இன்று பெரும்பான்மையான நகரவாசிகள் கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களே. பண்டிகை தினங்களிலும் விடுமுறை தினங்களிலும் வெளியூர்ப் பேருந்துகளிலும், ரயிலிலும் அலைமோதும் கூட்டம் இதற்கு சாட்சி.
நன்றாகப் படித்து, நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கக்கூடிய வேலைவாய்ப்புக்கு வருபவர்கள் ஒருபுறம். கிராமங்களில் செய்து வந்த தொழில்கள் நசிந்து நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒருபுறம். என இரு வேறு துருவங்கள் போல புலம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
ஏன் இவ்வளவு மக்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு பெருநகரங்களுக்கு வருகிறார்கள்? அவர்களுக்கு அந்த ஊர்களில் பிழைப்புக்கு வழி இல்லையா?இந்த நகரங்கள் வருவதற்கு முன் இவர்கள் எங்கு இருந்தார்கள்? அப்போது பிழைப்புக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? இப்போது அவர்கள் யாரைத் தேடிப் போகிறார்கள்? ஏன் இந்த நிலைமை? இதற்கு என்ன செய்யப்பட வேண்டும்? எனது சிந்தனைகள்...
காரணிகளும் தீர்வுகளும்:
1) காரணி : படிப்புக்கான வேலைவாய்ப்புகள் பெருநகரங்களில்தான் இருக்கின்றன. தொழில்மயமாக்கம் பரவலாக்கப்படாமல் ஒருசில நகரங்களைச் சுற்றியே இருப்பதால் இந்த நிலை. படித்தவர்கள் தில்லிக்கும், மும்பாய்க்கும், சென்னைக்கும், இது போன்ற நகரங்களுக்கும் புலம் பெயர்வதற்கு இதுவே காரணம்.
தீர்வு : தொழில் மயமாக்கம் பரவலாக்கப்படவேண்டும். சிறந்த சாலை வசதிகள் நாடு முழுவதும் செய்து தரப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் தரமான 4 / 6 வழி சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அதிக அளவில் துறைமுகங்களும் விமான நிலையங்களும் நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பகுதி / மாநிலப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
2) காரணி : சிறந்த படிப்புக்கான வசதிகள் நகர்ப்புறங்களில் மட்டுமே இருப்பது. பெரும்பாலான கிராமப்புறங்களில் கல்லூரி வசதிகள் இல்லை. இருக்கும் சில கல்லூரிகளின் தரமும் பெரும்பாலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் படிப்புசார்ந்து மாணவர்கள் புலம் பெயர்கிறார்கள்.
தீர்வு : சிறந்த கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பகுதியின் மாணவர்களுக்கு, சேர்க்கையில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
3) காரணி : நசிந்துபோன விவசாயம் மற்றும் கிராமம் சார்ந்த தொழில்கள். இந்தியாவின் ஜனத்தொகைக்கு அதிக மக்களுக்கு வேலைதரக்கூடிய சாத்தியம் உள்ள துறை. விவசாயத்திலும், அது சார்ந்த கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் இருந்த பலர் இன்று நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புத்தேடி வருகின்றனர்.
விளைவு : இவர்களுக்கு சரியான சம்பளத்தில் வேலைவாய்ப்பு அமைவது இல்லை. சிறு விலைவாசி உயர்வும் இவர்களை மற்றவர்களைவிடக் கடுமையாகப் பாதிக்கிறது. வாடகை உயர்வு, விலைவாசி உயர்வு, வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்கான நிர்ப்பந்தம் இவற்றுக்கிடையில் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகும் வர்க்கம் இதுவே. இவர்களுக்கும் முதலில் சொல்லியவர்களுக்குமான இடைவெளி இப்போது அதிகமாகிக்கொண்டு போகிறது.இதனால் விளிம்பு நிலைக்குத்தள்ளப்படும் இவர்கள் போதுமான வருமானம் இல்லாததால் மீண்டும் கிராமங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள். அங்கும் போதுமான தொழில் வாய்ப்புகள் இல்லாததால் வன்முறை, நக்சலிஸம் இவை நோக்கி ஈர்க்கபடுகிறார்கள். தைரியம் இருப்பவர்கள் கடன் வாங்குகிறார்கள். இல்லாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
தீர்வு : விவசாயம் மற்றும் கிராமம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு உடனடியாக முக்கியத்துவம் தரவேண்டும். இது சம்பந்தமான ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்புவழங்கவேண்டும். NREG போன்ற திட்டங்கள் யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டது போலத்தான். இதில் இருக்கும் நடைமுறை ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் இன்னும் அதிகமாக செயல் படுத்தப்பட வேண்டும். இதற்கான ஆராய்ச்சித்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அவற்றிற்கு முன்னுரிமையும் ஊக்குவிப்பும் வழங்கப்படவேண்டும்.
நமது அரசாங்கம் நினைத்தால் நிச்சயம் இவை அனைத்தையும் செய்ய முடியும். என்ன செய்வது, அவர்களுக்கு இதைவிட பெரிய தலைவலிகளான ஊழலை மறைப்பது, புது ஊழலுக்கு வழி கண்டுபிடிப்பது, எதிர்க்கட்சிகளை சாடுவது, கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்வது, ஓட்டுப் பொறுக்குவது ன்னு பல வேலைகள் இருக்கு...
அதனால, கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் ஏதாவது செஞ்சு இதுகள்லாம் செயலாக ஏற்பாடு செய்யணும்னு கேட்டுக்கரேன்.. ஏதோ என்னால முடிஞ்சது...
2 comments:
நம் நாட்டு பொருளாதார கொள்கைகள் விவசாய வளர்சிக்கு சாதகமாக இல்லை.
அன்புள்ள Layman,
நம் ஜனநாயகமே மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எனவெதான் இந்த நிலை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment