Showing posts with label புலனடக்கம். Show all posts
Showing posts with label புலனடக்கம். Show all posts

Thursday, September 29, 2011

புலனடக்கம் - எது???

உண்மையான புலனடக்கம் என்பது என்ன?? புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா?? 


உண்மையான புலனடக்கம் என்பது என்ன???

புலனடக்கம் என்பது ஐம்புலன்களாலான சுகங்களை அளவுடனோ அல்லது தேவைக்கேற்றவாறோ  நேர்மையான, தர்மமான வழியில் பயன்படுத்துவதே ஆகும்.

காந்தியடிகள் சொன்ன மூன்று குரங்கு தத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இது புலனடக்கத்துக்கு மிக முக்கிய வழிகாட்டி. கெட்டதைப் பார்க்காதே.. கெட்டதை கேட்காதே... கெட்டதை பேசாதே...இது ஒரு அடிப்படை வாழ்க்கைத் தத்துவம்.

ஆன்மீகத்தில் இதன் வெளிப்பாடு இன்னும் விரிவானது. நம் பார்வை என்பது அக்கினி தத்துவத்தின் வெளிப்பாடு. கேட்டல் என்பது ஆகாச தத்துவத்தின் வெளிப்பாடு. பேச்சு நீர்த்தத்துவத்தின் வெளிப்பாடு. எனவே நாம் பார்க்கும் / கேட்கும் / பேசும் ஒவ்வொரு விசயமும் நமது கர்ம வினைகளுக்கு ஒப்ப நம்முள் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தும். 

மேலும் ”நுகர்ச்சி”-நாசி (வாயு தத்துவம்) நமது மற்ற புலன்களை தன்னிச்சையாக தூண்ட வல்லதாக இருப்பதால் அதுவும் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நம் உடல் ரீதியான செயல்பாடுகளும், பாலியல் வெளிப்பாடுகளும் (பூமி தத்துவம்) ஆன்மீக புலனடக்கத்தின் அதி முக்கிய பங்கு வகிக்கின்றன.

தனி மனித ஒழுக்கத்துக்கான ஒரு முக்கிய வழிகாட்டியாகவும் இந்த புலனடக்கம் இருக்கிறது. தனிமனித ஒழுக்கம் என்பது இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனும்  இதை கடைபிடித்தால் நிச்சயம் சமூகம் முன்னேறும்..


புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா??

நிச்சயமாக.. புலன்களை அடக்காமல் அவைகளின் இஷ்டத்துக்கு வாழும்பொழுது நமக்கு ஒரு தற்காலிகமான சந்தோசமே கிடைக்கிறது.. மேலும் அது நம் ஆணவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தத் தூண்டுகிறது.  நிரந்தர சந்தோசமே நிம்மதிக்கு அடிப்படை.  

தற்காலிகமாக நமக்கு சந்தோசம் தரும் விசயங்களில் பலவும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் உடம்புக்கும் பாதிப்பு ஏற்படுத்த வல்லதாகவே இருக்கிறது.. எனவே புலனடக்கம் என்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் நிச்சயம் கிடைக்கும்.


கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எல்லோருக்கும் புலனடக்கம் கைவரப் பெற்று நிம்மதியான வாழ்வு அமைய அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தரனே சரணம.... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, September 28, 2011

புலனடக்கம்...

பல ஆன்மீக சாதனைகளுக்கு புலனடக்கம் முக்கியமானதாக பேசப்படுகிறது... அது ஏன்?

நமது கர்மாக்கள் நம் புலன்கள் மூலமே வெளிப்படுகின்றன அல்லது நிறைவேற்றப்படுகின்றன. கர்மாக்களை வெளியேற்ற / புதிதாக சேர்க்க இந்த ஐம்புலன்களும் ஒரு வாசலாக செயல்படுகின்றன..

ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சொல்லி இருக்கிறார்... இந்த ஆசைகள் நம் மனதில் இருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு புறக் காரணிகள் தேவை இருக்கிறது.. அந்த தூண்டுதல் இந்த ஐம்புலன்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.

இவ்வாறு தூண்டப்படும் ஆசைகள் நியாயமான முறையில் / அளவாக இருக்கும் போது / வெளிப்படும்போது கர்மாக்கள் குறையவும், அநியாயமான முறையில் / அபரிமிதமாக இருக்கும்போது / வெளிப்படும்போது புதிய கர்மாக்கள் சேரவும் செய்கின்றன...

இந்த புலன்களில் மிக சக்திவாய்ந்த புலன்கள் கண்களும், நாசியும். இவை பிற ஆசைகளைத் தூண்டுவதில் முதலிடம் வகிக்கின்றன. எனவே இவற்றை மிக கவனமாக உபயோகப்படுத்தவேண்டும். இதில் சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போதும் திறந்திருக்கும் புலன்கள் இரண்டு மூக்கு, செவி. எனவே நுகர்ச்சியும், கேட்டலும் முற்றிலும் நாம் இருக்கும் சூழல் சம்பந்தப்பட்டது.

எனவே நல்ல சூழல் அமைவது புலனடக்கத்துக்கு மிக அவசியம்.

புலனடக்கம் கைகூடினால் ஆன்மீக முன்னேற்றம் எளிதில் சித்திக்கும். அது நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோருக்கும் புலனடக்கம் கைகூடி ஆன்மீக முன்னேற்றம் சிறப்பா ஏற்பட்டு ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....