உண்மையான புலனடக்கம் என்பது என்ன?? புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா??
உண்மையான புலனடக்கம் என்பது என்ன???
புலனடக்கம் என்பது ஐம்புலன்களாலான சுகங்களை அளவுடனோ அல்லது தேவைக்கேற்றவாறோ நேர்மையான, தர்மமான வழியில் பயன்படுத்துவதே ஆகும்.
காந்தியடிகள் சொன்ன மூன்று குரங்கு தத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இது புலனடக்கத்துக்கு மிக முக்கிய வழிகாட்டி. கெட்டதைப் பார்க்காதே.. கெட்டதை கேட்காதே... கெட்டதை பேசாதே...இது ஒரு அடிப்படை வாழ்க்கைத் தத்துவம்.
ஆன்மீகத்தில் இதன் வெளிப்பாடு இன்னும் விரிவானது. நம் பார்வை என்பது அக்கினி தத்துவத்தின் வெளிப்பாடு. கேட்டல் என்பது ஆகாச தத்துவத்தின் வெளிப்பாடு. பேச்சு நீர்த்தத்துவத்தின் வெளிப்பாடு. எனவே நாம் பார்க்கும் / கேட்கும் / பேசும் ஒவ்வொரு விசயமும் நமது கர்ம வினைகளுக்கு ஒப்ப நம்முள் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தும்.
மேலும் ”நுகர்ச்சி”-நாசி (வாயு தத்துவம்) நமது மற்ற புலன்களை தன்னிச்சையாக தூண்ட வல்லதாக இருப்பதால் அதுவும் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நம் உடல் ரீதியான செயல்பாடுகளும், பாலியல் வெளிப்பாடுகளும் (பூமி தத்துவம்) ஆன்மீக புலனடக்கத்தின் அதி முக்கிய பங்கு வகிக்கின்றன.
தனி மனித ஒழுக்கத்துக்கான ஒரு முக்கிய வழிகாட்டியாகவும் இந்த புலனடக்கம் இருக்கிறது. தனிமனித ஒழுக்கம் என்பது இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இதை கடைபிடித்தால் நிச்சயம் சமூகம் முன்னேறும்..
புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா??
நிச்சயமாக.. புலன்களை அடக்காமல் அவைகளின் இஷ்டத்துக்கு வாழும்பொழுது நமக்கு ஒரு தற்காலிகமான சந்தோசமே கிடைக்கிறது.. மேலும் அது நம் ஆணவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தத் தூண்டுகிறது. நிரந்தர சந்தோசமே நிம்மதிக்கு அடிப்படை.
தற்காலிகமாக நமக்கு சந்தோசம் தரும் விசயங்களில் பலவும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் உடம்புக்கும் பாதிப்பு ஏற்படுத்த வல்லதாகவே இருக்கிறது.. எனவே புலனடக்கம் என்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் நிச்சயம் கிடைக்கும்.
கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எல்லோருக்கும் புலனடக்கம் கைவரப் பெற்று நிம்மதியான வாழ்வு அமைய அருள் செய்யணும்.
சதுரகிரி சுந்தரனே சரணம.... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....
2 comments:
//புலனடக்கம் என்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் நிச்சயம் கிடைக்கும்.//
அருமை நண்பரே!
திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
Post a Comment