களும் பகிரலாம்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...